சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்

தீவிரவாதத்தைவிட பயங்கரமானது ஏதாவது இருக்குமானால், அது சித்தாந்த நம்பிக்கைவாதிகளின் சினிமா விமரிசனங்கள்தான் என்று தோன்றுகிறது.

முதல் நாளே பார்த்திருக்கவேண்டிய ராதாமோகனின் ‘பயணம்’ படத்தை ஒருவாரம் தள்ளி பார்க்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இடைப்பட்ட தினங்களில் ஹரன் பிரசன்னாவும் மருதனும் இந்தப் படத்துக்கு எழுதிய விமரிசனங்களைப் படிக்க நேர்ந்ததால், படம் பார்க்கும் ஆவல் சற்று வடிந்திருந்தது என்பது உண்மை. அதிஷாவின் இந்த விமரிசனமும் படம் ஏமாற்றம் தருவதாகச் சுட்டிக்காட்டியது. இருப்பினும் இன்று தியேட்டருக்குச் சென்றதன் காரணம், இயக்குநரின் முந்தைய படங்கள் என்னைச் சற்றும் ஏமாற்றியதில்லை என்பதுதான்.

மொழி அளவுக்கு அபியும் நானும் தரமான படமல்ல என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அதன் மிகுநாடகத் தன்மை குறித்த பலத்த விமரிசனங்கள் இருந்தாலும் அந்தப் படம் எனக்குப் பிடித்ததற்குச் சில தனிப்பட்ட காரணங்கள் உண்டு. அது இங்கே அநாவசியம். ஆனால் ராதாமோகன் நிச்சயமாக இடது கையால் நிராகரிக்கப்படவேண்டிய இயக்குநரல்ல. தமிழின் தரமான இயக்குநர்கள் பட்டியலில் கண்டிப்பாக அவருக்கு ஓர் இடம் உண்டு. பயணம் அதை அழுத்தம் திருத்தமாக மீண்டுமொருமுறை வலியுறுத்தியிருக்கிற படம். துரதிருஷ்டவசமாகப் போலி அறிவுஜீவிகள் முதலில் பார்த்து கிழிகிழியென்று கிழித்துவிட்டபடியால் பின்னால் வருகிற கருத்துக்குக் காதுகள் கிடைப்பது கஷ்டம்.

பிரச்னையில்லை. இது பயணம் படத்தின் விமரிசனமல்ல. ஒரு வெகுஜன சினிமாவை எப்படிப் பார்க்கவேண்டும் என்று சினிமா பார்க்கத் தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிற கட்டுரை. என் கெட்டநேரம், இப்படியெல்லாமும் ஒரு கட்டுரை எழுதும்படியாக என் நண்பர்களே என்னைத் தூண்டியிருப்பது.

வர்த்தக சினிமா என்பது பணத்தைப் போட்டு, பணத்தை எடுக்கிற தொழில். இதில் அரசியல், மதம் உள்ளிட்ட எந்தக் கருத்துத் திணிப்பு நோக்கமும் பொதுவாக இயக்குநர்களுக்கு இருப்பதில்லை. அப்படி ஏதாவது கண்ணுக்குத் தென்படுமானால் அது முற்றிலும் தற்செயலானதே. அல்லது, அந்தக் குறிப்பிட்ட கருத்துத் திணிப்பு படத்தின் ஓட்டத்துக்கு உதவும் என்று அவர் நம்பியிருக்கலாம்.

பிரசன்னாவின் வாதம், இதில் ராதாமோகன் கிறித்தவத்தைத் தூக்கிப் பிடிப்பதாகச் சொல்கிறது. அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. படத்தில் வரும் கிறித்தவப் பாதிரியார் மிகவும் இயல்பாகத்தான் இருக்கிறார், பேசுகிறார். இறந்த உடலைக் கண்டதும் போலீஸ்காரர்கள் தொப்பியைக் கழட்டுவது போன்றதுதான் பாதிரியார்கள் உடலின் அருகே அமர்ந்து ஜபிப்பதும்.

தீவிரவாதிகள் ஒரு பயணியைச் சுட்டுக்கொன்று விடுகிறார்கள். கொடூரத்தை நேரில் பார்த்து அதிர்ந்த பாதிரியார் அவர்களில் ஒருவனிடம் பேசுகிறார். விமானத்தில் உள்ள மற்றவர்களுக்குக் குடும்பம், குழந்தை குட்டி இருக்கும். நான் ஒண்டிக்கட்டை. அடுத்த அரை மணியில் நீ கொல்லப்போகும் நபராக நானே இருக்கிறேன் என்று சொல்கிறார். இதில் கிறித்தவ பிரசாரம் எங்கே வருகிறது? ஒரு நெருக்கடி நேரத்தில், மூத்த குடிமகன் ஒருவர் மிகச் சரியாக யோசித்துப் பேசும் வசனமல்லவா இது? அது பாதிரியாராக அல்லாமல் வேறு யாராவது பொதுவான கட்டை பிரம்மச்சாரி வயசாளியாக இருந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பார். இதற்கு மதம் தேவையில்லை. மனிதாபிமானம் போதும்.

அதெல்லாம் சரி, இன்னொரு பிரம்மச்சாரி கதையில் இருந்திருக்கலாமே என்று பிரசன்னா கேட்கமாட்டார் என்று நம்புகிறேன். அப்படி இருந்தே தீரவேண்டுமென்றால் அது அவரது விருப்பம். அவர்தான் அப்படியொரு கதை எழுதிப் படமெடுக்க வேண்டும். இன்னொருத்தர் திரைக்கதையில் இது ஏன் இப்படி இருக்கக்கூடாது என்று கேட்பது விமரிசனமல்ல. இது சரி, சரியில்லை என்று சொல்ல மட்டுமே பார்வையாளனுக்கு அனுமதி.

தோழர் மருதன், தமது விமரிசனத்தில் தீவிரவாதிகளின் குரலுக்கு வலு சேர்க்க விடாமல் அடிக்கும் காரணிகளைச் சுட்டிக்காட்டி தன் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.  தீவிரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டியது பற்றி எத்தனை வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால் காஷ்மீர், குஜராத், பாபர் மசூதி குறித்துப் பேசினால் கொய்ங் என்று சத்தம் வந்துவிடுகிறது என்று தன் அறச் சீற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

ரொம்ப நியாயம். விமானத்தைக் கடத்துவது, பயணிகளைக் கொல்வது, பேரம் பேசி, இன்னொரு தீவிரவாதியை விடுவிக்கச் சொல்வது நூறு கோடி ரூபாய் பணமும் கேட்பது, பிறகு அதை மட்டும் வேண்டாம் என்று திடீர் ஞானோதயம் ஏற்பட்டு [அப்படிப் பணம் கேட்பது புனிதப் போர் சித்தாந்தத்துக்கு விரோதம் என்று ஜே.கே.எல்.எஃப் அறிக்கை விட்டிருப்பதாக டிவி நியூஸ் சொல்கிறது – படத்தில். அதைப் பார்த்து மனம் மாறியதாக எடுத்துக்கொள்ளலாம்.] ஒரு கோரிக்கையை மட்டும் முன்வைப்பது, வெளியேறும் தருணத்திலும் சிறு குழந்தையின் பையில் பாம் வைப்பது என்று, புனிதப் பணியில் ஈடுபடுவோரின் குரலுக்கு இயக்குநர் வலு சேர்க்கத் தவறியது மருதனுக்குப் பிரச்னையாகிவிடுகிறது.

என்ன செய்யலாம்? காஷ்மீர் தீவிரவாதிகளை உலக உத்தமர்களாக அறிவித்து மெரினாவில் சிலை வைத்துவிடலாமா?

மருதன் எதிர்பார்ப்பது, பாபர் மசூதியை இடித்தது தவறு, குஜராத்தில் மோடி முன்னின்று நடத்திய மதக்கலவரம் தவறு, காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தவறு என்று மைக் வைத்துப் பேசும் பொதுக்கூட்டம்தான் என்றால், ஒரு த்ரில்லர் சினிமாவில் அது சாத்தியமில்லை.

வெகு ஜனங்களுக்காக எடுக்கப்படும் திரைப்படங்களில் நல்ல சக்தி எது, கெட்ட சக்தி எது என்று பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க ஒரு காட்சி கூட அவசியமில்லை. ஒரு ஷாட் போதும். ஒரு கண் அசைவு போதும். நியாயங்கள், ஒவ்வொருவர் மனத்திலும் எப்போதும் இருப்பது. அதனோடு இயக்குநர் ஒத்துப் போனால் படம் வெல்லும். முரண்பட்டால் தோற்கும். அவ்வளவுதான்.

முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்தானா என்ற அதிஷாவின் அறச் சீற்றத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். கண்டிப்பாகப் படத்தில் அப்படியொரு சித்திரிப்பு எந்த இடத்திலும் இல்லை – என் புரிதலுக்கு உட்பட்ட வரை. ஆனால் தமிழ் சினிமா அல்லது எந்த ஒரு இந்திய சினிமாவும் தீவிரவாதிகளை முஸ்லிம்களாக மட்டுமே காட்டுவதற்கான எளிய நியாயம், இந்தியாவில் இம்மாதிரியான காரியங்களை அவர்கள் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என்பதுதான்.

உடனே குஜராத்தில் ஹிந்துக்கள் செய்யவில்லையா, மாலேகானில் சாமியார் சம்மந்தப்படவில்லையா என்று மைக் பிடிக்கப்போய்விடுவார் மருதன். உண்மை. மறுக்க முடியாது. ஆனால் விமானக்கடத்தலில் ஈடுபடக்கூடிய ஹிந்து தீவிரவாத இயக்கம் என்ற ஒன்று இதுநாள் வரை இல்லை என்பதையும் மறுக்க முடியாது. [இந்தியாவில் உள்ள முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களும் இதைச் செய்ததில்லை. அதனால்தான் இயக்குநர் கவனமாக பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களாக அவர்களைக் காட்டுகிறார்.] பிரச்னையில்லாத கனவுப் பாடல் காட்சிகளையும், கதைக்குத் தேவையில்லாவிட்டாலும், உற்சாகம் தரக்கூடிய அடிதடி ஆக்‌ஷன் காட்சிகளையும் கற்பனையாக வைக்கும்போது ரசிப்பது பாமர ரசிக மனம். அதுவே, ஒரு திரைப்படத்தின் உயிர்நாடியான விஷயத்தைக் கற்பனையாக புனைந்து உருவாக்கும்போது உடனடியாக முரண்பட்டு எழுந்து போய்விடுவது இயல்பான விஷயம். படத்தில் ஏன் விமானம் கடத்துபவர்கள் முஸ்லிம்களாகக் காட்டப்படவேண்டுமென்றால், வேறு யாரும் இந்தியாவில் விமானம் கடத்தியதில்லை என்பதுதான் பதில்.

தோழர், தீவிரவாதிகள் இஸ்லாமியர்களுக்கேகூட எதிரானவர்களாக [முஸ்லிம் சிறுமியின் பையில் பாம் வைப்பது] சித்திரிக்கப்படுவது பற்றியும் கவலைப்பட்டிருக்கிறார். கொஞ்சம் சரித்திரம் தெரிந்துகொள்வது நல்லது.

பிப்ரவரி 23, 1998ம் ஆண்டு அல் காயிதா ஒரு ஃபத்வா வெளியிட்டது. அமெரிக்காவுக்கு எதிரான ஃபத்வா.

‘இஸ்லாத்துக்கு எதிரானவர்களின் மீது போர்தொடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை. வளைகுடா பகுதியிலிருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலுமாக விரட்டியடிப்பது அவசியம்.’ என்பதுதான் அந்த ஃபத்வாவின் சாரம். இந்த ஃபத்வாவை மே மாதம் 7ம் தேதி, அல் காயிதாவின் அப்போதைய தளபதியான முகம்மது அடஃப், லண்டனிலுள்ள அல் காயிதா அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் செய்தார். லண்டனிலிருந்து வெளியாகும் அரபு செய்தித்தாளான அல் – கத்ஸ் – அல் அரபி (Al quds al Arabi) அந்த ஃபத்வாவைப் பிரசுரித்தது [மே 8ம் தேதி.]

இதன் தொடர்ச்சியாக ஏபிசி தொலைக்காட்சிக்கு ஒசாமா பின்லேடனின் பேச்சு அடங்கிய வீடியோ டேப் ஒன்று அனுப்பப்பட்டு, ஒளிபரப்பானது. இந்த ஃபத்வா வரிகளை மீண்டும் அதில் உறுதிப்படுத்திவிட்டு, “ராணுவ வீரர்கள், சிவிலியன்கள் என்று நாங்கள் பார்க்கமாட்டோம். எதிரிகள் எதிரிகள்தான். அமெரிக்க அரசுக்கு வரி செலுத்தும் அத்தனை பேருமே எங்கள் இலக்கு” என்று அதில் அவர் சொல்லியிருந்தார்.

சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 7ம் தேதி நைரோபியிலும் [கென்யா] தர் ஏ சலேமிலும் [தான்சானியா] உள்ள அமெரிக்கத் தூதரகங்கள்மீது அல் காயிதா தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியது. நைரோபியில் சுமார் இருநூறு பேர் இந்தத் தாக்குதலில் இறந்தார்கள் என்று நினைவு. தர் ஏ சலேமில் பதினொரு பேர் இறந்தார்கள். அத்தனை பேரும் முஸ்லிம்கள்.

இது குறித்துப் பிறகு ஒசாமா பின்லேடன் வெளியிட்ட அறிக்கை இப்படி இருந்தது: “அமெரிக்கர்களைக் கொல்வதுதான் எங்கள் நோக்கம். அமெரிக்கர் அல்லாதோரையும் சேர்த்துக் கொன்றால்தான் அமெரிக்கர்களையும் கொல்லமுடியும் என்றால் அதற்கு நாங்கள் தயாராகவே இருந்தோம். தாக்குதலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தாலும் கவலைப்படுவதற்கில்லை. அதுவும் அனுமதிக்கப்பட்டதே.”

இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல. இராக்கில், பாலஸ்தீனத்தில் இன்னபிற மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமியப் போராளிகளின் தாக்குதலில் அமெரிக்கர்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது, பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது அப்பாவி மக்கள்தாம். அவர்களும் முஸ்லிம் அல்லவா என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை.

சிறுமியின் பையில் தீவிரவாதி பாம் வைத்தது பற்றி தோழர் மருதனின் பதற்றம் சற்று அதிகம் என்று தோன்றியதால் இந்த விளக்கம்.

அடிப்படையில் ஒரு விஷயம். இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்னும் பதம் தவறானது. தீவிரவாதிகளில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள் என்பதுதான் சரியான புரிதல். ஹிந்து மதம், கிறித்தவ மதம், யூத மதம் இன்ன பிற மதங்கள் எதிலிருந்தும் தீவிரவாதிகள் உருவாகலாம். அவரவருக்கான நியாயங்கள், நோக்கங்கள், அவரவருடையவை. இந்திய கிரிமினல் சட்டங்களைப் பொருத்தவரை தீவிரவாதிகளுக்கான தீர்ப்பு அல்லது தண்டனை என்பது ஒரே விதமானதுதான். அது மதங்களைக் காண்பதில்லை. இது மக்களுக்குப் புரியாததும் இல்லை. ஹிந்து என்பதால் நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிடாமலும் இல்லை. முஸ்லிம் என்பதால் அப்துல் கலாமை நாம் ஜனாதிபதி ஆக்காமலும் இல்லை,

ஒரு தீவிரவாதியை முஸ்லிமாகக் காட்டுவதாலேயே முஸ்லிம் விரோத மனப்பான்மை வளர்ந்துவிடும் என்று அறிவுஜீவிகள் பதற்றப்படுவது தமாஷாகத்தான் இருக்கிறது. மக்கள் அத்தனை மாங்காய்கள் அல்லர்.

மற்றபடி இந்தப் படம் ஒரு தெளிவான, சுவாரசியமான த்ரில்லர். மசாலாவுக்கு நிறைய சாத்தியங்கள் இருந்தும் கூடுமானவரை மையக் கருவை விட்டு நகராமல், எதையுமே மிகைப்படுத்தாமல் மிக இயல்பாக ஒரு கடத்தல் சம்பவத்தை விவரிக்கிறது. அத்தனை பதற்றத்தில் ஜோக்கடிப்பார்களா, மிமிக்ரி செய்வார்களா என்றெல்லாம் நமது உன்னத விமரிசகர்கள் கேட்கிறார்கள். பயம் மட்டுமல்ல; மகிழ்ச்சியும் துக்கமும் கோபமும்கூட குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு மாறக்கூடிய உணர்ச்சிகளே. சாவு வீட்டில் கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்துபோய் காப்பி போட்டு சாப்பிடுவதில்லையா? இறந்தவருக்காக வருந்தி இருப்பவர்கள் சாகும்வரை உண்ணாவிரதமா இருக்கிறார்கள்?

அறிவுஜீவி விமரிசகர்களுக்கு இயல்பாக இருப்பது சிரமமாக இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. என்னை ஓர் அறிவுஜீவியாகப் படைக்காமல் ரசனை உள்ளவனாகப் படைத்தமைக்காக.

படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்னைவிட நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள்.

51 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற