மலேசியப் பயணம்

சிங்கப்பூரில் நடத்திய அதே பயிலரங்கத்தை மலேசியாவிலும் நடத்த, மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் அழைத்திருந்தார்கள். அதே இரண்டு நாள். அடுத்த சனி, ஞாயிறு.

பத்ரி, சிங்கப்பூரிலிருந்து பஸ் மார்க்கமாக மலேசியா சென்றுவிட, நான் சென்னை வந்து, இடைப்பட்ட நான்கு நாள்களில் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி முடித்துவிட்டு, இங்கிருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றேன்.

மலேசியன் ஏர்லைன்ஸ்காரர்கள் உபசரிப்புத் திலகங்கள். நட்டநடு ராத்திரி விமானமென்றாலும் பயணம் முழுவதும் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் என்னத்தையாவது கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

உபசாரங்களை அங்கீகரிப்பதில் தமிழர்களுக்கு நிகரே கிடையாது அல்லவா? எனவே ஒரு கையில் ரெட் வைனையும் மறு கையில் ஒயிட் வைனையும் தலா ஒரு கோப்பை வாங்கி இரண்டையும் கலந்து அடிக்கிறார்கள். விமானத்தில் இருக்கிற விஸ்கி பாட்டில்களெல்லாம் வீணாகிவிடப் போகிறதே என்கிற சமூக அக்கறையுடன் ஏழு லார்ஜ், எட்டு லார்ஜ் என்றெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு குடித்துக்கொண்டே இருந்தார்கள். இதெல்லாம் இரவு பன்னிரண்டு மணி தொடங்கி இரண்டு மணி வரையிலும் நடைபெற்றது. அதன்பிறகு இரவு உணவு. அதை ஏன் விடவேண்டும்? மூக்கு பிடிக்கச் சாப்பிட்டு, போதையில் அவ்வப்போது கொஞ்சம் கீழே சிந்தி, காகிதப் பையில் வாந்தியெல்லாம் எடுத்து, பயணத்தை ஜோராக அனுபவிக்கிறார்கள்.

அழகான மலேசியப் பணிப்பெண்கள், சிரித்த முகம் மாறாமல் வாந்தியள்ளிக் கொட்டிக்கொண்டே இருந்தார்கள். ஆகாய வெளியையும் நாறடிக்கும் திறமை நம்மவர்களுக்கு மட்டுமே உண்டு.

அதிகாலை கோலாலம்பூர் விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்வதற்கு அரை டிராயர் அணிந்த பத்ரி வந்திருந்தார். கல்கி நாள்களிலிருந்தே எனக்கு அறிமுகமான மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு கார் எடுத்துவந்திருந்தார்.

பிரம்மாண்டமான பார்க்கிங் பகுதியிலிருந்து பிய்த்துக்கொண்டு வெளியேறி சாலையைத் தொட்டபோதே வேகமுள் நூறைக் காட்டியது. கோலாலம்பூர்ச் சாலைகளும் நன்றாகத்தான் இருக்கின்றன. இருபுறமும் ஏராளமான மரங்கள், விஸ்தாரமான வெளி. ஆனாலும் என்னமோ ஒன்று குறைவதாகப் பட்டது. சிங்கப்பூர் சாலை மாதிரி இல்லை என்று திரும்பத் திரும்பத் தோன்றியதன் காரணம் தெரியவில்லை. அதே மாதிரி, குறைந்த மக்கள் தொகையும் பரந்த நிலப்பரப்பும் கொண்ட தேசமான மலேசியா, இடத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது பற்றிப் பெரிதாகச் சிந்திக்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஒரு தலைநகரத்திலேயே அத்தனாம்பெரிய வெட்டவெளிகளைக் காணமுடியும் என்று என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை.

சினிமாக்கள் காட்டும் அந்த இரட்டைக் கோபுரங்கள் இருக்குமிடமும் அதனைச் சுற்றிய சில கிலோ மீட்டர்களும் மட்டும் காங்க்ரீட் நெரிசல் கொண்ட பகுதிகளாக இருக்கின்றன. அந்த ஊர் மு.க. ஸ்டாலின் மூலைக்கொரு மேம்பாலம் கட்டியிருக்கிறார். எங்கிருந்து பார்த்தாலும் அந்தக் கோபுரங்கள் தெரிகின்றன.

முக்கால் மணிநேரப் பயணத்துக்குப் பிறகு ஹோட்டலுக்குச் சென்று சேர்ந்தேன். பயிலரங்கம் நடக்குமிடமும் நாங்கள் தங்கவிருந்த இடமும் ஒன்றே என்பதனால், வெளியே அலைவது கூடுதலாகத் தவிர்க்கப்பட்டது. முழு இரவும் விமானத்தில் விழித்திருந்ததனால் மிகுந்த களைப்பாக இருந்தது. அறைக்குச் சென்றதும் அப்படியே பெட்டியை வீசிவிட்டுப் படுத்துவிட்டேன். பத்ரி ஒரு சுவாரசியமான சோகக் கதையைச் [அவருக்கு நேர்ந்ததல்ல.] சொல்லி என்னைத் தூங்கவைத்தார்.

ஒன்றரை மணிநேரம் தூங்கிவிட்டு எழுந்தபோது அவர் குளித்து முழுகித் தயாராக இருந்தார். நானும் தயாராகி, இருவரும் சாப்பிடுவதற்காக வெளியே வந்தபோதுதான் என் விதி சிரித்தது.

மலேசியாவில் என்னைப் போன்ற ஒரு தாவர பட்சிணிக்குப் பெரும் பிரச்னை இருக்கும்போலிருக்கிறது. ஹோட்டல்களில் பலவிதமான உணவுப்பொருள்கள் அழகழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் முட்டையாவது சேர்க்கப்பட்டிருக்கிறது. அட ஒரு ரொஜாக்கின்மீது கொட்டப்படும் சாஸில் கூடவா இறால் கலப்பார்கள்? ஆடு, கோழி, ஜெல்லி வகைகள், விதவிதமான மீன் வகைகள் ஏராளமாக இருக்கின்றன. எல்லா இடங்களிலும். மலேசியா, மாமிசம் புசிப்போரின் சொர்க்கம் என்று தோன்றியது. எனவே எனக்கு நரகமாகிப் போனது.

தாவர உணவு கிடைக்கும் என்று ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார் ரெ.கா. கிடைக்கத்தான் செய்தது. ஆனால் அது அசைவ உணவகத்தில் கிடைக்கக்கூடிய அசைவம் சேர்க்காத உணவு மட்டுமே. அக்கம்பக்கத்தில் உட்கார்ந்து இழுத்தும் உறிஞ்சியும் கடித்தும் நொறுக்கியும் உண்ணூவோர் அத்தனை பேரும் என்னை ஒரு ஜந்துவாகப் பார்ப்பதை உணர்ந்தேன். சரியாகச் சாப்பிட முடியவில்லை. ஒரு கப் தயிர்வாங்கிக் கரைத்து அடித்துவிட்டு எழுந்துவிட்டேன். சாதத்தில்கூட ஒரு துண்டு மீனைப் போட்டு [வாசனைக்காகவாம்] வேகவைக்கும் தீவிர அசைவர்களை மானசீகத்தில் வணங்கிவிட்டு, என் விதியை நொந்தபடிப் பயிலரங்குக்குச் சென்றேன்.

சிங்கப்பூரில் நடத்திய அதே எடிட்டிங் பாடங்கள்தாம். ஆனால் இங்கே மொழிபெயர்ப்பு செஷனுக்கு பதிலாக, வசனம் எழுதுவது பற்றிக் கொஞ்சம் பேசினோம். மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது பற்றி அறிந்துகொள்ள அதிக ஆர்வம் இருந்ததை உணர முடிந்தது. வாசிப்பு வேகத்தைக் கூட்டுவது – குறைப்பது எப்படி என்பதை ஒரு சில லைவ் உதாரணங்களுடன் விளக்கி, எழுதிக் காட்டியதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகத் தெரிந்தது.

முதல் நாள் மதியம்தான் பயிலரங்கு தொடங்கியது என்பதால் இரவு பத்து மணிவரை அமர்வுகள் இருந்தன. அன்று எங்கும் வெளியே போக முடியவில்லை. மறுநாள் காலை ஒன்பதுக்குத் தொடங்கி, மாலை நான்கு மணிக்கு முடித்துவிட்டோம். எனவே காரை எடுத்துக்கொண்டு சும்மா ஒரு ரவுண்ட் போனோம். பில்லா புகழ் பத்து மலை முருகனைப் பார்த்துவிட்டு [என்ன அபாரமான இளநீர் அங்கே!] அந்தப் பகுதியில் கொஞ்சம் நடந்தோம். அங்கிருந்து கொஞ்ச தூரம் போய், மெட்ரோ ரயில் பிடித்து நாலைந்து ஸ்டேஷன்கள் தாண்டிப் போய் இறங்கினோம். கடைகள் மிகுந்த பகுதி அது.

எனக்கு மலேசியாவின் தேசியச் சட்டையின்மீது எப்போதுமே ஒரு மையல் உண்டு. நண்பர் சோதிநாதன் பல்லாண்டுகளுக்கு முன்னர் சென்னை வந்தபோது எனக்கொரு சட்டை வாங்கிவந்துக் கொடுத்து அதை அறிமுகப்படுத்தினார். அதன் பேரெழிலில் சொக்கிப் போய் அதே மாதிரி பர்மா பஜாரில் நாலைந்து சட்டைகள் வாங்கிப் போட்டுக்கொண்டு சென்னை நகரத்து ஜீவராசிகளுக்கெல்லாம் குலைநடுக்கம் ஏற்படுத்திய தினங்கள் நினைவுக்கு வந்தன. எப்படியாவது இந்தப் பயணத்தில் அதே மாதிரி சட்டை பிடித்துக்கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்திருந்தேன்.

கடைகடையாகத் தேடி, உள்ளதிலேயே மிகத் தீவிரமான நிறச் சேர்க்கைகளும் பளபளப்பும் மிக்கதாக ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். பத்ரியும் திடீர்க் காதலுக்கு ஆளாகி அதே ரகச் சட்டைகள் இரண்டை வாங்கிக்கொண்டார். மலேசிய விமானப் பணிப்பெண்கள் தொடங்கி, கோலாலம்பூர் வீதிகளில் [ பெரும்பாலான கடைகளில் பெண்கள்தாம் வேலை பார்க்கிறார்கள். பரம சுதந்தரமாக இருக்கிறார்கள். வேறெந்த இஸ்லாமிய தேசத்தில் இப்படியொரு பெண் சுதந்தரம் சாத்தியம் என்று தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.] நான் பார்த்த பெண்கள்வரை அத்தனை பேரும் அதே பத்திக் துணியில்தான் ஆடை அணிந்திருக்கிறார்கள். மலேசிய ஆண்களில் ஒரு சிலர் மட்டுமே தேசிய சட்டை அணிகிறார்கள். பெரும்பாலானோர் அடையாளமற்ற பொதுச்சட்டைகளையே அணிகிறார்கள். என்னைப் போல் அவர்களுக்கு அந்த ஜிகுஜிகா சட்டையின் அருமை பெருமைகள் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை.

இரண்டு நாள்களும் நான் உண்ணாவிரதம் இருந்ததைக் கண்டு மனம் பொறுக்காத ரெ.கா., அன்றிரவு எங்கோ தொலை தூரத்தில் ஒரு சைவ உணவகம் இருக்கிறது என்று தேடி அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். மசால் தோசை, இட்லி, காப்பி. என் ஆன்மா சாந்தியடைய அதுவே போதுமானதாக இருந்தது.

இரவு அறைக்குத் திரும்பியதும் படுத்துவிட்டேன். மறுநாள் அதிகாலை விமானம். மூன்றரை மணிநேரத்தில் சென்னை. ஆறு மணிநேரத்தில் ஆபீஸ். பன்னிரண்டு மணிநேரத்தில் இது.

தீர்ந்தது விஷயம்.

இந்தப் பயணங்களுக்காக நாங்கள் தயார் செய்த எடிட்டிங் பயிற்சிப் பாடங்கள்தாம் அனைத்திலும் முக்கியமானவை. நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் வழிகளை, பாடமாக எழுதிப் பார்க்கும்போதுதான் அவற்றின் பரிமாணங்களே தெரியவருகின்றன. நாங்கள் தயாரித்திருக்கும் எடிட்டிங் பாடங்கள் நிச்சயமாக, உலகப் பொதுவான பாடங்களாக இராது. இருக்கவும் முடியாது. இவை, கிழக்கில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் மட்டுமே. ஆனால் எடிட்டிங் என்னும் கலையின் சில அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள நிச்சயமாக உதவக்கூடியவை.

விரைவில் இந்தக் குறிப்புகளை மேலும் விரித்துப் புத்தகமாகவே எழுதி வெளியிட ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். செம்மொழிக் களேபரங்கள் எல்லாம் முடியட்டும் முதலில்.

25 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற