தில்லிக்குப் போன விண்வெளி வீரன்

தில்லி உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன். எனக்குத் தனிப்பட்ட முறையில், பணி சார்ந்து பேருதவியாக அமைந்த அனுபவம். எனினும் பொதுவில் பகிர்ந்துகொள்ளவும் சில விஷயங்கள் உண்டு. வந்ததுமே அதுபற்றி எழுத நினைத்தேன். ஆனால் முடியவில்லை. காரணம் கால்வலி.

ஏற்கெனவே உடல்நலம் சரியில்லாத நிலையில்தான் தில்லிக்குச் சென்றேன். நல்ல மலேரியாவும் சுமாரான சிக்குன் குன்யாவும் இணைந்து வந்து சென்னை புத்தகக் கண்காட்சி முடிந்ததும் என்னை அணைத்தன. [செபுகாவில் கொசுத்தொல்லை அதிகம்.] கொஞ்சம் சொஸ்தப்படுத்திக்கொண்டு சங்கர் தயாள் சர்மா மாதிரி நடந்து, ஒருவாறு சமாளித்து தில்லிக்குச் சென்று விட்டாலும் அங்கே பிரகதி மைதானில் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் சிக்குன் குன்யா வலி அதன் உச்சத்துக்குச் சென்றுவிட்டது.

மொத்தம் பதினான்கு அரங்குகள். ஒவ்வொரு அரங்கும் கிட்டத்தட்ட சென்னை புத்தகக் கண்காட்சி அளவில் பாதியாவது வரும். ஓர் அரங்குக்கும் அடுத்ததற்குமான இடைவெளி வேறு பல நூறு மீட்டர்கள். எனவே நடை, நடை, நடை என்று நடந்து தீர்த்ததில் இரு பாதங்களும் தனியே கழண்டுவிடும்போலாகிவிட்டன. தவிரவும் தமிழனுக்கு தில்லி குளிர் எல்லாம் ஒத்துக்கொள்ளாது என்பது உலகறிந்த உண்மை.  பலபேர் பயமுறுத்தியதில், விண்வெளி வீரர் மாதிரி மைனஸ் டிகிரிகள் தாங்கக்கூடிய ஜாக்கெட்டெல்லாம் போட்டுக்கொண்டு கெத்தாகப் போயிருந்தேன். [பார்க்க: மேலே உள்ள படம்]

ஆனால் என் துரதிருஷ்டம், இம்முறை குளிர் குறைந்துவிட்டிருந்தது. வெறுப்பேற்றும் விதமாக வெயில்கூட அடித்தது. ஸ்கொலாஸ்டிக் அரங்கின் வாசலில் மிக்கி உடை அணிந்து நின்று குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிய சிப்பந்தியைப் பார்த்த அதே பார்வையில் தில்லிப் பெண்கள் என்னைப் பார்த்தார்கள். ஆனபோதிலும் நான் கழட்டவில்லை. என் பிராண சிநேகிதன் பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவிலிருந்து அன்போடு வாங்கி அனுப்பியது அது.

பிரச்னை அதுவல்ல. என் ஸ்தூல சரீர கனம், விண்வெளி ஜாக்கெட்டின் கனம், ஏற்கெனவே இருந்த பாத, மூட்டு வலிகள், அரங்கு அரங்காக நடந்து தீர்த்தது எல்லாம் சேர்ந்து முற்றிலும் வலியாலானவனாகிவிட்டேன். காலை அசைக்கக்கூட முடியவில்லை. கை விரல் மூட்டுகளும் வலிக்கின்றன. அதிகம் எழுத முடியவில்லை. விதிக்கப்பட்ட பத்திரிகைத் தொடர்களை மட்டுமே இப்போது எழுதுகிறேன். கொஞ்சம் வலி சரியானதும்தான் மற்றவை.

ஊர் திரும்பியதும் கொஞ்சம் வலை சுற்றியதில் ஜெயமோகனின் மனைவி இதே சிக்குன் குன்யாவால் அவதிப்படுகிறார் என்று படித்தேன். என் வீட்டிலேயே என் அப்பா, அம்மா, மனைவி என்று அனைவருக்கும் ஒரு சுற்று வந்து போய்விட்டது. என் நண்பர் வட்டத்திலேயே பலபேருக்கு சிக்குன் குன்யா. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. மாநிலம் முழுதும் ஒரு நோய் பேயாட்டம் ஆடுகிறது. அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

ஜெயமோகன் சொல்படி அரசாங்கம் வழங்கும் சிக்குன் குன்யாவுக்கான மருந்து இலவச கலர் டிவி. எனக்குத் தெரிந்து நிலவேம்புக் குடிநீர்.

நாட்டு மருந்துக் கடைகளில் இந்த நிலவேம்பு கிடைக்கும். வாங்கி கஷாயம் போட்டுச் சாப்பிட்டால் கொஞ்சம் நிவாரணம் கிடைக்கிறது. மூன்று நாள், மூன்று வேளைகள் சாப்பிட்டுவிட்டு இரண்டு நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் மூன்றுநாள். இப்படி வலிக்கும்வரை சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

நிலவேம்பு மிகவும் கசக்கும். சிலர் சர்க்கரை போட்டுச் சாப்பிடுகிறார்கள். ஆனால் அது வேண்டாம். அந்தக் கசப்பில்தான் நிவாரணம் உள்ளது என்று எனக்குத் தெரிந்த ஓர் ஆயுர்வேத மருத்துவர் சொன்னார்.

எந்த நோயை வேண்டுமானாலும் தாங்கிவிடலாம், இந்தப் பாழாய்ப்போன சிக்குன் குன்யா வலியை மட்டும் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. எதிரிக்கும் வந்துவிடக்கூடாத நோய்.

கொஞ்சம் இருங்கள். சரியானதும் வந்து வழக்கம்போல் எழுதுகிறேன்.
 

16 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற