அறிவுஜீவி பயங்கரவாதம்

மணிரத்னம் வந்திருந்தார்

இன்றைய தினத்தை என் சொந்த விருப்பத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கென்று ஒதுக்கிவிடலாம் என்று முடிவு செய்து முதல் வரிசையின் முதல் கடையிலிருந்து தொடங்கினேன். கண்ணில் பட்ட வரை அங்கே கூட்டம் குவியும் இடமாக தினத்தந்தி ஸ்டால் இருக்கிறது. ஒரே ஒரு புத்தகம். வரலாற்றுச் சுவடுகள். அடி பின்னியெடுக்கிறது. பெட்டி பெட்டியாக வெளியே எடுக்கிறார்கள், எடுத்த சூட்டில் காலியாகிவிடுகிறது. திரும்பவும் இன்னொரு பெட்டி. இந்தப் புத்தகத்துக்கு முன்னூறு ரூபாய் என்பது ஒரு விலையே இல்லை. தினத்தந்தி செய்வது நிச்சயமாக ஒரு சமூக சேவை.

வானதியில் ராஜ் மோகன் காந்தியின் ராஜாஜி வாழ்க்கை வரலாற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தது. [கல்கி ராஜேந்திரன்] வாங்க நினைத்தும் முடியவில்லை. க்ரெடிட் கார்ட் வசதியில்லை என்று சொல்லிவிட்டார்கள். இரண்டு தப்படி நகர்ந்து பாரதி புத்தகாலயத்துக்குச் சென்றேன். பல புத்தகங்கள் பார்த்ததுமே எடு, எடு என்று கூப்பிட்டன. [இடது சாரி தமிழ் தேசியம் போன்ற காமெடி தலைப்புகளும் இதில் அடக்கம்.] ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாடின் சுதந்தரப் போராட்ட வரலாறை அங்கே வாங்கினேன். இங்கும் க்ரெடிட் கார்ட் கிடையாது என்றுதான் சொன்னார்கள். இப்படியே முழு கண்காட்சியையும் சுற்றிவிட்டுக் கடைசியில் கிரெடிட் கார்டுக்காகக் கிழக்கில் புத்தகம் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தால் இங்கே காசு கொடுத்து வாங்கினேன்.

அள்ளிக்கொள்ள ஒரு கடை

அடுத்தடுத்து நான் ஏறிய, புத்தகம் வாங்க விரும்பிய எந்தக் கடையிலும் கிரெடிட் கார்டை வெளியே எடுத்தாலே கா விட்டுவிடுகிறார்கள். எப்போதும் இரண்டு மூன்று முனைகளில் ஜனதா கிரெடிட் கார்ட் வசதி செய்து வைக்கும் பபாசி இந்த ஆண்டு அப்படி ஏதும் செய்யவில்லை போலிருக்கிறது. மல்லாக்கொட்டை விற்ற பணத்தை மடியில் ரொக்கமாக முடிந்துகொண்டு வந்தால்தான் புத்தகம் வாங்க முடியும் என்று சொல்வது இந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவுஜீவி பயங்கரவாதம். தவிரவும் புத்தகங்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கும் சூழ்நிலையில் எத்தனை பணம்தான் எடுத்துவர முடியும்? இதைவிட பிற்போக்கான ஒரு வர்த்தக சமூகத்தை உலகின் எந்த மூலையிலும் நீங்கள் காணமுடியாது.

இந்த ஆண்டு பப்ளிகேஷன் டிவிஷனில் பல அருமையான புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. ஆசார்ய கிருபளானி எழுதிய மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு, ரோமெயின் ரோலண்டின் புத்தகம் உள்பட பல புராதனமான காந்திய நூல்கள் அங்கே இருக்கின்றன. மிகவும் மலிவான விலையில் நல்ல தயாரிப்பு. எந்த நூற்றாண்டிலோ அச்சிட்ட புத்தகங்கள் இன்னும் புதுக்கருக்கு கலையாமல் இருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளவும்.

பாகம் 2 வந்துவிட்டது

புக் வேர்ல்ட் லைப்ரரி என்னும் கடையில் ஏராளமான வெளிநாட்டுப் புத்தகங்களைக் கொண்டுவந்து குவித்திருக்கிறார்கள். இன்ன சப்ஜெக்ட்தான் என்றில்லை. அரசியல், அட்வென்ச்சர், ஆன்மிகம், அறிவியல், கலை, இலக்கியம், தொழில்நுட்பம், சமயம், வரலாறு, புவியியல், என்சைக்ளோபீடியாக்கள், இலக்கிய நாவல்கள், மசாலா நாவல்கள் என்று மொத்தமாக லாரியில் கொண்டுவந்து கொட்டி வைத்திருக்கிறார்கள். எதை எடுத்தாலும் நூத்தம்பது ரூபாய். சில புத்தகங்கள் 99 ரூபாய். தேட மட்டும் பொறுமை வேண்டும். தேடினால் எக்கச்சக்கமாகக் கிடைக்கிறது.

இன்றைக்கு கிழக்கு ஸ்டாலுக்கு வந்திருந்த அரவிந்தன் நீலகண்டனை மருதன் இந்தக் கடைக்கு அழைத்துச் செல்ல, கிட்டத்தட்ட பாதி கடையை கபளீகரம் செய்துவிட்டு, எப்படி எடுத்துச் செல்வது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். ஒரு பெரிய அட்டைப்பெட்டியில் நீங்கள் உட்கார்ந்துகொண்டு, புத்தகங்களை மடியில் வைத்துக்கொள்ளுங்கள், ஏபிடியில் புக் பண்ணிவிடுகிறேன் என்று சொன்னேன். புத்தகம் எழுதுவது, வாசிப்பதெல்லாம் ஒரு விஷயமா? அரவிந்தன் புத்தகம் வாங்குவதைப் பார்க்கவேண்டும். மூன்று வயதில் என் குழந்தை டோராவை எப்படி நேசித்தாளோ, அப்படி வியந்து வியந்து, தொட்டுத் தடவி, ரசித்து ரசித்துப் புத்தகம் வாங்குகிறார்.

அள்ளும் அரவிந்தன்

நான் அரவிந்தன் புத்தகம் வாங்கும் அழகையே ரசித்துக்கொண்டிருந்ததால், இன்று இங்கே அதிகம் என்னால் தேட முடியவில்லை. ஒரு கிழக்கு பை ரொம்புமளவு மட்டுமே வாங்கினேன். தவிரவும் அதே நோ க்ரெடிட் கார்ட் பிரச்னை. Ancient India, Stalin’s Folly, Absolte War, யுத்தத்துக்குப் பிந்தைய இராக் குறித்த ஒரு புத்தகம், புகழ்பெற்ற அமெரிக்கக் கொலை வழக்குகள் குறித்த ஒரு புத்தகம், தாந்திரிக் ரிலிஜன் என்றொரு புத்தகம். இந்தக் கடைக்கென்றே அடுத்த வாரத்தில் ஒரு முழு நாளை ஒதுக்க நினைத்திருக்கிறேன்.

கிழக்கு அரங்கில் இன்று நான் அதிக நேரம் இல்லை. இருந்த நேரத்தில் மணிரத்னம், ஜெயமோகனுடன் வந்தார். பந்தா இல்லாமல் எளிமையாகப் பழகி, இனிமையாகப் பேசி, சில புத்தகங்கள் வாங்கினார். ஜெயமோகன் என்னுடைய டாலர் தேசத்தைச் சுட்டிக்காட்டி, ‘பாராவின் சூப்பர் ஹிட் புத்தகம் இது’ என்றார். ‘ஒன் ஆஃப் தி சூப்பர் ஹிட்ஸ்’ என்று சரித்திரப் பிழை நேராமல் காப்பாற்றினேன். உலோகம் நாவலின் வடிவத்தை மணிரத்னம் மிகவும் சிலாகித்தார். தரமான அட்வென்ச்சர் நாவல்கள் ஏன் தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை என்பது குறித்துச் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

கிழக்கில் அல்ல.

பிறகு திரும்பவும் பப்ளிகேஷன் டிவிஷனுக்குச் சென்று மீண்டுமொரு முறை சுற்றினேன். மேலும் சில புத்தகங்கள் வாங்கிக்கொண்டு கிழக்கு சந்துக்கு வந்து உட்கார்ந்தேன். ராம்கி, அப்துல்லா, சுரேகா, யுவ கிருஷ்ணா, கேபிள் [பிரபல பதிவர்], அதியமான், மருதன் என்று நண்பர்கள் உடனிருந்ததால் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். இந்த ஆண்டு கிழக்கின் சூப்பர் ஹிட் எது என்று யாரோ கேட்டார்கள். காஷ்மீரா உலோகமா ஆர்.எஸ்.எஸ்ஸா என்று நேற்றுவரை பேசிக்கொண்டிருந்தோம். இன்று குஹாவின் இந்திய வரலாறு இரண்டாம் பாகமும் மருதனின் முதல் உலகப்போரும், ச.ந. கண்ணனின் ராஜராஜ சோழனும், திராவிட இயக்க வரலாறின் முதல் பாகமும் வந்துவிட்டபடியால் போட்டி அதிகரித்து ஓட்டு கண்டபடி சிதற ஆரம்பித்திருக்கிறது. இன்னும் நாலைந்து நாள் போகாமல் எந்தப் புத்தகம் என்று சரியாகச் சொல்ல முடியாது. [இன்றைய டாப் செல்லர் ராஜராஜ சோழன் என்று இதை எழுதிக்கொண்டிருக்கும்போது பிரசன்னா எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். கண்ணனுக்கு கங்கிராட்ஸ்.]

குழந்தைகளுக்கும் குழந்தை மனம் கொண்டோருக்கும்

ஆனால் இப்போதே உறுதியாகச் சொல்லக்கூடியது, இந்த வருடத்து கிழக்கு புத்தகப் பை. இது மிகப்பெரிய ஹிட் என்பதைப் பல இடங்களில் பலபேர் பேசிக்கொண்டிருந்ததில் இருந்து உணர முடிந்தது. ரொம்பப் பெரிதுமில்லை, சிறிதுமில்லை. ஒரு குட்டிச் செவ்வகப் பை. ஆனால் நிறையக் கொள்கிறது. உறுதியான பிடிமானம். நல்ல கனம் தாங்குகிறது. இந்த சைஸுக்கான ஐடியா யாருடையது என்று தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். ஆனால் பார்த்த அத்தனை பேரையும் காதல் கொள்ளச் செய்திருக்கிறது.

நாளைக்கு முழுக்க முழுக்க கிழக்கு அரங்கில், குறிப்பாக ப்ராடிஜி ஏரியாவில் இருக்கத் திட்டமிட்டிருக்கிறேன். இந்த வருடம் ப்ராடிஜிக்கு வருகிற குழந்தைகளுக்கெல்லாம் பலூன் கொடுக்கிறோம், தெரியுமோ?

[பி.கு: கிழக்கு புத்தகப் பையின் படத்தைப் போட இங்கே இடமில்லாத காரணத்தால் இங்கே போட்டிருக்கிறேன். பார்த்துக்கொள்ளவும்.]

15 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற