உட்கார்ந்து பேசலாம், வருக.

புத்தகக் கண்காட்சியில் என்னைச் சந்திக்க விரும்பி வருகிற நண்பர்கள் சிலர், கிழக்கில் விசாரித்தேன்; உங்கள் போன் நம்பர் கிடைக்கவில்லை, நீங்கள் கிழக்கில் இல்லை, எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை, சந்திக்க முடியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள்.

இதற்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. நான் ஓரிடத்தில் அமரக்கூடியவன் அல்லன். குறிப்பாகக் கண்காட்சியில். ஆனால் கால் வலித்தால் எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து விடுவேன். கண்காட்சி தொடங்கும் நேரம் கண்டிப்பாகக் கிழக்கு அரங்கில் இருப்பேன். குறைந்தது முதல் ஒரு மணிநேரம். அதன்பின் சுற்றத் தொடங்கிவிடுவேன். இடையிடையே கிழக்கு, பிராடிஜி அரங்குகளுக்கு வந்து செல்வேன்.

வேண்டுமானால் ஒன்று செய்யலாம். நாளை முதல் தினசரி மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை கிழக்கு ஸ்டாலுக்கு அடுத்தாற்போல் உள்ள நடைபாதை ஓரத்தில் உட்கார்ந்துவிடுகிறேன். [இரு தினங்களாக அங்குதான் நண்பர்களைச் சந்திக்கிறேன்.] நண்பர்கள் அங்கே என்னைச் சந்திக்கலாம்.

ஆனால் ஒரு நிபந்தனை. நான் தரையில்தான் அமர்ந்திருப்பேன். பேண்ட் போட்டுக்கொண்டு தரையில் அமர நீங்கள் யோசிப்பீர்களானால் கஷ்டம். நேற்று ஒரு நவீன புரட்சிக் கவிஞரம்மா சுடிதார் அணிந்திருப்பதால் தரையில் உட்கார முடியாது என்று சொல்லிவிட்டு நின்றவண்ணமே பேசிவிட்டுச் சென்றுவிட்டார். முழு சம்பாஷணையிலும் நான் உட்கார்ந்து அறுபது டிகிரி தலையைத் தூக்கி வைத்துக்கொண்டு பேசியதும் அவர் கீழே பார்த்துப் பேசியதும் எனக்கே மரண அவஸ்தையாக இருந்தது. இதற்கு மாற்றாக உரையாடல்களை நின்றவண்ணம் மேற்கொள்வது எனக்குச் சிரமம்.

எனவே கீழே உட்காரக் கூச்சப்படாதவராக, உட்கார்வதில் பிரச்னை தராத ஆடை அணிந்தவராக வரக்கோருகிறேன்.

தரையில் சுகமாக அமர்வது எப்படி என்று முன்னதாக பத்ரியிடம் ஒரு ஐந்து நிமிடம் பாடம் கேட்டு வந்தால் இன்னும் வசதியாக இருக்கும். அவர் யோகமந்திரம் கிருஷ்ணமாச்சார்யார் செய்வதையெல்லாம் புத்தகக் கண்காட்சி அரங்கத் தரையில் செய்துகொண்டிருப்பது உங்களுக்கு அவ்வப்போது கண்கொள்ளாக் காட்சியாகக் கிடைக்கக் கூடும்.

எனவே, நாளை முதல் மாலை ஐந்து மணி, சந்திக்கும் வேளை.

5 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற