இன்றே கடைசி

34வது சென்னை புத்தகக் கண்காட்சி வெற்றிகரமாக இன்று முடிவடைந்தது. கடந்த 13 நாள்களில் வராத கூட்டமெல்லாம் இன்று வந்துசேர, வளாகம் மகத்தான மக்கள் வெள்ளத்தில் அழகாகக் காட்சியளித்தது. என் இடைவிடாத 13 நாள் பிரார்த்தனைக்கும் பலனாக இன்று வாசல் ஈட்டிக்காரக் கூட்டத்துக்கும் மக்கள் அதிகம் செவி சாய்க்கவில்லை.

காலை முதலே அனைத்துக் கடைகளிலும் நல்ல விற்பனை இருந்தது. இதுநாள் வரை தவற விட்டவர்களும், வாங்கவேண்டியவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு மொத்தமாக இன்று அள்ளிச் செல்ல வந்தவர்களும் குடுகுடு குடுகுடுவென்று குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ஒரு நல்ல மனிதர் கடைதோறும் ஏறி இறங்கி கேட்லாக் சேகரித்துக்கொண்டிருந்தார். முதலில் யாராவது விற்பனையாளராக இருக்கும் என்று நினைத்தேன். விசாரித்தபோது அவர் ஒரு நல்ல வாசகர்தான் என்று தெரிந்தது. புத்தகக் கண்காட்சியில் கேட்லாக்குகளைச் சேகரித்துக்கொண்டு சென்றுவிடுவாராம். பிறகு ஆற அமர நியூபுக்லேண்ட்ஸுக்குச் சென்று, தேர்ந்தெடுத்த ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்குவாராம். பத்து பர்செண்ட் தள்ளுபடி ஒரு பொருட்டில்லை; ஏனோ எனக்கு இங்கே கூட்டத்தில் வாங்கப் பிடிப்பதில்லை என்று சொன்னார்.

இன்று காலை நான் என் சொந்தக் கணக்குக்கு மிச்சமிருந்த சில புத்தகங்களை வாங்கினேன். கட்டக்கடைசி தினம் வரை இந்த கம்யூனிஸ்ட் கடைக்காரர்கள் மட்டும் க்ரெடிட் கார்ட் வாங்கவே மாட்டேன் என்று ஒரே பிடிவாதம். [சில சிறு பதிப்பாளர்கள்கூட ஜனதா க்ரெடிட் கார்ட் வசதிக்கு ஒப்புக்கொண்டார்கள்.] நவீன யுகத்தில் இப்படியெல்லாம் கன்சர்வேடிசம் காப்பாற்றி என்ன புரட்சி செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.

மதியத்துக்குப் பிறகு கிழக்கு அரங்கிலேயே பெரும்பாலும் இருந்தேன். மினிமேக்ஸ் சமையல் புத்தகங்களும் ப்ராடிஜி புத்தகங்களும் கொத்துக் கொத்தாகப் பறந்துகொண்டிருந்தன. இவற்றுடன் ஒப்பிட்டால் இன்று கிழக்கின் வேகம் சற்றுக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். ஆயினும் வாங்கியவர்களுள் பெரும்பாலும் பத்து சுஜாதா, ஐந்து வள்ளியப்பன், மூன்று ஜெயமோகன் என்று மொத்த மொத்தமாகத்தான் வாங்கினார்கள். எழுதி எடுத்து வந்து ஒவ்வொன்றாக அள்ளிப் போட்டு டிக் அடித்துச் சென்றவர்களே இன்று அதிகம். நின்று நிதானமாகத் தேடி வாங்கியவர்களெல்லாம் நேற்றோடு சரி.

மாலை ரோசா வஸந்த் வந்தார். மதியத்திலிருந்தே சுற்றிகொண்டிருப்பதாகச் சொன்னார். அரங்குக்கு உள்ளேயும் பிளாட்பாரக் கடைகளிலுமாக இரு தினங்களாக எக்கச்சக்கமாக வாங்கிச் சேர்த்திருக்கிறார். அவர் வாங்கிய புத்தகங்களைப் பற்றிக் கொஞ்சம் விசாரிக்க நினைத்திருந்தபோது யாரோ கூப்பிட, தொடர்ந்து உரையாட முடியாமல் போனது. இந்தப் பக்கம் எழுத்தாள இரட்டையர் சுபா வந்தார்கள். ஜெயமோகனின் உலோகத்தை வாங்கிக்கொண்டு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பேசியதில் பெரும்பகுதி சினிமா விஷயம். 26/11 பற்றிய புத்தகங்கள் குறித்து விசாரித்தார்கள். பெங்குயின் வெளியிட்டிருக்கும் ‘கஸாப்’ பற்றிச் சொல்லி அனுப்பினேன். சமீபத்தில் நான் விரும்பிப் படித்த புத்தகம் அது. பரபரவென்று ஓடுகிற மொழியும் சம்பவங்களும் சமகால சரித்திரம் எழுதுவோருக்கு மிகவும் பிடிக்கும்.

சில வலையுலக நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள், ஒரு சில சினிமாக்கார நண்பர்கள் என்று இன்று நிறைய சந்திப்புகள், சிறு உரையாடல்கள். இரவு எட்டு மணிவரை கண்காட்சியில் இருந்தேன். மிகவும் சோர்வாக இருந்தபடியால் புறப்பட்டுவிட்டேன். திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றதற்கு [முகலாயர்கள்]  திருஷ்டி கழிப்பதற்காக, இன்று கண்காட்சியில் முகில் தன் மொபைலைத் தொலைத்தது 34வது சென்னை புத்தகக் காட்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக நிச்சயம் இருக்க முடியாது.

சில பொதுவான கவனிப்புகள்:

1. மக்கள் நிச்சயமாக நிறையவே புத்தகம் வாங்குகிறார்கள். விலை யாருக்கும் ஒரு பொருட்டாக இல்லை.
2. வரலாறு அதிகம் விரும்பப்படுகிறது. அதிகம் விற்கிறது. இந்தளவு வேறெந்தத் துறை சார்ந்தும் பிரமாதமான விசாரிப்புகள் இருப்பதாக எனக்குப் படவில்லை.
3. சமையல் புத்தகங்களுக்கான மார்க்கெட் அப்படியே இருக்கிறது. கொத்துக்கொத்தாக எடுத்துச் செல்கிறார்கள். மருத்துவத் துறையைப் பொறுத்தவரை கசமுசா சப்ஜெக்டுகளுக்கு நல்ல ரீடர்ஷிப் இருக்கிறது. அடுத்தபடியாக இதயம், இதய நோய் தொடர்பான புத்தகங்களுக்கு. இயற்கை உணவு, யோகா, தியானம் போன்ற சப்ஜெக்டுகளில் வருகிற புத்தகங்களுக்கும் கணிசமான வாசகர்கள் இருக்கிறார்கள்.
4. ரஜனீஷ் உள்பட சாமியார்களின் புத்தகங்களுக்குக் கொஞ்சம் ஆதரவு குறைந்திருப்பதுபோல் ஒரு தோற்றம் [எனக்கு] தென்பட்டது. முன்பே ஒரு சமயம் குறிப்பிட்டதுபோல, ஈழம் தொடர்பான புத்தகங்களின் விற்பனையும் குறைந்திருக்கிறது. ஆனால் இந்த சே குவேரா ஜுரம் மட்டும் ஏன் பல்லாண்டு காலமாக ஒரு துளியும் குறையவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
5. மொழி பெயர்ப்பு நூல்களில், அது வரலாறாக இருக்குமானால் நல்ல வரவேற்பு இருக்கிறது. மற்ற துறைகள் சார்ந்த மொழிபெயர்ப்புகள் அத்தனை வேகத்தில் விற்பதாகத் தெரியவில்லை.
6. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் நிறையப்பேர் ஐன்ஸ்டைன், நியூட்டன், எடிசன் போன்ற அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான புத்தகங்களை அதிகம் விசாரித்தார்கள். எண்பது ரூபாய்க்குக் கிடைத்த ரா. கணபதி எழுதிய விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நூலை [200 ரூபாய் மதிப்புள்ளது.] நான் பார்த்தவரை நிறையக் கல்லூரி மாணவர்களே வாங்கிச் சென்றார்கள். சில வருடங்களாக மாணவர்கள் மத்தியில் செங்கோலோச்சிக்கொண்டிருந்த அப்துல் கலாமின் புத்தகங்கள் இந்த ஆண்டு அத்தனை பரபரப்பு ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. விவேகானந்தர்தான் திரும்பவும் ஜெயிக்கத் தொடங்கியிருக்கிறார்.
7. இந்த ஆண்டு இலக்கிய பதிப்பு நிறுவனங்களில் நல்ல கூட்டம், நிறைய விற்பனை இரண்டையுமே காண முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. கவிதைகளும் நிறைய விற்பதாக ஹமீது சொன்னார். இதான் சாக்கு என்று ஏகப்பட்ட திடீர்க் கவிஞர்கள் உருவாகிவிடாதிருக்க எம்பெருமான் காத்தருள வேண்டும். நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுதி ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிகள் கண்காட்சியிலேயே விற்றுத் தீர்ந்தது ஒரு சரித்திர சாதனை. எந்த ஓர் இலக்கியவாதியின் புத்தகமும் இத்தனை வேகத்தில் இதுவரை விற்றதில்லை.
8. பெரும்பாலான பதிப்பு நிறுவனங்கள் ஏனோ இந்த ஆண்டு கண்காட்சிக்கென புதிய புத்தகங்கள் கொண்டுவரவில்லை. கடந்த ஆண்டு நிகழ்ந்த கட்டுக்கடங்காத பேப்பர் விலை உயர்வு காரணமாயிருக்கலாம். கிழக்கு, விகடன், உயிர்மை என்று சில கடைகளில்தான் குறிப்பிடத் தகுந்த அளவு புதிய புத்தகங்களைக் காண முடிந்தது. பல பதிப்பகங்கள் அதிகபட்சம் பத்து அல்லது பன்னிரண்டு புதிய புத்தகங்களோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9. என் தனிப்பட்ட சந்தோஷம், புத்தகக் கண்காட்சிக்கென்று கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பரில் நாங்கள் திட்டமிட்டு உழைத்துக் கொண்டுவந்த அத்தனை புத்தகங்களும் சொல்லி சொல்லி ஹிட் அடித்தன. கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எங்கள் புதிய ஹிட் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம்.
10. இந்த ஆண்டுப் பணிகளை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் தொடங்குவதற்கான ஆரம்ப உத்வேகத்தை இந்தக் கண்காட்சி வழங்கியிருக்கிறது.

அவ்வளவுதான். இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்லவேண்டும். தமிழ் பேப்பரில் பத்ரியும் இட்லிவடையில் பிரசன்னாவும் இதே மாதிரி தினசரி எழுதாதிருந்தால் நான் இப்படி ஒழுங்கு மரியாதையாக தினமும் எழுதியிருப்பேனா என்பது சந்தேகம். அலைந்து திரிந்துவிட்டு அலுப்புடன் வீடு திரும்பி அதன்பின் உட்கார்ந்து எழுதுவது பேரிம்சை. துணைக்கு இரண்டு பேர் இருந்தபடியால்தான் இது சாத்தியமானது. ஒரு மானசீக உந்துதலாக அவர்களுடைய குறிப்புகள் இருந்ததைக் குறிப்பிடவேண்டும். பல எழுத்தாளர்கள், வாசகர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் இரவு பன்னிரண்டுக்குமேல் ஆனாலும் விழித்திருந்து தினமும் இதைப் படிப்பதைக் கண்காட்சியில் சந்தித்தபோது சொன்னதும் சந்தோஷமளித்தது.

இனி ஒருவாரம் நன்றாகப் படுத்துத் தூங்கி எழுந்து சாப்பிட்டு, திரும்பப் படுத்துத் தூங்கி எழுந்து சாப்பிட்டு…

தூக்கம் வருகிறது. குட் நைட்.

33 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற