மகாத்மா காந்தி கொலை வழக்கு

மகாத்மா காந்தி கொலையைப் பற்றி கோட்சேவின் பார்வையில் சொல்லப்பட்ட ‘கோட்சே’ என்ற புத்தகத்தைப் பல வருடங்களுக்கு முன் படித்தேன். [ஹிம்சாகர் என்பவர் எழுதியது.] அது கோட்சேவைப் பற்றிய புத்தகம்தான். ஆனால் காந்தியைக் கொல்லாத பட்சத்தில் கோட்சேவைப் பொருட்படுத்தவேண்டிய அவசியம் ஏது? அவன் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக். ஹிந்து வெறியன். அடிப்படைவாதி. அவனுடைய படிப்பு, அறிவு, அனுபவம், தேசபக்தி அனைத்தும் அவனைக் கொலையாளியாக்கத்தான் பயன்பட்டதென்பது ஒரு சரித்திர அவலம். காந்தியின் உடலை மட்டும் அழித்துவிட்டு அவனும் போய்ச் சேர்ந்தான்.

ஆனால் இந்த கோட்சே, அவனைப் போல் அல்லது அவனது சிந்தனைப் போக்கை ஒட்டி காந்தியை விமரிசிக்கிறவர்கள் பற்றி அடிக்கடி யோசிப்பேன். காந்தியின்மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளின் வலுவின்மை, அறிவுஜீவிகளைக் காட்டிலும் எளிய பாமரர்களுக்கே எளிதில் விளங்கக்கூடியது. சித்தாந்தங்களல்ல; அமைதியான, மோதல்களற்ற சகவாழ்வே மனித குலம் எக்காலத்திலும் விரும்புவது. மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலப்பரப்புதான். ஆனால், இந்தியா ஏன் பாகிஸ்தானைப் போல் இல்லை என்பதற்கான சுருக்கமான பதில், அரசியலில் மதம் இங்கே இரண்டாம்பட்சமாக இருப்பதுதான்.

நமக்கு ஜாதிகள் முக்கியம். ஜாதி அரசியல் முக்கியம். ஜாதி ஓட்டுகள் அனைத்திலும் முக்கியம். அதில் சந்தேகமில்லை. மதமும்கூட சிறுபான்மை மக்கள் ஓட்டு விஷயத்தில் முக்கியத்துவம் பெறுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் தன்னை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்துக்கொண்டு செயல்படத் தொடங்கிய பாகிஸ்தான் இன்றுவரை க்ரோட்டன்ஸ் செடியைப் போல் நிற்பதையும் இந்தியா அடைந்துள்ள உயரங்களையும் எண்ணிப் பார்க்கலாம்.

போலி மதச்சார்பின்மை என்று ஒரு சௌகரியத்துக்கு மதவாதிகள் விமரிசிக்கலாமே ஒழிய, அதுதான் அடிப்படைக் கவசம். அந்த சௌகரியம்தான் இந்த விமரிசனங்களுக்கான சுதந்தரத்தையும் பெற்றுத்தருகிறது.

ஆனால் காந்தி தன் எழுத்தில் ஓரிடத்தில்கூட மதச்சார்பின்மை என்னும் சொல்லைப் பயன்படுத்தியதில்லை என்று ஒரு சமயம் அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிட்டார். அவரது முழு எழுத்துத் தொகுதிகளில் தேடிப் பார்த்தபோது அது உண்மை என்று தெரிந்தது. கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தாலும் பிறகு வேறு விதமான பொருளை எனக்குத் தந்தது.

‘மதச்சார்பின்மை’ என்பது காந்தியின் விருப்பமாக நிச்சயமாக இருக்கமுடியாது. அவர் ஒரு ஹிந்து. அப்படித் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. என்ன பிரச்னை? நானும்கூட ஒரு ஹிந்துதான். ஒரு கிறித்தவராகவோ, இஸ்லாமியராகவோ வேறு மதம் சாராதவராகவோ உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் ஹிந்துக்கள்தாம். இதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நம்வாழ்வில் நாம் மதத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால் அந்த அடையாளம் நீக்க முடியாதது. மச்சம், ரேகை போன்றது.

ஆனால் மதத்தை முன்வைத்து மாற்று மதத்தின்மீது துவேஷம் பாராட்டுவதும் வன்மம் வளர்ப்பதும் அரசியல் புரிவதும் ஆகாத காரியங்கள். காந்தி ஏன் மதச்சார்பின்மை என்னும் சொல்லை உபயோகிக்கவில்லை என்றால், அதற்கான எளிய பதில் அவர் எல்லா மதங்களையும் அரவணைக்கிறவராக இருந்தார் என்பதுதான். எல்லா மதங்களும் முக்கியம் என்று கருதுகிற ஒருவர், எந்த மதத்தையும் சாரமாட்டேன் என்று எப்படிச் சொல்வார்? தவிர, தன் மத அடையாளத்தைத் துறந்துதான் பிற மதங்களின்மீது அன்பு செலுத்தவேண்டும் என்பது என்ன கட்டாயம்?

இந்தியாவில் இன்று பேசப்படும் மதச்சார்பின்மையுடன் இதனைக் குழப்பிக்கொள்ளக்கூடாது. இது வெறும் அரசியல். அபத்த அரசியல். ரம்ஜானுக்கு நோன்புக் கஞ்சி குடித்து, கிறித்துமஸ் தின வாழ்த்து சொல்லி, விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் விடுமுறை தின சிறப்புத் திரைப்படம் ஒளிபரப்பும் கேவல அரசியல். காந்தியின் மத நல்லிணக்கம் இதனோடு எந்தத் தொடர்பும் இல்லாதது. மிக உயர்ந்த லட்சியங்களைத் தன்னகத்தே கொண்டது. முஸ்லிம்கள்மீது அவர் காட்டிய அன்பு அவர் உயிரைக் குடித்தது. ஆனால், அந்தப் பண்பு இந்த மண்ணின் இயல்பானதன் விளைவுதான் இன்றுவரை இந்தியா மிகப்பெரிய மதக்கலவரங்களை, அதன் பொருட்டான உயிரிழப்புகளைப் பெரும்பாலும் தவிர்த்து வந்திருக்கிறது. மதம் முக்கியமென்று நினைக்கும் கட்சி ஆட்சி புரியும் இடங்களில் மட்டுமே அதற்கான சாத்தியங்கள் உருவாக்கப்படுவதையும் நீங்கள் கவனிக்கலாம் [கல்யாண் சிங் இருந்தபோது அயோத்தியில் மசூதி இடிப்பு, மோடி இருந்ததனால் குஜராத்தில் கலவரங்கள்].

நிற்க. மகாத்மா காந்தி கொலை வழக்கு குறித்து எழுதவந்தேன். மதத்தைத் தொடாமல் அதை எப்படிச் சொல்வது? இந்த வருடம் சொக்கன் எழுதி, கிழக்கு வெளியிடவிருக்கும் இந்தப் புத்தகம் அநேகமாகக் கிழக்கு உருவான தினம் தொடங்கி யோசனையிலும் முயற்சியிலும் இருந்து வந்த ஒன்று. என்றோ நடந்து முடிந்த கொலைச் சம்பவம், எல்லா சரித்திர ஆவணங்களும் இன்று பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் இருக்கின்றன, தொகுத்து எழுதுவது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று தோன்றலாம்.

அத்தனை எளிதல்ல. வழக்கு விசாரணை முடிந்து அறுபது வருடங்கள் கடந்துவிட்டாலும், குற்றவாளிகள் யாரும் இன்று உயிருடன் இல்லை என்றாலும் தேடத்தேடப் புதிது புதிதாக உண்மைகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் விஷயம் இது.

நான் என்னுடைய ஆர்.எஸ்.எஸ். புத்தகத்துக்கான ஆய்வில் இருந்தபோது இப்படித்தான் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சேவின் பேட்டி ஒன்று வாசிக்கக் கிடைத்தது. அது, ஃப்ரண்ட்லைன் பத்திரிகையில் 1994ம் ஆண்டு ஜனவரியில் வெளியான பேட்டி. சரியாகச் சொல்வதென்றால், மகாத்மா காந்தி படுகொலைச் சம்பவம் முடிந்து, வழக்கு விசாரணைகள் முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, எல்லா களேபரமும் ஓய்ந்து 45 வருடங்களுக்குப் பிறகு வெளியான பேட்டி. இந்த பேட்டியின் அடிப்படையில் திரும்பவும் விஷயத்தைக் கையிலெடுத்திருந்தாலும் குற்றம் சாட்ட யாரும் உயிருடன் கிடையாது. கோபால் கோட்சேகூட அப்போது தள்ளாத வயதுக்காரர் [இவரும் இப்போது உயிருடன் இல்லை.].

இந்தப் பேட்டியில் கோபால் கோட்சே பேசிய விஷயங்களுள் ஒன்று மிக முக்கியமானது. அது நாதுராம் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குமான தொடர்பு பற்றியது.

காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸில் வளர்ந்தவன். ஆனால் விசாரணையின்போது, அவனுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று சொல்லப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, அவனுடைய ஹிந்து மகாசபை தொடர்பை மட்டும் ஊர்ஜிதப்படுத்தி கேஸை முடித்தார்கள்.

ஆனால் 45 வருடங்களுக்குப் பிறகு பழையவற்றை நினைவுகூரும் கோபால் கோட்சே, தன் சகோதரனின் ஆர்.எஸ்.எஸ். தொடர்புகளைப் பற்றி இப்படிச் சொல்கிறார்:

‘நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்தோம். நாதுராம், தத்தாத்ரேயா, நான், கோவிந்த். எல்லோரும். எங்கள் வீட்டில் நாங்கள் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்ஸில் வளர்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தம். ஆர்.எஸ்.எஸ்.தான் எங்கள் குடும்பம். நாதுராம் அதில் பவுத்திக் காரியவாஹாகப் (சிந்தனையாளர், அறிவுத்தளச் செயல்பாட்டாளர் என்று பொருள்.) பணியாற்றினார். தன் வாக்குமூலத்தில் நாதுராம், தான் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட்டு வெளியேறிவிட்டதாகச் சொன்னார். காரணம், கோல்வால்கரும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கொலைச் சம்பவத்துக்குப் பிறகு மிகுந்த நெருக்கடிக்கு உட்பட்டிருந்ததுதான். உண்மையில் நாதுராம் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட்டு விலகவில்லை.’

ஆர்.எஸ்.எஸ். இதை மறுக்கலாம். இல்லை என்று வாதிடலாம். நிரூபிக்கவும் செய்யலாம். அதுவல்ல விஷயம். ஒரு கொலைச்சம்பவம் நடந்து நாற்பத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகும் ஒரு சர்ச்சையை உருவாக்கத் தேவையான அம்சங்களைத் தன்னகத்தே ஒளித்துவைத்திருக்கிறதென்றால், இந்தியாவில் அது காந்தி கொலை மட்டும்தான்.

மதம், அரசியல் என்னும் இரு அச்சுகளில் சுழலுவது, மகாத்மா காந்தி கொலை வழக்கு. கரணம் தப்பினால் மரணம் என்னுமளவுக்கு சிக்கல்களும் சிடுக்குகளும் கொண்ட வழக்கு இது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி மூவருடைய கொலை வழக்கு விசாரணை விவரங்களையும் நூல்களாகக் கொண்டுவரவேண்டும் என்று நாங்கள் தொடக்கத்திலிருந்தே யோசித்து வந்தோம். ராஜிவ் காந்தி கொலை வழக்கு நூலைக் கொண்டுவருவதில் எனக்கு அதிக சிரமம் இருக்கவில்லை. அதன் விசாரணை அதிகாரியே முன்வந்தபடியால் நூல் வெளியிடுவது சுலபமாக இருந்தது. இந்திரா காந்தி கொலை வழக்கு குறித்த புத்தகத்துக்குச் சில வருடங்களாக வேலை நடந்துகொண்டிருக்கிறது. அநேகமாக அடுத்த வருடம் அது வந்துவிடக்கூடும்.

என். சொக்கன்

ஆனால் இந்த மகாத்மா காந்தி விஷயம்தான் சற்று வினோதமானது. முன்பே சொன்னதுபோல் இதை எழுதுவது எளிது. ஆதாரங்கள், ஆவணங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விவரங்கள், தீர்ப்பு அனைத்துமே எளிதாகக் கிடைக்கக்கூடியவை. தவிரவும் பல புத்தகங்கள் ஏற்கெனவே ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் எழுதப்பட்டிருக்கின்றன. சுலபமாகச் செய்ய முடியும்.

ஆனாலும் இதற்கு நாங்கள் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. என் ஞாபகம் சரியென்றால் அநேகமாகப் பதிமூன்று பேர் எழுத முயற்சி செய்து தோற்ற சப்ஜெக்ட் இது. காரணம், இதன் ஆழம் மற்றும் நூற்றுக்கணக்கான சிக்கல் முடிச்சுகள். அதை உள்வாங்கி, வடிவம் தருவது என்பது உள்ளபடியே சிரமமான பணி. காந்தி என்னும் ஆளுமையை எழுத்தில் மறுகட்டுமானம் செய்து, அதற்கு நேரெதிரே கோட்சே என்னும் ஆளுமையற்ற ஆளுமையை நிற்கவைத்து, நடந்த சம்பவங்களை ஆதாரங்களின் அடிப்படையில் ஒன்று சேர்த்து ஒரு சுவாரசியமான புத்தக வடிவம் தரவேண்டும்.

கடந்த சில வருடங்களாக என்னிடம் யார் புத்தகம் எழுத ஆர்வம் தெரிவித்து வந்தாலும் அதிக அலைச்சல் இல்லாமல் எழுதக்கூடிய இந்த சப்ஜெக்டைத்தான் முதலில் சிபாரிசு செய்துவந்தேன். எத்தனை பேருக்கு இதே சப்ஜெக்டைத் தருவீர்கள் என்று அலுவலகத்தில் என்னைக் கேட்காதவர்கள் கிடையாது. நான் இதை எழுதச் சொல்லாத ஒரே ஆள் சொக்கன். அவனிடம் இதைத் தருவதில் உண்மையில் எனக்கு விருப்பமே இல்லை. ஒவ்வொரு முறையும் முந்தையதை விஞ்சக்கூடிய அளவு கஷ்டமான, சவால்கள் மிக்க புத்தகங்களைத்தான் அவன் எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, மகாத்மா காந்தி கொலை வழக்கு நூலை எழுதுகிறேன் என்று ஏற்றுச் சென்ற யாருமே என்னைத் திருப்திப்படுத்தவில்லை. ஒருவருடைய முயற்சியும் ஒழுங்காக அமையவில்லை. எல்லாம் அரைகுறை. எல்லாமே சொதப்பல். வேறு வழியே இல்லாமல்தான் சொக்கனிடம் எழுதச் சொல்லிக் கேட்டேன். பதிலே பேசாமல் எடுத்துக்கொண்டு, ஒழுங்காக எழுதி முடித்தான். படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட திருப்தியையும் நிம்மதியையும் எளிதில் விவரிக்க முடியாது. சாப்ளினுக்குப் பிறகு என்னை மிகவும் கவர்ந்த சொக்கனுடைய புத்தகம் இதுவே. கொலைச்சதிக்கான காரணங்களில் ஆரம்பித்து, அதன் வரலாற்றுப் பின்னணியின் வழியே தோல்வியுற்ற முந்தைய கொலை முயற்சிகளைப் பரபரவென்று சொல்லி முடித்து, வெற்றியடைந்த முயற்சிக்கு விரைந்து, வழக்கு விசாரணை நடந்த விதம், அதை தேசமும் கொலையாளிகளும் அமைப்பு மற்றும் நிறுவன ரீதியில் இயங்குவோரும் எதிர்கொண்ட விதம் – தீர்ப்பு வழங்கப்பட்டது வரையிலான விவரங்கள் வெறும் தகவல்களாக அல்லாமல் சம்பவங்களின் மீது அணிவகுத்து வந்திருக்கின்றன, இந்நூலில். முக்கால் மணி நேரத்தில் படித்துவிடலாம். ஆனால் இந்நூல் உருவாக்கும் பாதிப்பிலிருந்து விடுபடக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும் என்று நினைக்கிறேன்.

இந்த வருடம் என்னைக் கவர்ந்த புத்தகங்களின் வரிசையில் சொக்கனின் இந்நூலுக்கு முக்கிய இடமுண்டு. படித்தால், உங்களுக்கும் பிடிக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

26 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற