அன்புடன் அழைக்கிறேன், அனைவரும் வருக!

இன்று [08.09.2008] அமரர் தேவனின் 95வது பிறந்த நாள்.

நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையில் கிழக்கு பதிப்பகம் இன்று தேவனின் ஐந்து நூல்களை செம்பதிப்பாக வெளியிடுகிறது.

* மிஸ்டர் வேதாந்தம்
* சி.ஐ.டி. சந்துரு
* ஜஸ்டிஸ் ஜகந்நாதன்
* கல்யாணி
* லக்ஷ்மி கடாட்சம்

[ஏற்கெனவே தேவனின் துப்பறியும் சாம்பு, ராஜத்தின் மனோரதம், கோமதியின் காதலன், ஸ்ரீமான் சுதர்சனம், மாலதி ஆகியவை வெளிவந்துள்ளன.]

இவற்றின் வெளியீட்டு விழா இன்று மாலை 6.30 மணிக்கு சிவகாமி பெத்தாச்சி அரங்கத்தில் [லஸ் சர்ச் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 – லஸ் ஆஞ்சநேயர் கோயில் அருகில்] நடைபெறுகிறது.

வெளியிடுபவர்    :     அசோகமித்திரன்

பெறுபவர்             :     வண்ணநிலவன்
நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து அசோகமித்திரனின் சிறப்புரை. தொடர்ந்து குருகுலம் பாய்ஸ் கம்பெனி வழங்கும் தேவனின் ‘பார்வதியின் சங்கல்பம்’ நாடக வாசிப்பு.

சென்னையில் வசிக்கும் வலையுலக நண்பர்கள் அனைவரையும் கிழக்கு பதிப்பகம் – தேவன் அறக்கட்டளையின் சார்பில் இவ்விழாவுக்கு வருகைதர அன்புடன் அழைக்கிறேன்.

தேவனை நாம் நினைவுகூரவும் கொண்டாடவும் நிறையக் காரணங்கள் உள்ளன. தமிழில் மிக அபூர்வமாகவே காணக்கிடைக்கும் இழையோடும் நகைச்சுவை அவரது எழுத்தில் சாசுவதமானதோர் அங்கம்.

அதே சமயம் தேவனை ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்றே பெரிதும் சொல்லிவருவது சற்றே அபாயகரமானது. பணக்காரர்களும் மேல்தட்டு வர்க்கத்தினரும் அரிதாரம் பூசிக்கொண்டு உலவிய அந்நாளைய கதையுலகில் முதல் முதலில் நடுத்தர வர்க்கத்து மக்களை, சாமானியர்களை, எளியவர்களை – நம்மைப் போன்றவர்களை நடமாடவிட்டவர் அவர். ஜோடனைகளற்ற, மிகையற்ற, எளிய விவரிப்பில் அவரது கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் இன்றும் நினைவுகூர்ந்து ரசிக்கத்தக்கவை. அவரது நகைச்சுவையைத் தாண்டியும் நிற்கக்கூடியது இது.

யோசித்துப் பார்த்தால் நாற்பதுகளில், ஐம்பதுகளில் எழுதிக்கொண்டிருந்த எத்தனை பேரை நாம் இன்றும் ரசிக்கிறோம்? காலம் புறக்கணிக்காத வெகுசில அபூர்வமான படைப்பாளிகளுள் தேவன் ஒருவர்.

செப்டெம்பர் 8, 1913ம் ஆண்டு திருவிடைமருதூரில் பிறந்த தேவனின் இயற்பெயர் ஆர். மகாதேவன். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு எழுத்தார்வம் அவரை ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகக் கொண்டுவந்து சேர்த்தது. கல்கி விகடனை விட்டு வெளியேறும் வரை அவரது உதவியாசிரியராகப் பணியாற்றிவிட்டு, அவருக்குப் பின் விகடனின் நிர்வாக ஆசிரியரானார் தேவன்.

ஒரு வாரப்பத்திரிகையில் பத்தாண்டுகள் தாண்டுவதென்பதே பெரும் சாதனை. தேவன் விகடனில் 23 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தேவன் – கோபுலு காம்பினேஷனில் வெளிவந்தவை அனைத்தும் அந்நாளைய சூப்பர் ஹிட் தொடர்கள்.

தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களின் வாசிப்புக்கு விருந்தளிக்கும் தேவனின் படைப்புகளைச் செம்பதிப்பாகத் திரும்பக் கொண்டுவரும் திட்டத்தை கிழக்கு பதிப்பகம் சென்ற ஆண்டு தொடங்கியது.  ஐந்து புத்தகங்கள் முதலில் வந்தன. இப்போது இன்னொரு ஐந்து. என் வியப்பு என்னவென்றால், இன்றைக்கும் தேவனின் புத்தகங்கள் மறுபதிப்பு வருகின்றன என்று சொன்னால் ‘உடனே எனக்கொரு காப்பி’ என்று கேட்கும் பெரிய கூட்டம் இருக்கிறது!

நேற்றிரவு என் மனைவியிடம் இந்தப் புத்தகங்கள் குறித்தும் இன்றைய விழாவைப் பற்றியும் சொன்னேன். சாக்குபோக்கு சொல்லாமல் புத்தகங்களுடன்தான் வீட்டுக்கு வரவேண்டும் என்று உடனே பதில் வந்தது. கொஞ்சம் கஷ்டம்தான். குறைவான பிரதிகள் மட்டுமே இன்று விழா அரங்குக்கு வரப்போகின்றன. நான் முந்திக்கொள்வதை அலுவலகம் அனுமதிக்காது என்றே நினைக்கிறேன்.

நண்பர்கள் அனைவரையும் மீண்டுமொருமுறை இந்தத் திருவிழாவுக்கு அழைக்கிறேன். மாலை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் சந்திப்போம். தேவன் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது நல்ல எழுத்தின்பால் நமக்குள்ள நேசிப்பை நாம் கௌரவிப்பதற்கு ஒப்பு.

புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ் முதல் பக்கம் | மறுபக்கம்

7 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற