காதலன், யுகேஜி-தேர்ட் க்ரூப்

'அப்பா, இந்த சீனிவாசன் ஏந்தான் இப்படி பண்றானோ தெரியல.’

‘என்னடா கண்ணு பண்றான்?’

‘இதுவரைக்கும் மூணுபேரை லவ் பண்ணிட்டான்.’

‘யார் யாரு?’

‘நித்யப்ரீதா, சம்யுக்தா, தீப்தி.’

‘ஓ! பெரிய பிரச்னைதான்.’

‘அவன் சம்யுக்தாவ லவ் பண்றது எனக்குப் பிடிக்கலை.’

‘ஏண்டா செல்லம்?’

‘அவ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்.’

‘ரொம்ப நியாயம்.’

‘எனக்குவேற லெட்டர் குடுக்கப்போறேன்னு சொல்றாம்பா.’

‘என்ன லெட்டர்?’

‘லவ் லெட்டர்தான்.’

‘அடேங்கப்பா’

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே சமையல் அறையிலிருந்து என் மனைவியின் குரல் ஒரு வெட்டுக்கிளியின் வேகத்தில் படபடத்துக் கடந்தது. ‘குடுத்தான்னா பத்திரமா வாங்கி எடுத்துண்டு வா.’

‘எதுக்கு?’ என்றேன் சுவாரசியமாக.

என்னவோ காரியமாக இருந்தவள், கையைத் துடைத்தபடி வெளியே வந்தாள். ‘பின்ன? படிக்கத் தெரியாதவளுக்கு எழுதத் தெரியாதவன் குடுக்கற லவ் லெட்டர் முக்கியமில்லியா?’ என்று கேட்டாள்.

ரொம்ப வாஸ்தவம். C-A-T CAT, B-A-T BAT, R-A-T RAT முடிந்து இப்போதுதான் மூன்று சொல் வாக்கியங்களுக்கு வந்திருக்கிறார் சாவித்ரி மிஸ். சீனிவாசன் தன் கடிதத்தில் என்ன எழுதுவான்?

சில நிமிடங்கள் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று பின்னந்தலையில் அடித்துக்கொண்டேன். அடச்சே. இதென்ன பிரமாதம்? I Love You என்பதும் மூன்று சொல் வாக்கியமே அல்லவா? ஒரு வெள்ளைத்தாளில் நாலைந்து Mகளை இணைத்தாற்போல் போட்டு ஒரு மேரு மலை உண்டாக்கி நடுவே ஒரு சூரியனை உதிக்கவிட்டு, இந்தப் பக்கம், அந்தப்பக்கம் இரண்டு மரங்களை நட்டு, கீழே ஒரு நதியை ஓடவிட்டு, அதில் ஓடம் மிதக்கவிட்டு, மிச்சமுள்ள இடங்களில் டோராவையும் புஜ்ஜியையும் திரியச் செய்து பிள்ளைகள் வெகு எளிதில் க்ரீட்டிங் கார்டுகள் உருவாக்கிவிடுகிறார்கள். கார்டில் ஒரே ஒரு வரி. எழுதி, கீழே தன் பெயரைப் பொறித்து யுகேஜி-தேர்ட் க்ரூப் என்று எழுதிவிட்டால் தீர்ந்தது விஷயம்.

நிச்சயமாக சீனிவாசன் சொன்னபடி செய்துவிடுவான் என்றுதான் எனக்குத் தோன்றியது. ஆனால் என் மனைவிக்கு என்னைக் காட்டிலும் சிறுவர் உலக அறிவு சற்று அதிகம். ‘L-O-V-E லவ்க்கு அவனுக்கு ஸ்பெல்லிங் தெரியாது. மிஸ் இன்னும் சொல்லித் தரலை’.

அதனாலென்ன? சன் ம்யூசிக் அல்லது கலைஞரின் இசையருவி கண்டிப்பாகக் கற்றுத் தந்திருக்குமே. இல்லை. சமீபத்திய பாடல்களில் ஸ்பெல்லிங்கோடு யாரும் எழுதியிருக்கவில்லை. எண்பதுகளில் வெளிவந்த ஒரு பாடலில் இருக்கிறது. எல் ஓ வி ஈ லவ்வ்வ்வ்வ்வ், லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், லவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று கதாநாயகன் சிங்கப்பூர் அல்லது மலேசிய எருமைக் குட்டை ஒன்றின் ஓரமாக அலைந்தபடி சித்தம் கலங்கிப் பாடுகிற பாடல்.

அந்தப் பாடலை இப்போது கலைஞரின் இசையருவி ஏனோ ஒலிபரப்புவதில்லை. தீராத விளையாட்டுப் பிள்ளையில் வந்தாலொழிய சன் ம்யூசிக்கில் வராது, இப்போதைக்கு.

‘அவன் ரொம்பக் கெட்டவன்பா. பின்னால உக்காந்துண்டு குடுமிய பிடிச்சி பிடிச்சிவேற இழுக்கறான் தெரியுமா?’

அவள் சீனிவாசனை விடுவதாக இல்லை. என்ன சொல்லிப் பேச்சை முடிக்கலாம் என்று யோசித்தேன்.

‘ஏண்டா கண்ணு, உனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தாவேணா, முடிய பிடிச்சி இழுக்கறான்னு மிஸ்கிட்ட சொல்லேன்.’ என்று கவனமாக முதல் விஷயத்தை மறைத்துவிட்டு பிந்தையதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சொன்னேன்.

‘இதையெல்லாம் மிஸ்கிட்ட சொல்ல முடியாது.’

‘ஏன்?’

பதில் வரவில்லை. மீண்டும் சம்யுக்தாவை சீனிவாசன் காதலிப்பதாகச் சொன்னதன் மீதான தனது கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினாள்.

‘அவளே பாவம், அடுத்த வருஷம் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்டுக்கு இங்க இருக்கப்போறதில்லை.’

‘அடக்கடவுளே, ஏன் என்னாச்சு?’

‘அவப்பாக்கு கேரளால ஆபீஸ் போட்டுட்டாங்களாம். அவ போயிடுவா.’

‘அச்சச்சோ? ஒனக்கு ரொம்பக் கஷ்டமாயிடுமேடா கண்ணு.’

‘ஆமா..’ என்று சில வினாடிகள் சுய சோகத்தில் தன்னை மறந்து இருந்தவள், சட்டென்று ‘போன் நம்பர் வாங்கிண்டுட்டேன். நாங்க டெய்லி டெய்லி போன்ல பேசிப்போம்.’

‘ஓ, சூப்பர்.’

‘நெக்ஸ்ட் சம்மர் லீவுக்கு நாம கேரளா போலாமாப்பா?’

‘கண்டிப்பாடா கண்ணு. சம்யுக்தாவையும் நம்ம வீட்டுக்கு வரசொல்லு.’ என்றேன். உண்மையில் சீனிவாசனை வரச்சொல்லேன் என்றுதான் கேட்க நினைத்தேன். வீணாகக் குழந்தையைச் சீண்டுவது போலாகிவிடுமோ என்று தயங்கித்தான் சட்டென்று புத்தி பெயரை மாற்றியது.

ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் எனக்கு அறிமுகமான காதல் என் குழந்தைக்கு இன்றைக்கு யுகேஜியில் அறிமுகமாகிவிட்டது. நான் ஒன்றும் செய்வதற்கில்லை. என் நண்பர்கள் சிலர் வீட்டில் டிவி இணைப்பை அறவே துண்டித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதே பிரச்னைதான். சமீபத்தில் பெங்களூர் சென்றபோது சொக்கன் வீட்டில் டிவி இல்லை என்பதை கவனித்தேன்.

இது ஓர் அபத்தமான ஏற்பாடு என்றே எனக்குத் தோன்றுகிறது. சீப்பை ஒளித்துவைத்தல். என் வீட்டிலிருந்து குழந்தையின் பள்ளிக்கூடத்துக்கு தினமும் ஸ்கூட்டரில் காலை அவளைக் கொண்டுவிடுவேன். சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுதான். அந்தத் தொலைவுக்குள் வழியில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன், கமலா, விஜயா, கிருஷ்ணவேணி திரையரங்க போஸ்டர்கள் சுமார் ஐம்பதாவது வந்துவிடும். எல்லாமே பெரிய பெரிய வண்ண போஸ்டர்கள். எல்லா போஸ்டர்களிலும் யாராவது யாரையாவது காதலிக்கிறார்கள். கட்டிப்பிடிக்கிறார்கள். முத்தம் கொடுக்கிறார்கள். கொஞ்சுகிறார்கள். ஒன்றும் செய்ய முடியாது.

நான் என் இளவயதுகளில் நின்று பார்த்திருக்கிறேன். என் குழந்தை ஸ்கூட்டரில் போகிறவாக்கில் பார்க்கிறது. சீனிவாசன் ஒருவேளை தியேட்டருக்குச் சென்றே பார்த்திருக்கலாம்.

என் குழந்தைக்கு நான் இன்னும் சினிமா தியேட்டரை அறிமுகம் செய்துவைக்கவில்லை. இப்போதைக்கு டிவி மட்டும்தான். அவளுக்குத் தெரிந்து சினிமா என்றால் டிஸ்கஷன். அப்பாவின் அறையில் யாராவது இரண்டு மூன்று பேர் எப்போதும் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்பதுதான் சினிமா. பெரிய திரை அவளுக்குத் தெரியாது. அறையில் பேசப்படும் கதைகள் அங்கே எப்படிப் பரிமாணம் பெறுகின்றன என்பது பற்றி அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

அவள் டிவியில் சினிமா பார்ப்பதுமில்லை. விஜய் படம் மட்டும் பிடிக்கும். ‘ஃபைட் சீன்ல கூட பயப்படவே மாட்டேம்பா. விஜய் ஃபைட் பண்ணா அதுகூட காமெடியா, ஜாலியா இருக்கும்’ என்பாள். ஒன்றிரண்டு விஜய் படங்கள் மட்டும் பார்த்திருக்கிறாள். மற்றபடி திரை இசை சானல்கள்தான் அவளுக்குப் பொது அறிவைத் தருகின்றன என்று நினைக்கிறேன். சுட்டி டிவியும் போகோவும் போரடிக்கத் தொடங்கியிருக்கலாம்.

சீனிவாசன் இதிலே இன்னும் கொஞ்சம் பரிமாண வளர்ச்சி பெற்றிருக்கலாம். அவன் நிறையப் படங்கள் பார்க்கிற வாய்ப்புப் பெற்றிருக்கலாம். எதிர்பாலினம் என்பதே தான் காதலிப்பதற்குத்தான் என்று கருதியிருக்கலாம். துரதிருஷ்டவசமாக அவனால் மூன்று பேரிடம் மட்டும்தான் அதை வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.

என்னுடைய கவலையெல்லாம், என் மகள் இல்லாவிட்டால் வேறு எந்தக் குழந்தையேனும் சீனிவாசனைப் பற்றி சாவித்ரி மிஸ்ஸிடம் புகார் சொல்லிவிடப் போகிறதே என்பதுதான். அல்லது குழந்தைகள் தம் தாயிடம் விஷயத்தைச் சொல்லி அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறி, சம்பந்தப்பட்ட சீனிவாசனின் பெற்றோருக்கு இது இப்போதே போய்ச்சேர்ந்தால் வேறு வினையே வேண்டாம்.

அடிப்பதும் மிரட்டுவதும் தண்டிப்பதும் பெரிய விஷயமல்ல. காதல் என்பது கசமுசா என்று இப்போதே அவன் மனத்தில் மிக ஆழமாகப் பதிந்துவிடுமல்லவா? சற்றும் களங்கமில்லாமல், தன் புத்தியில் அர்த்தம் உதிர்த்து ஏறி உட்கார்ந்த ஒரு சொல்லை இப்போது உச்சரித்துக்கொண்டிருப்பவன், அது என்னவோ ஒரு கெட்ட விஷயம் என்பதுபோல் ஒரு கருத்தாக்கத்தை உள்வாங்கிப் பிரயோகிக்கத் தொடங்கிவிட்டால்?

சீனிவாசனின் பெற்றோர் தினசரி நூறு முறையாவது அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு ‘ஐ லவ் யூ, ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொஞ்சுவது ஒன்றே இதற்கான சரியான தீர்வு என்று நினைக்கிறேன். லவ் யூ என்பது எதிர்பாலினத்துக்கு மட்டுமே உரியது என்கிற எண்ணத்தை மட்டும் இப்போது அகற்றினால் போதும்.

தண்டனைகளோ கண்டிப்போ பத்து பைசா பிரயோஜனமில்லாதவை. சந்தர்ப்பம் கிடைத்தால் சீனிவாசனின் பெற்றோரிடம் இதனைப் பக்குவமாகச் சொல்லவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அந்தக் குழந்தையைப் போட்டுச் சாத்திவிடுவார்களோ என்பதுதான் பெரும் கவலையாக இருக்கிறது.
 

21 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற