அன்லிமிடெட் அநியாயம்

சாருவின் சாமியார் ராசி மாதிரி எனக்கு ஒரு சாப்பாட்டு ராசி இருக்கிறது போல் உள்ளது. எங்காவது புதிய உணவகங்களைக் கண்டுபிடித்துப் போய் சாப்பிட்டுப் பார்ப்பேன். நன்றாக உள்ளது என்பதற்குமேல் கொஞ்சம் கூடுதல் தரம் தெரியுமானால் நண்பர்களுக்கு சிபாரிசு செய்வேன். ரொம்பக் கவர்ந்துவிட்டால் இங்கே எழுதிவிடுவேன்.

நான் எழுதியதைப் படித்துவிட்டு நண்பர்கள் இடத்தைத் தேடி எங்கெங்கிருந்தோ வந்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு மதிப்புரை வழங்குவார்கள். சம்பந்தப்பட்ட உணவகங்கள் என் மூலம் வருகிற வாடிக்கையாளர்களுக்காக எனக்குத் தனியே ராயல்டி ஏதும் தருவதில்லை என்றாலும் இதை ஒரு சமூக சேவையாகப் பல வருடங்களாகச் செய்து வந்தபடிதான் இருக்கிறேன்.

ஆனால் இந்த நல்லெண்ணம் ஏன் அந்த உணவகங்களுக்குத் தெரிவதில்லை என்று எனக்குப் புரிவதில்லை. நான் எழுதி, நண்பர்கள் வரத்தொடங்கி கொஞ்ச நாளிலேயே அவர்கள் புத்தியைக் காட்டிவிடுகிறார்கள். இனி செத்தாலும் அந்தப் பக்கம் போகமாட்டேன் என்று மனத்துக்குள் வீர சபதம் செய்யவேண்டியதாகிவிடுகிறது.

தி. நகரில் ஒரு ராயர் மெஸ், டிடிகே சாலையில் ஒரு மாமி மெஸ் [ ரொம்ப அநியாயம். தரமும் போய், விலையும் ஏறி, இரண்டாவது முறை என்ன கேட்டாலும் கூடுதல் வசூல் செய்துவிடுகிறார்கள்.] என்று முன்னர் நான் புகழ்ந்து எழுதிய மெஸ்கள் எல்லாம் பல்லை இளித்து விட்ட நிலையில் வெகுநாள் வரை உணவகங்கள் பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றே இருந்தேன்.

அபூர்வமாக, எல்டாம்ஸ் சாலையில் எங்கள் அலுவலகத்துக்கு நேரெதிரே உள்ள ஸ்ரீபார்வதி ஹால் வளாகத்தில் ஓர் உணவகம் ஆரம்பித்து, அது மிரட்டக்கூடிய சுவையுள்ள, விதவிதமான உணவைக் குறைந்த விலைக்கு தாராளமாக வழங்கத் தொடங்கியதால் அதைப் பற்றி இங்கே ஒரு பக்கம் எழுதினேன். வலையுலக நண்பர்கள் பலர் தொடர்ந்து ஸ்ரீபார்வதிக்கு வரத் தொடங்கினார்கள். பலநாள் மதிய உணவு வேளையில், அதிகாரபூர்வமற்ற வலைப்பதிவாளர் சந்திப்புகளே அங்கே நடந்தன. என் நெடுநாள் நண்பரும் முன்னாள் விகடன் நிருபருமான கணபதி சுப்பிரமணியன், என் கட்டுரையைப் படித்துவிட்டு எங்கிருந்தோ தேடிக்கொண்டு ஸ்ரீபார்வதிக்கு வந்தார். இதற்காகவே அவர் லண்டனிலிருந்து திரும்பி வந்தார் என்று பொய் சொல்ல மாட்டேன். ஆனாலும் பல்லாண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியவருக்கு ஸ்ரீபார்வதியை ஒரு புதிய க்ஷேத்திரமாக்கி அறிமுகப்படுத்திய திருப்பணியை நானல்லவா செய்திருக்கிறேன்?

ஜியெஸ் மாதிரி இன்னும் எத்தனையோ பேர். லக்கி லுக்கும் அதிஷாவும் இங்கே சாப்பிடுவதற்கென்றே அரை மணிநேர அலுவலக உணவு இடைவேளையில் அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடி வருவார்கள். என் கட்டுரையைப் படித்துவிட்டு, குங்குமம் பொறுப்பாசிரியர் வள்ளிதாசன் மைலாப்பூரிலிருந்து வேகாத வெயிலில் வந்து, சாப்பாடு காலி என்ற அறிவிப்பைக் கேட்டுவிட்டுத் திரும்பிச் சென்ற சம்பவமெல்லாம் நடந்திருக்கிறது. எங்கள் அலுவலகத்தில், சத்யாகூட இரண்டொரு முறை சற்றே தாமதமாகச் சாப்பிட வந்து, உணவு இல்லாமல் திரும்பிச் சென்றிருக்கிறார்.

ஸ்ரீபார்வதிக்கு இந்த ரசிகர்களின் அருமை தெரியவில்லை. சமீப நாள்களில் எனக்கு அங்கே போவதற்கே பிடிக்காமல் போய்விட்டது. புராதனமான டிடிகே ரோடு சூர்யாஸின் கண்றாவி சுவையை நோக்கி வெகு வேகமாக அது நகர்ந்துகொண்டிருப்பது மட்டும் காரணமல்ல. ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே வாடிக்கையாளர்களை கோயிந்தசாமிகளாக நினைக்க ஆரம்பித்துவிட்டதுதான் பிரதானம். அன்லிமிடெட் 55 ரூபாய் என்ற அறிவிப்புடன் தொடங்கியவர்கள், இப்போது எதைக் கூடுதலாகக் கேட்டாலும் தனி விலை நிர்ணயித்துவிடுகிறார்கள். ஒரு சப்பாத்தி கூடுதலாக வேண்டுமா? மூன்று ரூபாய் கூடுதல். ஓர் அப்பளம் வேண்டுமா? அதற்குத் தனி. பாயசம் ஒரு கப்? தனி. அறிவிப்பே எழுதி ஒட்டிவிட்டார்கள். தண்ணீருக்கு மட்டும் தனி சார்ஜ் இன்னும் வைக்கவில்லை.

தவிரவும் அவர்கள் தொடங்கியிருக்கும் புதிய காம்போ உணவு வகைகள் அசகாயக் கொள்ளையாக இருக்கிறது. சாப்பாட்டுக்கு முன்னால் கொடுக்கும் அதே, பொறிக்காத அப்பள சைஸ் சப்பாத்தி இரண்டின் விலை முப்பது ரூபாயாம். [55 ரூபாய் உணவின்போது கூடுதல் சப்பாத்தி கேட்டால் 3 ரூபாய். அதே சப்பாத்தி இந்த காம்போவில் 30 ஆகிவிடுகிறது! சரி, ஒழியட்டும் என்று சாப்பிடுகிறீர்களா? ஆனால் இந்த ‘ப்ளானில்’ சாப்பிடுவோர் எக்ஸ்டிரா கேட்க முடியாது. அட,  விலைக்கே ஒரு கூடுதல் சப்பாத்தி கேட்டாலும் கிடையாது. இன்னொரு காம்போதான் தனியே ஆர்டர் செய்யவேண்டுமாம். ஒரே சப்பாத்தி மூன்று ரூபாய் விலைக்கும் முப்பது ரூபாய் விலைக்குமாக ஷட்டில் ஆடுகிற அதிசயம் உலகில் வேறெங்குமே நடக்காது என்று நினைக்கிறேன்.] ஐம்பத்தி ஐந்து ரூபாய் உணவில் வைக்கப்படும் ஒரு கப் சாம்பார் சாதம், வெரைட்டி ரைஸ், தயிர் சாதம் அனைத்தும் அதே அளவு – தனித்தனியே முப்பது ரூபாய். இதில் காம்போ என்பது எங்கே வருகிறது என்று கேட்பீர்களானால், சாம்பார் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளக் கொடுக்கப்படும் ஓர் அப்பளம் அதன் காம்போ! தயிர் சாதத்துக்கு ஊறுகாய் காம்போ.

என்னத்தைச் சொல்ல? காலை டிபனும் இப்போது ஆரம்பித்துவிட்டார்கள். இட்லி, பொங்கல், வடை, காப்பி கிடைக்கிறது. மாலை டிபனும் உண்டாம்.

ஸ்ரீபார்வதி தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி போராடி, முன்னேறி, உணவகத் தொழிலில் ஒரு பெரிய ஸ்தூபியாகலாம். உலகெங்கும் கிளை பரப்பலாம். சரவண பவன் அண்ணாச்சிக்கே சவால் விடுக்கலாம்.

ஆனால் ஒரு சிறந்த ரசிகனை நிரந்தரமாக இழந்தது, இழந்ததுதான்.

பி.கு: ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு மெஸ் பிடித்திருக்கிறேன். ஆறு மாதம் அவதானித்துவிட்டுப் பிறகு எழுதுகிறேன் 😉
 

29 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற