கலைஞரின் ‘ராங்’ செண்டிமெண்ட்

சீனிவாசா பள்ளி மாணவர்கள்

நேற்று காவிரிப் பூம்பட்டணம் என்கிற பூம்புகார் அருகே மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். காலைப் பொழுதில் கலந்துரையாடல். மாலை பரிசளிப்பு விழா என முழுநாள் நிகழ்ச்சி. என்னளவில் இது ஒரு புதிய அனுபவம். கூட்டங்களோ, கருத்தரங்குகளோ புதிதல்ல என்றாலும் ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்குவது என்பது முதல். மூவாயிரத்தி ஐந்நூறு மாணவ மாணவிகளுக்கு எதிரே நின்றபோது பழைய ஞாபகங்களைத் தவிர்க்கவே முடியவில்லை. என்னால் பேசவே முடியாது போய்விடுமோ என்று பதற்றமாக இருந்தது.

என் பள்ளி, கல்லூரி நாள்களில் நான் ஒரு நல்ல மாணவனாக நடந்துகொண்டதில்லை. என்னை விரும்பக்கூடிய ஆசிரியர்கள் என்று யாருமிருந்த நினைவில்லை. சக மாணவர்கள் மத்தியிலும் எனக்கு அத்தனை நல்ல பெயர் கிடையாது. மத்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஒரு சமயம், கல்லூரியின் பெயரைக் கெடுப்போர் பட்டியலில் எனக்கு அவசியம் முதலிடம் உண்டு என்று சொல்லியிருக்கிறார். அற்புதமான மாணவப்பருவம் முழுதும் ஊர் பொறுக்கி வீணாக்கியவன் நான். இது பற்றிய வருத்தம் எனக்குண்டு. ஆனால் அர்த்தமற்ற வருத்தம். பொறுக்கிய காலத்தில் முழுத் திருப்தி மற்றும் முழு மகிழ்ச்சியுடந்தான் அதனைச் செய்தேன் என்பதும் உடனே நினைவுக்கு வந்துவிடும். ஒரு மோசமான மாணவன் என்னும் சான்றிதழுடன் வெளியேறியவன் என்கிற நினைவு மட்டும் ஒருபோதும் எனக்கு மறப்பதில்லை. எனவே ஒரு பள்ளி விழாவுக்குத் தலைமை தாங்கச் செல்வது என்பது எனக்கு நியாயமான குற்ற உணர்ச்சியைத் தரக்கூடியதாகவே இருந்தது.

நேற்றைய விழாவில், இந்தியாவின் வெளியுறவுகள் என்னும் தலைப்பில் மாணவர்கள் என்னுடன் கலந்துரையாடத் தயாராக இருந்தார்கள். உரையாடலில் ஈடுபட்டோர் சுமார் ஐம்பதுபேர்தான் என்றாலும் மொத்த மாணவர்கள் மூவாயிரத்தி ஐந்நூறு பேரும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தார்கள். பேசப்படும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்தார்கள். சற்றும் தயங்காமல் சந்தேகம் கேட்கிறார்கள். தமது கருத்துகளை வெளிப்படுத்தவும் யாரும் யோசிப்பதில்லை. ‘இந்தியா செஞ்சது தப்புசார். இலங்கைத் தமிழர்களை நாம ஏமாத்திட்டோம் சார்’ என்று ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் உணர்ச்சிமயமாக எழுந்து நின்று குரல் கொடுத்தான். ‘பாகிஸ்தான் அடிக்கடி நம்ம நாட்டுக்குள்ள ஊடுருவறதுக்கு காஷ்மீரைவிட எதோ ஆத்துத் தண்ணிப் பிரச்னைதான் மெயின் காரணம்னு சொல்றாங்களே சார்.. அதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி கேட்டாள். ‘சீனாவ நம்பக்கூடாது சார். ஃப்ராடு அவங்க’ என்று நாலைந்துபேர் சொன்னார்கள். எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது அருணாசல பிரதேச ஊடுருவல் செய்திகள் அவர்களை வந்தடைந்திருப்பது தெரிந்தது.அமெரிக்கா பற்றி, ரஷ்யா பற்றி, மியான்மர் பற்றி, நேபாளம் பற்றி, திபெத் பற்றி, தலாய் லாமா பற்றி, ஜார்ஜ் புஷ் பற்றி, ஒபாமா பற்றி, 123 ஒப்பந்தம் பற்றி, ஆஸ்திரேலிய நிறவெறி பற்றி – எதுவும் மிச்சமில்லை. எல்லாவற்றைப் பற்றியும் கேட்டார்கள். எல்லாவற்றைப் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.

பூம்புகார் ஒரு கடலோர கிராமம். சிறு நகரம் அளவுக்கு இருந்தாலும் அது கிராமம்தான். இன்னும் வளரவில்லை. [ ‘வளராது சார். ஜெயலலிதாக்கு கண்ணகிய புடிக்காது. கலைஞருக்கு ராங் செண்டிமெண்ட். இந்த ஊருக்கு எதுனா செஞ்சா உடனே அவருக்குப் பதவி போயிடும்னு பயம். அதனால செய்யமாட்டாங்க யாரும்.’ – ஒரு பத்தாம் வகுப்புப் பையன். ] பெரும்பாலும் மீனவக் குடும்பத்துக் குழந்தைகள். பையன்களைவிடப் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். சீனிவாசா பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் தவிர, பொதுவான புத்தக வாசிப்பின்மீது ஆர்வம் உண்டாக நிறைய மெனக்கெடுகிறது. ‘விழித்திரு’ என்னும் மாணவர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் கலை, கலாசார நிகழ்ச்சிகள், சமூகச் சேவைகள் செய்ய ஊக்குவிக்கிறார்கள். சென்னை, நெய்வேலி என்று எங்கு புத்தகக் கண்காட்சி நடந்தாலும் வண்டி ஏற்றி அழைத்துச் சென்றுவிடுவார்களாம். எத்தனை மாணவர்கள் எத்தனை புத்தகம் வாங்கினாலும் கண்காட்சியில் அளிக்கப்படும் வழக்கமான தள்ளுபடிகள் தவிர பள்ளிக்கூடம் தன் பங்குக்குத் தனியே இருபது சதவீதம் விலையை ஏற்றுக்கொள்ளும் வழக்கம் வைத்திருக்கிறார்கள்.

பள்ளிச் செயலாளர் இரா. ராஜசேகரன் புத்தகப் பிரியர். அவர் வீட்டிலேயே ஒரு பெரிய நூலகம் இருக்கிறது. சைவ சமய வரலாறை ஐந்து பெரும் பாகங்களாக எழுதி வெளியிட்டிருக்கிறார். இணையத்திலேயே சில இலக்கிய வாசகர்களுக்கு இவரது பெயர் பரிச்சயமாக இருக்கக்கூடும். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தின் மீதான ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு, நூலாக [ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை] வெளியிட்டிருப்பவர் இவர். பெரும்பாலும் படிப்பறிவில்லாத எளிய மீனவக் குடும்பங்களிலிருந்து வருகிற இந்த மாணவர்களின் எதிர்காலத்தை எப்படி செழிப்பாக்குவது என்பது பற்றி நிறையக் கவலைப்படுகிறார். பள்ளியின் தேர்ச்சி விகிதம் அபாரமாக இருக்கிறது. கரும்பலகை அறிவிப்புகள் வியப்பூட்டுகின்றன. தொண்ணூறுக்கும் மேற்பட்ட சதவீதங்களை ஆண்டு தவறாமல் காட்டுகிற பள்ளி. பெரும்பாலும் பெண்கள். ‘ஆனா ப்ளஸ் டூ முடிச்சதும் பொண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ணிடறாங்க சார். படிக்கவே விடமாட்டேங்குறாங்க’ என்று கவலைப்பட்டார் ஆர். சுப்பிரமணியன் என்ற ஆசிரியர். ப்ளஸ் டூவுக்குப் பிறகு அவர்கள் தமது இருப்பின், செயல்பாடுகளின் அர்த்தத்தைக் குறைந்தபட்சம் தமது பெற்றோருக்கேனும் புரியவைப்பதற்கான முயற்சிகளை இந்த ‘விழித்திரு’ அமைப்பு மேற்கொள்கிறது.

காலை வேளைக் கலந்துரையாடல் மூன்று மணிநேரம் நடைபெற்றது. வெளியுறவு என்றெல்லாம் எதற்கு சப்ஜெக்ட் கொடுக்கிறீர்கள்? மாணவர்கள் போரடித்து ஓடிவிடமாட்டார்களா என்று அமைப்பாளர்களிடம் முன்னதாக நான் கவலை தெரிவித்திருந்தேன். உண்மையில் ஒருத்தர்கூட இடத்தை விட்டு அசையாமல் இறுதிவரை ஆர்வம் குன்றாமல் அமர்ந்து விவாதித்தது மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தது. ‘தெரிஞ்சிக்கணும் சார். இந்தப் புள்ளைங்களுக்கு வேற எக்ஸ்போஷரே இல்லாம போச்சு’ என்று பல ஆசிரியர்கள் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள்.

ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். Prodigy புத்தகங்களை மாணவர்கள் ஆர்வமுடன் ஏராளமாக வாங்கினார்கள். புத்தகம் வாங்குவதை ஊக்குவிப்பதே தலையாய கடமை என்பது போல் பல ஆசிரியர்கள் மைக்கில் தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தார்கள். நிறைய புத்தகங்கள் வாங்கும் மாணவர்களின் ஆசிரியர்களை மேடைக்குக் கூப்பிட்டுப் பாராட்டினார்கள். எந்த நகர்ப்புறப் பள்ளியிலும் நான் இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டதில்லை.

மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை. மாலை விழா சரியாக மூன்று மணிக்குத் தொடங்கும் என்று செயலாளர் சொல்லியிருந்தார். இடைப்பட்ட நேரத்திலும் மாலை ஆறு மணிக்குப் பிறகும் நிறைய ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டிருந்தேன். கோவலனும் கண்ணகியும் மாதவியும் வாழ்ந்த நகரம். சரித்திரத்தின் நிறையப் பக்கங்களை ஆக்கிரமித்துக்கொண்ட நகரமும்கூட. ஆனால் சமகாலம் அங்கே அத்தனை வளமாக இல்லை. சுற்றுலா வளர்ச்சிக்கான சாத்தியங்கள் இருந்தும் அரசாங்கம் அதனை கவனிக்காதது வெளிப்படையாகத் தெரிகிறது. புகழ்பெற்ற புகார் கடற்கரை குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது. தள்ளுவண்டிகளில் மலை மலையாக மீன் பொறித்து விற்கிறார்கள். கழிவுகள் அங்கங்கேயே கொட்டப்படுகின்றன. காக்கைகளும் ஈக்களும் மொய்க்கின்றன. சிலப்பதிகாரக் கண்காட்சிக் கூடம் ஒன்றைத் தவிர பிற எந்தப் பிற்கால ஏற்பாடுகளும் ஒழுங்காகப் பராமரிக்கப்படாமல் சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன. இதனாலேயே பக்கத்திலுள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி [கேது க்ஷேத்திரம்] கோயிலுக்கு வருகிற  மக்களில் பத்து சதவீத அளவில்கூட பூம்புகாருக்கு வருவதில்லை. தப்பித்தவறி யாராவது வந்துவிட்டால் ஒருவேளை சாப்பிட ஒரு ஹோட்டல்கூடக் கிடையாது.

‘கவர்மெண்ட் ஏதாவது செய்யலாம். ஏன் செய்யலைன்னு தெரியலை. எங்களால முடிஞ்சது, எங்க மாணவர்களுக்கு ஒழுங்கா படிப்பு சொல்லித்தரோம். படிப்புக்கு அப்பால் என்னென்ன உண்டுன்னு சொல்லித்தரோம். நல்ல டிசிப்ளின் கத்துக்கிட்டிருக்காங்க’ என்றார் பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன்.

பிராந்தியத்தில் சீனிவாசா மேல்நிலைப் பள்ளிக்கு மிக நல்ல பெயர் இருக்கிறது. இந்தப் பக்கம் மயிலாடுதுறை, அந்தப் பக்கம் சிதம்பரம் வரை இந்தப் பள்ளிக்கூடத்தை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பூம்புகாருக்குப் பத்து கிலோமீட்டர் தொலைவில் கருவாழைக்கரை என்று ஒரு கிராமம் இருக்கிறது. அங்கே ஒரு காமாட்சியம்மன் கோயில் உண்டு. எங்களுக்கு அதுதான் குலதெய்வம் என்று யாரோ கண்டுபிடித்து எப்போதோ சொல்லியிருந்ததை என் அப்பா ஒரு சமயம் என்னிடம் சொல்லியிருந்தார். எனக்கு நள்ளிரவு பன்னிரண்டரைக்குத் தான் பஸ் என்பதால் நிறைய நேரம் இருந்தது. சரி, அந்தக் கோயில் எங்கே உள்ளது என்று விசாரித்துப் போய்வரலாமே என்று நினைத்தேன். குருக்களுக்கு போன் செய்து விவரம் சொன்னேன். ‘நீங்க எங்க இருக்கீங்க?’ என்று கேட்டார். ‘இங்க பூம்புகார்லேர்ந்து கொஞ்ச தூரம்.. ஒரு ஸ்கூல்ல..’ என்று ஊர் பெயரை ஒரு கணம் மறந்து யோசித்தபோது சட்டென்று கேட்டார், ‘சீனிவாசா ஸ்கூலா? அது ஒண்ணுதான் ஏரியாலேயே உருப்படி’ என்றார்.

மாலை பரிசளிப்பு விழாவில் சுமார் இருபது நிமிடங்கள் பேசினேன். காலைப் பொழுது முழுதும் அயலுறவில் போய்விட்டதால், இந்த சந்தர்ப்பத்தைக் குதூகலமான அனுபவமாக அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, குறிப்பிட்ட பொருள் ஏதுமில்லாமல், பொதுவாக, ஜாலியாகப் பேசினேன். பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது போலிருக்கிறது. விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் ஆட்டோகிராஃப் கேட்டுச் சூழ்ந்துகொண்ட அனுபவம் நான் சற்றும் எதிர்பாராதது. அவர்களுடைய ஆசிரியர்கள் சற்றுத் தள்ளி நின்று பெருமிதமுடன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு கணம்தான். கண்ணில் நீர் கோத்துவிட்டது.

நானே இப்போது விரும்பினாலும் அந்தப் பருவம் மீள வரப்போவதில்லை. நான் ஆட்டோகிராஃப் வாங்க விரும்பிய பெரியவர்களும் இப்போது இல்லை. நான் உருப்படாமல்தான் போவேன் என்று சத்தியம் செய்த ஆசிரியர்கள் மட்டும் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களையாவது தேடிச்சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தபடி சென்னைக்கு பஸ் ஏறினேன்.

30 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற