வாசிக்க பலகுபவனின் கேள்வி

வணக்கம்.

எனது பெயர்….. பொறியில் படித்துள்ளேன், வயது 27. என்னுடைய தாத்தா மூலம் வாசிக்க ஆரம்பித்தேன். பணியில் சேர்ந்த பிண்பு புத்தகங்களின் வாசிப்பு அதிகமாகியது. பொண்ணியின் செல்வன், மோகமுள் நாவல்களை வாசித்தபின்பு ஆர்வம் அதிகரித்தது. இரண்டு ஆண்டுகளாக சென்னை மற்றும் ஈரோடு புத்தக கண்காட்சியில் சில புத்தகங்களை வாங்கி வாசித்தேன். ஈரோட்டில் தற்போது நடந்துகொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு போகும் எண்ணத்தில் இணையத்தில் நாவல்களை தேடியபோது சுமார் 30 நாவல்களை எதை தேர்ந்தெடுப்பது என்ற குலப்பத்திலேயே பட்டியலிட்டேன். இருதியில் அதன் மொத்த விலை என் மாத வருமாணத்தில் 1/3 ஆக உள்ளது. 30 புத்தகத்தையும் வாங்கமுடியாவிட்டாலும் முடிந்த சில புத்தகத்தை வாங்கத்தான் போகிறேன்.

இரவு வெகுநேரம் இந்த தொகையை பற்றி எண்ணியபோது, வாங்கி ஆர்வத்தோடு வாசித்த நாவல்கள் எல்லாம் அலமாரியில் நிரம்பி இருக்கின்றன. ஒரு சிலவற்றை தவிற மற்றவை மீண்டும் வாசிக்கப்படவில்லை – நேரமில்லை, வேலைப்பலு என பல காரணங்கள். எனவே இணையத்தில் பதிவிரக்க முடியுமா என தேடியதில் சில நாவல்களை படித்துக்கொண்டிருக்கிறேன்.

எனது கேள்வி இவ்வளவு தொகை முதலிட்டு வாங்கும் புத்தகங்கள் ஒரு வாசிப்புக்பின் இப்படிதான் அனைத்து வீடுகளிலும் அலமாரியை அலங்கரிக்கின்றனவா????

தங்களுடைய வாசிப்பு அனுபவத்தின் மூலமாக எனது ஐயத்தை தீர்க்கவும்….

குறிப்பு: நூலகம் ஒரு தீர்வுதான். அங்கு குறிப்பிட்ட நூல்களே கிடைக்கின்றது….

தங்களுடைய பதிலை எதிர் நோக்கும் வாசகன் …..

O

பொதுவாக கமர்ஷியல் போராளிகளுக்கு இம்மாதிரி மின்னஞ்சல்கள் வருவதில்லை. அட்ரஸ் தவறி இம்முறை எனக்கு இப்படி ஒரு கடிதம். நண்பர் வருத்தப்படக்கூடாது என்பதால் அவர் பேரை மட்டும் நீக்கியிருக்கிறேன். கடிதத்தில் உள்ள பிழைகளை நீக்காததன் காரணத்தைச் சொல்லவேண்டியதில்லை. [தலைப்பும் அவர் மின்னஞ்சல் சப்ஜெக்ட் ஃபீல்டில் எழுதியிருந்ததுதான்]

இனி பதில்.

நண்பருக்கு,

இந்த சம்பளப் பிரச்னை பெரும் பிரச்னைதான். அரிசி பருப்பு புளி மிளகாய் சோப்பு சீப்பு ஜட்டி நிரோத் ஜாலிம் லோஷனெல்லாம் வாங்கியது போகப் புத்தகம் வாங்கப் பெரும்பாலும் பணம் கையில் இருப்பதில்லை என்பதை அவசியம் ஒப்புக்கொள்கிறேன். என்ன செய்வது? அவ்வப்போது படிக்கும் அரிப்பெடுத்துவிடுகிறது. இது ஒரு வியாதி. சொஸ்தம்பெறச் சில உபாயங்கள் சொல்கிறேன்.

1. நூலகங்களில் ஜட்டிக்குள் சொருகிப் புத்தகங்களைத் திருடி வந்துவிடலாம்.

2. நண்பரிடம் இரவல் வாங்கி வந்த கையோடு போன் போட்டு வழியிலேயே தவறிவிட்டதாக ஒரு திடீர்ப் பதற்றம் காட்டி, மன்னிப்பும் கேட்டு, மேற்படி புத்தகத்தைச் சொந்தமாக்கிக்கொண்டுவிடலாம்.

3. அமரர் கோயிஞ்சாமி நினைவு நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டி. முதல் பரிசு பத்தாயிரம், இரண்டாம் பரிசு ஐயாயிரம். நான்கு மூன்றாம் பரிசுகள் தலா இரண்டாயிரம் என்று ஃபேஸ்புக்கில் விளம்பரம் போட்டால் ஒவ்வொரு ஆசிரியரும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பிவிடுவார்கள். வந்த புத்தகங்களைக் கொண்டு வீட்டு அலமாரியை நிரப்பிவிட்டு பரிசுத் தொகை உரியவர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக ஒரு ஸ்டேடஸ் போட்டுவிட்டால் போதும். யாரும் போய் என்கொயரி செய்யப் போவதில்லை.

4. சில பதிப்பகங்கள் விமரிசனம் எழுத இலவசப் பிரதி அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். வேண்டிய புத்தகங்களைக் குறிப்பிட்டு வாங்கிக்கொண்டு விடலாம். அவர்கள் செலவிலேயே அனுப்புவார்கள். இஷ்டமிருந்தால் விமரிசனமாக நாலு வரி. இல்லாவிட்டால் இழுத்து மூடிக்கொண்டு வாசிப்பு இன்பம் அனுபவிக்கலாம்.

5. இணையத்தில் ஏராளமான இலவச பிடிஎஃப் சேவைத் தளங்கள் உள்ளன. அவற்றில் உறுப்பினராகி உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அலமாரி இடப் பிரச்னையும் இதனால் தீரும்.

இம்மாதிரி கைவசம் இன்னும் ஏழெட்டு யோசனைகள் உள்ளன. ஆனால் நீங்கள் என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் பதில் கேட்டிருக்கிறீர்கள். என் அனுபவம் உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் நான் ஓர் உருப்படாத தண்டக் கருமாந்திரம். புஸ்தகம் வாங்கிய காசையெல்லாம் சேர்த்திருந்தால் இந்நேரம் குரோம்பேட்டையில் பாதியை விலைக்கு வாங்கியிருப்பேன். நீங்கள் சொல்வதுபோல, ஆசைப்பட்டு வாங்கிய பல நூல்கள் இரண்டாம் வாசிப்புக்குக் கூட லாயக்கில்லாமல்தான் இருக்கின்றன. இன்னும் பல நூல்கள் முதல் வாசிப்பையே பாதியில் முறித்துவிடும். ஆனாலும் புத்தகமல்லவா? தூக்கிக் கடாச மனசு வராமல் அலமாரியைத்தான் நிரப்பவேண்டியதாகிவிடுகிறது.

ஆனால் ஒன்றைக் கவனித்திருக்கிறேன். நான் வேண்டாமென்று ஒதுக்கிய பல நூல்களைப் பிறர் விரும்பியிருக்கிறார்கள். நான் தொடக்கூட விரும்பாத பல புத்தகங்களை ஆர்வமுடன் எடுத்துச் சென்று படித்து சிலாகித்திருக்கிறார்கள். நானே இதுவரை இரண்டு முறை எனக்கு வேண்டாத புத்தகங்களை மொத்தமாகத் தனியே எடுத்து வைத்து, நண்பர்களை அழைத்து விரும்பியதை எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறேன்.

செலவுதான், நஷ்டம்தான். என்ன செய்ய? அம்மா மெஸ் மாதிரி அம்மா டாஸ்மாக், அம்மா புத்தக அங்காடிகள் திறக்கப்படுவதுதான் இதற்கு ஒரே தீர்வு. “வருமாணத்தில்” 1/3 ஆக உள்ள செலவு இதனால் 1/4 அல்லது 1/5 ஆகவாவது குறையுமல்லவா? உங்களுக்காக இது சீக்கிரம் நடக்க எல்லாம் வல்ல எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

இவண்,
இவன்.

5 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற