நீரில் மிதக்கும் தேசம்

நிகழும் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் சுக்லபட்சம் நாளது தேதி வரைக்கும் இந்தப் பூவுலகில் நிகழ்ந்த மாபெரும் இயற்கைப் பேரழிவுகளில் ஒரு நாலஞ்சாவது நமக்கு உடனே உடனே நினைவுக்கு வரக்கூடியவை. ஒண்ணுமே தோன்றாவிட்டாலும் பல்ராம் நாயுடுவை நினைவுகூர்ந்து, அந்த சுனாமியைச் சட்டுபுட்டெனச் சொல்லிவிடுவோம். கொஞ்சம் யோசித்து குஜராத் பூகம்பம் என்போம். பரந்த அல்லது பறந்த அனுபவஸ்தர்கள் அமெரிக்க மண்ணிலே, சப்பானிய யென்னிலே, கலிங்க, காந்தார, சாவக, கடார தேசங்களிலே எவ்வெப்போது என்னென்ன அழிவுகள் நேர்ந்திருக்கின்றன என்று உட்கார்ந்து யோசித்து அல்லது கூகுளாண்டவரைச் சரணடைந்து ஒரு பட்டியல் தயாரித்தளிக்கலாம்.

ஒன்று தெரியுமா? உலக சரித்திரம் அல்லது பூகோளம் இதற்குமுன் காணாத மகத்தான இயற்கைப் பேரழிவு என்பது சமீபத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்ததுதான்.

பாகிஸ்தானிலா? என்ன நடந்தது? என்று கேள்விகளால் வேள்வி செய்வதற்கு நம்மில் ஒரு மாபெரும் மக்கள் சமூகம் உண்டு. பிழை அவர்கள் மீதில்லை. வேளைக்கொரு புத்தம்புதுப் படம் பாருங்கள், சுதந்தர தினத்தைக் கொண்டாடித் தீருங்கள் என்று தொலைக்காட்சிகளும், பட்டப்பகலில் சங்கிலிப் பறிப்பு, காதலனுடன் எஸ்கேப் ஆன மணப்பெண் போன்ற சர்வதேச முக்கியத்துவம் மிக்க செய்திகளாலும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் பிரம்மாண்டத் திரைப்பட விளம்பரங்களாலும் பக்கங்களை நிறைக்கும் பத்திரிகைகளும்தான் காரணம்.

விஷயம் எளிது. இந்த வருஷம் ஆகஸ்டு பதினாலாம் தேதி பாகிஸ்தானியர்கள் தமது சுதந்தர தினத்தைக் கொண்டாடவில்லை. ஒப்புக்கு ஒரு கொடியேற்றிவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். அதையேகூட ஒளிந்து நின்றுதான் ஏற்ற வேண்டிய நிலைமை. மழையென்றால் பேய் மழை. வெள்ளமென்றால் பிசாசு வெள்ளம். இங்கே அங்கே என்றல்ல. தேசமே நாசமாகிப் போன பெரும் அழிவு. சேத மதிப்பு, உயிரிழந்தோர் எண்ணிக்கை, வீடு போனவர்களின் புலம்பல்கள், காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு இன்னோரன்ன சமாசாரங்களுக்காகவெல்லாம் சேர்த்து நாலு முறை உச்சு, உச்சு, உச்சு, உச்சுவென்று சொல்லிவிடவும். கிட்டத்தட்ட ஒரு கோடியே பதினேழு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரம் இந்த இடத்திலே சொல்லிவைக்கலாம்.

ஏற்கெனவே பொருளாதார சமாசாரங்களில் குவார்ட்டர் அடித்துவிட்டுக் குப்புறக் கிடக்கும் குடிமகன் மாதிரி பாகிஸ்தான் சுருண்டு கிடக்கிறது. இந்த அழிவுக்குப் பிறகு எழுந்து நிற்க எத்தனைக் காலமாகும் என்று எளிதில் சொல்லுவதற்கில்லை.

அமெரிக்கா உதவுகிறதா, சரி. சீனா பணம் தருகிறதா சந்தோஷம். இந்தியா எதாவது செய்யணுமா? ம்ஹும். நேரடியாக வேண்டாம். ஐநா மூலம் அனுப்புங்கள் போதும் என்று விடாத மழையிலும் அடாத அசிங்க அரசியல் நிகழ்ந்தாலும், இது கரித்துக் கொட்டும் சமயமல்ல. நாசமாய்ப் போன அரசியல் எப்போதும் அப்படித்தான். மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்தப் பக்கம் பஞ்சாபில் ஆரம்பித்து, அந்தப்பக்கம் பத்தானியர்கள் பிரதேசம் வரைக்கும் இண்டு இடுக்கு விடாமல் அள்ளிக்கொண்டு ஓடிவிட்டது வெள்ளம்.

இது தொடர்பான பல காட்சிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. சாலைகளில் கடல் போல் கொந்தளித்தபடி ஓடிவரும் தண்ணீர், ஒரு கொத்து மக்களை அப்படியே அள்ளிச் சுருட்டி மடக்கித் தள்ளுகிறது. ஐயோ என்று கதறுகிறார்கள். மாபெரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அடியில் யாரோ குழி தோண்டி நகர்த்தியது மாதிரி கொடகொடகொடகொடவென்று சரிந்து நீரில் விழுந்து காணாமல் போகிறது. நூற்றுக்கணக்கான மாடுகளும் ஆடுகளும் தண்ணீரில் அடித்துச் சுழற்றியபடி இறுதி ஊர்வலம் போகின்றன. இரண்டு பேருந்துகள், பத்திருபது லாரிகள் முதலை வாய் பிளப்பதுபோல் குப்புற மிதந்து நகர்கின்றன. பலப்பல பாலங்கள் இடிந்து பொடிப்பொடியாகிக் கிடக்கின்றன. வானில் கொடகொடத்து உணவுப் பொட்டலங்களை வீசும் ஹெலிகாப்டரை ஓட்டுபவர் கண்ணிலும் மரணபயம் தெரிகிறது. கீழே அவர் வீட்டாருக்கு என்ன ஆச்சென்று சொல்வதற்கில்லை. நுரை ததும்பத் ததும்பச் சுழித்து ஓடும் வெள்ளத்தில் சடாரென்று மிலிட்டரி ஜவான் ஒருவர் பாய்கிறார். கடற்கரையில் நண்டு பிடிக்கிற பாவனையில் விரல்களால் எதையோ துழாவி அவர் வெளியே மீளும்போது கையிலொரு கைக்குழந்தை!

அந்தக் கதறல்களும் ஓலங்களும் அவலங்களும்கூடப் பரவாயில்லை. குறிப்பிட்ட இந்த வெள்ள வீடியோக் காட்சிகளுக்கு அடியில் நமது உடன்பிறப்புகள் சிலர் எழுதியிருக்கும் கமெண்டுகள்கூட சரித்திரம் காணாதவை. மாதிரிக்குச் சில:

· இயற்கைக்கே நீங்கள் உயிருடன் இருப்பது பிடிக்கவில்லை போலிருக்கிறது.

· ஆஹா, இது இறுதித் தீர்ப்புநாள். தயவுசெய்து வாய்தா கேளாமல் பஞ்சாயத்தை அட்டண்ட் பண்ணிவிடுங்கள்.

· சொர்க்கத்தின் சுந்தரக் கன்னியர் கண்ணில் தென்பட்டால் மறக்காமல் ஒரு ட்வீட்டாவது போடவும்.

· உலக மக்கள் தொகைப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஆண்டவன் கண்டிப்பாக அருள் பாலிப்பான்.

· சுரண்டித் தின்றதெல்லாம் செரிக்க வெள்ள நீர் அருந்துங்கள்.

இன்னும் பல உள்ளன. இயற்கையாலுமேகூட நிகழ்த்த முடியாத இப்படிப்பட்ட பேரழிவுகளையும் பெருஞ்சிதைவுகளையும் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? யூ ட்யூபில் பார்க்கலாம். எல்லாம் நம் சொந்தச் சகோதரர்கள்தாம்.

சினிமாவில் செந்திலும் வடிவேலுவும் அடிவாங்கினால் ரசித்துச் சிரிக்கலாம். வில்லனைக் கதாநாயகன் உதைத்துத் துவைத்தால் கைதட்டி மகிழலாம். கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றால் விசிலடிக்கலாம். ஒரு மாபெரும் இயற்கைப் பேரழிவில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வும் வளமும் நாசமாவதைக் கண்டு கைகொட்ட முடியுமா! இறந்த குழந்தை ஒன்றின் சடலம் காட்டப்படும் வீடியோவுக்கு அடியில் ஒரு புண்ணியாத்மா இப்படி எழுதுகிறார்: ‘நாளைய தீவிரவாதிகளுள் ஒருவன் இல்லை.’

இது என்ன நெஞ்சம்!

பாகிஸ்தான் மீதான நமது வஞ்சமும் நம் மீதான அவர்களது வஞ்சமும் ரத்த அணுக்களுக்குள் கலந்திருக்கின்றன. இதை அடித்துச் செல்லுமளவு வல்லமை மிக்க வெள்ளம் ஒன்று இதுகாறும் வரவில்லை. பிரச்னையில்லை. குறைந்தபட்சம் நாம் கற்கால மனோபாவத்திலிருந்தேவா இன்னும் மீண்டெழவில்லை? புரியவில்லை.

உலகில் முதல் முதலில் நாகரிகம் தோன்றிய பகுதியான மொஹஞ்சதாரோ இன்று பாகிஸ்தானில் இருக்கிறது. அல்லது நேற்று பாகிஸ்தானில் இருந்தது. வெள்ளம் அதையும் விட்டுவைக்கவில்லை. சரித்திரப் பிரசித்தி, தொல்லியல் பிரசித்தி பெற்ற அந்த இடுகாடு இன்று ஒரு மாபெரும் ஏரியாகிவிட்டது.

இங்கே நாகரிகமே அடித்துச் செல்லப்பட்டுவிட்ட பிறகு, அங்கே நாகரிகம் தோன்றிய பகுதி நன்றாயிருந்தாலென்ன, நாசமாய்ப் போனாலென்ன என்கிறீர்களா?

ஜெய் ஹிந்த்.

27 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற