கொட்டிய குப்பையும் கொட்டப்போகும் குப்பையும்

இட்லிவடைக்கு இன்று பிறந்தநாள் என்று அறிந்தேன். வாழ்த்துகள்.

இணையத்தில் அநாமதேயம் என்பதன் சுவாரசியம் மறைந்து வெகுநாள் ஆகிவிட்டது. யாராயிருந்தால் என்ன, சரக்கு எப்படி என்கிற மனநிலைக்கு வாசகர்கள் பழகிவிட்டார்கள். இட்லிவடை யார் என்ற கேள்வி இன்று பெரும்பாலும் எழுவதில்லை. இட்லிவடைக்குப் பிறகு உதித்த பேயோன், தனது முன்னோர்களின் அனைத்து அருமை பெருமைகளையும் அடித்துக்கொண்டு போய்விட்டார். அவரது பாதிப்பில் எழுந்த நாயோன், சேயோன், மாயோன் வகையறாக்கள் இருக்குமிடம் தெரியாமலாகிப் போனதே சரக்கு முக்கியம் என்றாகியிருப்பதற்கான சாட்சி.

இட்லிவடை இதுகாறும் என்ன செய்திருக்கிறது? உருப்படியாக ஒன்றுமில்லை என்பதைத் தனது யு.எஸ்.பியாகத் தக்கவைத்து வந்திருக்கிறது. இடையிடையே சில நல்ல காரியங்கள் இட்லிவடை மூலமாக நடைபெற்றிருப்பதைத் தவிர்த்துப் பார்த்தால் பிராமண (சே! பார்ப்பன.) பாஜக ஜெயலலிதா சோ துக்ளக் அனுதாபி என்ற தகவலைக் குற்றச்சாட்டாகத் தொடர்ந்து வெற்றிகரமாகப் பெற்று வந்திருக்கிறது. தொடங்கிய காலம் முதல் இன்றுவரை சகிக்க முடியாத பல தமிழ்க்கொலைகள் செய்து வந்திருக்கிறது. அபூர்வமாக யாராவது ஒரு நல்ல கட்டுரை எழுதிவிடுவார்கள். அதை எதாவது ஒரு மட்டரகமான மஞ்சள் கமெண்ட்டால் காலி பண்ணி வந்திருக்கிறது. மொக்கையான பல சினிமாக்களுக்கு தியேட்டரில் இருந்தபடியே விமரிசனம் தந்திருக்கிறது. தேர்தல் நேரத் தகவல்கள், பத்திரிகை உலக அக்கப்போர்கள், அபத்த ஜோக்குகள் இன்னபிற. ஒரு வாரப்பத்திரிகையின் பல கல்யாண குணங்கள் இட்லிவடைக்கு உண்டு. ஆனால் இட்லிவடையை வாரப்பத்திரிகையாக்கி அச்சடித்தால் பத்து காப்பி கூட விற்காது.

பத்தாண்டுக் காலமாகக் குப்பை கொட்டி வருகிற பொறுப்புணர்வுடன் இவ இதனை யோசித்துப் பார்க்கலாம். இணையத்தில் ‘உருப்படி’ என்ற பதத்துக்கு தமிழ்ச்சூழலளவில் பொருளில்லை. வாசகர்களைப் பொறுத்தவரை இணையம் பொழுதுபோக்குதான். எனக்கு இதில் சந்தேகமில்லை. அவ்வப்போதைய தார்மிகக் கோபம், அறச் சீற்றம் போன்றவையும் இந்த ரகத்தைச் சார்ந்ததே. மிகச்சில தீவிர சிந்தனையாளர்கள், உண்மையான சமூக அக்கறை கொண்டவர்கள் உண்டு. ஆனால் இவ அளவுக்கு அவர்களுக்கு வாசகர்கள் இருக்க மாட்டார்கள். சிறுபான்மையினருக்கேயுரிய பிரச்னைகள். மெய்நிகருலகிலும் இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை.

இதற்காக இட்லிவடை சமூகப் பிரக்ஞையுடன் வீறுகொண்டு எழவேண்டுமென்று நான் சொல்லமாட்டேன். பொழுதுபோக்கை இன்னும் சற்றுத் தரமாகவும் மொழியை இன்னும் கொஞ்சம் கவனமாகவும் கையாளலாம். ‘ஜெய் ஸ்ரீராம்!’ ‘வெல்க பாஜக!’ ‘அம்மா நாமம் வாழ்க’ ‘துக்ளக் புகழ் ஓங்குக!’ என்பதுபோல் சில வரிகளை தளத்தில் ஆங்காங்கே ஒட்டிவைத்து எப்பப்பார் அதே விமரிசனங்களை முன்வைப்போர் வாயை அடைத்து, வேறு புதிதாகத் திட்ட வழி வகுத்துத் தரலாம். பத்தி பிரிக்காத படு பாதகக் கட்டுரைகளைப் பிரசுரித்து இம்சிக்காமல், பிரசுர விஷயத்தில் சற்றே கவனம் கைக்கொள்ளலாம்.

இட்லிவடை வெறும் தனிநபர் வலைப்பதிவல்ல. அதே சமயம் பத்திரிகையுமல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த இசகுபிசகான அந்தஸ்தில் ஒரு மாதிரி செட்டாகி வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதிலொன்றும் தவறில்லைதான். ஆனால் இதில் நீடிப்பதற்கு இன்னும் ஏதேனும் செய்யத்தான் வேண்டும். இப்போதே 140 கேரக்டர்களும் கேரக்டர் அசாசினேஷன்களும்  போதும் என்ற மனநிலைக்கு மக்கள் பழகிவிட்டார்கள். வயதாகிக்கொண்டிருக்கும் இட்லிவடை காலத்தைப் புரிந்துகொண்டு தன்னை அப்டேட் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

உனக்கென்ன அக்கறை என்று கேட்காதீர்கள். துரதிருஷ்டவசமாக என்னுடைய சில குப்பைகளையும் அங்கே தூக்கிப் போட்டிருக்கிறேன். ஒரு குறைந்தபட்சக் குற்ற உணர்ச்சியாவது மனுஷனுக்கு வேண்டாமா?

Happy Birthday Idlyvadai!

5 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற