இன்னும் ஒரு மாதம் இருக்கு.

சினிமாக்காரர்களுக்கு தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, சுதந்தர தினம், பிள்ளையார் சதுர்த்தி, விட்டால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை. தமிழ் நாட்டிலே, எழுதி உயிர்த்திருக்கும் ஜீவாத்மாக்களுக்குப் புதுப் புத்தகம் என்றால் ஜனவரி புத்தகக் கண்காட்சி.

பத்து நாள்கள் அல்லது கொசுறாக ஒன்றிரண்டு நாள்கள் சேர்த்து நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியை மனத்தில் வைத்துத்தான் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஆகஸ்டு, செப்டெம்பர் வரைக்கும் மப்பு கட்டிவிட்டு, அதன்பிறகு வீறுகொண்டு எழுந்து ராப்பகலாக எழுதி டிசம்பருக்குள் அடித்துப் பிடித்துக் கொண்டுவந்துவிடுவார்கள். இலக்கியவாதிகள், அஇலக்கியவாதிகள், எதிர் இலக்கியவாதிகள், இலக்கியப் பக்கவாதிகள், இலக்கிய தூரவாதிகள், இலக்கிய ஸ்நானப்பிராப்தியும் இல்லாத உத்தமோத்தமர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியத்துக்கோ, பத்திரிகைக்கோ எந்த சம்பந்தமுமில்லாத ஃபாரவாதிகள் [ஒருஃபாரம் என்பது 16 பக்கம் என்ற கணக்கில் பத்து ஃபாரத்துக்குப் புத்தகம் புத்தகமாக எழுதிக் கடாசுபவர்கள் என்று அர்த்தம்], புது எழுத்தாளர்கள், திடீர் எழுத்தாளர்கள், புதுக் கவிஞர்கள், கவிதைத் தீவிரவாதிகள், தீவிரக் கவிதைவாதிகள் என அனைத்துத் தரப்பினரும் இதில் அடக்கம்.

சில வருடங்களாகச் சில தீவிர இலக்கியவாதிகள் இந்த வருஷக்கடைசியை வைபவமாக்கிவிடும் உத்தேசத்துடன் பத்துப் பன்னிரண்டு புத்தகங்களை மொத்தமாகக் கொண்டுவரவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அதாகப்பட்டது, வருடம் முழுதும் எழுதுகிறவற்றைச் சேர்த்துவைத்து, டிசம்பரை ஒட்டிப் புத்தகமாக்கிவிடுவது. அதற்கு ஒரு விழா, அங்கே ஒரு சமோசா காப்பி. நாலு அடிதடி, ஏழெட்டு டமால் டுமீல் ஸ்டேட்மெண்ட், கண்காட்சியில் சந்திப்போம் வாரீர் வாரீர் என்று இணையத் தளங்களில் இடைவிடா அறிவிப்புகள்.

ஜனவரி என்றால் பொங்கல் அல்ல. ஜனவரி என்றால் புத்தகக் கண்காட்சி.

தமிழகமெங்கும் பல்வேறு நகரங்களில் பல்வேறு மாதங்களில் நடக்கிற விஷயம்தான் என்றாலும் சென்னை கண்காட்சிக்கு உள்ள விசேட அந்தஸ்துக்குச் சில காரணங்கள் இருக்கின்றன. தலையாய காரணம், முக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் அனைத்தும் பெரும்பாலும் இதனை ஒட்டித்தான் வெளியிடப்படுகின்றன. தவிரவும் இக்கண்காட்சியின் அளவு, பிரம்மாண்டம், தொன்மை தரும் இயல்பான அந்தஸ்து, ஜபர்தஸ்து இன்னபிற.

புஸ்தகக் கடைகளில், பொது இடங்களில் வருடம் தோறும் விற்பனையாகும் புத்தகங்களின் அளவைக் கணக்கிட்டால் இந்தப் பத்துநாள் விற்பனை, பதிப்பாளர்களுக்கு உறை போடக்காணாது. ஃப்ராங்க்ஃபர்ட் கண்காட்சிக்கெல்லாம் நாம் போகவேண்டாம். பக்கத்து ஊரான டெல்லி சர்வதேசக் கண்காட்சியளவுக்கோ, பெங்களூர் புத்தகக் கண்காட்சி அளவுக்கோ சென்னை புத்தகக் கண்காட்சி தரமானதும் சிறப்பானதும் அல்ல. ஆனாலும் இது முக்கியமானது. ஏனென்றால், நம்முடையது. சினிமா, தொலைக்காட்சித் தாக்கங்கள், பண்பலை வானொலிப் பாடல்கள் முதல் பணவீக்கம் வரையிலான அன்றாடப் பிரச்னைகள், வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்னும் வருடாந்திரப் புலம்பல் உற்சவங்கள் அனைத்தையும்மீறி வருடம் தோறும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு லட்சங்களில் ஜனங்கள் வரவே செய்கிறார்கள். கோடிகளில் விற்பனையும் சாத்தியமாகத்தான் இருக்கிறது.

என் பதினெட்டாவது வயது முதல் நான் வருடம் தவறாமல் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் அண்ணாசாலை காய்தே மில்லத் கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கும். உள்ளே புதிய புத்தகங்களும் வாசல் பிளாட்பாரத்தில் பழைய புத்தகங்களுமாகப் பத்து நாளும் பிரதேசம் பிரகாசிக்கும். எங்கு தேடியும் கிடைக்காத அபூர்வமான பல புத்தகங்கள் அந்தப் பத்துநாள் பிளாட்பாரத் திருவிழாவில் அகப்படும்.

பின்னர் பதிப்பாளர்கள் அதிகரித்தார்கள். விற்பனையாளர்கள் அதிகரித்தார்கள். காய்தே மில்லத் மைதானம் போதாது என்று சேத்துப்பட்டுக்கு மாற்றினார்கள். பொதுவாகச் சென்னையில் புத்தகம் படிக்கிற வழக்கமெல்லாம் தென் சென்னைவாசிகளுக்குத்தான் உண்டு; சேத்துப்பட்டுக்கு இடம் மாற்றினால் நாலு பேர்கூட வரமாட்டார்கள் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

சேத்துப்பட்டு என்பது ஓர் இசகுபிசகான ஊர் என்பதில் சந்தேகமில்லை. ரயில் வே ஸ்டேஷன் இருக்கும் க்ஷேத்திரம் என்றாலும் புத்தகப் பிரியர்கள் பெருமளவு வசிக்கும் பகுதிகளான மைலாப்பூர், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, சைதாப்பேட்டை, மாம்பலம், நங்கநல்லூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் வட்டாரத்திலிருந்து சுலபமான போக்குவரத்து சாத்தியங்கள் இந்த ஊருக்குக் கிடையாது. குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் ஏறி இறங்கினால்தான் சேத்துப்பட்டை அடையமுடியும். தாம்பரம் ரூட்டில் ரயில் சாத்தியம் உண்டெனினும் முழி பிதுக்கும் அந்தக் கும்பலில் சிக்கிச் சின்னாபின்னப்படுவதைக் காட்டிலும் புஸ்தகத் துறவு மேற்கொண்டுவிடலாம் என்றே தோன்றக்கூடிய அபாயமுண்டு.

ஆனால் பெரும்பாலான வாசகர்கள் இந்தப் பகுதிக்காரர்கள்தான். இதில் சந்தேகமில்லை. வட சென்னை, மத்திய சென்னை தொகுதிக்காரர்கள் ஏனோ புத்தக வாசிப்பில் அவ்வளவாக ஆர்வம் செலுத்துவதில்லை என்பது பண்டைய மதராசப்பட்டின சரித்திரத்தில் இடம்பெற வேண்டிய, ஏனோ தவறிவிட்ட விஷயம்.

இந்த சரித்திர அபாயம் தெரிந்திருந்தும் சேத்துப்பட்டுக்குக் கண்காட்சியை மாற்றினார்கள். ஒரு நம்பிக்கைதான். வருடமொருநாள் வருகின்ற திருநாள். மக்கள் கஷ்டமெல்லாம் பார்க்கமாட்டார்கள்.

அந்தத் துணிச்சல் நல்ல விஷயம். நம்பிக்கை பொய்க்கவில்லை. திருப்பதிக்கு, பழனிக்கு, சபரிமலைக்கெல்லாம் போவதில்லையா? அந்தமாதிரி எடுத்துக்கொண்டுவிட்டார்கள் தென்சென்னைவாசிகள். அதே கூட்டம். அதே உற்சாகம். அதே சந்தோஷம். ஒண்ணுக்குப் போக ஒழுங்கான வசதிகள் கிடையாதென்றாலும் ஒரு முழு நாளைக் கண்காட்சியில் கழிக்கத் தடையேதுமில்லை.

ஒரு கலாசார அடையாளம் என்று சொல்லத்தக்க அளவில் சென்னை புத்தகக் கண்காட்சி நிலைபெற்றுவிட்டது நல்ல விஷயமே. வேள்விக்குக் குறுக்கே வரும் புராண அசுரர்கள் மாதிரி இதற்கும் சென்னை சங்கமம் போன்ற போட்டி இம்சைகள் இருந்தாலும் புத்தகக் கண்காட்சியின் செல்வாக்கு சென்னையில் குறைவதாக இல்லை. இன்னும் சரியாக ஒரு மாதம். ஆரம்பித்துவிடும்.

எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், வாசகர்கள், தீவிர வாசகர்கள், ஜம்போ அப்பளம், ஜிகிர்தண்டா சாப்பிட வருகிறவர்கள், நண்பர்களைச் சந்தித்துப் பேச வருகிறவர்கள், கண்காட்சி வளாகத்து கேண்டீனைத் தரப் பரிசோதனை செய்வதற்கென்றே வருகிறவர்கள், சும்மா மேய வருகிறவர்கள், வருவது வழக்கமாகிவிட்ட ஒரே காரணத்துக்காக வருகிறவர்கள், மழைக்கு ஒதுங்குபவர்கள் என்று எத்தனை எத்தனை விதமான மனிதர்கள்.

சென்ற வருடம் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதரைச் சென்னை கண்காட்சியில் சந்தித்தேன். அவர் பெயர் மறந்துவிட்டது. எப்படியும் அறுபது வயது இருக்கும். அரக்கு கலர் அகலக் கறை போட்ட மஞ்சள் நிற வேட்டி அணிந்து கண்காட்சி வாசலில் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவர் அருகே கோரக்பூர் கீதா ப்ரஸ் வெளியிட்ட பகவத் கீதை பிரதிகள் ஏழெட்டு இருந்தது. சரி, ஏதாவது நூலகத்துக்கு வாங்கியிருப்பார் என்று நினைத்தேன். அல்லது கீதா பிரஸ்ஸின் ஊழியர்.

ஐந்து நிமிடம் அருகெ நின்றதில் இரண்டுமில்லை என்று தெரிந்தது. அந்தப்பக்கம் உட்கார வரும் யார் அந்தப் புத்தகத்தின்மீது பார்வையைச் செலுத்தினாலும், தயங்காமல் எடுத்து நீட்டினார். சும்மா பாருங்க. பார்த்தவருக்குப் பிடித்துப் போய் விலையைத் தேடினால், எடுத்துக்கங்க என்று ஒரு பிரதியை அவருக்கே கொடுத்துவிட்டார்!

கனமான புத்தகம். மலிவுப் பதிப்பு, மக்கள் பதிப்பு. ஆனாலும் இலவசமாகக் கொடுக்க ஒரு மனம் வேண்டுமல்லவா?

என்னால முடிஞ்சது பத்து காப்பி சார். வருஷா வருஷம் இதைச் செய்வேன். பத்து பேருக்கு பகவத் கீதை.

நானும் சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியில் ஒரு சேவை செய்தேன். குறைந்தது பத்து பேருக்கு தலா ஆயிரம் ரூபா செலவு வைத்தேன். முதல் முதலாகக் கண்காட்சிக்கு வந்திருந்த உ.வே. சாமிநாத ஐயர் நூலகத்தின் ஸ்டாலுக்கு நண்பர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வது. சாமிநாதையரின் புத்தகங்களைக் கட்டாயப்படுத்தி வாங்கவைப்பது.

தமிழர்கள் மறந்துவிட்ட மிக முக்கியமான ஜீவாத்மா அவர். ஐயர் இல்லாவிட்டால் நமக்குப் பழைய இலக்கியங்கள் எதுவும் இருந்திருக்காது. அதுகூடப் பெரிய விஷயமில்லை. நல்ல, சுத்தமான, சுவாரசியமான, விறுவிறுப்பான உரைநடை என்பது தமிழில் அவரிடமிருந்துதான் தொடங்குகிறது. அபாரமான மொழி வளம், அநாயாசமான சொல்லாட்சி. இன்றைக்கு நாம் எழுதுகிற தமிழெல்லாம் அவருடைய தமிழுக்கு முன்னால் தற்கொலை செய்துகொள்ளவேண்டிய தரத்தைச் சேர்ந்தவை. பன்னெடுங்காலமாகப் பொதுமக்கள் பார்வைக்கு வராமலேயே இருந்த சாமிநாத ஐயரின் புத்தகங்கள் சென்ற ஆண்டு முதல் முதலில் புத்தகக் கண்காட்சிக்கு வந்தன. இந்த வருடமும் வரலாம்.  கண்டிப்பாகத் தவறவிடாதீர்கள்.

4 comments

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.