ஓர் [அபாய] அறிவிப்பு

நாட்டில் இன்னும் கதை படிக்கிற நல்லவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. தமிழ் சமூகம் தனது வாசிப்பு விருப்பத்தைக் கதையல்லாத எழுத்துப் பக்கம் திருப்பிக்கொண்டு பல காலமாகிவிட்டது என்பது என் கருத்து. இதைப் பலமுறை இந்தப் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கிறேன். புனைவு என்பது இப்போது பெரிய மற்றும் சிறிய திரைகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற சிறுகதை, நாவல் முயற்சிகள், அவற்றுக்குரிய நியாயமான கவனிப்பைப் பெறுவதில்லை என்னும் வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. மாதாந்திர அவஸ்தைக் கழிவுகளை நான் இவ்வகையில் சேர்க்கவில்லை.

இந்த வருத்தம், அவசர வாழ்வுசார் ஆயத்த எழுத்துகள், மண்டையிடி ஆய்வுகளைக் கோரும் புத்தக வேலைகள், இன்னபிற ஈடுபாடுகள் அனைத்தையும் தாண்டி ஒரு பெரிய கதைக்கான கருவும் களமும் புத்தியில் வந்து இப்போது உட்கார்ந்திருக்கின்றன. விட்டேனா பார் என்று பிடித்துப் பேயாட்டம் ஆடுகிறது. கதை என்று என்ன தோன்றினாலும் இனி சினிமாவுக்கான வடிவில் மட்டுமே எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச காலத்துக்குத் தமிழில் அங்கேதான் புனைவு தழைக்கப்போகிறது என்று சிவல்புரி சிங்காரத்தின் ஒன்றுவிட்ட கொள்ளுத்தாத்தா சொல்லியிருக்கிறார்.

ஆனால் எழுதிப் பார்த்தபோது திருப்தி வரவில்லை. பாரம்பரிய வடிவிலேயே முதலில் எழுதிவிடலாம் என்று தோன்றியது. என்ன இப்போது? எல்லாம் ஒழுங்காக முடிந்தால் இன்னொரு வடிவத்துக்குப் பிறகு மாற்றிக்கொள்ளலாம். இப்போதைக்கு இதைக் கீழே இறக்கியாகவேண்டும்.

எனவே வாசக நண்பர்களே, விரைவில் இங்கே ஒரு  கதாசாகர பிரவாகப் பெருவெள்ளம் சூழப்போகிறது. நான் ரொம்ப நல்லவன் என்பதாலும், இலக்கியவாதி இல்லை என்பதனாலும் இந்த முன்னெச்சரிக்கை. கதை அலர்ஜி உள்ளவர்கள் பின்னங்கால் பிடறியில் பட ஓடியே போய்விடவும். எப்பேர்ப்பட்ட பிரம்ம ராட்சசனையும் எதிர்த்து நிற்கும் துணிவுள்ளவர்களுக்கு நல்வரவு. நீங்கள் கமெண்ட் போட்டாலும் போடாவிட்டாலும் கச்சாமுச்சாவென்று கத்தினாலும் கதறினாலும் அழுதாலும் தொழுதாலும் பாராட்டினாலும் புகழ்ந்தாலும் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடினாலும் தூக்கிக் கடாசி உருட்டி விளையாடினாலும் – என்ன செய்தாலும் இது தொடரும்.

பத்திரிகைகள் எதிலும் தொடராக வராத, வரப்போகாத, புத்தகமாக வர வாய்ப்பில்லாத, வருவதை நான் விரும்பாத இந்தப் பெருநீள் கதைக்குத் தலைப்பு – நீலக்காகம்.

30 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற