கருத்துக்களம் திறக்கப்படுகிறது.

நண்பர்களுக்கு வணக்கம். இந்த வலைத்தளத்தின் வாசகர் கருத்துக் களம் [Comments Section] இன்றுமுதல் திறக்கப்படுகிறது.

இத்தளத்தில் நான் எழுதத் தொடங்கிய நாளாக இதில் வாசகர் கருத்துகளைப் பதிவு செய்வதற்கான இடம் ஏன் இல்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகவும் ஆதங்கமாகவும் கோரிக்கையாகவும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. நண்பர் வெங்கட் இதனை மிகத் தீவிரமாகக் கண்டித்துத் தம் பதிவு ஒன்றில் குறிப்பிட [என்ன அருமையான தலைப்பு! ], அதனைத் தொடர்ந்து வாதப்பிரதிவாதங்களும் நடந்தன. Comments பகுதிக்கு மாற்றாக மின்னஞ்சல் முகவரியை நான் அளித்தது பற்றியும் சில கண்டன அஞ்சல்கள் வந்தன.

நல்ல நண்பர்கள் பொதுவாகக் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். சிறந்த நண்பர்களுக்கு மட்டுமே கோபம் வரும். எனது சிறந்த நண்பர்களுக்கு இது நன்றி சொல்லும் தருணம். விளக்கம் சொல்லவேண்டிய தருணமும் கூட.

மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்வதிலோ, விவாதங்களுக்கு இடமளிப்பதிலோ, கண்டனங்களை எதிர்கொள்வதிலோ எனக்கு எப்போதும் பிரச்னை இருந்ததில்லை. எழுதுவதைப் பொருட்படுத்தி வாசிப்பவர்களை எப்படி என்னால் நிராகரிக்கவோ நகர்த்திவைக்கவோ இயலும்? வாசிப்பவர்கள் இல்லாமல் எழுதுபவன் இல்லை. கதவை மூடிக்கொண்டு சுயபுலம்பலில் ஈடுபடும் உத்தேசம் எனக்கு அறவே இல்லை. இப்போது என்றல்ல, எப்போதும் இருந்ததில்லை. நான் வார இதழ்களிலும் வாரமிருமுறை வருகிற இதழ்களிலும் தொடர்ந்து எழுதுபவன். வாசக உறவு என்பது என் வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய அம்சம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக இணையத்தில் ‘பின்னூட்டப்பெட்டி’ என்று அறியப்படும் இந்த வாசகர் கருத்துக் களம் என் சம்பந்தப்பட்ட அளவில் ஒரு பெரிய கார்ப்பரேஷன் குப்பை லாரியாகத்தான் இருந்துவந்திருக்கிறது. முன்னனுபவங்கள் அத்தனை சிலாகிக்கக்கூடியதாக இல்லாததே இதற்குக் காரணம். [பின்னூட்டம் என்னும் பிரயோகத்தை எனது மூளையின் சொல்வங்கி ஏற்க மறுக்கிறது. அதனால்தான் கருத்துக்களம் என்று குறிப்பிடுகிறேன்.] தொடக்கத்தில் நான் Rediff Blogsல் எழுதத் தொடங்கி பின்னர் Bloggerக்கு மாறி, பின்னும் தமிழோவியம் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்த நாள் வரையிலும் இந்தப் ‘பின்னூட்டப் பெட்டிகள்’ என் பலநாள் உறக்கத்தைக் கெடுத்திருக்கின்றன. பதில் சொல்லி மாளாத சாதீயக் குற்றச்சாட்டுகள், பதிலே பேசமுடியாத செந்தமிழ் அர்ச்சனைகள், அர்த்தமற்ற உளறல்கள் என்று அந்த இடம் எப்போதும் துர்நாற்றம் வீசக்கூடியதாகவே இருந்துவந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல் பலருக்கும்.

பெரும்பாலும் பெயரற்றவர்களாக வருவார்கள். அல்லது புனைபெயர்களில் வருவார்கள். ஒருவாளி மலம் அள்ளி வீசிவிட்டு ஓடியே போய்விடுவார்கள். இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு உட்கார்ந்து சுத்தம் செய்துகொண்டிருக்க வேண்டும்.

எனக்கு எழுதுவதைத் தவிர, எழுதியது குறித்துப் பேசுவது தவிர வேறு எதுவும் முக்கியமானதல்ல. எனவே முக்கியமில்லாத எதுவும் பொருட்படுத்தத் தகுந்ததுமல்ல. இதனால்தான் தேவையற்ற கூப்பாடுகளையும் அக்கப்போர்களையும் துர்நாற்றக் கிருமிகளையும் தவிர்ப்பதன் பொருட்டு எனது சொந்த இணையத்தளத்தை உருவாக்கியபோது கணேஷ் சந்திராவிடம் இதன் Comments Optionஐ எடுத்துவிடும்படிச் சொன்னேன்.

ஆனால், தமிழ் இணையத்தின் சில சமீபத்திய நிகழ்வுகள், அவை தருகிற நம்பிக்கை கலந்த நிம்மதி உணர்வு என்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யவைத்தன. வாசகர் கருத்துக்களம் இனி ஆரோக்கியமான விவாதங்களுக்கும் புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய சிந்தனைகளுக்கும் மட்டுமே உரியதாக இருக்கும் என்கிற நம்பிக்கை. கருத்துக்களங்களை ஒதுக்குப் புறங்களாக எண்ணி வந்து சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வோர் குறித்த அருவருப்புணர்வு இனி வேண்டாம் என்று நினைக்கிறேன். நாம் சுதந்தரமாக உரையாடலாம்.

ஒரு விஷயம். நான், என்னைப் போலவே என் வாசகர்களையும் மிகவும் மதிக்கிறேன். பரஸ்பர புரிந்துணர்வுடன் மேற்கொள்ளப்படும் பயணம் நிச்சயம் அர்த்தமுடையது என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடையாளமாக இந்தப் பதிவு தொடக்கம் இத்தளத்தின் வாசகர் கருத்துக்களம் திறக்கப்படுகிறது.

உங்கள் ஆரோக்கியமான விமரிசனங்களுக்காக எப்போதும் காத்திருக்கிறேன். அபத்தங்களும் அருவருப்பூட்டக்கூடிய அர்த்தமற்ற வெற்று வசைகளும் இல்லாதவரை இந்தக் களம் இனி எப்போதும் திறந்திருக்கும்.

25 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற