வண்டி ரிப்பேர்

இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்போர் அனுபவிக்கக்கூடிய நூதன அவஸ்தைகள் எதையும் எம்பெருமான் எனக்கு இதுநாள் வரை அளித்ததில்லை. ஓரிரு விபத்துகள், ஒரு சில சிராய்ப்புகள், வண்டிக்குச் சில பழுதுகள் என்னும் நியாயமான கஷ்டங்களை மட்டுமே அனுபவித்திருக்கிறேன். 1993ம் வருடத்திலிருந்து நான் மொப்பெட், ஸ்கூட்டர் என்று ஓட்டி வந்திருக்கிறேன். சொல்லப்போனால் பஞ்சர்கூட நாலைந்து முறைக்குமேல் ஆகியிருக்காது. வண்டிக்கு நானும் எனக்கு என் வண்டியும் எப்போதும் விசுவாசமாகவே இருந்து வந்திருக்கிறோம்.

சமீப நாள்களாக ஒரு புதிய பிரச்னை. நானோ என் வண்டியோ எந்தத் தப்பும் செய்யாமலேயே தொடர்ந்து அடுத்தடுத்து சில பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறோம். எதன்பொருட்டும் யார் மீதும் அணுவளவு கோபமும் உண்டாகாதவன் என்னும் என் புராதன இருமாப்பை அசைத்து, ஒரு துர்வாசராக என்னை மனத்துக்குள் உருக்கொள்ளச் செய்யும் விதமான ஒரு சில்லறைப் பிரச்னை.

பத்து நாள்களுக்கு முன்னர் ஒரு சொந்தக் காரியமாக நந்தனம் வரை போயிருந்தேன். போன இடத்தில் வேலை முடிய அரை நாள் ஆனது. வெளியே வந்து வண்டியை எடுத்து, தன்னியல்பாக வலக்கை கட்டை விரலால் குயிக் ஸ்டார்ட்டரை அழுத்தினால் அது இயங்கவில்லை. பொருட்படுத்தாமல் காலால் உதைத்துக் கிளம்பிப் போய்விட்டேன்.

மறுநாள் மீண்டும் ஸ்டார்ட் செய்யும்போதுதான் அந்தப் பிரச்னையை முழுக்க கவனித்தேன். குயிக் ஸ்டார்ட்டர் பொத்தானை யானை ஏறி மிதித்தது மாதிரி அமுங்கி உள்ளே போய்விட்டிருந்தது. உடைத்து எடுத்து உள்ளே வைத்து அழுத்தினால்கூட அளவெடுத்த இடத்தில் சரியாகத்தானே நுழையும்? எந்த மகானுபாவனோ மெனக்கெட்டு உடைத்தெடுத்து, கோணலாக உள்ளே சொருகி அசைக்கமுடியாதபடி செய்திருந்தார்.

சம்பவம் நடந்து சரியாக நான்கு நாள்கள் கழித்து, வழக்கம்போல் ஒருநாள் காலை அலுவலகத்துக்குப் புறப்பட்டபோது வண்டி ஸ்டார்ட் ஆனது, ஆனால் என்ன ரெய்ஸ் செய்தாலும் பத்து கிலோமீட்டர் வேகத்துக்குமேல் போக மறுத்தது. மெயின் ரோடில் பெருமாள் புறப்பாடு மாதிரி ஜவ்வு ஜவ்வென்று அது இழுத்து இழுத்து நடக்க, பின்னால் வந்தவர்கள் ஹாரன் அடித்து அடித்து காதைச் சுட்டெரித்தார்கள். காலை நேரம் மெக்கானிக் கடைகள் ஏதும் வழியில் திறந்திருக்கவில்லை. தட்டுத்தடுமாறி ஆபீஸ் போய்ச் சேர்ந்தேன்.

மதிய உணவு நேரத்தில் எஸ்.ஐ.ஈ.டி சாலையில் உள்ள ஒரு ஹோண்டா சர்வீஸ் செண்டருக்கு வண்டியை எடுத்துச் சென்று இரண்டு பிரச்னைகளையும் சொல்லி ரிப்பேர் பார்க்கச் சொன்னேன். ஒரு மணி நேரத்தில் வண்டி சரியாகிவிட்டது. யாரோ ரொம்ப மெனக்கெட்டு குயிக் ஸ்டார்ட்டரை நோண்டியெடுத்து கோணலாகச் சொருகி வைத்திருந்ததைச் சொன்ன மெக்கானிக்காகப்பட்டவர், வண்டி பத்து கிலோமீட்டர் வேகத்துக்குமேல் ஓடாததன் காரணத்தைச் சொன்னபோதுதான் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

குச்சி அல்லது கம்பியின் நுனியில் பொறுமையாக நிறைய பஞ்சை சுருட்டி, அதைப் புகைபோக்கியின் துவாரம் வழியே உள்ளே விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வைத்திருக்கிறார்கள்!

இது எப்போது செய்யப்பட்டதோ தெரியவில்லை. புகை சரியாக வெளியேற வழியின்றி, கார்புரேட்டர் அடைப்பு ஏற்பட்டு வண்டி ஆஸ்துமா நோயாளி மாதிரி இழுத்துக்கொண்டுவிட்டது.

அடக்கஷ்டமே. நான் ஒரு கவிஞன் கூட இல்லையே? என்னை ஏன் பழிவாங்க நினைக்கவேண்டும்? இது யாருடைய வேலையாக இருக்கும்?

தெரியவில்லை. விட்டுவிட்டேன்.

இன்று அலுவலகத்திலிருந்து மாலை வீட்டுக்குப் புறப்பட்டு, கீழே இறங்கி வந்தேன். வண்டியை நெருங்கும்போதே அதிர்ச்சி காத்திருந்தது. ரியர் வியூ மிரர்களுள் ஒன்றின் நட்டை வேலை மெனக்கெட்டு யாரோ திருகி பாதி கழட்டிவிட்டு, கழட்டியது தெரியாமல் ரப்பர் உறையை ஒழுங்காக வைத்து மூடியிருந்தார்கள். ஒரு கண்ணாடி ஒழுங்காக இருந்தது. எதிர்ப்பக்கக் கண்ணாடியின்மீது யாரோ இந்தியன் தாத்தா நரம்படித் தாக்குதல் தொடுத்தது மாதிரி கோணிக்கொண்டு வ்வே என்று வானம் பார்த்திருந்தது. தொட்டதும் சொய்யாவென்று சுழன்று நின்றது கண்ணாடி.

எண்ணி பத்து நாள்கள். மூன்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான நூதனத் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டது என் வண்டி. இது, இதோடு முடியுமா இன்னும் தொடருமா என்று தெரியவில்லை. ப்ரூனோ, க.ர. அதியமான் போன்ற சோதிட வல்லுநர்கள் மே மாதம் வரை எனக்கு கிரகங்கள் பிரமாதமான பலன்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று புத்தகக் கண்காட்சி சமயம் தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தார்கள். அப்படி ஏதாவது வரும்போது நாம் கவனிக்காமல் தூங்கிவிடக்கூடாதே என்று ராவெல்லாம் விழித்திருந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பிரமாதம் ஏதும் இதுவரை வரவில்லையென்றாலும் இப்படிப்பட்ட இடைவிடா இம்சைகளுக்குக் குறைவே இல்லாமல்தான் இருக்கிறது. பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை உற்பாதங்களால் என்னை கவனிக்கும் கிரகங்களுக்கு என்னவாவது ஆகியிருக்கிறதோ தெரியவில்லை. ஏற்கெனவே ஜூன் மாதத்துக்குப் பிறகு கிரகங்கள் என்ன பாடு படுத்தப்போகின்றனவோ என்கிற கவலை வேறு வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. மே வரையிலாவது நிம்மதியாக இருக்க முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. என்ன எழவெடுத்த கிரகங்கள் இவை!

கலைஞருக்குக் கூட சோதிடர்கள் கண்டிப்பாக இப்படித்தான் சொல்லியிருப்பார்கள். மே மாதம்வரை உங்களுக்கு கிரகங்கள் உச்சம். எந்தச் சிக்கலும் இருக்காது.

அவரும் என் ராசிதான். கடவுளே, இருவரில் ரொம்ப நல்லவரான ஒருவரையாவது நீ காப்பாற்றித்தான் ஆகவேண்டும்.

22 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற