என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.

என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே.

அன்புள்ள பாரா,

கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள்.  படிக்க நன்றாக இருக்கிறது.

கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்:
எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான்.

ஸோ, பெரியாஷ்வாருக்கு கிருஷ்ணன்  மாவா .  இந்தக் கட்டுரையின் சாராம்சம் அது தான் போலிருக்கிறது.  அதுக்குத் தான் இவ்வளவு பீடிகையுமா?  religion is the opium of the masses என்று இன்னொருவர் சொன்னது போலவே இருக்கிறதே.

திவ்வியப் பிரபந்தமும் திருப்பாவையும் புனித நூல்களல்ல.  அவை சும்மா மொழி அழகுக்காகப் படித்து அனுபவிக்க வேண்டிய சமாசாரங்கள், யார் வேண்டுமானாலும் படிக்கலாம், அப்புறம் தூக்கிப் போட்டு விடலாம்.  (ஆனால் பரிசுத்த விவிலிய வேதாகமம் அப்படியல்ல, வாழ்க்கைக்கே வழிகாட்டும்…ம்ம்? ).  அவற்றின் சாரமான தெய்வீகமும்,  அந்த தெய்வீகத்தால் நிறைந்த வாழ்வியலும், அந்த வாழ்வியலின் அடிப்படையில் எழுந்த சமயமும், கலாசாரமும், பண்பாடும் எல்லாம்  நகைப்புக்குரியவை, பிற்போக்குத் தனமானவை – இப்படிப்  பேசுவதும், எழுதுவதும் தான் தமிழ் எழுத்துலக, அறிவு ஜீவி சூழலில் ஃபேஷன் போலும்… அல்லது  நீண்டகால கலாசார பரிகாசம் மற்றும் அதனால் விளையும் கலாசாரத் திரிப்பின்/அழிப்பின் ஒரு அங்கம்?

ஒரு பண்டிகையை இயல்பாக உள்ளபடி கொண்டாடினேன் என்று சொல்வதற்குக் கூடவா இப்படி ஒரு தயக்கம், மழுப்பல்?

“வண்ணமாடங்கள் சூழ்திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்.. ” என்று தொடங்கி “கண்ணன் முற்றும் கலந்தனராயிற்றே” என்றல்லவா பேசுகிறார் ஆழ்வார்!  ஏன், அந்த கோகுல கிருஷ்ணனுக்காக, அவன் வடிவாக இருக்கும் உங்கள் வீட்டுக் கிருஷ்ணனுக்காக, உங்கள் அந்தராத்மாவில் நீங்களாகவே இருக்கும் அந்த கிருஷ்ணனுக்காக கிருஷ்ண ஜயந்தி கொண்டாடினேன் என்றால் குறைந்தா போய்விடுவீர்கள்?

அன்புடன்,
ஜடாயு

இனி என் பதில்:

அன்புள்ள திரு ஜடாயு,

வேதனை கலந்த உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் நான் செய்வதற்கொன்றுமில்லை. மதம் – சடங்கு, சம்பிரதாயங்கள் – தத்துவம் – கடவுள் என்கிற நான்கு விஷயங்களாலும் மிக அதிகம் அலைக்கழிக்கப்பட்டவன் நான். வேகம் நிறைந்த என்னுடைய இளம் வயதுகளை, குறைந்தபட்சம் ஒருதலைக் காதலில்கூட செலவிட முடியாமல் இந்த நான்கும் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. நிறைய சினிமா பார்த்திருக்கலாம். நண்பர்களுடன் சுற்றியிருக்கலாம். சைட் அடித்திருக்கலாம். உல்லாசங்களைத் தேடித்தேடி அனுபவித்திருக்கலாம். குறைந்தபட்சம் என்னுடைய கல்வியையாவது ஒழுங்காகத் தொடர்ந்து, முடித்திருக்கலாம்.

எதுவுமில்லாமல் வருடங்களை மத நூல்களிலும் மடங்களிலும் சில சாமியார்களிடமும் தொலைத்தேன். அது ஒரு பெரிய கதை. முழுக்க இங்கே அவசியமில்லை. ஆனால் உங்கள் வினாவுக்கு பதிலாகக் கொஞ்சம் மட்டும்.

நான் ஓர் ஆத்திகவாதி. இதில் சந்தேகமில்லை. எனக்குக் கடவுள் இருக்கிறார். ஆனால் என் கடவுளுக்கு உருவம் கிடையாது. அவர் கையில் புல்லாங்குழலோ, சூலமோ, வேலோ, வாளோ கிடையாது. அவருக்குக் கையேகூடக் கிடையாது. இந்த என் கடவுளை நான் மிகத் தாமதமாக என்னுடைய 25வது வயதுக்குப் பிறகு கண்டேன். பரவசமேதுமின்றி, ஹாய் வாடா மாப்ள என்று தோளில் கைபோட்டு அழைத்துச் சென்று நல்ல ருசியுள்ள காப்பி ஒன்றை வாங்கி ஊற்றி மேலுக்கு ஒரு கை சுடச்சுட மாவா போட்டு விருந்தளித்தேன். அவரும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு இன்றுவரை அவ்வப்போது என்னிடம்தான் மாவா வாங்கிப் போடுகிறார்.

முன்னதாக நான் சந்தியாவந்தனம் செய்து செங்கதிர்ச் சூரியனைக் கைகூப்பித் தொழுது, பின்னும் அமர்ந்து சகஸ்ரநாம பாராயணம் செய்து, சாளக்கிராம பூஜைகள் புரிந்து சுடச்சுட சாதமும் வெங்காய சாம்பாரும் ரசமும் பீன்ஸ் பொறியலும் இன்னபிறவும் வைத்து நைவேத்தியம் செய்த சமயங்களில் அவர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தியதாக நினைவில்லை.

ஒரு பண்டிகையை விடமாட்டேன் அப்போதெல்லாம். என் சிரத்தைக்கு நிகரே சொல்ல முடியாது. வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் என் மானசீகத்தில் எம்பெருமானை எழுந்தருளப்பண்ணி இதைக்கொடு, அதைக்கொடு என்று அவனை பேஜார் செய்திருக்கிறேன்.

என்னைவிட ராமகிருஷ்ண பரமஹம்சர் எந்த வகையில் உசத்தி? மொட்டை மாடியில் தனியே அமர்ந்து மிக உக்கிரமாக தியானம் செய்து நெக்குருகி அழுது, கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்துவிட்டேன். ம்ஹும். அவன் இரக்கமேலொன்றுமிலாதான்.

சரி நமது பக்குவம் போதாது போலிருக்கிறது என்று எண்ணி மேல் படிப்புக்காக மைலாப்பூரில் மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள் என்கிற பண்டிதரிடம் கொஞ்சம் சமஸ்கிருதப் பாடம் கேட்கப் போனேன். கையோடு அப்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த பாலகிருஷ்ண சாஸ்திரிகளிடம் ராமாயண கிளாஸுக்கும் போவது வழக்கம். இந்த வகுப்புகளின் விளைவாக என்னுடைய பூஜை புனஸ்காரங்கள் கனபரிமாணமடைந்தன. ஏகப்பட்ட சுலோகங்களைக் கற்றுத் தேர்ந்து மனத்துக்குள் மணிக்கணக்கில் ஓட்டிக்கொண்டே இருப்பேன். விடிந்து எழுந்து டாய்லெட் போவதில் தொடங்கி, படுத்துத் தூங்கும் இரவுப் பொழுதுவரை செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் சாஸ்திரோக்தமாகச் செய்யும் பழக்கம் உண்டானது. அலுவலகத்தில் மதிய உணவுக்காக டிபன் பாக்ஸைத் திறந்து வைத்து, மோர் சாதத்துக்குப் பரிசேஷணம் செய்து கிண்டலுக்கு உள்ளானது முதல், கால் கழுவும் போது பூணூலைக் காதில் சுற்றி மாட்டி, கழற்றும்போது மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்ததுவரை ஏகப்பட்ட பிரச்னைகளை எனக்குச் சடங்குகள் கொண்டுவந்து சேர்த்தன.

தவிரவும் முழுச் சோம்பேறியான எனக்கு இந்தச் சடங்குகள் விரைவில் அலுப்பை உண்டாக்கவே, என் கடவுளை இந்த வகையில் கண்டடைவது கஷ்டம் என்று தோன்றியது. மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் அப்போது சுவாமி யதாத்மானந்தா என்றொருவர் இருந்தார். [இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.] இளம் வயதுத் துறவி. மடத்தின் நூலகத்தை அவர்தான் கவனித்துக்கொண்டிருந்தார். அந்நாளில் ஆன்மிகத்தைப் பொருத்தவரை – குறிப்பாக பக்தி யோகத்தைப் பொருத்த அளவில் – பரமஹம்சரே என்னுடைய சூப்பர் ஸ்டாராக இருந்தபடியால், மடத்துக்குச் சென்று சுவாமி யதாத்மானந்தாவைச் சந்தித்து என் பிரச்னையைச் சொல்லி, எனக்கு நல்ல வழி காட்டும்படிக் கேட்டுக்கொண்டேன்.

தினசரி மடத்துக்குச் செல்வேன். அவருக்கு உதவியாக புத்தகங்களை அடுக்கி வைத்து, தூசு தட்டிக் கொஞ்சம் கைங்கர்யம் செய்துவிட்டுத் திரும்புவேன். பதிலுக்கு அவர் எனக்குச் சில புத்தகங்களைக் கொடுத்தார். நல்ல புத்தி சொன்னார். மடத்தில் என்னை பிரம்மச்சாரியாகச் சேர்த்துக்கொள்ள ஆவன செய்வாரா என்று கேட்டேன். பார்க்கலாம் என்றார். உட்கார்ந்து ஒழுங்காக தியானம் பழகச் சொன்னார்.

தினமும் தியானம் செய்தேன். மொத்தமாக நூறு மணி நேரங்கள் தியானத்தில் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதில் நூறு வினாடிகள்கூட மனம் பொருந்தவில்லை. நமது பிற பொறுப்புகள் அனைத்தும் ஒன்று பிசகாமல் நினைவுக்கு வருகிற தருணம் என்பது தியானத்தில் இருக்கும் சமயம்தான். இதிலெனக்குச் சந்தேகமே இல்லை. தற்செயலாக எப்படியோ ரஜனீஷ் கிடைத்து லேசாகப் படிக்கத் தொடங்கவும், என் தியான முறையே தப்பு என்று அவர் சொன்னார். ஒரே குழப்பமாகிப் போய்விட்டது.

எண்ணத்தை எப்படி அடக்கமுடியும் என்பதைக் காட்டிலும் எதற்கு அடக்கவேண்டும் என்று அவர் முதலில் கேட்டார். உள்ளுக்குள்ளிருந்து பீறிடும் எதையும் அடக்குவது தவறு. நம்மால் சிறுநீரை அடக்க முடியுமா? காமத்தை அடக்கமுடியுமா? பசியை முடியுமா? எத்தனை நேரம் முடியும்? அப்படி அடக்குவதுதான் எத்தனை வலி தரக்கூடியது? அதே மாதிரிதான் எண்ணங்களும். எதற்கு அடக்கவேண்டும்? அடக்காதே. ஓடவிட்டு வேடிக்கை பார் என்கிற அவரது தியான முறை, ராமகிருஷ்ண மடம் சொன்ன தியான முறைக்கு முற்றிலும் எதிராக இருந்தது.

அந்த ஆள் ஒரு பேஜார். வார்த்தைக்கு வார்த்தை விவேகானந்தரையும் காந்தியையும்தான் அவர் கெட்ட உதாரணத்துக்கு எடுப்பார். ஏன் விவேகானந்தர் இளம் வயதில் இறந்தார்? ஏன் அவர் தலையில் எப்போதும் முண்டாசு? காந்தியின் பிரச்னை என்ன? காந்தியின் ஆன்மிகம்தான் அவரது பிரச்னை. சங்கராசாரியார்களின் பிரச்னை என்ன? ஆன்மிகம் நிறுவனமயமாகும்போது ஏற்படும் சிக்கல்கள் யாவை? மதத்துக்கும் ஆன்மிகத்துக்கும் ஏன் தொடர்பு வந்தது? எதனால் அடிக்கடி அங்கே மட்டும் பிழைகள் ஏற்படுகின்றன? குற்றங்கள் புரியப்படுகின்றன?

ரஜனீஷா? படிக்காதே. அவன் கெட்டவன். அயோக்கிய ராஸ்கோலு என்று சாதுக்கள் சொன்னார்கள். ராமகிருஷ்ண மடத்திலும் சரி, அந்தக் காலகட்டத்தில் நான் தொடர்பு வைத்திருந்த வேறு சில பக்திப் பழங்களான தனி நபர்களும் சரி, வேறு சில மத நிறுவனங்களும் சரி. சொல்லிவைத்தமாதிரி ரஜனீஷ் தப்பு என்றுதான் சொன்னார்கள். ஏன் தப்பு, எதனால் தப்பு என்று யாரும் சொல்லவில்லை. பின்னாளில் அவரைத் திரும்பத் திரும்பப் படித்து, அவரிடம் எனக்குத் தென்பட்ட தவறுகளைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டேன். யாரிடம் தவறில்லை? விவேகானந்தருக்கு ஹுக்கா. அரவிந்தருக்கு கஞ்சா. ரஜனீஷுக்கு செக்ஸ் கதைகள் – எனக்கு மாவா போல.

ஆன்மிகம் இங்கே இல்லை. கடவுளும் இங்கே இல்லை. தத்துவங்களும் மதமும் சடங்கு சம்பிரதாயமும் எண்ணமும் எண்ணமற்ற நிலையும் கடந்த ஒரு வேகம் மிகுந்த வெளி இவற்றுக்கெல்லாம் அப்பால் இருப்பதாக எனக்கு உறுதியாகத் தோன்றியது. நிச்சயமாக என் கடவுள் அங்கேதான் எங்கேனும் ஓடிக்கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்தேன்.

மடத் தொடர்புகளை அன்றோடு அறுத்தெறிந்துவிட்டு மேலும் படிக்கத் தொடங்கினேன். முன்னதாக என்னுடைய நித்யகர்மானுஷ்டானங்கள் அனைத்தும் விடைபெற்றிருந்தன. ஏழாயிரம் ரூபா செலவு பண்ணி உனக்குப் பூணூல் போட்டிருக்கேண்டா. அதுக்காகவாவது சந்தியாவந்தனம் பண்ணேன் என்பார் என் அப்பா. ஏழாயிரம் கோடியே ஆனாலும் இனி இல்லை என்று தோன்றிவிட்டது.

படிக்கப் படிக்க, சில விஷயங்கள் சுமாராகப் புரியத் தொடங்கின. கல்வி என்பது ஓர் ஒழுங்குமுறைக்கு வருவதற்கு முன்னர் தனி மனித ஒழுக்கங்களை வரையறுக்கவும் குற்றங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கவும் சில நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மதம் அவற்றிலொன்று. சாமி கண்ணைக் குத்தும் என்கிற நமது எளிய பூச்சாண்டித்தனத்தின் மேஜிக்கல் ரியலிச வடிவம்தான் பின்னாளில் பாவத்தின் சம்பளம் இன்னது என்று கிறிஸ்தவத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இஸ்லாத்தின் இறையச்சமானது.

சின்னச்சின்னத் தப்புகளுக்கெல்லாம் கண்ணைக் குத்திக்கொண்டே இருக்குமானால் சாமிக்கு வேறு வேலையே இருக்கமுடியாது என்பது புரியும்போது குற்றங்கள் புரிவதில் குற்ற உணர்ச்சி குறைந்துபோகிறது. குற்றங்களுக்கு சாமியையே சாட்சியாக வைத்துவிடும்போது குற்றங்கள் நிறுவனமயமாகிவிடுகின்றன. அப்போது கடவுள் தொழில் பார்ட்னராகிவிடுகிறான். காளி நரபலி கேட்கத் தொடங்கிவிடுகிறாள்.

சந்தேகமில்லாமல் என்னளவில் மதம் ஒரு போதை வஸ்துதான். ஒப்பீட்டளவில் எனது மாவா ஒன்றுமே இல்லை. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே மதத்தின் ஆக்கிரமிப்பைக் குறைத்துக்கொண்டு வந்திருந்தோமேயானால் இன்றைய பெரும்பாலான குற்றங்கள் இல்லாது போயிருக்கும் என்பது என் தீர்மானமான நம்பிக்கை. சடங்கு சம்பிரதாயங்களில் குற்றமேதுமில்லை. ஆபத்துமில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் சடங்குகளும் மதமும் ஒருங்கிணைந்து இறைவன் என்னும் வியப்புக்குரிய, விள்ள இயலாத குறியீட்டைச் சுற்றிக் கோட்டை கட்டும்போது சிக்கல் உண்டாகிவிடுகின்றது.

எனது கடவுளை நான் கண்டறிய எனக்கு என் மதமோ சாதியோ உதவி செய்ததில்லை. என் சாதிக்கு ஓர் அர்த்தமே இருந்ததில்லை – என்றைக்குமே. அது என் எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிகேட்டில் அகால மரணமடைந்த ஒரு வைரஸ் அல்லது அமீபா. இந்த இரண்டும் என்னளவில் முக்கியத்துவம் இழந்தபோது தத்துவங்களில் கொஞ்சநாள் உழன்றுகொண்டிருந்தேன். இருக்கிறான், ஆனால் தெரியமாட்டான்; நான் பார்த்தேன், ஆனால் உனக்குக் காட்டமுடியாது என்னும் பூச்சாண்டி எனக்கு அங்கும் ஒத்துவரவில்லை. கீதை உள்ளிட்ட அனைத்தையும் ஒரு கதை நூலாக மட்டுமே என்னால் பார்க்க முடியும். மறைபொருள், உள்ளே ஏகப்பட்ட ரகசியங்கள் புதைந்துகிடக்கின்றன என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த வேதங்களை விடியல் வெளியீட்டுத் தமிழ் மொழிபெயர்ப்புகளில் படித்தபோது சே என்றாகிவிட்டது.

அத்தனை வரிகளும் – ஆயிரமாயிரம் வரிகளும் வெறும் புலம்பல். பிச்சைக்காரத்தனம். ஆதி மனிதன் எதையெல்லாம் பார்த்து பயந்தானோ, அதையெல்லாம் தனது கடவுளாக்கிக் கையேந்தித் தொழுது, உயிர்ப்பிச்சை கேட்டுப் புலம்பிய கீதங்கள். இதில் மிகையே இல்லை. விடியல் வெளியீடு இப்போதும் கிடைக்கிறது. தயவுசெய்து வாங்கிப் படித்துப் பாருங்கள். நாகரிகம் வளராத காலத்து மனிதனின் பயங்களும் அதன் மிகை வடிவங்களும் பயமென்ற கொடிய உணர்விலிருந்து மீள்வதற்கு அவன் கையாண்ட பிரார்த்தனைகளும்தானே தவிர அவற்றில் பெரும்பாலும் வேறில்லை.

பின்னும் ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடாக வந்த உபநிடத விளக்க நூல்களைப் படித்தபோது எம்.ஆர். காப்மேயர் தொடங்கி இன்றைய சோம. வள்ளியப்பன், சிபி கே. சாலமன் வரையிலான சுய முன்னேற்ற நூலாசிரியர்களின் அந்நாளைய எடிஷன்களாகவே அவை எனக்குத் தென்பட்டன. புற முன்னேற்றம்  – அக முன்னேற்றம். இரண்டுக்குமான உபாயங்கள். இரண்டிலும் டீஃபால்ட்டாக உண்டு இறையென்னும் சரடு.

ஒரு விஷயம். பக்தி என்பது அறிவைக் களைந்த ஓர் உணர்வு. காதல் மாதிரி எனலாமா? தவறில்லை. நமக்குப் பெரும்பாலும் உணர்வு தளத்தில் நீச்சலடிப்பது உவப்பான விஷயமாக இருப்பதால் சகலத்திலும் அதைக் கொண்டுவந்து ஒரு டீஸ்பூன் கலந்துவிடுவது சௌகரியமாகிவிடுகின்றது. இங்கே Emotional Intellegenceக்கு இடமில்லை. வெறும் Emotionதான்.

ராமகிருஷ்ணருக்கு மட்டும் கடவுள் காட்சி கொடுத்துவிட்டார் என்றால் அது அவருடைய பிரச்னை. எனில் கடவுள் இருப்பது நிஜம்தானா? என்றால் அது கடவுளுடைய பிரச்னை [If god exist, it is his problem].

ரொம்ப உள்ளே போகவே வேண்டாம் என்று ரொம்பப் பின்னால்தான் எனக்குப் புரிந்தது. எனக்குக் கடவுள் வேண்டும். நிச்சயம் வேண்டும். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதல்ல முக்கியம். எனக்கு வேண்டுமென்பதுதான் இங்கே முதன்மை பெறுகிறது. நான் பேசிக்கொள்ளவும் நான் சிரித்து விளையாடவும் நான் பாவமன்னிப்பு கோரவும் நான் தோள் சாய்ந்து அழவும் நான் திட்டவும் நான் கொஞ்சவும் கெஞ்சவும் ஒரு கடவுள். சடங்குகள் கோராத, மதத்தின் சாயத்தை விரும்பாத, என்னைப் போலவே எளிமையான, என்னைப் போலவே குழப்பங்களும் தெளிவுகளும் கொண்ட, என்னைப் போலவே பாதி நல்லவனாகவும் பாதி அயோக்கியனாகவுமான ஒரு ஜீவன்தான் எனது கடவுளாக இருக்கமுடியும்.

என் கடவுளுக்குப் புல்லாங்குழலோ, வில்லோ, வாளோ, சூலமோ கொடுக்க எனக்கென்ன அருகதை? நாளைக்கே ஒரு நாயோ, பன்றியோ, பூனையோ அதை எப்படித் தத்தம் கடவுளாக ஏற்கும்? ஒரு நாயின் கடவுள் இன்னொரு பெரிய நாயாகத்தான் இருக்க முடியும். ஓர் எலிக்குட்டியின் கடவுள் எப்படி மல்லாண்ட திண் தோள் மணிவண்ணனாக இருக்க முடியும்? பெருச்சாளி வடிவத்தில் வேண்டுமானால் இருக்கலாம்!

பகவத்கீதையின் சாரமாக பப்ளிக் டாய்லெட் நீங்கலாக எல்லா இடங்களிலும் ஒரு போஸ்டர் இன்றைக்கு ஒட்டப்பட்டிருக்கிறது. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் அதை நீ பெறுவதற்கு? எது இன்று உன்னுடையதோ அது நாளை இன்னொருவருடையது. மற்றொரு நாள் வேறொருவருடையது.

என்ன அபத்தம் இது? இதுவா கீதையின் சாரம்? இப்படிக் குழப்பி அடிப்பதன் பெயரா தத்துவம்? அப்புறம் அது எதற்கு?

எனக்கு கீதை சொன்ன தத்துவமும் அது காட்டிய கடவுளும் ஒன்றேதான். இரண்டே சொல்லில் அதனை முடித்துவிடலாம்.

வேலையப் பாருடா.

என் வேலையை நான் ஒழுங்காகப் பார்க்க எனக்கு மதமோ சடங்குகளோ அநாவசியம். எனவே என் வாழ்வில் அவற்றுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடையாது.

சுருக்கமான பதிலாகத்தான் எழுத நினைத்தேன். நீண்டு, ஒரு கட்டுரையாகிவிட்டது. மன்னியுங்கள்.

31 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற