தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகள்

தினத்தந்தி வெளியீடான ‘வரலாற்றுச் சுவடுகள்’ புத்தகத்தை நேற்று வாங்கினேன். நல்ல பேப்பர் மசாலா தோசை அளவில் எண்ணூறுக்கு மேற்பட்ட பக்கங்கள். மொழுமொழுவென்று ஒவ்வொரு பக்கமும் படிக்காதே, முதலில் தடவு என்கின்றன. எல்லாம் கலர். கனமான அட்டை. கலைஞர் புண்ணியத்தில் முன்னூறு ரூபாய்.

இந்த வரலாற்றுச் சுவடுகள் தொடராக வந்துகொண்டிருந்தபோதே கொஞ்சகாலம் விடாமல் படித்திருக்கிறேன். ஆனால் பொதுவாகத் தொடர் படிக்கும் இயல்பற்றவன் என்பதால் நிறைய விடுபட்டது. இப்போது மொத்தமாகப் படிக்க ஒரு வாய்ப்பு. இது ஒரு முக்கியமான தொகுப்பு. பல வகையில். இருபதாம் நூற்றாண்டு சரித்திரத்தின் பல மூலை முடுக்குகளைத் தேடிச்சென்று படிக்க ஒரு சரியான வழிகாட்டி. எப்படி என்று விளக்குகிறேன்.

தினத்தந்தி தொடங்கப்பட்ட (நாற்பதுகளின் முற்பகுதி) நாள் முதல் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற அனைத்து முக்கியச் சம்பவங்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்தச் சம்பவம் நடந்தபோது தந்தி எப்படி ரிப்போர்ட் செய்ததோ, அதே விதம்தான். ஆனால் தொகுப்பில், நிச்சயமாகச் சில மாற்றங்கள் இருக்கின்றன. தொடர்ச்சியாக ஏழெட்டு நாள் வந்திருக்கக்கூடிய செய்திகளை ஒரே கட்டுரையாக்குவதன்பொருட்டு மேற்கொள்ளக்கூடிய எளிய எடிட்டிங் பணிகள்.

உதாரணமாக, சோவியத் யூனியன் உடைந்து சிதறிய பகுதி. இதை நேற்று வாசித்தேன். கோர்ப்பசேவ் பதவிக்கு வருவது முதல், அவரை வீட்டுச் சிறையில் வைத்து, பின்னர் விடுதலை செய்து, ஓய்வூதியமும் கோடைக்கு ஒன்று, குளிருக்கு ஒன்றாக வீடும் கொடுத்து அனுப்பிவைத்தது வரையிலான சம்பவங்கள் நாலு பக்கங்களில் வெகு நேர்த்தியாக விவரிக்கப்பட்டுவிடுகிறது. இடையில், 1920 முதல் கம்யூனிஸ்டுகளின் பிடியில் ரஷ்யா எப்படி இருந்தது, மக்கள் எதனால் கொதித்து எழுந்தார்கள், பதினைந்து மாகாணங்கள் பிரிந்து ஓடத் துடித்ததன் பின்னணி, பொருளாதாரச் சீர்கேடுகள், கோர்பசேவின் முயற்சிகள், அது முடியாமல் போனது,  இறுதி ராணுவப் புரட்சி, அதில் மக்களுக்கு எதிராக ராணுவம் செயல்பட மறுத்தது, அதனால் தோல்வியடைந்தது என்று அத்தனை விவரங்களும் வந்துவிடுகின்றன.

ஒரு எட்டாங்கிளாஸ் பையன் படித்தால்கூட எளிமையாகப் புரிந்துகொண்டுவிட முடியும். சிறிய சொற்றொடர்கள், குழப்பாத வார்த்தைகள், தெளிவான விவரங்கள். இந்த நாலு பக்கக் கட்டுரை மிக நிச்சயமாக ஒருத்தனை சோவியத்தின் முழுமையான வரலாறை வாசிக்கத் தூண்டி, பிற புத்தகங்களை நோக்கி நகர்த்தும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

இன்னொரு கட்டுரை வாசித்தேன். சீனாவில் தியான்மென் சதுக்கத்தில் மூவாயிரம் (என்று சொல்லப்பட்ட) மாணவர்களை ராணுவத்தை வைத்து அரசு சுட்டும் மிதித்தும் கொன்ற சம்பவம். ஒரு திரைப்படம் மாதிரி இந்தக் காட்சியை விவரிக்கும் கட்டுரை, சீனாவில் அரசுக்கு எதிராக மாணவர்கள் பொங்கியெழுந்ததன் பின்னணியை ஒரு வரிச் சரடாக வைத்து கம்யூனிஸ்ட் சீனாவின் சரித்திரத்துக்குள் இழுத்துவிடுகிறது.

இலங்கைப் பிரச்னை, இராக் பிரச்னை, ஆப்கன் யுத்தம், பனிப்போர் காலம், கார்கில் யுத்தம், அணுகுண்டு பரிசோதனைகள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சிகள், ஆப்பிரிக்கப் பஞ்சம், அமெரிக்க அடாவடிகள் – எதுவுமே மிச்சமில்லை. ஒரு கலைக்களஞ்சியத்தின் இயல்புகளைப் பெருமளவு உள்வாங்கி, அதில் காணமுடியாத எழுத்து சுவாரசியத்தைச் சேர்த்து, விமரிசனமில்லாமல் – சரித்திரமாகிவிட்ட செய்திகளை அதற்குரிய முக்கியத்துவத்துடன் விவரிக்கிறது இந்நூல்.

சரித்திரம் வாசிக்கலாம், ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று யோசித்துக்கொண்டிருப்போருக்குக் கண்ணை மூடிக்கொண்டு இதை சிபாரிசு செய்வேன். அதே மாதிரி, ஆரம்ப நிலை அபுனைவு எழுத்தாளர்களும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது.

எழுத்தில் ஆகப்பெரிய கஷ்டம், எளிமையாக எழுதுவது. அதை வெகு அநாயாசமாகச் சாதித்திருக்கிறது இந்நூல்.

(எங்கெல்லாம் இது கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. சென்னையில் நியூ புக்லேண்ட்ஸிலும் தினத்தந்தி அலுவலகத்திலும் கண்டிப்பாகக் கிடைக்கிறது.)

8 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற