புரட்சி 2011

வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு தேசங்களில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் புரட்சி குறித்த என்னுடைய புதிய புத்தகம் ‘2011: சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ இன்று வெளியாகிறது.

துனிஷியப் புரட்சி வெற்றியடைந்து எகிப்தில் அது தொடர்ந்தபோது சிலிர்த்துக்கொண்டு கவனித்தோம். பிறகு சட்டமன்றத் தேர்தல், உலகக்கோப்பை என்று கவனம் மாறிவிட்டது. லிபியத் தலைவர் கடாஃபி தம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ராணுவத்தை ஏவி விட்டதையும், காத்திருந்த அமெரிக்கா, விமானத் தாக்குதல் நடத்தத் தொடங்கியதையும் நான்காம் பக்கச் செய்தியாக இன்றும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஒன்றல்ல, இரண்டல்ல. பத்தொன்பது நாடுகள். பணக்கார நாடுகள் என்று பொதுவில் சொல்லப்படும் இந்த தேசங்களின் சுரண்டல் வரலாறு தெரிந்தால்தான் இந்த மக்கள் எழுச்சியின் அடிப்படை புரியும்.

இத்தனை தேசங்களில் ஒரே சமயத்தில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் புரட்சி நடப்பது உலக சரித்திரத்தில் இது முதல் முறை. துனிஷியா ஒரு தூண்டுகோல்.

கொடுங்கோன்மைக்கு எதிரான மக்களின் கோபம் வெளிப்படும் அதே சமயம், இது ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட, தெளிவான, தீர்மானமான ஜனநாயக ஆட்சி முறைக்கு வித்திடக்கூடிய அளவுக்கு வீரியமுள்ள புரட்சிகள்தானா என்கிற சந்தேகமும் உள்ளது. அதற்கான நியாயமான காரணங்களை மத்தியக் கிழக்கு தேசங்களின் சரித்திரம் நமக்கு எடுத்துவைக்கிறது. ஆயினும் இதுநாள்வரை தொடர்ந்த கடைந்தெடுத்த சர்வாதிகார அவலத்தின் வீரியம் இனி அவசியம் குறையும் என்றே கருதுகிறேன். ஒருவழியாக கடாஃபி தூக்கியெறியப்பட்டுவிட்டால் [இன்னும் கொஞ்சநாளில் நடந்துவிடும்] இந்த நம்பிக்கை மேலும் உறுதிப்படும். முற்றிலும் மேற்கு மயமாக இல்லாவிட்டாலும், இஸ்லாமிய நாடுகள் தமக்கென ஒரு வரையறுக்கப்பட்ட ஜனநாயகப் பாணியை வகுப்பது சார்ந்த அடுத்தக்கட்ட முயற்சிகள் அதன்பின் ஆரம்பமாகும்.

தனி நபர்களோ, இயக்கங்களோ பின்னணியில் இல்லாமல், முற்றிலும் மக்களே தன் விருப்பமாகத் தொடங்கி முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கும் இந்தப் புரட்சிகளின் முழுமையான பின்னணியை சுருக்கமாகவேனும் எடுத்து எழுத நினைத்தேன். கடந்த மாதம் அதைத்தான் செய்தேன். இப்போது புத்தகம்.

இந்நுலை எழுதுவதற்கு முன்னும், எழுதி முடித்த பிறகும் நண்பர் நரேனிடம் இந்த விஷயம் குறித்து நிறைய விவாதித்திருக்கிறேன். மத்தியக் கிழக்கு எண்ணெய் அரசியல் தொடர்பாக நான் எழுதிக்கொண்டிருந்தபோது, அதே விஷயத்தில் தீவிர ஆர்வம் கொண்டு ஆய்வு செய்துகொண்டிருந்த அவரது கூர்மையான விமரிசனங்களும் ஆக்கபூர்வமான தகவல் உதவிகளும் எனக்கு மிகவும் உதவின. இந்நூலின் முதல் வாசகராக, இதைப் படித்து, விமரிசித்ததோடு அல்லாமல் ஒரு மதிப்புரையும் எழுதியிருக்கிறார். நாளை தமிழ் பேப்பரில் அது பிரசுரமாகிறது.

இந்தப் புத்தகத்தை என் பிரியமான நண்பர்கள் ராஜேஷ், தினேஷ், சுரேஷ் மூவருக்கும் அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே செல்லலாம்.

10 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற