கமல் அல்ல, முகில்.

இன்றைக்குச் சொல்லி மாளாத கூட்டம். எல்லா அரங்குகளிலும் நிற்க இடமில்லாத அளவுக்கு. பில் போட்டவர்கள் மிகவும் பாவம். கிழக்கில் பிரசன்னா, விஸ்வா, மணிகண்டன் எல்லோரும் பிசாசாகவே மாறியிருந்ததைக் கண்டேன். ராத்திரி அவர்களுக்கு நல்ல உறக்கம் அமையவேண்டும்.

கிழக்கு அரங்கில் இன்றைக்கு இரண்டு விசேஷங்கள். முதலாவது, ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூலின் ஆசிரியர் கே. ரகோத்தமன் வருகை தந்தது. எந்த ஒரு தொழில்முறை எழுத்தாளரும் சற்றே பொறாமை கொள்ளத்தக்க வகையில் அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. சகட்டு மேனிக்குக் கேள்விகளும் பதில்களும் துணைக்கேள்விகளும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் விளக்கங்களுமாக சுமார் இரண்டு மணிநேரம் அவர் ஒண்டியாளாக அடித்து ஆடிக்கொண்டிருந்தார்.

உட்கார்ந்து பேசுங்கள் என்று நாற்காலி போட்டதற்குச் செல்லமாகக் கோபித்துக்கொண்டார். ‘நான் ஒரு போலீஸ்காரன். எனக்கு உக்காந்து பேசிப் பழக்கமில்லை’ என்று சொன்னார். எனவே வாசகர்களும் கூடிநின்றபடியே பேசினார்கள். நண்பர்கள் பலர் தங்களால் நெருங்கி, கேள்வி கேட்கமுடியவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார்கள். நான் கொஞ்சம் மாடரேட் செய்யலாமா என்று பார்த்தேன். ஆனால் முடியவில்லை. சரி, முட்டி மோதி அவர்களே ஒரு வழிக்கு வரட்டும் என்று விட்டுவிட்டுப் போய் ஒரு ஓரமாக உட்கார்ந்துவிட்டேன்.

 

 

ரகோத்தமனின் புத்தகம், சந்தேகமில்லாமல் இந்த ஆண்டின் சூப்பர் ஸ்டார். அடுத்த இடத்தை எதற்குக் கொடுக்கலாம் என்பது இன்னும் புரியவில்லை. நேற்று வரை முகலாயர்களும் மாவோயிஸ்டும் பழைய இரண்டாம் உலகப்போரும் அரதப்பழசு நிலமெல்லாம் ரத்தமும் அந்த இடத்துக்குப் போட்டி போட்டுக்கொண்டிருந்தன.

இன்று காலை அரங்குக்கு வந்துவிட்ட அகம் புறம் அந்தப்புரம், அதன் பிரம்மாண்டமான தோற்றம், மூச்சடைக்கச் செய்யும் விலை அனைத்தையும் மீறி விற்பனை வேகத்தில் முந்தியிருக்கிறது. இது உண்மையிலேயே எனக்கு வியப்பாக உள்ளது. ஒரு புத்தகம் தனக்குத் தேவை, படித்தே தீரவேண்டும் என்று மக்கள் விரும்பிவிட்டால் விலையைப் பொருட்படுத்துவதே இல்லை என்பது அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பிரபல எழுத்தாளர், ஏராளமான வாசகர் வட்டம் உள்ளவர், ஏசி அரங்கில் வெளியீட்டு விழா, நட்சத்திர ஹோட்டலில் தண்ணி பார்ட்டி, தாம்தூம் ஜபர்தஸ்துகள் எதுவும் வேண்டாம். சரக்கு!

முகில் இந்தப் புத்தகத்துக்காக இரண்டு வருடங்கள் உழைத்தான். இந்திய சமஸ்தானங்கள், சிற்றரசர்கள், அவர்களுடைய உள் அரசியல், பிரிட்டிஷ் அரசுடன் அவர்களுக்கு இருந்த உறவுகள், உரசல்கள் என்று ஒவ்வோர் அம்சத்தையும் தேடித்தேடிப் படித்துக்கொண்டிருந்தான். அந்தப்புரம் தலைப்பில் இருந்தாலும் அத்தியாயங்களில் அவ்வளவாக இருக்காது.

இந்தத் தொடரை அவன் ரிப்போர்ட்டரில் எழுத ஆரம்பித்தபோது ஜிலுஜிலு ராஜாக்களின் கிளுகிளு வாழ்க்கை வரலாறு போலிருக்கிறது என்றுதான் தலைப்பை முன்னிட்டுப் பெரும்பாலானவர்கள் நினைத்தார்கள். நாங்களே அவனை அப்படித்தான் கிண்டல் செய்தோம். புத்தகமாகும்போது இலவச இணைப்பாகச் சிட்டுக்குருவி லேகியம் கொடுக்கலாமா என்றெல்லாம் வெறுப்பேற்றினோம். ஆனால் சரித்திரத்தின் இண்டு இடுக்குகள் அனைத்திலும் நுழைந்து, ஏராளமான நுணுக்கமான விவரங்களைத் தேடித்தொகுத்து, சுவாரசியமாக அவன் எழுதியதில் இந்தத் தொடரின் வெற்றி, ஆரம்பித்த சில வாரங்களிலேயே நிச்சயமானது.

ஒரு வாரமிருமுறைப் பத்திரிகையில் இரண்டு வருடங்கள் தொடர்ந்து எழுதுவது என்பது சாதாரணமல்ல. வாசகர்கள் கொஞ்சம் கொட்டாவி விட்டாலும் எழுதுபவருக்கே சொல்லாமல் முற்றும் போட்டுவிட்டு அடுத்ததை ஆரம்பித்துவிடுவார்கள்.

எனக்குத் தெரிந்து பத்திரிகையில் வெளிவந்த கதையல்லாத, மிக நீண்ட தொடர் மாயவலை. அதற்கடுத்து அகம் புறம் அந்தப்புரம்தான்.

அந்த உழைப்புக்கான மிகச் சரியான பலனை இன்றைக்கு முகில் கண்காட்சி அரங்கில் பார்த்தான். தன் கண்ணெதிரே தனது புத்தகத்தை ஏராளமான வாசகர்கள் பாய்ந்து வந்து குதூகலித்துக் கொண்டாடி வாங்கிச் செல்வதைக் காண்பதைக் காட்டிலும் ஓர் எழுத்தாளனுக்குப் பெரிய மகிழ்ச்சி தரத்தக்க விஷயம் வேறொன்றில்லை.

சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்றைக்கு கமல் அல்ல; முகில்தான் நிஜமான ஹீரோ.

ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். முகில் கிழக்கில் சேர்ந்த புதிது. ஒருநாள் அவனது அம்மாவும் அப்பாவும் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு எங்கள் அலுவலகத்துக்கு வந்தார்கள். அவர்கள் முகத்தில் கவலை இருந்தது. மகனின் எதிர்காலம் குறித்த கவலை.

‘எம்.எஸ்.சி. ஐடி படிச்சிட்டு இப்படி எழுதப்போறேன்னு சொல்லிட்டு வந்துட்டான். இதுல பெரிய ஆளா வர முடியுங்களா? சம்பாதிக்க முடியுங்களா?’

உங்கள் மகன் சாதித்துக் காட்டுவான். அவனைத் தொந்தரவு செய்யாமல் சுதந்தரமாகச் செயல்பட மட்டும் அனுமதியுங்கள். மிச்சத்தைக் காலம் உங்களுக்கு வெகு விரைவில் நிரூபிக்கும் என்று நம்பிக்கை சொல்லி அனுப்பிவைத்தேன்.

இன்றைக்குக் கண்காட்சியில் முகில் இருந்ததைவிட, அவனது பெற்றோர் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

22 comments

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.