தனியா-வர்த்தனம் 1

கொஞ்சம் படிக்கவும் எழுதவும் வேண்டியிருந்தது. சரி, போகிற தூரத்தில் பொழைப்பாற்றலாமே என்று ரயிலில் டிக்கெட் போடச் சொல்லியிருந்தேன். விலை விகிதத்தில் விமானத்துடன் பெரிய வித்தியாசமில்லாத முதல் வகுப்புப் பெட்டி. இரண்டு இரவுகள், ஒரு பகல். ஸ்டேஷன் ஸ்டேஷனாக விதவிதமான இந்தி கேட்கலாம், வடவர் சப்பாத்தி சாப்பிட்டு ஹரே பஹ்ஹ்ய்யா என்று அடி வயிற்றிலிருந்து கூப்பிட்டுப் பார்க்கலாம், பத்தினியும் பத்திரியும் பக்கத்தில் இல்லாத சௌகரியத்தில், தனிமை கிட்டினால் பாட்டுப் பாடி டான்ஸ்கூட ஆடிப் பாடிப்பார்க்கலாம், ஒரு முழுநீள பாரத் யாத்ரா நடத்திவிட்ட பெருமிதம்வேறு இறுதியில் கிட்டும். இன்னோரன்ன சின்ன சந்தோஷங்களை உத்தேசித்து டெல்லிக்கு இம்முறை ரயிலில் புறப்பட்டேன். அந்த சிறுவர் எழுத்துப் பயிலரங்கம்? அது கிடக்கட்டும். அப்புறம் பார்ப்போம். ரயில் விஷயத்தை முதலில் சொல்லவேண்டும்.

எனக்குக் கிடைத்தது கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ். இதனை கிராண்டு டிரங்கு எக்சுபிரசுவாக்க யாரும் எக்காலத்திலும் முயற்சியேதும் எடுக்காதபடியால் சென்னை செண்ட்ரலிலிருந்தே ஒரே இந்திமயமாக இருந்தது. ஒரு ரயில்வே சிப்பந்தியிடம் விசாரித்தபோது, விவரம் தெரிந்தது. தமிழ்நாடு எக்ஸ்பிரசில்தான் தமிழ் வாசனை இருக்குமாம். இது வடவர் எக்ஸ்பிரஸ். கடைச்சிப்பந்திகள்கூட நமஸ்தே சாப் என்றுதான் சொல்கிறார்கள். ராத்திரி சாப்பிடுவதற்கு பிரியாணி தவிர வேறொன்றும் கிடையாது என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிடுகிறார்கள். வேண்டுமானால் ப்ரெட் ஆம்லெட். எனக்கு வேண்டாம் என்றேன். சரி பட்னிகிட என்று சொல்லிவிட்டார்கள்.

ஏறியவுடன் நிகழ்த்தப்பட்ட இக்கொடூரத் தாக்குதலிலிருந்து விடுபடவே இரவு பத்து மணியாகிவிட்டது. அதுவரை கம்பார்ட்மெண்டில் வேறு யாரும் ஏறவில்லை. டிடிஆரும் வரவில்லை. நான்குபேர் அமரத்தக்க வசதியான அறை. நல்ல இருக்கைகள், படுக்கைகள். ஜில்லென்ற ஏசி. தண்ணீரைக் குடித்துவிட்டு நான் பேசாமல் படுத்திருக்க வேண்டும். ஆனால், யாராவது வந்து கதவைத் தட்டினால் எழுந்து திறக்கவேண்டுமே என்கிற நல்லெண்ணத்தில், தூங்காமல் படித்துக்கொண்டிருந்தேன்.

பத்தே முக்காலுக்கு டிடிஆர் மாதிரி தோற்றமளித்த ஒருத்தர் வந்தார். என் மூன்று மணிநேர மௌன விரதத்தைக் கலைத்து, அவரிடம் அன்பாகப் பேச்சுக்கொடுக்கப் பார்த்தேன். ம்ஹும். ஹம்கோ டமில் நை மாலும். ஓகேஜி மே அங்ரேசி மே போலூங்கா.

அதுவும் ஊஹும். நமக்கு ஹிந்தி மாதிரி அவர்களுக்கு அங்க்ரேசி போலிருக்கிறது. நான் அப்படிச் சொன்னதே ஒரு மாபாவம் என்பதுபோல் முறைத்துவிட்டு டிக்கெட்டில் என்னமோ நாலு கோடு கீசிவிட்டு விருட்டென்று வெளியே போனார். அடக்கடவுளே, இதென்ன சோதனை. சாப், சாப், ஏக் மினிட். என்ன என்றார் ஒரு சிவாஜி கணேசப் புருவமுயர்த்தலில்.

கேபினுக்கு வேறு யாரும் வரப்போகிறார்களா? எனில் எந்த ஸ்டேஷனில் ஏறப்போகிறார்கள்? வரவேற்புக்கு நான் தயாராகவேண்டும்.

அவர் ஒருமுறை சார்ட்டை மேலும் கீழும் பார்த்தார். பிறகு என்னைப் பார்த்தார். ஏ,பி,சி என்றிருந்த மூன்று கேபின்களையும் சுட்டிக்காட்டிவிட்டுப் பிறகு சொன்னார். இரண்டாயிரத்தி நூற்று எண்பத்தி நாலு கிலோ மீட்டரையும் நான் தனியேதான் கடந்தாக வேண்டும்.

அடக்கடவுளே, ஒரு ரயிலின் ஒரு கம்பார்ட்மெண்ட் ஒரே ஒரு பயணிக்காக இணைக்கப்பட்டிருக்கிறதா?

அவர் இன்னொரு முறை சார்ட்டைப் பார்த்தார். பிறகு சொன்னார். ஆம். சமயத்தில் அப்படி ஆகிவிடுகிறது. எதற்கும் நீங்கள் எப்போதும் அறைக்குள் தாழ்ப்பாளைப் போட்டே வைத்திருங்கள்.

ரயில் கொள்ளையர் பற்றி நான் கேள்விப்பட்டிருந்த சில சங்கதிகளெல்லாம் முதல் முறையாக என் நினைவில் வரிசையாக வரத் தொடங்கின. பார்த்த சில படங்களில் ரசித்த அத்தகு காட்சிகளும் மனக்கண்ணில் திரும்ப ஓடத் தொடங்கின. ஒரு மாதிரி பயம்போல் ஓருணர்வு டிக்கெட் வாங்காமல் வந்து உடன் உட்கார்ந்துகொண்டது.

மதிப்புக்குரிய டிடிஆர் அவர்களே, நீங்கள் இரவு இங்கே வந்து படுத்துக்கொள்ளலாமே?

நான் கூடூரில் இறங்கிவிடுவேன் என்று சொல்லிவிட்டுப் போயேவிட்டார். சரி, படிக்கலாம் என்று எடுத்தேன். பத்திருபது பக்கங்கள் தாண்டியிருக்காது. யாரோ கதவை தடதடவென்று இடிப்பதுபோன்ற சத்தம் கேட்டது. எழுத்தைத் தவிர என்னிடம் இன்னொரு ஆயுதம் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? என்னவாவது விபரீதமென்றால் என்ன செய்வது? சத்தம்போட்டால்கூட யாருக்கும் கேட்காது. இதென்ன வினோத இம்சை? ரயில்வே போலீஸ் என்றொரு இனத்தார் இருக்கிற சுவடே தெரியவில்லை. படுக்கை, தலையணை எடுத்துக்கொடுத்த பையனும் எங்கே போனான் என்று தெரியவில்லை. [மறுநாள் கண்ணில் பட்டான். விசாரித்தபோது செகண்ட் க்ளாஸ்ல படுத்துக்கறதுதான் சார் சேஃப் என்று திருவாய் மலர்ந்தான்.] இன்பமாகப் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் போகவென்று ரயிலைத் தேர்ந்தெடுத்தது தப்பாப்போச்சே.

பயந்தபடி கதவைத் திறந்தால் ஒரு ஸ்ப்ரேவுடன் ஒருத்தன் நின்றுகொண்டிருந்தான். க்யா? என்றேன் சுத்தமான உலகத் தர ஹிந்தியில். ஸ்ப்ரே சாப் என்றான் உத்தமோத்தமன். உடனே எனக்கு ஏன் ஜியாத் ஜரா எடுத்துச் சென்ற ஸ்ப்ரே நினைவுக்கு வரவேண்டும்? என் அடுத்த பதிலுக்கு அவன் காத்திராமல் அறைக்குள் புயலாக நுழைந்தான். திரைச் சீலைகள், இருக்கைகள் அனைத்தின்மீதும் அந்த ஸ்பிரேவை அடிக்கத் தொடங்கினான். க்யா? க்யா? என்றேன் ஒன்றும் புரியாமல். பிறகு அந்தச் சூழலுக்கு அது தகுந்த வினாச்சொல் அல்ல என்று புரிந்து க்யோங்? க்யோங்? என்று மாற்றிக்கேட்டேன். ரூம் ஸ்ப்ரே சாப் என்று சொல்லிவிட்டுப் போனான். ஒரு மாதிரி பேகான் ஸ்ப்ரேவையும் குட்டிகுரா பவுடரையும் கலந்து அடித்ததுபோல் ஒரு மணம். ரொம்ப நாராசமாக இருந்தது. அது மயக்க மருந்து இல்லை என்ற ஒரே காரணத்தால் சகித்துக்கொள்ள முடிவு செய்தேன்.

இரவு முழுதும் நான் உறங்கவில்லை. முழுத்தனிமை என்பது ஒரு மணி நேரத்துக்குக் கூட உதவாத சமாசாரம் என்பது புரிந்துவிட்டது. பாட நினைத்ததெல்லாம் மறந்துவிட்டது. ஆடவும் தோன்றவில்லை. பாதி ஆந்திர பிரதேசம் தாண்டியபோது மாவோயிஸ்டுகள் ஞாபகம்வேறு வந்துவிட்டது.  என்னைப் போன்ற ராக்கோழிகள் யார் யார் என்று மனத்துக்குள் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்காக போன் செய்து தலா பத்து பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். நல்லவேளை ஏதோ ஓரிடத்தில் சிக்னல் போய்விட்டது. விரைவில் விடிந்தும் விட்டது.

ஒரு ஆளுக்காக ஒரு கம்பார்ட்மெண்டையே கோத்து அனுப்புகிற இந்தியன் ரயில்வேயின் செயல்பாட்டை நல்ல மனசு என்பதா, வில்லன் மனசு என்பதா?

7 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற