தமிழன் ஏன் புத்தகம் வாங்குவதில்லை?

புத்தகக் கண்காட்சி நெருங்கும் நேரத்தில் எழுத்தாளர்களை எப்போதும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டு விடுகிறது. எழுதுவது குறித்த பதற்றம் இல்லை அது. எத்தனை கிலோ அல்லது கிலோபைட் வேண்டும்? இந்தா சாப்டு என்று அள்ளிப் போட அவர்களால் முடியும். பிரச்னை வாசகர்கள் சார்ந்தது.

இந்தத் தமிழ் வாசகர்கள் ஏன் புத்தகம் வாங்குவதில்லை? உலகமெங்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள். பரதேசி, இதில் பத்து விழுக்காட்டினர் கூட ஏன் புத்தகம் வாங்கிப் படிப்பதில்லை? தார்மிகக் கோபம், அறச் சீற்றம், சுய ஆதங்கம் உள்ளிட்ட சகலமான கெட்ட சமாசாரங்களும் புவிக்கடியில் பொங்கும் சரஸ்வதி நதியென மனத்துக்குள் பொங்கிப் பீறிடும் தருணம்.

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவர் (இவர் நண்பரொருவர் அல்லர்) தென் கொரியாவின் புத்தகச் சந்தை குறித்து ஒரு குறிப்பை எழுதியிருந்தார். எத்தனையோ மில்லியன் டாலர்களுக்குப் புத்தகங்கள் அங்கே விற்கின்றவாம். வருடம் தோறும் எழுத்தாளப் பணக்காரர்களை உருவாக்கித் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருக்கிறதாம் அந்தக் குட்டி தேசம்.

கஷ்டம்தான். தங்கத் தமிழ் எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்தான். அதற்காக நாம் கொரிய மொழி கற்றுக்கொண்டு அங்கு போயா குப்பை கொட்ட முடியும்? சுத்த நான்சென்ஸ்.

ஏதோ என்னால் முடிந்தது, தமிழன் ஏன் புத்தகம் வாங்குவதில்லை என்பதற்கான காரணங்களைத் துப்பறிய ஓர் உரத்த சிந்தனை மேற்கொண்டேன். அவை பின்வருமாறு :-

1) தமிழனுக்கு எப்போதும் டயமிருக்காது
2) தமிழன் கனமான பொருட்களைத் தூக்க விரும்புவதில்லை
3) தமிழன் பிறவி பிடிஎஃப் பிரியன்
4) இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, இலவச அரிசி, இலவச மின்சாரம் என அனுபவித்துப் பழகிய தமிழனுக்கு இந்த சமூகம் இலவசப் புத்தகங்களைத் தருவதில்லை
5) தமிழன் ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே படிப்பான்
6) தமிழனின் பெண்டாட்டி பெரும்பாலும் படிக்க விடுவதில்லை
7) தமிழனின் சம்பளம் கம்மி.
8) தமிழ்ப் புத்தகங்களில் ப்ரூஃப் மிஸ்டேக்குகள் அதிகம்
9) தமிழ் எழுத்தாளர்கள் தங்களைத் தமிழனைவிடப் பெரிய பருப்பு என எண்ணிக்கொள்கிறார்கள்
10) தமிழனுக்கு டிவி சீரியல் இருக்கிறது
11) தமிழனுக்குத் திருட்டு சிடி இருக்கிறது
12) படுத்துக்கொண்டு படித்தால் வீட்டில் திட்டுகிறார்கள்
13) தமிழன் போகும் கடைகளில் தமிழ்ப் புத்தகங்கள் இருப்பதில்லை
14) தமிழன் விரும்பும் எழுத்தாளரின் புத்தகம் இம்முறை வெளியாகவில்லை
15) தமிழனின் மனைவி லெண்டிங் லைப்ரரி கார்டு வைத்திருக்கிறாள்
16) தமிழன் நண்பர்களிடம் வாங்கிப் படிப்பதையே விரும்புவான்
17) தமிழனுக்குத் தமிழ் பேசத்தான் தெரியும். dont know to read in டாமில்
18) தமிழன் கத புக்ஸ்தான் படிப்பான். ஆனால் மாத நாவல்களின் வரத்து குறைந்துவிட்டது
19) தமிழன் ரிடையர்மெண்ட்டுக்கு அப்புறம் புத்தகம் வாங்க நினைத்திருக்கிறான். இப்போது மகள் திருமணத்துக்குக் காசு சேர்க்கிறான்
20) எல்லா தமிழனும் எழுத்தாளனே. ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

26 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற