கழுதைகள் இழுக்கும் வண்டி

சில மாதங்களுக்கு முன்னர் பாஸ்போர்ட் வாங்குவதற்காக நான் என்னுடைய அடையாள ஆவணங்களை எடுத்துச் சரிபார்க்க வேண்டிவந்தது. அதாவது அரசாங்க முத்திரையுடன் என்னிடம் உள்ள ஆவணங்கள்.

முதலாவது என்னுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். நல்ல மார்க். சிறந்த எதிர்காலம். நன்கு படித்துக்கொண்டிருந்த பையன் என்பதற்கான அத்தாட்சி. என் பெயர், பள்ளியின் பெயர் விவரங்களுடன் கோபுர முத்திரை போட்ட சான்றிதழ். அதை ரிசல்ட் வந்த ஒரு சில தினங்களுக்குப் பிறகு சமீபகாலம் வரை யாருக்கும் எடுத்துக் காட்டவேண்டிய அவசியம் நேராததால் பத்திரமாக பீரோவில் வைத்திருந்தேன். பாஸ்போர்ட்டுக்காக எடுத்து, பிரதிகள் செய்து விண்ணப்பித்தபோதுதான் அதிகாரியாகப்பட்டவர்கள் தூக்கிக் கடாசினார்கள்.

இந்த ஆவணம் செல்லாது. பெயர் சரியில்லை என்று சொல்லிவிட்டார் ஓர் அதிகாரி. இதென்ன அநியாயம்? ராகவன் என்பது என் தாத்தா பெயரின் சுருக்கம். அவர் நினைவுக்காக என் தந்தை எனக்கிட்ட பெயர். இதைச் செல்லாது என்று யாரோ ஒருத்தர் சொன்னால் அவரை உண்டு இல்லை என்று ஒரு வழி பண்ணாமல் எப்படி விடுவது?

பலநூறு பேர் வரிசையில் காத்திருந்த பாஸ்போர்ட் அலுவலகத்தில் அந்த அதிகாரிக்கும் எனக்குமான துவந்த யுத்தம் ஒரு மத்தியானப் பொழுதில் தொடங்கியது. சரமாரியான என் வினாக்கள் எதற்குமே அவர் பதில் சொல்லவில்லை. புத்தர் மாதிரி மோனநிலை காத்து இறுதியில் ஜென் குருவைப் போல் ரத்தினச் சுருக்கமாகத் தன் தரப்பை விளக்கினார். சான்றிதழில் இருந்த பெயர் P. RAGAVAN. என் பாஸ்போர்ட் அப்ளிகேஷனுடன் நான் இணைத்திருந்த பிற அனைத்து ஆவணங்களிலும் இருந்த பெயர் P. RAGHAVAN. எனவே செல்லாது, செல்லாது என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.

என் முதல் அரசு ஆவணத்தைத் தயாரித்த, முகமறியா டைப்பிஸ்ட் இப்படி ஓர் எழுத்தை விழுங்கி இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்து என் வாழ்க்கையில் விளையாடக்கூடுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

என் அப்ளிகேஷனை நிராகரித்துவிட்டார்கள். தோல்வியை விரட்டி வெற்றிக்கொடி நாட்டுவதன் பொருட்டு நான் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து இரண்டு பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்து, அதை ஒரு கெசட்டட் ஆபீசரிடம் காண்பித்துக் கையெழுத்து வாங்கி இம்முறை மிகச் சரியாக அனைத்தையும் ஒப்பிட்டுச் சரிபார்த்துத் திரும்பக் கொண்டு போனேன்.

இம்முறை வேறு அதிகாரி. வேறு கவுண்ட்டர். ஆதாரங்களை அவர் புரட்டிக்கொண்டே வர, நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லா ஆவணங்களிலும் நான் ராக்ஹவனாக அல்லவா இருக்கிறேன்? கண்டிப்பாக நிராகரிக்க முடியாது!

உங்கள் முகவரி எட்டாவது குறுக்குத் தெருதானே என்றார் அதிகாரி.

இதிலென்ன சந்தேகம்? அதுதான் சரியாக இருக்கிறதே.

ஆனால் உங்கள் டிரைவிங் லைசென்ஸில் எட்டுக்கு பதில் ஆறு என்று இருக்கிறது பாருங்கள் என்று காட்டினார். பகீரென்றது. ஐயா அது எட்டுதான். கால மாற்றத்தில் ஆறு போல் ஆகிவிட்டது. விரைவில் குட்டை போலவும் ஆகக்கூடும். பாலையாகவும் மாறலாம். அதற்கும் வயதாகிறது அல்லவா? தவிரவும் அந்நாளில் அழியாத பிளாஸ்டிக் அட்டைகளில் லைசென்ஸ் தருவதில்லை. டாட் மாட்ரிக்ஸ் ப்ரிண்டரில் அச்செடுத்த தாள். எப்படி அழியாதிருக்கும்?

என் நியாயமான விளக்கத்தை அவர் நல்லவராக இருந்திருந்தால் நிச்சயம் ஏற்றிருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக அவர் ஓர் அரசு அதிகாரியாக இருந்தபடியால் ரிஜெக்டட் என்று திருப்பிக் கொடுத்துவிட்டார்.

எனக்கேற்பட்ட கடுங்கோபத்துக்கு அளவே இல்லை. ஆனால் கோபித்துப் பயனுமில்லை. எல்லை தாண்டவேண்டுமென்றால் பாஸ்போர்ட் அவசியம். வாழ்க்கையில் முன்னுக்குவர, தேவைப்படும்போது எல்லைமீறத்தான் வேண்டும்.

எனவே கட்டுப்படுத்திக்கொண்டு என் அடுத்த புனித யாத்திரையை ஆரம்பித்தேன். இப்போது மோட்டார் வாகன லைசென்ஸ் வழங்கும் அதிகாரி. பழைய லைசென்ஸைப் புதுப்பிப்பதற்கான விஞ்ஞாபனம். இப்பவும் நாளது பங்குனி 23 விரோதி வருஷம் புண்ணிய க்ஷேத்திரமாம் குரோம்பேட்டை, நியூ காலனி எட்டாவது குறுக்குத் தெரு, முதலாம் எண் வீட்டில் வசிக்கிற பிராகவனாகிய நான் எனது லைசென்ஸ் அட்டையைப் புதுப்பிப்பதன் பொருட்டும் அதிலுள்ள எழுத்துப் பிழைகளைக் களைவதன்பொருட்டும் இவ்விண்ணப்பத்தினைத் தங்கள் மேலான கவனத்துக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

அவர்கள் அதற்கான ஆதாரமாக ரேஷன் கார்டை எடுத்து வரச் சொன்னார்கள். குலை நடுங்கிவிட்டது. அதிலென்ன எழுத்துப் பிழை இருக்கப் போகிறதோ என்று பத்துப்பக்கங்கள் கொண்ட அந்த அட்டைப் புத்தகத்தை அரிசி/கோதுமை/அஸ்கா/மண்ணெண்ணெய் என்று காலம் காலமாகப் போட்டிருந்த பக்கங்கள் முதற்கொண்டு பின்னட்டை இறுதி வாசகம் வரை ஒழுங்காக ஒருமுறை ப்ரூஃப் பார்த்தேன். எல்லாம் சரிதான் என்று தீர்மானமாகத் தோன்றினாலும் ஒருமாதிரி வயிற்றுக்கோளாறு ஏற்பட்டவனின் பதற்ற உணர்விலேயே இருந்தேன்.

பெரிய பிரச்னையில்லாமல் ஓரிரு தினங்களில் நாலைந்து இடங்களுக்கு மட்டும் அலையவைத்து என் டிரைவிங் லைசென்ஸைப் புதுப்பித்துக் கொடுத்துவிட்டார்கள். புதுப்பித்த கணத்தில் ஒரு சம்பவம் நடந்தது. என்னை உட்காரவைத்து, என் கண் முன்னாலேயே ஒரு பெண்மணி என்னைப் பற்றிய விவரங்களை கம்ப்யூட்டரில் டைப் செய்தார். நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே P. RAGHAVAM என்று அவரது விரல்கள் விளையாட, அம்மையே அப்பா ஒப்பிலா மணியே என்று அப்படியே எழுந்து சாஷ்டாங்கமாக அவர் காலில் விழப் போய்விட்டேன். பதறி எழுந்தவர் என்னவென்று விசாரிக்க, முன்கதைச் சுருக்கத்தை அவருக்கு விளக்கி, ‘கொஞ்சம் நகர்ந்துகொண்டீர்கள் என்றால் நானே டைப் செய்கிறேன். என்பொருட்டு உங்களுக்கு அந்த சிரமம்கூட வேண்டாம்’ என்று சொன்னேன்.

பாஸ்போர்ட் அலுவலகத்தின்மீது நான் நிகழ்த்திய மூன்றாவது படையெடுப்பின்போது என் ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருந்தன. நிச்சயமாக வேலை முடிந்துவிடும் என்ற அபார நம்பிக்கையுடன் சென்றேன்.

என் நம்பிக்கை வீண் போகவில்லை. எனக்கு பாஸ்போர்ட் கிடைத்து, இரண்டு நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன் என்பது உண்மையே. ஆனால் அம்மூன்றாம் படையெடுப்பில் எனக்கு ஓர் இக்கட்டு வர இருந்ததும் உண்மையே.

ஆவணங்களில் ஒன்றாக நான் எடுத்துச் சென்றிருந்த – ஆனால் அவசியம் தேவைப்படாத ஓர் ஆவணம் என்னுடைய PAN. இது நான் வரி கட்டுமளவு வருமானமில்லாத காலத்தில் என் தந்தையின் ஆர்வக்கோளாறினால் அவசரப்பட்டு வாங்கப்பட்ட ஒரு துண்டுக் காகிதம்.

அப்போதைய PAN அப்ளிகேஷனில் என்னென்ன கேட்டிருந்தார்கள் என்றெல்லாம் எனக்கு சுத்தமாக நினைவில்லை. என் பெயர், என் அப்பா பெயர், என் தாத்தா பெயர் மூன்றையும் அவசியம் கேட்டிருக்கவேண்டும். என் பெயர் ராகவன், என் அப்பா பெயர் பார்த்தசாரதி, தாத்தா பெயர் ராகவாச்சாரி என்று வெகு நிச்சயமாக என் தந்தை சரியாகத்தான் அதனை நிரப்பியும் இருப்பார்.

என் பிரத்தியேகச் செல்ல விதி அதிலும் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தியிருந்தது. எனது அட்டையில் என் பெயர் பார்த்தசாரதி ராகவன் என்றும் என் அப்பாவின் பெயர் ராகவாச்சாரி என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அட்டை கிடைத்துப் பல்லாண்டு காலம் வரை அதை உபயோகிக்குமளவு வருமான விருத்தி எனக்கு ஏற்படாதபடியால் அது பாட்டுக்கு எங்கோ ஒரு மூலையில் சும்மா கிடந்தது. அதிலிருந்த பிழையை எண்ணிப் பதறி, சரி செய்யத் தோன்றவேயில்லை.

இப்போதைய அனுபவங்களுக்குப் பிறகு, எப்படியும் இந்த அட்டை என்றேனும் பிரச்னை தரலாம் என்று தோன்றியதால் புதிய PAN கார்டுக்காக மறுவிண்ணப்பம் செய்து, நாந்தான் ராகவன், என் அப்பா பார்த்தசாரதிதான் என்பதற்கான உரிய ஆவண ஆதாரங்களையும் சேர்த்து அனுப்பியிருந்தேன்.

நேற்று வருமான வரித்துறையிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் ராகவன் என்பதற்கும் உங்கள் அப்பா பார்த்தசாரதி என்பதற்கும் மட்டுமே நீங்கள் ஆதாரம் அளித்திருக்கிறீர்கள். ராகவாச்சாரி என்பார் உமது தாத்தாதான் என்பதற்கான போதிய ஆதாரங்களை நீங்கள் காட்டியிருக்காதபடியால் இந்த விண்ணப்பம் செல்லாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் ஆவணங்களின்படி உங்கள் அப்பா ராகவாச்சாரிதான் என்பதையும் உடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஃபார்வர்டட். பை ஆர்டர்.

மேற்கொண்டு போரிட எனக்கு விருப்பமோ தெம்போ இல்லை. நியாயமாக இது குறித்துப் போரிடவேண்டிய என் அப்பா என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்க்கிறேன்.

31 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற