பொன்னான வாக்கு – 06

எனக்கு காந்தியை நினைக்கும்போதெல்லாம் இயேசுவின் ஞாபகம் வருகிறது என்று யாரோ சொன்னதைச் சிறு வயதில் படித்த நினைவிருக்கிறது. அந்த யாரோ யார் என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறேன், இன்னும் தோன்றியபாடில்லை. பிரபல பொன்மொழிகளை எழுதும் திரு. யாரோவாகத்தான் அவர் இருக்கவேண்டும். ஆனால் எனக்கு காந்தியை நினைத்தால் இன்னொருத்தர் ஞாபகமெல்லாம் வருவதில்லை. மு.க. ஸ்டாலினை நினைத்தால்தான் இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் ஞாபகம் வந்துவிடுகிறது.

சார்லஸுக்கு இன்றைக்கெல்லாம் அறுபத்தியேழு வயதாகிறது. அவர் இந்தியா சுதந்தரம் அடைந்ததற்கு அடுத்த வருஷம் பிறந்தவர். ஸ்டாலின், சார்லஸைவிட சில வருடங்கள் இளையவர். அவருக்கு அறுபத்தி மூன்று வயது ஆகிறது.

இருவருமே உள்ளூர் அரசியலில் ஊறித் திளைத்தவர்கள். சார்லஸாவது வாலிப வயதில் ஜாலியாக நிறைய சுற்றியவர். ஸ்டாலின் தமது பதினான்காவது வயதிலேயே அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டவர். 1967 பொதுத் தேர்தல் சமயத்திலேயே பிரசாரத்தில் இறங்கியவர். 76ல் மிசா, 82ல் இளைஞரணித் தலைமைப் பொறுப்பு, 89ல் எம்.எல்.ஏ, 96ல் மேயர். அதன்பின் நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும்.

இன்றைக்கெல்லாம் தமிழ்நாட்டில் ஜெயலலிதா – கருணாநிதி அல்லாமல் வேறு யார் முதல்வராகலாம் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பெரும்பான்மையானவர்கள் கைகாட்டக்கூடிய இடத்தில் இருக்கும் தலைவர் (இளைஞர் என்று சொல்லவேண்டுமோ?) ஸ்டாலின். இதில் சந்தேகமே இல்லை. வாரிசு அரசியல் என்னும் குற்றச்சாட்டெல்லாம் என்றோ ஒரு காலத்தில் எடுபட்டிருக்கலாம். ஸ்டாலின் விஷயத்தில் இனி அதற்கெல்லாம் அர்த்தமே இல்லை. அனுபவமும் பக்குவமும் அவருக்குத் தகுதியை வழங்கியிருப்பதை யாரும் மறுக்க இயலாது.

அறுபத்தியெட்டு வயதான சார்லஸுக்கும் அனுபவம் இல்லாமலிருக்காது. பக்குவமும் இல்லாதிருக்க வாய்ப்பில்லை. அவரும் ஸ்டாலினைப் போலவே பேரன் பேத்தியெடுத்தவர்தாம். ஆனாலும் ஸ்டாலினைப் போலவே இளைஞரும்கூட. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள இன்னொரு (கிட்டத்தட்ட) ஒற்றுமை, ஸ்டாலின் பூரம், சார்லஸ் பூரட்டாதி என்பது. இந்தப் பூரம், பூராடம், பூரட்டாதி மூன்றுமே (முப்பூரம் என்பார்கள்) ஏடாகூடமான ஜாதி. என்ன ஏடாகூடம் என்பது இங்கே வேண்டாம். நோக்கம் தடம் புரண்டுவிடும். நமக்குத் தெரியவேண்டியது, பூரம் சுக்ரன் ஆட்சி. பூரட்டாதி குரு ஆட்சி. போதும்.

குரு ஆட்சிக்காரர் என்றாலும் சார்லஸ் சிஷ்யராகத்தான் கடைசி வரை இருக்கவேண்டியிருக்கும். ஸ்டாலின் விஷயத்தில் அந்த ஒரு சிக்கல் இல்லை – ஜோதிட ரீதியாக. (இடைச்செருகலாக ஓர் அவசர பிகு: எனக்கு ஜோதிடமெல்லாம் தெரியாது. மேற்படி விவரங்களை கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏவெல்லாம் படித்துவிட்டு ஜோசியரான நண்பர் பெருங்குளம் ராமகிருஷ்ணனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.)

சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராவது எலிசபெத் ராணி கையில் உள்ள சங்கதி. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராகவாவது முன்னிறுத்தவேண்டியது கலைஞர் எடுக்க வேண்டிய முடிவு. சார்லஸ் எக்கேடு கெடட்டும். நமக்கு ஸ்டாலின் தான் முக்கியம்.

சென்ற பொதுத் தேர்தல் சமயத்திலேயே கலைஞர் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இல்லை. அதன் பிறகு ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்களின் இறுதியில் தனது இறுதித் தீர்ப்பாக மேற்படி அறிவிப்பை அவர் வெளியிடக்கூடும் என்று ஆரூடங்கள் கணிக்கப்பட்டன. ம்ஹும். இந்தத் தேர்தலே வந்துவிட்ட சூழலிலும் அதற்கான அவசியம் இல்லை என்று தி.மு.கவினர் சொல்லலாம். ஆனாலும் அடி மனத்து இச்சை என்பது உதட்டோரத் தேன்தான். பொதுவில் இல்லாவிட்டாலும் தனியே ருசிக்கச் சொல்லுகிற சங்கதி.

எனக்கென்ன தோன்றுகிறதென்றால், கலைஞர் சற்று சீரியசாகவே இதனை யோசிக்கலாம். தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவிட வேண்டும் என்று அவரும் படாதபாடு பட்டுப் பார்த்தார். கேப்டன் மசியவில்லை. புலிக்கு வாலாக இருப்பதைவிட புல்புல்தாராவுக்கு ஃப்ரேமாக இருக்கலாம் என்பது அவரது கணக்கு. சென்ற பொதுத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்ததை அவர் எண்ணிக்கொண்டிருக்கலாம். அது கூட்டணி கொடுத்த வரம். இப்போது ஓட்டணிகள் பிரிந்திருக்கும் சூழலில் கேப்டனின் நிஜ பலத்தை சமூகம் தரிசிக்க இத்தேர்தல் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது.

அது எப்படி ஆனாலும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக திமுக முன்னிறுத்தினால் திமுகவுக்கு இதுவரை ஓட்டுப் போடாத பலர் அந்தக் கட்சியின் பக்கம் திரும்ப ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆக்டிவாக இருக்கிறார். நமக்கு நாமே டூரெல்லாம் போய் வந்திருக்கிறார். தேமுதிக மூலம் வரக்கூடிய ஓட்டு என்று கலைஞர் எண்ணியிருந்ததை இது கணிசமாக ஈடுகட்டக்கூடும்.

ஆனால் நடக்குமா? இந்தப் பூரம் இருக்கிறதே, பூரம்…

வேண்டாம். கட்டு கடையை.

(நன்றி: தினமலர் – 12/03/16)

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.