எது? ஏன்? எதனால்?

கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னென்ன புத்தகங்கள் நிறைய விற்கின்றன, மக்கள் எவற்றின் அடிப்படையில் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வாங்கும் விதத்தில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்பதை தினசரி சில மணி நேரங்கள் கவனித்து வந்தேன்.

எல்லா அரங்குகளிலும் நின்று பார்ப்பது எனக்கு சாத்தியமில்லை. கவனிக்கவேண்டும் என்று நான் நினைத்த அரங்குகளில் மட்டும் இதற்காக நேரம் செலவிட்டேன். அதன் அடிப்படையில் சில விவரங்கள் எனக்குக் கிடைத்தன. இவை, என் பார்வையில் பட்ட வரையில் மட்டுமே. இதுதான் மிகச் சரியான தகவல் என்று கண்டிப்பாகச் சொல்ல மாட்டேன். ஆனால் பொதுவான ஒரு Trend புரிவதற்கு இந்தத் தகவல்கள் உபயோகப்படலாம்.

* புத்தகங்களின் விலை அதிகரிப்பது குறித்து கடந்த ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் எப்போதும் வாசகர் தரப்பில் ஒரு பொதுவான அதிருப்தி இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த வருடம் அத்தகைய அதிருப்தி மனநிலை பெரும்பாலும் இருப்பதாகத் தெரியவில்லை. தனக்கொரு நூல் வேண்டுமென்று ஒரு வாசகர் முடிவு செய்துவிட்டால், அதன் விலை என்னவாக இருந்தாலும் கண்டிப்பாக வாங்கிவிடுகிறார். வாங்கலாமா, வேண்டாமா என்று புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு குழம்பி நிற்கிற காட்சி எங்குமே இம்முறை இல்லை. இருபது ரூபாய் நூலானாலும் சரி. ஆயிரம் ரூபாய் நூலானாலும் சரி. ஒரு கணத்துக்குமேல் ஒரு புத்தகத்தின் அருகே வாசகர் நிற்பதில்லை. சட்டென்று வந்து எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். இந்த மாற்றத்தை இந்த ஆண்டுதான் தெளிவாகப் பார்க்கிறேன். தவிரவும் முன்பெல்லாம் அதிக விலை உள்ள புத்தகங்களுக்கு, அல்லது நிறையப் புத்தகங்கள் வாங்கும்போது கூடுதலாகத் தள்ளுபடி கேட்கிற வழக்கம் இருந்தது. இம்முறை அதுவும் இல்லை.

* சரித்திரம் மிக அதிகம் விற்கிறது. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சரித்திர நூல்கள் மட்டுமல்ல. பல அரங்குகளில் சரித்திரம் மட்டும் விறுவிறுவென்று விற்பனையாகிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. பழனியப்பா பிரதர்ஸில் சாணக்கியரும் சந்திரகுப்தரும் என்றொரு தடிமனான புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். அமோகமாக விற்கிறது. தமிழினியில் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறு என்ற புத்தகம் நன்றாக விற்பதைக் காண முடிந்தது. [இதைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். நூலைப் படித்துவிட்டேன். இந்த ஆண்டின் மிகச் சிறப்பான ஆய்வுநூல் என்று தயங்காமல் சொல்லலாம். கண்காட்சி இன்னும் மூன்று நாள்களுக்கு இருக்கின்றன. தவறவிட்டவர்கள் உடனே வாங்கிவிடவும்.] பண்டைய சரித்திரம் முதல் சமகால சரித்திரம் வரை இதில் வேறுபாடுகள் இல்லை. மொழிபெயர்ப்பு சரித்திரங்களும் கூட. ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு, சில ராணுவத் தளபதிகளின் தன் வரலாறுகள், பிரபாகரன் பற்றிய புத்தகங்கள் [கணக்கு வழக்கே இல்லை. நக்கீரனில் ‘பிரபாகரன் புத்தகங்கள்’ என்றே தனியே ஒரு பேனர் வைத்திருக்கிறார்கள்.], புஷ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ இரண்டாம் பதிப்பு, சந்தியாவின் யுவான் சுவாங் மொழிபெயர்ப்பு, நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் வரலாறு [என்.சி.பி.எச்] போன்ற நூல்களெல்லாம் இதற்குமுன் காணாத வேகத்தில் இம்முறை விற்கின்றன. கிழக்கில் குஹாவின் இந்திய வரலாறும் முகலாயர்களும் அகம் புறம் அந்தப்புரமும் யூதர்களும் விற்பனை முன்னனியில் இருக்கும் சரித்திர நூல்கள்.

* கணக்கே பண்ண முடியாத அளவுக்கு அரசியல் புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழகம் தொடர்பான புத்தகங்கள் அவ்வளவாக விற்பதில்லை. கச்சத்தீவு, மண்டைக்காடு கலவரம், கீழவெண்மணி, இட ஒதுக்கீடு அரசியல் என்று பல்வேறு தரப்பட்ட தீவிரமான அரசியல் நூல்களைப் பல அரங்குகளில் காணமுடிந்தது. ஆனால் மக்கள் கிட்டே போகவே பயப்படுகிறார்கள். ஆனால் உலக அரசியல் நன்கு விற்கிறது. கிழக்கில் நாங்கள் கொண்டு வந்திருக்கும் பல தலைப்புகளுக்கு ஈயடிச்சான் நூல்கள் வந்திருக்கின்றன. அவையும் விற்கின்றன. சில இடதுசாரி அரங்குகளில் நிறைய புதிய அரசியல் புத்தகங்கள் மொழிபெயர்ப்புகளாக வந்திருக்கின்றன. அவற்றின் கனம், விலை மீறி அவை நன்றாக விற்பதைக் காண முடிந்தது. ஆழியில் சீனாவைப் பற்றிய ஒரு குண்டு புத்தகம் வந்திருக்கிறது. நன்றாக இருக்கிறது. நன்றாகவும் விற்கிறது.

* முழு இரண்டரை மணிநேரம் செலவிட்டு ஆன்மிக / பக்தி நூல்களின் டிரெண்ட் அறிய முயற்சி செய்தேன். கார்ப்பரேட் சாமியார்களைப் பொருத்தவரை இன்றைக்கும் ரஜனீஷ் மட்டும்தான் விற்கிறார். பழைய ஜே.கிருஷ்ணமூர்த்தி முதல் புதிய இளம் சாமியார்கள் வரை கடை விரித்திருந்தாலும் விற்பனையில் வேகமில்லை. இவர்களில் வாரப்பத்திரிகைகளில் தொடர் எழுதியவர்கள் மட்டும் தப்பித்துவிடுகிறார்கள். அந்தத் தொடர்களின் புத்தக வடிவம் மட்டும் விற்றுவிடுகிறது. அதே சாமியார், தொடராக அல்லாமல் நேரடிப் புத்தகம் என்றால் மக்கள் கண்டிப்பாக நிராகரித்துவிடுகிறார்கள். இஸ்கான்காரர்கள் மிரட்டல் மார்க்கெடிங் செய்தாலும் உள்ளே போகிறவர்கள் சந்தன பாக்கெட்தான் வாங்கிவருகிறார்களே தவிர புத்தகங்களை அல்ல. பகவத்கீதை உரைதான் அங்கே ஓரளவு விற்கும் புத்தகமாக உள்ளது. கோரக்பூர் கீதா பிரஸ் பகவத்கீதையும் அதன் விலைக்காகவே அமோகமாக விற்கிறது. பக்தி புத்தகங்களைப் பொருத்தவரை மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். பா. ராகவன், கணேஷ் சந்திரா, இலவசக் கொத்தனார், டைனோபாய் என்றெல்லாம் ஆசிரியர் பெயர் இருந்தால் தொடுவதுகூட இல்லை. பெயருக்கு முன்பாராவாக பிரம்மஸ்ரீ அல்லது ஸ்ரீலஸ்ரீ அல்லது உபயவேதாந்தி என்று என்னவாவது ஒன்று இருந்தாக வேண்டும். பின்பாராவாக சர்மாவோ சாஸ்திரிகளோ இருக்கவேண்டும். அப்படி இருந்தால் எந்தப் புத்தகத்தையும் தயங்காமல் வாங்குகிறார்கள். [ஏ.எம். ராஜகோபாலன் மட்டும் விதிவிலக்கு.] விகடன் அரங்கிலும் வானதியிலும் வேறு சில பதிப்பகங்களிலும் மக்களின் இந்தப் போக்கை மிகத் தெளிவாகக் காண முடிந்தது. இப்படி முன்பாரா பின்பாரா பார்த்து வாங்குகிறவர்கள் கண்டிப்பாக மாமிகளாகத்தான் இருப்பார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார். அதனால் திரும்பவும் அதே அரங்குகளுக்குச் சென்று வாங்குபவர்களையும் சிறிதுநேரம் கவனித்தேன். அப்படியொன்றும் இல்லை. பக்தி புத்தகம் வாங்குகிற அத்தனை பேரும் இதே மாதிரிதான் சிந்திக்கிறார்கள் என்று எனக்கு மீண்டும் உறுதியாகத் தோன்றியது.

* சிறுகதைத் தொகுப்புகள் இம்முறை அதிகம் கண்ணில் படவில்லை. வம்சி புக்ஸில் பாஸ்கர் சக்தியின் முழுச் சிறுகதைகள் தொகுப்பு ஒன்று அழகாக வெளிவந்திருக்கிறது. பலபேர் எடுத்துப் பார்ப்பதைப் பார்த்தேன். எத்தனை பேர் வாங்கினார்கள் என்று பவாவைக் கேட்கவேண்டும். ஒன்றிரண்டு குண்டு நாவல்கள் வந்திருந்தாலும், பேசப்பட்டாலும் பெரிய அளவில் விற்பதாகத் தெரியவில்லை. இலக்கிய அரங்குகளிலேயே பிரபல எழுத்தாளர்களின் கட்டுரை நூல்கள் அளவுக்கு அவர்களுடைய நாவல்கள், சிறுகதைகள் விற்பதில்லை என்று தோன்றியது. விலக்கு, சுஜாதா. பேய் மாதிரி பறக்கிறது. வெறும் ஐந்தே புத்தகங்களைக் கொண்டு வந்து நாங்கள் வைத்தோம். அச்சமூட்டும் விற்பனை வேகம்.

* சமையல் புத்தகங்கள் எப்போதும்போல் சிறப்பாக விற்பனையாகின்றன. இந்த முறை எங்களுடைய மினிமேக்ஸ் சமையல் நூல்கள் சந்தைக்குப் புதிய போட்டி. யார் எழுதினார்கள், என்ன கம்பெனி, என்ன விலை – ம்ஹும். அட்டையில் சமையல் புத்தகம் என்று தெளிவாகத் தெரிகிறதா? எடுத்துக்கோ ஏழெட்டு.

* கவிதைத் தொகுப்புகள் பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. புதிய பகைவர்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இந்த குருப்பெயர்ச்சிக்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எனக்குச் சொல்லியிருக்கிறார்.

20 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற