கால் கிலோ காதல் அரை கிலோ கனவு - 9
இது ஒரு தருணம். சற்றே மாறுபட்ட, எதிர்பாராத, மகிழ்ச்சியும் கலவரமும் ஒருங்கே உருவாகும் தருணம். இதையும் சந்தித்துத்தான் தீரவேண்டும். பைபாஸ் முத்துமாரியம்மனோ குருட்டு அதிர்ஷ்டமோ அவசியம் கைகொடுக்கும். பத்மநாபன் திடசித்தம் கொண்டான். ஸ்லேவ் வீரபத்திரன் அச்சமூட்டக்கூடிய ஆகிருதியில் இருந்தால்தான் என்ன? அவன் ஒரு ஸ்லேவ்தான். கண்டிப்பாக அவனால் வளர்மதியைக் காதலிக்க முடியாது. வத்தக்காச்சி போலிருக்கும் பத்மநாபனால் முடியும். அப்பாவுக்கும் ஹெட் மாஸ்டருக்கும் அகில உலகுக்குமே விஷயம் தெரிந்தாலும் ஆமாம், காதலிக்கிறேன் என்று அடித்துச் சொல்ல அவனால் முடியும். சுந்தரமூர்த்தி முதலியாருக்கும் அவர் மகன் அருணாசல முதலியாருக்கும் பேத்தி வளர்மதிக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் இன்னபிற அத்தனை உருப்படிகளுக்கும் கைகட்டிச் சேவகம் செய்யும் வீரபத்திரனால் சாத்தியமில்லை.
இந்தத் துணிச்சல் மிகுந்த எண்ணத்துக்கு வலு சேர்ப்பதுபோல், உப்புகொடோனுக்கு அருகே தான் வரச்சொன்ன இடத்துக்கு வீரபத்திரனுடன் வந்து சேர்ந்ததுமே மன்னிப்புக் கேட்கும் குரலில் வளர்மதியும் ஒரு விஷயத்தைச் சொன்னாள்.
‘தனியாத்தான் கெளம்பினேன். பாப்பா தனியா போவுதேன்னு தாத்தாதான் இவன அனுப்பிவெச்சாரு. வீரபத்திரா, நீ போய் நாலு புளியாங்கா எடுத்தாயேன். சாப்ட்டுக்கினே பேசலாம்’ என்று சொன்னாள்.
வீரபத்திரன் பத்மநாபனை முறைத்தான். அல்லது வெறுமனே அவன் பார்ப்பதே தனக்கு முறைப்பதுபோல் தெரிகிறதா?
பத்மநாபனுக்குக் குழப்பமாக இருந்தது. இருப்பினும் அவனை வெறுப்பேற்றுவது என்று முடிவு செய்து, ‘புளியாங்காயெல்லாம் வேணாம் வளரு. எனக்கு ஒரு பெரிய டவுட்டு. அத்த மொதல்ல க்ளியர் பண்ணு. பின்னத்தின் சுருங்கிய வடிவம்னா என்னா? மகாலிங்க வாத்தியாரு சொன்னப்ப சரியாவே விளங்கல. பன்னீராண்ட கேட்டேன். போடான்னுட்டான். ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குற திமிரு… இத்த புரிஞ்சிக்காம இன்னிக்கி எப்பிடி ஓம்மொர்க்கு பண்றதுன்னே தெரியல.’
வளர்மதிக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள். அழகான சந்தர்ப்பங்களை இன்னும் அழகாக்கலாமே? எனவே ஆரம்பித்தாள். ஓட்டைப் பாலத்தின் கைப்பிடிச் சுவரில் தக்கென்று ஏறி அமர்ந்து பத்மநாபன் கையிலிருந்த நோட்புக்கை வாங்கிப் பிரித்தாள். அவன் பாக்கெட்டிலிருந்து அவளே பேனாவை எடுத்து, ‘இங்க பாரு..’ என்று ஆரம்பித்தாள்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

