திறமையில் வாடிய கலைஞன்

மணிக்கொடி ரைட்டர்ஸ மொத்தமா ஒரு தடவ படிச்சிரு. அசோகமித்திரன மனப்பாடம் பண்ணு. சுந்தர ராமசாமிய படிச்சிண்டே இரு. அடுத்த ஜெனரேஷன்ல நாஞ்சில்நாடன் முக்கியம். லவ் பண்ற ஐடியா இருந்தா மட்டும் வண்ணதாசன படி. தோப்பில் மீரான்னு ஒருத்தர் எழுதறாரு. முடிஞ்சா படிச்சிப் பாரு. லேங்குவேஜ் கொஞ்சம் டஃப். ஆனா செம மண்டை அது. நமக்குத் தெரியாத வேற ஒரு லைஃப போர்ட்ரெய்ட் பண்றாரு. மாமல்லன் ஒரு காலத்துல என் ஃப்ரெண்டுதான். செமையா எழுதுவான். ஆனா திமிர் புடிச்சவன். படி, ஆனா படிச்சேன்னு என்கிட்ட சொல்லாத.

நவீன தமிழ்ப் புனைவுலகு பற்றிய அறிமுகம் இப்படியாக எனக்கு சிவகுமார் மூலமாகவே முதலில் கிடைத்தது. வருடம் 1989. நான் படிக்கத் தொடங்கியது, எழுதத் தொடங்கியது எல்லாம் இதன் பிறகுதான்.

தமிழில் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாத நல்ல எழுத்தாளர்களுள் ஒருவராக சிவகுமாரைச் சொல்ல நேர்வது துரதிருஷ்டம். அவரது அப்பாவும் இரண்டு ரிக்‌ஷாக்காரர்களும், நாயகன் ஆகிய இரு தொகுப்புகளும் மிக முக்கியமானவை. யாருடைய சாயலும் இல்லாத தனித்துவமான மொழி அவருடையது. கதைப் போக்கில் மிக முக்கியமான கட்டம் அல்லது திருப்பம் வரும்போது மட்டும் அவரது வெளிப்பாட்டு முறையில் சற்றே அசோகமித்திரன் வருவார். இதைச் சுட்டிக்காட்டினால், ‘போடாங்கோ.. அப்பன் சாயல் புள்ளைக்கு இல்லன்னாத்தாண்டா தப்பு’ என்பார். அவருடைய நாவல் வேடந்தாங்கல் என்னை ஒரு காலத்தில் புரட்டிப் போட்டிருக்கிறது. என் கதை இவருக்கு எப்படித் தெரியும் என்று வியந்தேன். உண்மையில் அது மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த அத்தனை மக்குப் பையன்களுடையதுமான கதை.

சிவகுமார் பெரிய அளவில் எழுத்தில் சாதித்திருக்க வேண்டியவர். சினிமா அவரைச் சாப்பிட்டது. கமல் கூப்பிட்டார் என்று தேவர் மகனில் வேலை பார்க்கப் போய் சில லட்சங்கள் செலவழித்து சொந்தப் படம் (பாப்கார்ன் கனவுகள்) எடுப்பதுவரை ஒரு பேயாட்டம் ஆடிப் பார்த்து பலவற்றை இழந்தவர் – வங்கி வேலை உள்பட. கடைசி வரை அவரது சினிமாக் கனவுகள் நனவாகவில்லை. அவ்வப்போது சந்திக்க நேர்ந்தால் ஏதாவது ஒரு திட்டத்தை விவரிப்பார். திட்டம் கைவசமில்லாதபோது என்னவாவது ஒரு போராட்டம் நடத்தும் யோசனையைச் சொல்லுவார். தூர்தர்ஷன் முன் உண்ணாவிரதம், மத்திய அமைச்சருடன் கடித யுத்தம் என்று தொடங்கி என்னென்னவோ செய்திருக்கிறார். ஒருமுறை எதற்கோ தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப் போகிறேன் என்று சொல்லப் போக, கண்டபடி திட்டி, சத்தம் போட்டுவிட்டேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘என்ன இப்ப? வேணான்றியா? சரி, சாகும்வரை உண்ணாவிரதம்? அது ஈசிதான?’ என்றார்.

அவரே ஓரிடத்தில் சொல்லியிருப்பதுபோல, அவர் வறுமையில் அல்ல; திறமையில் வாடிய எழுத்தாளர். சாதிக்காம சாகமாட்டாண்டா இந்த சிவகுமார் என்று ஒவ்வொரு சந்திப்பின் இறுதியிலும் சொல்லிவிட்டுப் போவார். இன்று அவர் இல்லை. அவரது சாதனைகளை சினிமா அல்ல; அவரது சிறுகதைத் தொகுப்புகளும் வேடந்தாங்கல் நாவலும் சொல்லும்.

(10/01/2016 – இன்று தி ஹிந்துவில் வெளியான குறிப்பு)

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.