அண்ணன், அண்ணியை எப்படி அழைப்பார்?

நேற்று ஒரு வார இதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கேள்வி பதில் பகுதியில் வாசகரொருவர் கேட்டிருந்த கேள்வி: ‘அருமை அண்ணன் விஜய், அருமை அண்ணியாரை வீட்டில் எவ்வாறு அழைக்கிறார் என்று கண்டறிந்து சொல்ல முடியுமா?’

இதற்கு பதிலளிப்பவர், நடிகர் விஜய் குடும்பத்துக்கு நெருக்கமான இன்னொரு பத்திரிகையாளரிடம் இது பற்றி அக்கறையாக விசாரித்து, தகவல் பிழையில்லாமல் அருமையான பதில் ஒன்றைத் தந்திருந்தார்.

அது அவ்வளவு முக்கியமில்லை. என் வியப்பு, இந்த ஆர்வங்களின்மீது. விஜய் தன் மனைவியை எப்படி அழைப்பார் என்பதை அறிந்துகொண்டே தீரவேண்டும் என்கிற தீர்மானம் அவருக்கு எப்படி, எப்போது, எதனால் ஏற்பட்டிருக்கும்? அவர் தீவிர விஜய் ரசிகராக இருக்கலாம். அல்லது பிறந்தநாள் போன்ற தினங்களில் விஜய் மேற்கொள்ளும் ஒரு சில நற்பணிகளால் [தையல் மெஷின், ரத்த தானம் இன்னபிற.] பயன்பெற்றவராக இருக்கக்கூடும். அல்லது பூர்வ ஜென்மத் தொடர்பு ஏதேனும் இருக்கலாம்.

எதுவானாலும் என் வினா ஒன்றுதான். விஜயைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவதில் எனக்குப் பிரச்னையில்லை. அவர் தம் மனைவியை எப்படி அழைப்பார் என்று அறியவேண்டிய மனநெருக்கடி எவ்வாறு ஏற்பட்டிருக்கும்? செல்லமே, அன்பே, மானே, தேனே, மயிலே, ஸ்வீட்டி, டியர் என்று என்ன பதில் சொல்லியிருந்தால் இந்த வாசக ரசிகர் உளம் பூரித்திருப்பார்? அதேபோலத் தன் மனைவியையும் அழைத்து இன்புறுவதற்காக இருக்குமா? அருமை அண்ணன் விஜயின் நகலாகத் தன்னை மனத்துக்குள் உருவகப்படுத்தி வைத்திருப்பாரா?

இது அவரது மனைவிக்குத் தெரிந்திருக்குமா? அவர் விரும்புவாரா? அல்லது தன் கணவரது ரசனையின் நீட்டல் விகாரத்தால் துணுக்குற்று சற்றே விலக நினைப்பாரா?

விஜயின் மனைவி பெயர் சங்கீதா. சிறிய பெயர்தான். சிறந்த பெயரும்கூட. அவர் அப்படியே அழைக்க விரும்பலாம். எப்போதாவது சற்றே மாற்றி அழைக்கலாம். முன்சொன்ன விஜய்க்கு நெருக்கமான பத்திரிகையாளர் அளித்த தகவலின்படி அவர் ‘கீத்’ என்று அழைப்பார் என்று தெரிகிறது. இதைத் தெரிந்துகொண்டு, கேள்வி கேட்ட அந்த வாசகர் என்ன சாதிக்கப்போகிறார் என்பதுதான் என் கவலை.

தன் மனைவியை அவர் அப்படி அழைப்பாரா? அவர் பெயர் சங்கீதாவாக இல்லாமல் நிசும்பசூதனியாக இருக்கும்பட்சத்தில்? பிரச்னையாகும் சாத்தியங்கள் அதிகமல்லவா? தனக்கான பிரத்தியேகச் செல்லப்பெயரை உருவாக்குவதில் அவருக்கு என்ன கஷ்டம் இருந்துவிடப் போகிறது? ஒருவேளை அருமை அண்ணன் விஜயைக் காட்டிலுமே சிறந்த செல்ல விளிச் சொல்லை அவர் கண்டடையலாமே?

அதைவிட, இந்த வினா விடையை அருமை அண்ணியார் வாசிக்க நேர்ந்தால் என்ன நினைப்பார்? ரசிகரின் பரிசுத்தமான அன்பு அவருக்கு விளங்குமா? அண்ணன் காட்டிய வழியம்மா என்று ரூட் மாறாமல் பயணம் மேற்கொள்ளத் தவிக்கும் அவரது தணியா தாகத்துக்கு அவரால் அரை ஸ்பூன் நீரூற்ற இயலுமா?

பத்திரிகைகளுக்குக் கேள்விகள் அனுப்பும் வாசகர்களில் பல விதங்களுண்டு என்பது எனக்குத் தெரியும். தரமான, சிறந்த கேள்விகள் முதல் வேண்டுமென்றே கோக்குமாக்கான கேள்விகள் வரை அனுப்பும் ஒரு நூறு பேர் நிரந்தரமாக உலவும் மாநிலம் இது. பதிலறியும் ஆவல் ஏதுமன்றி, எப்படியாவது இதழில் தம் பெயர் இடம்பெற்றால் போதும் என்பதற்காகவே வினவுவோரும் உண்டு.

ஆனால் மேற்கண்ட வாசகர் இந்த எந்தப் பகுப்பினுள்ளும் அடங்காதவராக எனக்குத் தெரிகிறார். அவரது இந்தக் கேள்வி, ஒரு விடையைப் பெற்று சாந்நித்தியம் அடைந்துவிட்டது. எனவே அவர் இதே ரகமாகத் தனக்குள்ள பிற சந்தேகங்களை இனி கேட்கத் தொடங்கினால் என்னாகும்? உதாரணமாகச் சில வினாக்களைக் கற்பனையாக எண்ணிப்பார்ப்பதே கலவரமூட்டக்கூடியதாக இருக்கிறது. பொதுவில் பகிர்ந்துகொள்ளச் சங்கடமாக இருக்கிறது.

இத்தகைய வினாக்களுக்கும் பதிலளித்து ஊக்குவிக்கும் பத்திரிகைகளை நினைத்தால் தமிழ் மக்களின் தலையெழுத்தின்பால் மிகுந்த அனுதாபம் ஏற்பட்டுவிடுகிறது. மேற்படி வாசக ரசிகர் இன்னும் திருமணமாகாதவராக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று ஏனோ திரும்பத் திரும்பத் தோன்றுகிறது.

அவருக்குத் திருமணமே ஆகாதுபோனாலும் நன்றாகத்தான் இருக்கும் என்றும் தோன்றுகிறது.

25 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற