நம்புங்கள்! நாவல் விற்கிறது!

மன்னார் அண்ட் கம்பெனி மாதிரி, செட்டியார் மெஸ் என்று என்னமோ பேர் போட்டு இன்று ஒருவழியாக கேண்டீன் தொடங்கிவிட்டார்கள். இட்லி, தோசை, பரோட்டா, போண்டா, பஜ்ஜி வகையறாக்களும் மினரல் வாட்டர் போத்தல்களும். ஃபுட் கோர்ட் மாதிரி செய்திருக்கலாம் என்று அந்த வாசல் மிதித்த அத்தனை பேரும் சொன்னதைக் கேட்க முடிந்தது. அப்துல் கலாம் கனவு கண்ட 2012ல் அதெல்லாம் நடைமுறைக்கு வந்துவிடும்.

இன்று அநேகமாக அனைத்துக் கடைகளிலும் புத்தகங்கள் வந்து, இறங்கி, ஒழுங்குபடுத்தி வியாபாரம் தொடங்கிவிட்டார்கள். பரபரப்பான விற்பனை என்று சொல்ல முடியாவிட்டாலும் மோசமில்லை. மாலை ஆறு மணிக்குப் பிறகு ஓரளவு மக்கள் வரத்தொடங்கினார்கள். நேற்று நான் குறிப்பிட்டிருந்த அந்த மந்திரக் கம்பளத்தில் இன்று பலபேர் தடுக்கி விழுந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். பத்து நாள் முடிந்த கண்காட்சி மாதிரி இன்றே பல இடங்களில் தரைவிரிப்பு சுருண்டு சுருங்கி நாராசக் கோலம் காட்டியது. சனி, ஞாயிறுக்கு முன்னால் இதையெல்லாம் சரி செய்யாவிட்டால் நிச்சயமாக வார இறுதிக் கூட்டம் ரொம்ப கஷ்டப்படும்.

இன்று பார்த்தவை

கிழக்கில் இன்னும் வந்து சேரவேண்டிய புத்தகங்களில் சில மிச்சம் இருந்தாலும் ஸ்பெக்ட்ரம் வந்துவிட்டதைப் பார்த்தேன். கல்கியின் சிவகாமியின் சபதம் அட்டகாசமாக வந்து இறங்கியிருந்தது. அதன் அட்டைப்பட அழகை வந்திருந்த அத்தனை பேரும் சிலாகித்தார்கள். அப்புறம், கிழக்கு தொப்பி ஒன்று புதிதாக வந்திருந்தது. இது விற்பனைக்கல்ல. விற்பனையாளர்களுக்கு. சில வருடங்களுக்கு முன்னர் வேறு ஒரு கிழக்கு தொப்பி அமலில் இருந்தது. சரியான அரவிந்தன் நீலகண்டன் கலர். அணிந்துகொண்டு அங்கே இங்கே நகர்ந்தாலே அக்கம்பக்கத்தார் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிவிடுவார்கள். இந்த வருடத் தொப்பி அமர்க்களமான வெண்மை. அதை அணிந்துகொண்டு வாசலில் அமர்ந்திருந்த பிரசன்னா, ஒரு பார்வையில் எனக்கு ஆண் சானியா மிர்சாபோல் தென்பட்டார். படத்தைத் திரும்ப ஒருமுறை பார்த்துவிட்டு, கண் டெஸ்ட் பண்ணவேண்டுமா என்று சொல்லுங்கள்.

நான் கவனித்தவரை எங்களுடைய புதிய புத்தகங்களில் காஷ்மீர், உலோகம், ஆர்.எஸ்.எஸ். மூன்றும் நல்ல வேகத்தில் விற்பனையாகிக்கொண்டிருந்தன. [அடுத்த வரிசையில் கிளியோபாட்ரா, மகாத்மா காந்தி கொலை வழக்கு, ஸ்பெக்ட்ரம்.] உலோகம் விற்பனையாகிற வேகத்தைப் பார்த்தால், பேசாமல் நாமும் இலக்கியவாதியாகி விடலாமா என்ற நப்பாசை எழுகிறது. ஜெயமோகனின் எதிர்காலத்தை உத்தேசித்து அந்த எண்ணத்தை அழுத்தித் துடைத்துவிட்டு பிரசன்னாவிடம், மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் சொல்லுங்கள், காஷ்மீரா உலோகமா, இன்று எது நம்பர் 1 என்று கேட்டேன். அவருக்கு அப்படியொன்று இருக்கிற மாதிரி தெரியவில்லை. உலோகம்தான் என்று சொல்லிவிட்டார். ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்.

ஏதோ ஒரு கடையில் ஒரு போஸ்டர்

இன்று இரண்டு மணிநேரம் இலக்கில்லாமல் மனம் போன போக்கில் சில கடைகளைச்

விதியின் சதி

சுற்றினேன். பொதுவாக இந்த வருடம் புதிய புத்தகங்களைக் காட்டிலும் பல பழையவற்றின் ரீப்ரிண்ட் அதிகம் வந்திருப்பதுபோல் தோன்றியது. இது சரியான கணிப்பா என்று இரண்டொரு நாளில் சொல்கிறேன். இன்று இப்படித் தோன்றியது. அவ்வளவுதான். காலச்சுவடில் புதிய புத்தகங்கள் அதிகம் கண்ணில் படவில்லை. விகடனிலும் ஏற்கெனவே பார்த்தவையே அதிகம் தென்பட்டன. [ஆனால் மொழிபெயர்ப்புகள் சில புதிதாக வந்திருந்தன.] நர்மதா, கலைஞன், வானதி ஏரியாக்களிலும் அவ்வண்ணமே. அடையாளத்தில், சில புதியவற்றைப் பார்த்தேன். தோப்பில் முஹம்மத் மீரானின் 75 சிறுகதைகளின் தொகுப்பு பார்க்க அட்டகாசமாக இருந்தது. காலச்சுவடில் பார்த்த பஷீரின் ‘பாத்துமாவின் ஆடு’ முன்னட்டையைப் பின் அட்டை போல் வடிவமைத்திருந்தது புதுமையாக இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இலக்கணப் புத்தகங்கள் நிறைய வந்திருந்தன. தொல்காப்பியம் புது எடிஷன் பார்த்தேன். வாங்கவேண்டும்.
குமுதத்தில் ஸ்பின்னர் பூமி என்ற புத்தகத்தைப் பார்த்ததும் ஒரு நிமிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அது நான் ஜங்ஷன் ஆசிரியராக இருந்தபோது வெளியிட்ட தொடர். அதை எழுதிய பி.எம். சுதிர், அந்நாளில் குட்டிப் பையன். [இப்போது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிப்பையன்கள் அல்லது பெண்கள் அவனுக்கு இருக்கவேண்டும்.] அபாரமான சுறுசுறுப்பு, அற்புதமான எழுத்தாற்றல் கைவரப்பெற்றவன். சரியான கிரிக்கெட் பைத்தியம். ஜங்ஷனில் இந்தத் தொடர் வந்துகொண்டிருந்தபோது ஒரு சமயம் எல். சிவராமகிருஷ்ணனோ, டபிள்யூ.வி. ராமனோ போன் செய்து பாராட்டியது லேசாக ஞாபகம் இருக்கிறது. சுதிரைப் பார்த்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன!

வெள்ளைத் தொப்பியும் பிரசன்னாவும்

அது நிற்க. எனக்குக் கொஞ்சம் உடம்புக்கு சுகமில்லையென்பதால் இரண்டு நாளாக லிச்சி ஜூஸ் கடைப்பக்கம் போகவில்லை. அங்கே கடாமுடாவென்று ஏதோ ஒரு கொறிக்கும் ஐட்டம் புதிதாக வந்திருப்பதாகவும் நாலு துண்டு இருபது ரூபாய் என்றும் நண்பர்கள் சொன்னார்கள். முயற்சி செய்து பார்க்கலாமா என்று அச்சம் கலந்த நப்பாசையுடன் சுற்றி வந்தபோது கிழக்கு வாசலில் இடதும் வலதும் கைகுலுக்கிக் கொஞ்சிக்கொண்டிருந்த ஓர் அபூர்வக் காட்சியைக் கண்டேன். பொதுவாகவே அதியமான் யார் கை கிடைத்தாலும் இழுத்துக்கொண்டு விடுகிறவர்தான் என்றபோதும் இந்தக் காட்சியில் இடப்பக்கம் இருக்கும் மருதன் பாதி வினவு ஆச்சே, அவனுக்கு இதெல்லாம் ஒத்துக்கொள்ளாதே என்று கொஞ்சம் தலையைக் குடைந்தது. அப்போது அதியமான், ‘நான் வலதுசாரி இல்லை; லிபரலிஸ்ட்’ என்று டமாரென்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார். நல்ல வேளை, அதியமானின் இலக்கிய பார்ட்னர் டாக்டர் ப்ரூனோ வந்தாரோ, மருதன் தப்பித்தான்.

வழக்கமான கிழக்கு சந்தில் அதியமான், ப்ரூனோ, மருதன், நான், அப்பன் முருகனின் அருமந்த புத்திரன் உண்மைத் தமிழன், வேறு சில நண்பர்கள் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஜி.எச்சில் உழைத்துக் களைத்தாலும் உத்வேகம் குறையாமல் புத்தகக் கண்காட்சிக்கு ஓடி வந்து அலைந்து திரிந்து பன்னெண்டு புள்ளி அஞ்சு செண்டிமீட்டர் வெர்னியர் காலிப்பர் வாங்கிய டாக்டரின் இலக்கிய ஆர்வத்தை மனமாரப் பாராட்டினேன்.

புத்தகக் கண்காட்சியில் புத்தகம்தான் வாங்கவேண்டும் என்று யார் சொன்னது?

14 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற