கிறுக்கெழுத்தாளன்

சும்மா ஒரு கிறுக்கு. இன்றெல்லாம் பைத்தான், ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ஸ்விஃப்ட் அடிப்படைப் பாடங்களைப் படித்து (அல்ல, புரட்டி)க் கொண்டிருந்தேன்.

புரிவது போலிருக்கிறது; ஆனால் புரிவதில்லை. பழகினால் வந்துவிடும் என்று தோன்றுகிறது; ஆனால் ஒன்றிரண்டு கமாண்டுகள் கூட படித்த பத்து நிமிஷங்களில் நினைவில் இருப்பதில்லை.

இதெல்லாம் ஆதியிலிருந்தே கற்றிருக்க வேண்டுமோ என்னமோ.

அகராதித் துணையின்றி கம்பர் முதல் நம்மாழ்வார் வரை வாசித்துப் புரிந்துகொள்ளவும் புரிந்ததை எடுத்துச் சொல்லவும் முடிகிறதே என்று எண்ணி சமாதானப்படுத்திக்கொண்டேன்.

பாண்டத்தைச் செய்பவன் குயவனென்றால், குயவனைச் செய்வது பாண்டம்தான்.

முட்டை இறக்குமதி

யாளி முட்டை சிறுகதைத் தொகுப்பு FreeTamilEbooks.comல் வெளியாகியுள்ளது. இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முன்னுரை வாசிக்க இங்கே செல்லலாம்.

பிற இலவச மின் நூல்கள்: புதையல் தீவு | ரெண்டு | ஐஸ் க்ரீம் பூதம் | குற்றியலுலகம் | புக்கு

யாளி முட்டை

இதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான்.

குமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப் பிரதிகளை பத்திரப்படுத்தப் பார்த்தேன். அதுவும் முடியாமல் போனது. கணினியில் எழுதத் தொடங்கியபிறகு அனைத்தும் சாசுவதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எதற்காகவாவது format செய்யவேண்டி நேர்ந்து அதிலும் பல அழிந்து போனது. Backup எடுத்து வைக்கும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை. ஜிமெயில் காலத்துக்குப் பிறகுதான் எழுதியவை இல்லாது போகவாய்ப்பில்லை என்றானது. அக்காலம் வந்தபோது நான் சிறுகதைகள் எழுதுவது குறைந்து போனது.

எதிலும் ஒழுங்கில்லாத ஒரு ஜென்மம் உண்டென்றால் அது நாந்தான். என் ஒழுங்கீனங்களே எனது அடையாளமாகிப் போனது எம்பெருமான் சித்தம். பெரிய இழப்பு ஒன்றுமில்லை. சந்தோஷங்களுக்கும் குறைச்சலில்லை.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எதுவும் எந்த அச்சுத் தொகுப்பிலும் இல்லை. கல்கி, அமுதசுரபி, குங்குமம் போன்ற பத்திரிகைகளில் இவை வெளிவந்தன. சில கதைகள் எனது இணையத் தளத்தில் மட்டுமே பிரசுரமானவை. பிரசுரம் சார்ந்த சந்தோஷங்களும் மயக்கங்களும் உதிர்ந்துபோனபிறகு எழுதுவது என்பது சுகமானதாகவே இருக்கிறது. இலக்கிய ரப்பர் ஸ்டாம்புகளுக்காகவோ, விருது கிளுகிளுப்புகளுக்காகவோ எழுதாமல் முற்றிலும் என் சொந்த சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதிய கதைகள் இவை.

உங்களுக்குப் பிடித்தால் சந்தோஷம். பிடிக்காது போனாலும் பிரச்னையில்லை.

ஆனால் ஒன்று சொல்லவேண்டும். தமிழில், குறிப்பாக என்னுடைய தலைமுறையில் என்னைக் காட்டிலும் வெகு சிறப்பாக எழுதக்கூடிய எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிட்டாத சில அபூர்வ நல்வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. மகத்தான பல எழுத்தாளர்களுடன் நேரில் பேசிப் பழக முடிந்திருக்கிறது. கடிதத் தொடர்பு சாத்தியமாகியிருக்கிறது. உட்கார்ந்து அரட்டையடிக்க முடிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து நிறைய கற்றிருக்கிறேன். எழுத்துக்கு அப்பாலும். இதெல்லாம் என் தகுதிக்கு மீறியவை. இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு நேர்மையான வாசகன் மட்டுமே. சிறந்த இலக்கியமென்று எதையும் படைத்தவனல்லன். அது சாத்தியமும் இல்லை. மாதம் பிறந்தால் தேவைக்கேற்ற வருமானமும், மூன்று வேளை நல்ல சாப்பாடும், படுத்த வினாடி வருகிற உறக்கமும், பிரச்னையற்ற சூழலும், சுக சௌகரியங்களும் அனுபவிக்கக் கிடைக்கும் வாழ்விலிருந்து இலக்கியம் பிறக்காது.

அதற்குச் செருப்படி படவேண்டும். வலி மிகுந்த வாழ்விலிருந்தே பேரிலக்கியங்கள் பிறக்கின்றன. ஒரு தாஸ்தயேவ்ஸ்கி பட்ட பாடுகளை இன்னொருத்தன் படுவானா. ஒரு ஷோபா சக்தி காட்டும் உலகை இன்னொருத்தன் காட்டிவிட முடியுமா. அசலான இலக்கியமென்றால் அது. நான் அந்த ரகமல்ல. வேறெந்த ரகமும் அல்ல.

என் கதைகள், என் சந்தோஷம். தீர்ந்தது விஷயம்

[விரைவில் வெளிவரவுள்ள யாளி முட்டை சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை].

இருவர் மற்றும் ஒருவர்

என்னிரு ஐபேட்களையும் என் மனைவியும் மகளும் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டுவிட்டபடியால் எனக்கென ஒரு படிப்பான் [eReader] வாங்க நினைத்தேன். கிண்டில் வாங்கலாமா என்று நேற்று நண்பர் [FreeTamileBooks.com] ஶ்ரீநிவாசனிடம் கேட்டதன் காரணம் அதன் ஆறு இஞ்ச் பிடிஎஃப், மோபி வடிவம் போன்ற inbuilt சிக்கல்களால்தான்.

ஶ்ரீநிவாசனுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பி, பதில் வந்தபோதுதான் அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிந்தது. அடுத்த பிப்ரவரியில்தான் சென்னை வருவதாக இருக்கிறார். அதனாலென்ன? நீங்கள் ஒரு கிண்டிலைக் கண்ணால் பார்த்து, கையால் தொட்டு, கொஞ்சம் போல் குடைந்து பார்த்துவிட்டு அதன்பிறகு வாங்குவதே சரி என்று சொன்னார்.

சொன்னதோடு விடவில்லை. நேற்றே இங்குள்ள அவரது நண்பர் அன்வரை அழைத்து என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கிறார். அன்வரும் Freetamilebooks.com உறுப்பினர்களுள் ஒருவர்.

இன்று மாலை வழி விசாரித்துக்கொண்டு அன்வர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரது கையடக்க கிண்டிலுடன். எதற்கு? வெறுமனே நான் பார்ப்பதற்கு. வாங்கலாமா வேண்டாமா என முடிவு செய்வதற்கு.

அன்வர் ராயப்பேட்டையில் இருப்பவர். கிண்டிக்கு வந்து எனக்கு போன் செய்தார். நான் கோடம்பாக்கத்தில் இருந்தாலும் குரோம்பேட்டையில் இருந்தாலும் இரு இடங்களையும் அடைய சரியான மையப்புள்ளி என நினைத்து அங்கு வந்து அழைத்திருக்கிறார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சுட்டெரிக்கும் வெயில் நாளில் எத்தனை தூரப் பயணம்! வாழ்வில் யாருக்காவது எப்போதாவது நான் இப்படி தன்னியல்பாகச் சென்று உதவி செய்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தேன். நினைவில்லை. எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

இத்தனைக்கும் அன்வரை எனக்குத் தெரியாது. பார்த்த ஞாபகம் கூட இல்லை. அவர் ஓரிருமுறை என்னைப் பார்த்திருப்பதாகவும் ஒருமுறை கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் என்னோடு சண்டை போட்டிருப்பதாகவும் சொன்னார். நினைவில்லை. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமேகூட இல்லை. வலிய வந்து உதவ நினைக்கும் இத்தகு மனம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? சொல்லப் போனால் ஶ்ரீநிவாசனையேகூட எனக்குத் தெரியாது. நேரில் சந்தித்ததோ, போனில் பேசியதோ கிடையாது. அவர் GNU ஆள் என்று தெரியும். FTEbooks குழுவில் ஒருவர் என்று தெரியும். நேற்றுத் தான் பேசினேன்.

வாழ்வில் இரண்டாவது முறையாக இப்படியொரு அனுபவம் இன்று. முதலனுபவத்தைத் தந்தவர் ஶ்ரீகாந்த் மீனாட்சி. இதே மாதிரிதான். விண்டோஸைத் தலைமுழுகிவிட்டு Macக்கு மாறலாம் என்று எண்ணத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் என்னைத் தேடி வந்து தன் மேக்கைக் கொடுத்து குடைந்து பார்க்கச் சொன்னார்.

இன்று நான் மேக்தான் உபயோகிக்கிறேன். ஒவ்வொரு முறை திறக்கும்போதும், இதன் பூரண சுகத்தை அனுபவிக்கும்போதும் ஶ்ரீகாந்தையும் கோகுலையும் எண்ணாதிருப்பதில்லை.

ஆனால் sorry அன்வர்! என்றுமே நான் கிண்டில் உபயோகிக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். என் சௌகரியத்துக்கு ஐபேட்தான் சரி என்று தீர்மானமாகத் தோன்றுகிறது.

Decided to buy one more iPad. ஆனால் அந்தப் புதிய ஐபேடுக்கு என் பெயரைக் கொடுக்கமாட்டேன். கண்டிப்பாக உங்கள் பெயர்தான்.

புக்கு

உலக புத்தக தினத்தை முன்னிட்டு அது முடிந்த பிற்பாடு இந்த இலவச மின் நூல் வெளியிடப்படுகிறது. புத்தகங்களை வாசிக்க வைக்க ஒரே வழி அவற்றை சிறியதாகவும் இலவசமாகவும் வழங்குவதுதான் என்கிற கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதி உத்தியை எண்ணிப் பார்க்கிறேன். கிறிஸ்தவம் பரவியது போல் புத்தகம் பரவினால் சந்தோஷம் .

புத்தகத்தை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்.