விட்டது சனி

சனியன் பிடித்த ஐபிஎல் நேற்று ஒரு வழியாக முடிந்தது என்பதை ட்விட்டரில் கண்டுகொண்டேன். எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்துப் பாட்டி மாலை வேளைகளில் இனி பழையபடி கோயிலுக்குப் போய் விளக்கேற்றுவார். ஹெர்குலிஸ் ச.ந. கண்ணன் இறக்கிவைத்த குடும்ப பாரத்தையும் அலுவல் வீரத்தையும் மீளச் சுமப்பான். ஜெய்சங்கர் தெரு சாயிபாபா கோயில் வாசலடிப் பக்கிரி தருமம் செய்வோரை வாழ்த்த மறந்து ஸ்கோர் கேளாதிருப்பான். லலித் மோடிகளும் சசி தரூர்களுமாக நிரம்பி வழிந்த செய்தித் தாளின் சொற்குப்பைகளுக்கிடையே புதிய மாணிக்கங்கள் அகப்படக்கூடும்.

கவிதையைப் போலவே எனக்குக் கிரிக்கெட்டும் பிடிக்கும். அது நன்றாயிருந்த காலங்களில் திருப்தியாக ரசித்திருக்கிறேன். வர்த்தகமாகிவிட்டதில் பிரச்னையில்லை. வாழ்வின் சகல சுக துக்கங்களையும் மறந்து தள்ளிவைத்துவிட்டு, எடுத்து வைத்துக்கொண்டாடுமளவுக்கு அதிலென்ன என்றுதான் புரியவில்லை. கழிந்த தினங்களில் கண்ணில் தென்பட்ட மானிட்டர்கள் அனைத்திலும் க்ரிக்கின்ஃபோ கணக்கு அட்டை தவறாமல் இருந்தது. விவாதங்களிலும் விதண்டாவாதங்களிலும் கிரிக்கெட் ஒன்றைத் தவிர வேறில்லை. சச்சின், தோனி, பொலாக், ஹைடன். கைவைக்காத ரவிக்கையணிந்த கவர்ச்சிப் பாட்டி சுனந்தா புஷ்கர். இந்தக் காதல் வந்த பிறகு அவர் காற்றில் மிதக்கும் சிறகு. ஐபிஎல் அழகுப் பதுமைகளின் ஆட்டங்களெல்லாம் போன இடம் தெரியவில்லை. ஓர் அரைக்கிழவி அள்ளிக்கொண்டு போய்விட்டாள். செய்தி மோட்சப் ப்ராப்திரஸ்து என்று எந்த மாமுனி கமண்டல நீர் தெளித்துச் சொல்லிப் போனானோ.

மிகுபணம் குவியும் கேந்திரங்களில் பித்தலாட்டங்கள் தவிர்க்க இயலாதவை. அதிர்ச்சிகொள்ள ஒன்றுமில்லை என்று அன்னைபூமி மக்கள் புரியவைத்தார்கள். யார் கவலைப்பட்டது? சீச்சீ இந்தக் கிரிக்கெட் கசக்கும் என்று நாதஸ்வரம் சீரியல் பார்க்க நகர்ந்தோர் எத்தனை பேர்? அமெரிக்கக் கிழக்குக் கடற்கரையோரம் உத்தியோகப் பிராப்தி பெற்று, பெண்டாட்டி பிள்ளை குட்டிகளோடு சௌக்கியமாக வாழ அருளப்பட்ட என் சிநேகிதன் ஒருவன் தனது கூகுள் டாக் ஸ்டேடஸ் மெசேஜாக, ஆட்ட தினங்களில் சென்னையில் இல்லாதது பற்றி மாதம் மும்மாரி அங்கலாய்க்கிறான்.

கிரிக்கெட் நமது தேசிய அடையாளமாகிவிட்டதை முதல் முதலில் எழுத்தில் பதிவு செய்தவர் காலமாகிப் போன திரு சுஜாதா. அதே கிரிக்கெட் நமது தேசிய வியாதியாகிவிட்டதைப் பதிவு செய்ய என்னப்பன் இட்டமுடன் என் தலையில் எழுதிவைத்தான்.

அலுவலகங்களில், வீடுகளில், கடைகளில், சாலைகளில், பேருந்துகளில், தொலைபேசி அழைப்புகளில், குறுஞ்செய்திகளில், கூட்டங்களில், கோயில்களில், குழாயடிகளில், திரையரங்குகளில் கூடியிருந்து குளிரக் கிட்டும் அபூர்வத் தருணங்களில் அங்கிங்கெனாதபடி நான்குகளும் ஆறுகளும் அவுட்டுகளும் அப்பீல்களும் சிந்தை மைதானங்களில் சொற்களை விரட்டி ரன் குவித்த வேகத்தை பிரமிப்புடன் கண்டேன்.

நான் தோற்றேன். கப்பலேறிப் போகுமுன் ஏகாதிபத்தியப் பெரியவாச்சான் பிள்ளைகள் விட்டுச்சென்ற எச்சம் இத்தனை வீரியமானதா?

இந்தத் தினங்களில் வீணான இந்திய மனித நேரங்களைப் பத்து நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன். மோடி மஸ்தான்கள் சுருட்டியதைக் காட்டிலும் கூடுதலாகப் பெருக்கியிருக்கலாம். மோடி மஸ்தான் வேலைகளேதும் செய்யாமலேயே.

19 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற