பதினாறு சீர் பரோட்டா

ட்விட்டரில் பதினாறு சீர் பரோட்டா சுடுவதற்கு நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என் பங்குக்கு இது. வெண்பாம் போலவே இதற்கும் இலக்கணம் ஒன்றுதான். இலக்கணம் பார்க்கக்கூடாது என்பதுதான் அது! ஒருவேளை சரியாக இருக்குமானால் அது முற்றிலும் தற்செயலே. மீட்டர், சந்தம், எதுகை-மோனை  இவை மட்டும் சரியாக இருக்கும்.

ஆவியெழு காப்பியுடன் தந்தி கேட்பேன்
அடுத்தடுத்த செய்திகளில் காரம் கேட்பேன்
பாவமென நினையாது பலபேர் நடுவில் முன்னே
பாலிடிக்ஸில் பணபேரம் சரியே என்பேன்
கூவியழு தலைவர்களைக் குத்திக் காட்டி
கொள்கையெனும் புடலங்காய் எங்கே என்பேன்
பாவிமகன் தேர்தலுக்கு வாசல் வந்தால்
பவர்கட்டைச் சொல்லிநிதம் புலம்பு வேனே.

இலவசமாய் டிவியெனில் சரியே என்பேன்
இலாப்டேப்பும் இன்னபிற பிச்சை எல்லாம்
பலவருசம் கொடுக்காத பாவத்தால் தான்
பதவிஇப்ப ஆடுதென்று பாடம் சொல்வேன்
இலையரசி, கலையரசர், இளைஞர் காங்க்ரஸ்
இருட்டுக்கடை ஆசாமி யார் வரினும்வந் தாலும்
தலையெழுத்து மாத்துவியா என்று கேட்டு
தண்ணிவண்டி சந்தினிலே ஒதுங்கு வேனே.

ஓட்டுக்கு நோட்டெடுத்து வைப்பாய் என்பேன்
வீட்டுக்கு வாஷிங்மெஷின் வேணும் என்பேன்
ரோட்டுக்கு வந்துவிட்டால் ரொட்டீன் இதெல்லாம்
ரொட்டிக்கு சப்ஜிபோலத் தருவாய் என்பேன்
காட்டுக்குப் போகும் வரை காசளித்து
கடைசிவரை எனையாண்டு கொள்வா யென்று
ரேட்டுக்கு எனைப்பேசி விற்பேன் பாரீர்
ரெஸ்யூமில் எனது பெயர் தமிழன் தானே

எழுதிப் போட்டு, ட்விட்டரில் அறிவிப்பும் கொடுத்த பிறகு எண்ணிப் பார்த்தால் எண்சீர் விருத்தமாக வந்திருக்கிறது .  நண்பர்கள் மன்னிக்கவும். பதினாறு சீர் பரோட்டா பிறகு போடுகிறேன்.

[பிகு: இதைப் படித்துப் பார்த்த என் மதிப்புக்குரிய கவிஞர் ஹரிகிருஷ்ணன் மூன்று இடங்களில் டிங்கரிக் செய்தால் ப்ராப்பர் எண்சீர் விருத்தம் என்று சொன்னார். செய்தது, ஆங்காங்கே அடித்ததற்கு அருகே. ஆனால் இலக்கணம் எத்தனை பேஜார் பாருங்கள்? இருட்டுக்கடைக்கு க் போடக்கூடாதென்பது அராஜகமல்லவா?]

3 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற