அயோக்கிய சிகாமணி

பொதுவாக எனக்குக் கோபம் வராது. என்னை உசுப்பேற்றுவது மிகவும் கடினமான காரியம் என்று தெரிந்தவர்கள் சொல்லுவார்கள். என்னையறியாமல் இன்று மிகக் கடுமையான கோபத்துக்கு ஆட்பட நேர்ந்தது.

விஷயம் இது: தெரிந்தவர் ஒருவர் வீட்டில் பிரச்னை. சில காலமாகவே. அவருக்கு வியாபாரத்தில் மந்தநிலை. எனவே பொருளாதாரச் சிக்கல். அடிக்கடி கணவன் மனைவிக்குள் பிணக்கு வரும். கோபித்துக்கொண்டு இருவரில் யாரும் அம்மா வீட்டுக்குப் போக மாட்டார்கள். வீட்டுக்குள்ளேயே ஆளுக்கொரு மூலை. அதான் வழக்கம். ஏனெனில் அம்மா வீட்டோடு பிரச்னை என்று அக்கம்பக்கத்தில் சொன்னார்கள்.

இதெல்லாம் எங்கும் நடப்பதே அல்லவா? எனவே கண்டுகொண்டதில்லை. திடீரென்று இன்று என்னைக் காணவந்தவர், ‘நான் போயிட்டு வரேன்’ என்று சொன்னார். எங்கே என்று கேட்டேன். எங்கயாவது என்று பதில். எனவே ஓஹோ என்றேன்.

ஒத்துவரலை சார். சமரசம் பேசிப்பாத்தாங்க. ஆனாலும் சரிப்படலை. நான் நாளைக்குக் கிளம்பிடறேன். அதான் உங்ககிட்ட சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன் என்று சொன்னார்.

இங்கேதான் கோபம் வந்தது. என் கோபத்தை எத்தனை சுருக்கமாக வெளிப்படுத்தலாம் என்று யோசித்தேன். சட்டென்று சொல் கிடைத்தது. சரி சார் என்றேன். புறக்கணிப்பதை வெளிப்படுத்த இதைக்காட்டிலும் சிறந்த சொல் வேறு உண்டா என்ன?

அவருக்கு இரண்டு குழந்தைகள். பள்ளி செல்லும் பிள்ளைகள். வியாபாரம் மந்தமாகி, பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டபோது அவரது மனைவி ட்யூஷன் எடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்தார். சில மாதங்களாக இது நடப்பது எனக்குத் தெரியும். நண்பருக்கு அதிலும் சிக்கல். தன்னால் முடியாத காரியத்தை மனைவி செய்து சமாளிப்பதை அவரது பரந்த உள்ளம் ஏற்க மறுத்தது. கூடுமானவரை அவரைப் படுத்தி எடுக்கத் தொடங்கினார். கணவரின் சகோதர சகோதரிகள், அம்மா அனைவரிடமும் அந்தப் பெண்மணிக்கு நல்ல பெயர் உண்டு. ஒரு வார்த்தை சொன்னால் உதவுவதற்கு உறவினர்களும் நண்பர்களும் நிச்சயமாக முன்வரவே செய்வார்கள். அந்தப் பெண்மணியின் குடும்பத்தாரும் இணக்கமானவர்களே. ஆனாலும் இந்த மனிதர் ஏனோ யாரையும் அண்டவிடுவதில்லை. தன் தாயார் உள்பட.

வியாபாரத்தில் தோல்வியோ, அதன் விளைவான குடும்பப் பிணக்குகளோ ஒரு பெரிய விஷயமா? தன் சுய இரக்கத்துக்குத் தன் குடும்பத்தை அவர் பலிகடாவாக்கிக்கொண்டிருந்தார். சில மாதங்களாகவே இந்த விவகாரம் எனக்கு அரசல் புரசலாக வந்துகொண்டு இருந்தது. ஓஹோ என்று வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தேன். இன்று அவர் நேரில் வந்து விடைபெறுகிறேன் என்றபோது சகிக்கமுடியாமல் ஆகிவிட்டது.

எங்க போறேன்னு கேக்க மாட்டிங்களா என்றார். சரி, எங்க போறிங்க என்றேன். சென்னை பெரிசு சார். எனக்குன்னு ஒரு இடம் இருக்கு என்று சொன்னார். சரி என்று பதில் சொன்னேன். எவ்ளவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டேன் சார். வீட்ல ஒத்துவரமாட்டேங்குறாங்க. போயிடறேன்னு சொன்னேன். அதுக்கும் பதில் சொல்லலை. இதுக்குமேல இருக்க முடியல. அதான் கிளம்பறேன் என்றார்.

இரண்டு குழந்தைகளை நினைவூட்டலாம் என்று ஒரு கணம் நினைத்தேன். உடனே வேண்டாம் என்று தோன்றிவிட்டது. அவர் தன் சுய புலம்பலை நிகழ்த்தவே வந்திருந்தார். நான் அதைத் தவிர்க்கவே விரும்பினேன். எனவே கூடியவரை வார்த்தைகளைத் தவிர்ப்பதே நல்லது என்று நினைத்தேன். அவருக்கும் அவர் மனைவிக்கும் நிச்சயமாக ஏதாவது பிரச்னை இருக்கும். ஊருக்கெல்லாம் நல்லவராகக் காட்சியளிக்கும் அந்தப் பெண்மணி, தனிமையில் தன் கணவரின் தோல்வியைக் குத்திக்காட்டி அவமதிப்பவராகக்கூட இருக்கலாம். ஆனாலும் ட்யூஷன் எடுத்தாவது குழந்தைகளையும் வீட்டையும் இந்த வருமானமில்லாத மாதங்களில் காப்பாற்றியது அவரே அல்லவா.

தவிரவும் குடும்பத்தைவிட்டுப் போகிறேன் என்கிற விஷயத்தை, வீடு காலி செய்வது போல வந்து சொல்லிவிட்டுப் போகக்கூடிய மனநிலை கொண்ட ஒரு மனிதரை நான் எதிர்கொள்வது இதுவே முதல்முறை. என்னிடம் சொன்னதுபோல் அவர் அக்கம்பக்கத்தில் வேறு சிலரிடமும் சொல்லியிருக்கக்கூடும். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்தேன். நாளை அந்தப் பெண்மணியை மற்றவர்கள் விசாரித்து விசாரித்தே இம்சிக்கத் தன்னாலான கைங்கர்யம் என்று எண்ணியிருப்பாரா?

அடுத்தமாதம் அவர் வீட்டு வாடகையை யார் கொடுப்பார்கள்? அந்தக் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் உள்ளிட்ட கவலைகளை இன்றிரவுடன் அவர் விட்டுவிடுவாரா? ஊருக்கெல்லாம் மட்டுமல்ல; தன் வீட்டாரிடமும் நாளை அவர் போய்விடப் போவதைச் சொல்லியிருக்கிறார். இன்றிரவு அவர்கள் தூங்குவார்களா? அழுவார்களா? சமாதானம் செய்யப் பார்ப்பார்களா? ஒரு மனிதனால் இப்படியொரு கோழைத்தனத்துடன், சற்றும் ஆண்மையற்று, அருவருப்பூட்டக்கூடிய விதமாக, கீழ்த்தரமாக நடந்துகொள்ள இயலுமா? என்ன ஜென்மங்கள் இவை?

அவர் விதவிதமாக முயற்சி செய்து பார்த்தும் நான் ஒருவார்த்தைகூட அதன்பின் பேசவில்லை. இறுதியில் அவரே புரிந்துகொண்டு, ‘சரி சார், வரேன்’ என்றார். ‘ஓகே’ என்று பட்டென்று சொல்லிவிட்டு எழுந்தேன்.

பொறுப்புகளிலிருந்து தப்பிக்க நினைப்பது அயோக்கியத்தனம் அன்றி வேறில்லை. இதற்கு அனுதாப ஓட்டு தேடுவது அதைவிடப் பெரிய அயோக்கியத்தனம்.

என்னை ஏன் நண்பராக ஏற்றுப் பழக மறுக்கிறீர்கள் என்று அவர் சில சமயம் என்னிடம் முன்னர் கேட்டிருக்கிறார். என் உள்ளுணர்வு சரியாகத் தான் செயல்பட்டிருக்கிறது என்று இன்று தெரிந்தது.

9 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற