சர்ச்சைக்குள் ஒரு சவாரி

2010ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் மூன்று. ஸ்பெக்ட்ரம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆ. இராசா.

ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் கோடி என்கிற எண் இதன்மூலம் இந்திய சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. நீரா ராடியா என்று தொடங்கி ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் என்பது வரை இது தொடர்பான துணைக் கதாபாத்திரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள், வழக்குகள், ஆவேசப் பேச்சுகள், ஆர்ப்பாட்டங்கள் என்று தேசமே அமர்க்களப்பட்டது. பேசாமல் விடுமுறை அறிவித்திருக்கலாம் என்று நினைக்குமளவுக்கு நாடாளுமன்றம் முற்றிலுமாக இயங்காமல் போனது.

நாடாளுமன்றத்தில்தான் பேச முடியவில்லையே தவிர நாடு முழுதும் இதே பேச்சுத்தான். ஆனால் யாருக்கு என்ன புரிந்தது என்பது பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. ஆ. ராசா ஏதோ மிகப்பெரிய ஊழல் செய்துவிட்டார். வரலாறு காணாத தொகை. மாட்டுத்தீவன ஊழலோ, சவப்பெட்டி ஊழலோ, சொத்துக்குவிப்பு வழக்கோ இத்தனை பெரிய தொகையைச் சுமந்ததில்லை. இது பெரிது. மிகப்பெரிது. ஒன்றேமுக்கால் லட்சம் கோடி. ஆனால் எதில் ஊழல்? எப்படி ஊழல்?

ஸ்பெக்ட்ரம் என்பது ஏதோ ஒரு நிறுவனம் போலிருக்கிறது. போஃபர்ஸ் என்பது பீரங்கித் தயாரிப்பு நிறுவனத்தின் பெயராக இருப்பது போல. இல்லையா? வேறு? என்னவோ பங்கீட்டுப் பிரச்னை என்றல்லவா சொல்கிறார்கள்? நதி நீர்ப் பங்கீடு, நிலப் பங்கீடு போலவா? உரிமை? லைசென்ஸ்? ம்ஹும். ஒன்றும் புரியவில்லை. பேப்பரில் என்ன போட்டிருக்கிறார்கள், பார்ப்போம்.

நாளிதழ்கள் பக்கம் பக்கமாக எழுதின. வார இதழ்கள் வண்ணவண்ணமாக எழுதின. ஆ. இராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழல். ஒண்ணே முக்கால் லட்சம் கோடி. ஆராசாவே, பதவி விலகு. எல்லா டெலிபோன் பேச்சுகளும் கேட்டாகிவிட்டது. இனி விவரிக்க ஒன்றுமில்லை. ஊழல் மன்னன் ஒழிக.

அவ்வளவுதானா? அவ்வளவுதான்.

அலைப்பரவல் என்றால் என்ன, அதில் பங்கீடு என்றால் என்ன, இதை எப்படிச் செய்கிறார்கள், ஏன் செய்ய வேண்டும், யாருக்குச் செய்கிறார்கள், இதில் ஏலம் எப்படி வருகிறது, ஊழலுக்கான சாத்தியங்கள் எங்கே இருக்கிறது, இப்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை என்ன, சி.ஏ.ஜி. அறிக்கை சொல்வதை யாராவது முழுதாக வாசித்திருக்கிறார்களா? வாசித்துவிட்டுத்தான் எழுதுகிறார்களா, பேசுகிறார்களா – மூச். ஊழல் நடந்துவிட்டது. தீர்ந்தது விஷயம்.

ஆனால் அத்தனை எளிதாகக் குற்றம் சாட்டிவிடக்கூடிய விஷயம் இல்லை இது. நிறைய நுணுக்கங்கள் கொண்ட மிகச் சிக்கலான விவகாரம். திறந்த மனத்துடன், பாரபட்சமின்றி அணுகும்போதுதான் இதன் சகல பரிமாணங்களையும் விளங்கிக்கொள்ள முடியும்.

பிரச்னை, நாம் எளிதில் உணர்ச்சிவசப்பட்டுவிடுவது. ஓங்கிக் குரல் கொடுத்ததே மறந்துபோய் வெகு விரைவில் இன்னொன்றைப் பிடித்துக்கொண்டு அதற்குக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிடுவது. அதான் ராசா பதவி விலகிவிட்டாரே? இனி என்ன, அடுத்த வேலையைப் பார்.

சிரிக்கத்தான் வேண்டும்.

0

ஸ்பெக்ட்ரம் சர்ச்சையின் முழுப் பரிமாணமும் புரியவேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் என்பதன் அறிவியல் முதலில் புரியவேண்டும். மொபைல் தொழில்நுட்பத் துறையில் இதன் முக்கியத்துவம் என்னவென்று உணரவேண்டும். இதிலுள்ள வர்த்தக சாத்தியங்கள் சாதாரணமானதல்ல. அதே சமயம், ஓர் ஒதுக்கீட்டைப் பெறுவதன்மூலம் மட்டுமே கோடிகளில் குளித்துவிடலாம் என்பதுமல்ல. ஐரோப்பாவில் அலைப்பரவல் இட ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் சில தலையில் துண்டைப்போட்டுக்கொள்ள நேர்ந்த குறுங்கதை ஒன்று இந்தப் புத்தகத்தில் வருகிறது. அந்தப் பகுதியை வாசிக்கும்போது இந்த உண்மை புரியும்.

இதற்கெல்லாம் பிறகுதான் இதில் அரசியல் வருகிறது. எனவே, அதற்கும் பிறகுதான் ஊழல்.

ஊழலுக்கான சாத்தியங்கள் தெளிவாக உள்ள விவகாரம்தான் இது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒன்றே முக்கால் லட்சம் கோடிகளுக்கு ஊழல் என்பது, விஷயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்கிறார், நூலாசிரியர். சுய அபிப்பிராயத் திணிப்பு விருப்பமோ, சார்பு நிலையோ ஆசிரியருக்குச் சற்றும் கிடையாது. சி.ஏ.ஜி. அறிக்கையின் அடிப்படையில் இந்த விஷயத்தைப் படிப்படியாக விளக்குகிறார்.

அறிவியலில் தொடங்கி அரசியலில் முடிவுறும் இந்த விவகாரத்தில்தான் எத்தனை பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்! ஒவ்வொருவரின் தொடர்புக்கும் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. ஆனால் அதுவல்ல; பிரச்னையைச் சரியாகப் புரிந்துகொள்ள முதல் முறையாகத் தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் ஒரு வாய்ப்பளிப்பதுதான் முக்கியமானது.

ஆ. இராசா ஊழல் செய்தாரா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். வெகு நிச்சயமாக ஒன்றே முக்கால் லட்சம் கோடிகளுக்கு இதில் ஊழல் நடைபெற்றிருக்க அறிவியல்பூர்வமாக வாய்ப்பே இல்லை என்பதை அறியவேண்டியதுதான் முக்கியம்.

அதைத்தான் விளக்குகிறது இந்நூல். ஊழலைப் புரிந்துகொள்வதுடன்கூட, ஸ்பெக்ட்ரம் என்னும் மின்காந்தப் பெருவெளியின் அறிவியலையும் நாம் மிக எளிதாக அறியமுடிவது இதன் சிறப்பம்சம்.

[சென்னை புத்தகக் காட்சி 2011ல் வெளியாகவுள்ள பத்ரியின் ‘ஸ்பெக்ட்ரம் சர்ச்சை’ நூலுக்கு எழுதிய முன்னுரை.]

8 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற