ஸ்ரீபார்வதி அன்லிமிடெட்

பாரதியாருக்குப் பிடித்த மாதிரி சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள். எனவே நிழல். கால் வைக்கும் இடமெல்லாம் புல்வெளி. புல்லுக்கு நடுவே பாத்தி கட்டி மூங்கில் கழிகள் நட்டு, கூம்பு வடிவ ஓலைக்கூரை. கொட்டிக்கொண்டு ஓடும் காற்று. நடுவே நீள டேபிள் போட்டு எதிரும் புதிருமாக நாற்காலிகள். இங்கொரு தொட்டில், அங்கொரு வட்டில்.

‘சார் வாங்க! உக்காருங்க!’ என்று முகம் மலரக் கூப்பிடுகிறார் பணியாளர். இயற்கைச் சூழலின் இதத்தை அருந்தியபடி நாற்காலியில் உட்கார்ந்ததும் சூடாக ஒரு கிளாஸ்  ரசம் வருகிறது. சூப் என்பது மேலை கலாசாரம். ரசமே நமது கலாசாரம். தக்காளி மணக்கும் அமர்க்களமான மிளகு ரசம்.

சே, என்ன ருசி! இன்னொரு தம்ளர் கேட்கலாமா? நினைப்பதற்கு முன்னால் பின்னாலிருந்து குரல் கேட்கிறது. ‘இன்னொரு தம்ளர் ரசம் வேணுமா?’

அருந்தி முடிப்பதற்குள் பெரிய எவர்சில்வர் தட்டில் வைத்த ஜலதரக் கிண்ணங்களில் கமகமவென்று உணவு வந்துவிடுகிறது. சப்பாத்தியில் ஆரம்பிப்பது நல்லது. தொட்டுக்கொள்ள சென்னா. கணக்கெல்லாம் இல்லை. எத்தனை வேண்டுமானாலும் கேட்டுச் சாப்பிடுங்கள். ஆயிற்றா? அடுத்து வெஜிடபிள் புலாவ். தொட்டுக்கொள்ள வெங்காயப் பச்சடி. தக்காளி சாதத்துக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ். தயிர் சாதமல்ல; கோயில் ததியோன்னம். மணமே ஊரைக் கூட்டுகிறது.

ஆனால் அவசரப்படாதீர். அதற்குள் தயிருக்குப் போய்விடுவதா? மிளகுக் குழம்பு இருக்கிறது. பருப்பு ரசம் இருக்கிறது. அந்த சாதமெல்லாம் சாப்பிட வேண்டாமா? தொட்டுக்கொள்ள தனியே பீன்ஸ் பொறியல் வேறு தயாராக இருக்கிறது. தயிர் சாதத்துக்கு ஊறுகாய் என்பது சம்பிரதாயம். நேயர் விருப்பமாக வத்தக்குழம்பு கேட்டுப் பரிமாறுகிறார்கள்.

‘சார், ஆச்சா? திருப்தியா?’ கேட்டபடி வைக்கிற கிண்ணத்தில் ஆரஞ்சு நிறத்தில் ஜாங்கிரி சிரிக்கிறது.

எதற்கும் அளவு கிடையாது. விரும்புகிற அளவுக்குத் திரும்பத் திரும்பப் பரிமாறுகிறார்கள். சாப்பிட்டு முடித்ததும் தாம்பூலம். ‘இவனே.. நாளைக்கு இந்தப் பாக்கு வேண்டாம். ரசிக்லால் நாலு பாக்கெட் வாங்கிண்டு வந்துடு’ எங்கிருந்தோ யாரோ உத்தரவிடுகிறார்கள்.

வெகுநாள் கழித்து மிகத் திருப்தியான ஒரு மதிய உணவு இன்று எனக்கு வாய்த்தது. எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே உள்ள ஸ்ரீபார்வதி கேலரிக்குள் இருக்கும் வெற்றிடத்தைப் பூங்காவாக்கி அங்கேதான் இந்தத் திறந்தவெளி உணவகத்தைத் திறந்திருக்கிறார்கள்.

இயற்கையான சூழலில் இதமான, அதிகக் காரமில்லாத, மசாலா வாசனையில்லாத, ஆரோக்கியமான உணவு. எல்லாமே அன்லிமிடெட் என்பதும் ஒரு சாப்பாட்டின் விலை ஐம்பத்தைந்து ரூபாய்தான் என்பதும் இதன் சிறப்பு.

தினசரி மதியம் ஒரு மணி முதல் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள். பிப்ரவரி முதல் தேதிமுதல் காலை டிபனும் ஆரம்பிக்கிறார்களாம். கூட்டம் வரத் தொடங்கிய பிறகும் இந்தத் தரம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

சில படங்கள் எடுத்திருக்கிறேன். முடிந்தால் இரவு சேர்க்கிறேன். 

14 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற