நண்பா, வணக்கம்.

காலம் கலிகாலம். நீயும் நானும் சந்திக்கும்போதெல்லாம் உலக அரசியல் பேசி உருப்படாமல் போவதே வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த முறை உனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். நாம் அரசியல் பேசப்போவதில்லை. அக்கப்போர்களுக்கு இம்முறை இடமில்லை. யார் யாரைக் கவிழ்த்தார்கள், எங்கே என்ன புரட்சி, ஒசாமா பின்லேடன் கிடைப்பாரா மாட்டாரா, மூன்றாம் உலக யுத்தம் வருமா வராதா, எண்ணெய் விலை இன்னும் ஏறுமா, இந்தப் பொருளாதார மந்தநிலை என்ன ஆகப்போகிறது, ஒரு ரூபாய் அரிசி ஐம்பது காசுக்குக் கிடைக்குமா, ஐபிஎல் ஊழல்கள் முழுதாக அம்பலமாகுமா – மூச்!

இதெல்லாம் வேண்டாம். எப்போதும் இருக்கிற தலைவலிகளைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, கொஞ்சம் வேறு மாதிரி கதை பேசுவோமா? கால் நீட்டி உட்கார்ந்து கதை பேசிப் பார்ப்பதுதான் எத்தனை சுகமானது. பொதுவில் அதற்கு அதிகம் சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. அதுவும் இந்தக் கதை மிகவும் சுவாரசியமானது. நல்ல வக்கணையாக நீட்டி முழக்கிச் சொல்லிப் பார்த்தால் இன்னுமே சுவை கூடும். கண்டிப்பாக உனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்தது போலவே.

ஆரம்பிப்போமா? ஆனால் ஒன்று. காவியத்துக்குப் பாயிரம் மாதிரி இந்தக் கதைக்கு ஒரு முன்கதை இருக்கிறது. அதிலிருந்து ஆரம்பிப்பதுதான் சரியாக இருக்கும். ஒழுங்காகப் புரியும். வாழ்நாளெல்லாம் முதல் வரியில் மேட்டரைத் தொடங்கி என்னத்தைச் சாதித்துவிட்டோம்? இந்த முறை கடைசி வரியில் இருந்து ஆரம்பிப்போம். ஒன்றும் குடிமுழுகிப் போகாது. ஆ, அந்த முன்கதை.

எனக்கு ரொம்ப நெருக்கமான சிநேகிதன் ஒருத்தன் இருக்கிறான். நல்லவன். சமத்து. வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றி, வையக மாந்தரெல்லாம் கண்ணு போடுகிற விதமாகத் தின்று கொழுத்தவன். ஒரு பெயர் கொடுத்துவிடுவோமே. பாராகவன்? நன்று. பிரச்னை இல்லாத பெயர்.

இயேசுநாதருக்கு ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எழுபது வருடங்கள் ஜூனியரான அவனுக்கு, இன்னும் முப்பத்தி எட்டு வருடங்கள் கழித்து திடீரென்று ஒருநாள் தனது எடை ரொம்ப அதிகம் என்று ஒரு கவலை வந்துவிட்டது. இதென்ன, உருளையாக, கர்லாக்கட்டைக்குக் கால்கள் முளைத்த மாதிரி ஒரு தோற்றம்! ஒரு கம்பீரமான ஆணழகனாக உருமாறி விடமுடிந்தால் எத்தனை அருமையாக இருக்கும்! பிறந்ததிலிருந்து வஞ்சனையில்லாமல் சாப்பிட்டு சாப்பிட்டு வளர்த்து வந்த திருமேனி அது. அப்படி இப்படி உடம்பை அசைத்து கலோரி இழக்காமல் சேர்த்துவைத்த பெரிய சொத்து. பெரிய பூசனிக்காய் மீது ஒரு குட்டி பூசனிக்காயை வைத்த மாதிரி அழகான தொப்பையும் உண்டு. குனிந்து ஒருமுறை தரையைத் தொடச் சொன்னால், அவனுக்கு முன்னால் பூமி தன்னைத்தானே கால் வாசி சுற்றி முடித்து இஸ்தான்புல் வரைக்கும் இருட்டாகியிருக்கும். இது பற்றிய குற்ற உணர்ச்சி மிகுந்த போதுதான், ஒரு மிகப்பெரிய தியாகம் செய்து தனது எடையைக் கணிசமாக இழந்தே தீருவது என்று அவன் முடிவு செய்தான்.

என்ன செய்வது? ஒரு பதினெட்டு, இருபது, இருபத்தைந்து வயதுகளில் அந்த எண்ணம் வந்திருக்கலாம். உலக அழகிகளை ஒருவேளை கவர்ந்து இழுத்திருக்க முடியும். நாலு எட்டில் நாய்க்குணம் வந்துவிடப் போகிற வயதில் அப்படியொரு ஆசை வந்தது அவனுக்கு. விதியை யாரால் என்ன செய்ய முடியும்?

பாராகவனாகப்பட்டவன் உடனே ஒரு டாக்டரைப் போய்ப் பார்த்தான். டாக்டர், டாக்டர், எனக்கு வயசு முப்பத்தி எட்டு. என் உயரம் ஐந்தடி நான்கு அங்குலம். நான் என்ன எடை இருக்கலாம்?

மேலும் கீழும் அளந்து பார்த்த டாக்டர், ‘இருக்கலாம் இல்லை, இழக்கலாம்’ என்று சொன்னார். அந்த உயரத்துக்கு அறுபத்தைந்து கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாதாம். காலக்ரமத்தில் கொலஸ்டிரால், ரத்தக் கொதிப்பு தொடங்கி மாரடைப்புவரை என்ன வேண்டுமானாலும் எப்போதும் வரலாம். அடக்கடவுளே, வஞ்சனையற்ற பாராகவன் தொண்ணூற்று இரண்டு கிலோ அல்லவா?

ஒன்றும் கவலை வேண்டாம். ஒரு டயட் சார்ட் போட்டுத் தருகிறேன், அதன்படி சாப்பிடுங்கள், தினசரி நீச்சல் பழகுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்றார் டாக்டர்.

அந்த உத்தம டாக்டர் கொடுத்த சார்ட்டை வீட்டுக்கு வந்து பொறுமையாகப் படித்துப் பார்த்தான் பாராகவன். டாக்டர் அவனை நிறைய ஓட்ஸ் சாப்பிடச் சொல்லியிருந்தார். அப்புறம் அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, முருங்கைக் கீரை, முசுமுசுக்கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, வெங்காயக் கீரை, வெள்ளைப்பூண்டுக் கீரை என்று உலகிலுள்ள அத்தனை கீரைகளின் பெயரையும், இலை தழைகளின் பெயரையும் எழுதி அனைத்தையும் ஆடு மாதிரி அசைபோட்டுச் சாப்பிடச் சொல்லியிருந்தார். ஐயோ, கீரை மட்டும்தானா என்று கலவரமடைந்த பாராகவன் சார்ட்டை வேகமாகப் புரட்ட, பெரிய மனம் படைத்த டாக்டர் அதில் வேறு சில ஐட்டங்களையும் சேர்த்திருந்தார். முட்டை கோஸ், முள்ளங்கி, பச்சை பீன்ஸ், நூக்கோல், பீர்க்கங்காய், பூசனிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், பாகற்காய், வாழைத்தண்டு என்று ஒரு பட்டியல் இருந்தது.

அடக்கடவுளே, என் உள்ளம் கவர்ந்த உருளைக்கிழங்கு எங்கே? வண்டி வண்டியாய்ச் சமைத்து வைத்தாலும் வாரித் தின்னச் சொல்லும் வாழைக்காய் எங்கே? எண்ணமெல்லாம் ருசிக்கும் எண்ணெய்க் கத்திரிக்காய் எங்கே, எங்கே? கொலைகாரப் பாவி கோபி 65 கூடாது என்று சொல்லிவிட்டாரே! பார் புகழும் பர்கருக்குத் தடை. இத்தாலி மண்ணில் அவதரித்து 10, ஜன்பத் வழியே தருமமிகு சென்னைக்கு வந்து சேர்ந்த பீட்ஸாவுக்குத் தடை. ஆசை ஆசையாக அள்ளி விழுங்கிய ஐஸ் க்ரீமுக்குத் தடை. காப்பிக்குத் தடை. ஆவின் பால், ஆரோக்யா பால், ஆட்டுப்பால், கழுதைப் பால் எதுவும் கூடாது. பாலுக்கு இன்னொரு பெயர் விஷம். தெரியுமா? தொட்டுவிடாதே, தள்ளிப்போ. என்னத்தையாவது குடித்தே தீரவேண்டுமென்றால் சீனத் தயாரிப்பு பச்சைத் தேநீர் குடி. அதிலும் பால் கலக்காதே.

எல்லாம் சரி, சோறு?

அடப்பாவி, அதற்கு பதிலாகத்தானே இதெல்லாம் என்றார் டாக்டர்.

பாவப்பட்ட பாராகவன் வேறு வழியில்லாமல், நரகத்தில் எழுதப்பட்ட அந்த சார்ட்டைப் பின்பற்றத் தொடங்கினான். எண்ணெய் இல்லாமல், நெய் இல்லாமல், பால் இல்லாமல், அதிகம் உப்பு இல்லாமல், காரம் இல்லாமல், மசாலா சேர்க்காமல், இனிப்பு தொடாமல் – கேவலம், ஒரு வாழைப்பழத்துக்குக் கூட வக்கில்லாமல் என்ன ஒரு வாழ்க்கை! ஆனாலும் தமிழகம் புதிதாக ஒரு ஸ்லிம் ப்யூட்டியை உலகுக்குத் தரவிருக்கிறது அல்லவா? அதற்காக இந்தத் தியாகங்கள் அவசியமாகிவிடுகின்றன.

ஆச்சா? பாதி வெந்த, பரிசுத்த, சைவக் கறிகாய்களுடனான தனது துவந்த யுத்தத்தை அவன் தொடங்கிய சூட்டிலேயே இன்னொரு காரியமும் செய்தான். எனை ஆளும் உணவே, உனக்கொரு கும்பிடு. யார் நீ? எது உன் நிசமான தோற்றம்? நேற்று வரைக்கும் என்னைக் கொழுக்கவைத்து உருட்டி விளையாடிய நீ இனி இளைக்க வைத்து இன்பம் சேர்ப்பாயாமே, எப்படி? யார் உன்னைக் கண்டுபிடித்தது? என்னவெல்லாம் ஜாலம் செய்வாய்? என் அப்பன், பாட்டன், முப்பாட்டன் சரி. அவனுக்கு முன்னால் முன்னூறு தலைமுறைகள் மூத்த பெருந்தாத்தனுக்கு யார் இப்படியொரு டயட் சார்ட் போட்டுக்கொடுத்திருப்பார்கள்? அவன் கிடைத்ததைத் தின்று ஜீவித்திருந்தான் அல்லவா? பைபிளில் வருகிற தாத்தாக்களெல்லாம் என்ன டயட் கடைப்பிடித்திருப்பார்கள்? எப்படி 800, 900, 1000 வருடங்களெல்லாம் வாழ்ந்திருக்க முடியும்? ஆதி மனிதர்கள் அதிக காலம் வாழ்ந்ததில்லை என்று ஒரு தியரி சொல்கிறார்களே, மானுடவியல் அறிஞர்கள்? அப்ப, அது என்ன லாஜிக்? எல்லாம் சரி, சைவ உணவு முதலில் வந்ததா? அசைவம்தான் முதலா? முதல் முதலில் மசாலா அரைத்த பெண்மணி என்ன பாட்டு பாடிக்கொண்டிருந்திருப்பாள்? அதுசரி, பெண் தான் அரைத்தாளா? நெருப்பு கண்டுபிடிப்பதற்கு முன்னால் சூரியனுக்கு அடியில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவார்களாமே? அதில்கூட மேலே, வெந்த பகுதியை ஆணும், கீழே வேகாததைப் பெண்ணும் சாப்பிடுவார்களாமே? என்ன கொடுமை சரவணன்! சாப்பிட வேண்டும் என்பது உணர்வு. எதைச் சாப்பிடுவது என்பதை மனிதன் முதல் முதலில் எப்படித் தீர்மானித்திருப்பான்?

உணவு கிடக்கட்டும். இந்த சாராயம்? உலகின் முதல் கடா மார்க் எங்கே உற்பத்தி ஆனது? நாலாயிரம் வருடங்களுக்கு முன்னால் குதிரை ஏறி இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் என்னவோ பானம் காய்ச்சி இந்திரனுக்கு குவார்ட்டர் கொடுத்துவிட்டு மிச்சத்தைக் குடித்துக் குதூகலிப்பார்களாமே?  அது என்ன? கி.மு. 10000லேயே பீர் மாதிரி ஏதோ பானம் இருந்ததாமே? என்றால், தண்ணீருக்கு அடுத்தபடியே தண்ணிதானா?

பாராகவன் கச்சாமுச்சாவென்று உணவைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்தான். அவனது இம்சைகள் பொறுக்காமல் தேட ஆரம்பித்துத்தான் இந்தக் கதையைப் பிடித்தேன்.

எந்த ஒரு நேர்க்கோட்டு வரையறைக்குள்ளும் பொருந்தாத இந்த வரலாறைத் தொடராக வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டருக்கு என் மனமார்ந்த நன்றி. நிச்சயமாக இது ஒரு முழுமையான வரலாறல்ல. அப்படி இருக்க முடியாது. சாத்தியமும் இல்லை. எல்லார் வீட்டு மீந்த உணவும் சங்கமிக்கும் ஒரு ராப்பிச்சைக்காரனின் பாத்திரத்தை இதன் கட்டமைப்புக்கு முன்மாதிரியாகக் கொண்டேன். ருசி பெரிதா? பசி பெரிதா? பசி அடங்கும்வரை அதுதான் பெரிது.

அடங்கியபிறகு ருசியைத் தேடிச் செல்வதற்கான ஓர் உந்துசக்தியாக இது அமையுமானால் அதுவே போதுமென்று கருதினேன்.

இந்தத் தொடர் அதன் இறுதி அத்தியாயங்களை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தருணத்தில், சற்றும் எதிர்பாராத சில உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் குமுதம் ரிப்போர்ட்டரில் இது திடீரென நிறுத்தப்பட்டது. பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை. எந்த இடத்திலும் நிறுத்தி, மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட இயல் அல்லவா இது? எனவே, இன்னும் கொஞ்சம் பக்கங்களை இப்போது எழுதிச் சேர்த்து இருக்கிறேன்.

ரிப்போர்ட்டரில், இதழ்தோறும் இதனை ரசித்துப் பாராட்டி வந்த வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் என் முதல் நன்றி. நான் எழுதிய அரசியல் வரலாறுகளையெல்லாம் விடவும் இதற்கான வரவேற்பு அதிகமிருந்ததைச் சொல்ல விரும்புகிறேன்.

ஒவ்வோர் அத்தியாயத்தை எழுதி முடித்ததும் என் அலுவலக சகாக்கள் சிலருக்கு வாசிக்க அனுப்புவேன். அனுப்பிய கையோடு Prodigy ஆசிரியர் திருமதி சுஜாதாவின் அருகே சென்று உட்காருவது என் வழக்கம். ஒரு திருவிழா பரவசத்துடன் அவர் அத்தியாயங்களை ஆர்வமுடன் வாசிப்பதைக் காண்பது எனக்கொரு திருவிழா. அவர் எங்கெங்கே சிரிக்கிறார், எதையெதையெல்லாம் ரசிக்கிறார், எதற்குத் துணுக்குறுகிறார், எங்கே கோபம் கொள்கிறார் என்பதை கணத்துக்குக் கணம் மாறும் அவரது முகபாவத்தில் படிப்பது ஒரு ரசமான அனுபவம். இந்த நூலைப் பொருத்த அளவில், எழுதுவது என்னும் ‘பணி’யை எனக்கு ஒரு குதூகலமான அனுபவமாக மாற்றியது சுஜாதாவின் ஆர்வமும் உடனடி விமரிசனங்களுமே.

எழுதிக்கொண்டிருந்த தினங்களில் எனக்கு எப்போதும் தேவைப்பட்ட உதவிகளைப் புத்தகங்களாகவும் தகவல்களாகவும் ஆலோசனைகளாகவும் தந்துதவியவர்கள், நண்பர்கள் என். சொக்கன், இலவசக் கொத்தனார், டைனோபாய், அறிவழகன், விக்னேஷ், தமிழ்ச்செல்வன், ஆதிமூலம், இனாயத்துல்லா, சிந்து, காயத்ரி பாலகிருஷ்ணன் ஆகியோர்.

அனைத்துக்கும், அனைவருக்கும் மேலாகத் தன் அன்பாலும் கண்டிப்பாலும் எப்போதும் என்னை வழிநடத்தும் என் ஆசிரியர் [குமுதம் ரிப்போர்ட்டரின் ஆசிரியரும்கூட] செ. இளங்கோவன் –

இவர்களுக்கெல்லாம் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. நன்றியைத் தவிர.

பா. ராகவன்
26 ஏப்ரல் 2010
[விரைவில் வெளிவரவிருக்கும் ‘உ’ – உணவின் வரலாறு  நூலுக்கு எழுதிய முன்னுரை]

20 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற