ஜெய் ஸ்ரீராம்!

சோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் துக்ளக்குக்கும் எனக்கும் சில ஜென்மாந்திரத் தொடர்புகள் உண்டு. தில்லி சுல்தான் துக்ளக். தன் வாழ்நாளில் அதிகபட்சம் மூன்று முறைக்குமேல் அவர் தலைநகரை மாற்றியதில்லை. ஆனாலும் ஏனோ அந்த ஜீவாத்மாவை நினைவுகூரும் போதெல்லாம் எப்பப்பார் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறவர் என்று நமக்குத் தோன்றிவிடுகிறது. எல்லாம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் சதி. நியாயமாக, சரித்திரப் புஸ்தகங்களில் துக்ளக்கின் பெயரைத் தூக்கிவிட்டு என் பெயரை அங்கே பதிந்துவைக்க வேண்டும். முடிவுகளை மாற்றுவதிலும் மாற்றியதில் மாற்றங்கள் சேர்ப்பதிலும், மாற்றி மாற்றங்கள் சேர்த்தவற்றை மறு மாற்றம் செய்வதிலும் திருவாளர் துக்ளக் ஒருபோதும் என்னை விஞ்ச முடியாது என்றே கருதுகிறேன்.

இதன் அனைத்துப் பரிமாணங்களையும் இடம் சுட்டிப் பொருள் விளக்க இயலாது என்றாலும் ஓர் உதாரணத்தைக் கொண்டு கொஞ்சம் விளக்க அல்லது துலக்கலாம் என்று நினைக்கிறேன்.

நான் ஓர் எழுத்தாளன் என்று எம்பெருமான் முடிவு செய்து என்னை பூலோகத்துக்கு அனுப்பிய நாளாக, என்ன எழுதலாம் என்பதைக் காட்டிலும் எந்தப் பேனாவால் எழுதலாம் என்பது பற்றித்தான் அதிகம் சிந்தித்துக் கவலைப்பட்டு வந்திருக்கிறேன். என் பாலகாண்டத்தில் ஹீரோ என்னும் பேனா வெகு பிரசித்தமானது. மேட் இன் சைனா என்று அதன் தங்க மூடியில் செதுக்கியிருப்பார்கள். அசின் மூக்கு மாதிரி கூர்மையான அதன் நுனியைக் காணும் போதெல்லாம் எனக்குக் கிறுகிறுக்கும்.

ஆனால் அந்தப் பேனா நான் வாங்கக்கூடிய விலையில் அன்று இல்லை. எனவே, ஐந்துக்கும் பத்துக்கும் கிடைத்த பெட்டிக்கடை பேனாக்களின் மூலமாகவே என் இலக்கியசேவை ஆரம்பமானது. ஒல்லி பேனா, குண்டு பேனா, மழமழ பேனா, கூர் பேனா, இங்க் பேனா, பால்பாயிண்ட் பேனா என்று கலம் பல கண்டு நான் ஹீரோ பேனா வாங்கக்கூடிய அளவுக்குப் பெரிய எழுத்தாளனானபோது, மாநிலத்தில் ஹீரோ பேனாவின் காலம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. பார்க்கர் காலம் தொடங்கியிருந்தது. அந்தச் சனியன் என்னடாவென்றால், அன்றைக்கு என் அப்பா சம்பளத்தில் சரி பாதியை விலையாகக் கேட்கக்கூடியதாக இருந்தது.

ஏக்கத்தை நெஞ்சகத்திலும் ஊக்கத்தை எழுத்திலுமாகக் கொண்டு கண்ட கண்ட திராபை பேனாக்களாக மட்டுமே வாங்கிக் குவித்து எழுதி வந்தேன். ஆனால் ஒரு விஷயம். எந்தப் பேனாவையும் ஒரு மாதத்துக்குமேல் உபயோகித்துப் பழக்கமில்லை. உடனே புத்தி இன்னொன்றின்மீது தாவிவிடும். அது ஏன் அப்படித் தாவுகிறது என்பதில்தான் விஷயமே இருக்கிறது.

ஒரு பொருளை வாங்குகிற வரை அதன் அருமை பெருமைகளைத் தவிர வேறு எதுவுமே என் ஞானக்கண்ணுக்குத் தென்படாது. வாங்கி உபயோகிக்கத் தொடங்கிய மறு கணம் முதல் குற்றம் குறைகளைத் தவிர இன்னொன்றும் தென்படாது. இது நானாக உருவாக்கிக்கொண்ட வழக்கமல்ல. என்னப்பன் இட்டமுடன் என் தலையில் எழுதிவைத்த விதி. [இப்படிப் பழி போடுவதற்குக் கூட உதவாவிட்டால் அப்புறம் எதற்குக் கடவுள்?]

ஆனால் ஒரு அருங்காட்சியக நிர்வாகி மாதிரி நான் உபயோகித்த அத்தனை பேனாக்களையும் பத்திரமாக சேகரித்து வைத்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான பழைய பேனாக்கள். பார்க்கும்போதெல்லாம் என்னைத் திட்டித்திட்டி அலுத்துப் போன என் அம்மா, தன் தெம்புக் குறைவை உத்தேசித்து ஒரு நல்லநாள் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்தார்.

நீயாவது திருத்து என்று தன் மானசீகத்தில் அவர் என் மனைவியிடம் சொல்லியிருக்கவேண்டும்.திருமணமானதிலிருந்து நான் பேனாக்கள் வாங்குவதை நிறுத்திவிட்டேன். ஏனெனில் எழுத்தாளனின் பரிணாம வளர்ச்சி கம்ப்யூட்டரில் எழுதுவதில் தொடங்குவதாக ஓர் ஐதீகம்.

நான் முதல் முதலில் சொந்த கம்ப்யூட்டர் வாங்கிய காலத்தில் அதன் எடை சுமார் இருபது கிலோவாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். பூதாகாரமாக ஓர் அறையில் கால் வாசியை அடைத்துக்கொண்டு காட்சிதந்த அந்த அசெம்பிள்டு செட்டை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. பெண்டியம் இரண்டு என்னும் ப்ராசசர் கொண்டது. சென்ற தலைமுறையின் நவீன ஆப்பரேடிங் சிஸ்டமான விண்டோஸ் 95ல் இயங்கக்கூடியது. ஒரு ப்ரோக்ராமைத் திறக்க க்ளிக் செய்துவிட்டு எழுந்துபோய் குளித்து, சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக வந்து உட்கார்ந்தால் அது வேலை செய்யத் தயாராகியிருக்கும். வேலை ஆரம்பித்தால் எப்படியும் பத்திருபது நிமிஷத்தில் கரண்ட் போகும். எனவே அதற்கொரு யுபிஎஸ். அது தனியே ஒரு முப்பது கிலோ இரும்புக் குண்டு. கனபாடிகள் என்றாலும் கருணையற்றது. அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குத்தான் சப்ளை தரும். கரண்ட் போகும்போது சிஸ்டத்தை அணைத்து, செய்த பணிகளைக் காப்பாற்ற அது தருகிற அவகாசக் கொடை.

என்ன பிரச்னை என்றால் என்னுடைய அந்த அசகாய கம்ப்யூட்டர் அத்தனை சுலபத்தில் ஆஃப் ஆகாது. நிறுத்தி நிதானமாகப் பெரிசுகள் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை சீவல் போடுகிற லாகவத்தில் ஒவ்வொரு ப்ரோக்ராமாகச் செயல்படுவதை நிறுத்திக்கொண்டு வரும். அதற்குள் ஐந்து நிமிடம் முடிந்து யுபிஎஸ் செத்துவிடும். என்னவாவது ஒரு ப்ரோக்ராமாவது அவசியம் சரியாக க்ளோஸ் ஆகாமல் க்ராஷ் ஆகும்.

ஆனாலும் நான் ஹைடெக் எழுத்தாளன். கம்ப்யூட்டரில் எழுதுபவன். அந்தப் பெருமிதத்துக்கு இணையுண்டா? நிச்சயமாகக் கிடையாது. நாளெல்லாம் அதன் மடியிலேயே தவம் கிடந்துகொண்டிருந்தேன். என் மனைவி எனக்கு பார்ட் டைம் குடும்பஸ்தன் என்று பட்டப்பெயர் அளித்தாள். அவள் மட்டுமாவது என்னை ஃபுல்டைம் எழுத்தாளனாக ஒப்புக்கொண்டாளே என்று சந்தோஷப்பட்டுவிட முடியுமா என்றால் அதுவும் முடியாது. ஃபுல்டைம் கிறுக்கன், பகுதிநேர சமர்த்தன்.

இதுதான் எல்லை, இனிமேல் வேறு எதையும் வாங்கப்போவதில்லை என்று அந்நாளில் பிரதி வெள்ளிக்கிழமை சூடம் ஏற்றி சத்தியம் செய்துகொண்டிருந்த ஞாபகம் இருக்கிறது. அவ்வப்போது என் புதைபொருள் பேனாக்களை எடுத்துப் பார்த்துக்கொண்டேதான் இதையும் செய்வேன். ஒரு மாதிரி என் மனைவி என்னைப் பாதி நம்பத் தொடங்கியபோது பெண்டியம் நான்கு என்ற புதிய ப்ராசசருடன் கூடிய, மேலும் வேகமாக இயங்கக்கூடிய கம்ப்யூட்டர்கள் சந்தைக்கு வந்தன. தவிரவும் லொடுக்குப் பாண்டி விண்டோஸ் 95ஐவிட மேம்பட்ட ஆப்பரேடிங் சிஸ்டங்களும் உதித்திருந்தன.

பாராகவா! உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. நீ அதன் வேகத்தோடு போட்டியிட வேண்டாமா? இந்தத் தகர டப்பாவைத் தலைமுழுகும் திருநாள் எப்போது என்று உள்ளுக்குள் உட்கார்ந்துகொண்டு ஒரு சாத்தான் குரல் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.

இதனிடையே லேப்டாப் என்னும் கனவுக்கன்னியும் என்னைச் சுண்டி இழுக்கத் தொடங்கியிருந்தாள். அந்நாளைய லேப்டாப், டெஸ்க் டாப்பைவிட பெரிய எடைக்குறைவு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் டெஸ்க் டாப் மானிட்டரின் முதுகு கர்ப்பம் இதற்குக் கிடையாது என்பது பெரிய விஷயமல்லவா? ஆனால் விலை?

ஹீரோ மற்றும் பார்க்கர் பேனாக்களைப் போலத்தான். நான் வாங்கக்கூடிய விலையில் அது இருக்காது. அதை நான் வாங்கத் தயாராகும்போது அதற்கு மவுசு இருக்காது. ‘எல்லாம் இது போதும். நல்லாத்தானே இருக்கு? புதுசு வாங்கித்தான் நோபல் ப்ரைஸ் வாங்கமுடியும்னு இல்லை’என்று என் மனைவி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். என் அம்மாவுக்கும் மனைவிக்குமான ஆறு வித்தியாசங்களில் பிரதானமானது இதுதான். அம்மா, ஓடவிட்டு அடிக்கிற ரகம். மனைவி, எழுந்திருக்கும்போதே இடிக்கிற ரகம். அவளது கணிப்புகள், தீர்மானங்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள் எதுவும் எந்நாளும் பொய்த்ததில்லை என்பதுதான் இங்கே என் முக்கியமான பிரச்னை. பொன்னியின் செல்வனில் அருள் வந்து வாக்கு கூறும் தேவராளன் தோற்றான். என் மனைவியின் அருள்வாக்குகள் ஒருநாளும் தவறியதில்லை.

காசைக் கொட்டி வாங்குவாய். மூன்று மாதத்தில் இன்னொன்று வந்துவிடும். அப்புறம் அதைக் கேட்பாய். இதில் ஆயிரத்தெட்டு குறை சொல்வாய். எனவே வருடத்துக்கு ஒருமுறை தப்பு செய்ய மட்டும் அனுமதிக்கிறேன்.

பாவப்பட்ட தமிழ் எழுத்தாளனுக்குத்தான் எத்தனை நூதனமான பிரச்னைகள்!

எனவே வீட்டில் சேங்ஷன் ஆகாத லேப்டாப்பை அலுவலகத்தில் சாத்தியமாக்கிக்கொண்டேன். அது ஓர் அற்புதமான ஐபிஎம் லேப்டாப். நல்ல, பரந்துபட்ட வீச்சு பரோட்டா மாதிரி பதினேழு, பதினெட்டு இஞ்சுக்கு ஸ்க்ரீன் இருக்கும். தினசரி ஏழெட்டு தடவை தூக்கி இறக்கினால் காலக்கிரமத்தில் எடை குறையவும் வாய்ப்புண்டு. என்ன எருமை மாட்டு அடி அடித்தாலும் தாங்கும். 128 எம்பி ராம் கொண்டது. அசாத்திய வேகம் [என்று அப்போது தோன்றியது].

நீ வேணா பாரேன். நாலு மாசத்துல இன்னொண்ணு கேப்ப என்று வழக்கம்போல் என் மனைவியின் அசரீரிக் குரல் அப்போதும் கேட்டது. வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொன்னேன். சொன்னதைக் கடைப்பிடிக்கவும் செய்தேன்.

ஒரு சிறு திருத்தம் மட்டும் உண்டு. அந்த சனியன் பிடித்த நாலு மாசத்துக்குள் 256 எம்பி ராம் என்ற ஒன்று சந்தைக்கு வந்துவிட்டது. இன்னும் வேகம், மேலும் வேகம்!

என் அம்மாவுக்குப் பிறகு மனைவி மட்டுமே அறிந்திருந்த என் கல்யாண குணத்தை முதல் முறையாக என் அலுவலகம் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பளித்தேன். உடனடியாக வேண்டியது ஒரு இருநூற்று ஐம்பத்தாறு எம்பி ராம்.

ஹே ராம் என்று அலறியது ஆபீஸ். அதைப் போட்டுக்கொடுத்த ஆறு மாதத்தில் 512 எம்பி ராம் வந்துவிட்டது. என்ன பிரச்னை என்றால், அதற்குள் எனக்கு வேறு லேப்டாப் வாங்கவேண்டும் என்று தோன்றிவிட்டதுதான். அதுவும் சொந்தமாக. என்னிஷ்டத்துக்குப் படம் பார்க்க. என் இஷ்டத்துக்குப் பாடல்கள் சேகரித்து வைத்துக் கேட்க. என்னிஷ்டத்துக்கு பிரவுஸ் செய்ய. என் இஷ்டத்துக்கு நோண்டிப் பார்க்க. இன்னும் வசதிகளுடன். இன்னும் நவீனமாக.

அதானே பார்த்தேன் என்றாள் மனைவி. அதைத்தானே அவள் என்னைப் பார்த்தநாளாகச் சொல்லிக்கொண்டிருப்பது? அதெப்படி மாற்றிப்பேச இடம் கொடுக்க முடியும்?

இன்னொரு நல்ல நாளில் என் பிரத்தியேக சிவப்பு கலர் லெனோவாவை ரிச்சி தெருவிலிருந்து பீறாய்ந்துகொண்டு வந்துவிட்டேன். இதற்குப் பிறகும் நோபல் வாங்காதிருப்பது இழுக்கு என்பதால் கொஞ்சநாள் எழுதுவது தவிர வேறெதையும் செய்யாமல் ஒழுங்காக எழுதிக்கொண்டும் இருந்தேன். ஆனால் லேப்டாப்பில் சினிமா பார்ப்பதில் சில இருப்பியல் பிரச்னைகள் இருந்ததை அப்போதுதான் கண்டுபிடித்தேன். முதல் விஷயம் பிக்சர் குவாலிடி. இரண்டாவது சவுண்ட் குவாலிடி.

சினிமா பார்க்க தியேட்டருக்குப் போ என்றாள் மனைவி. அதெப்படி? நாமெல்லாம் திரிசங்கு வம்சமல்லவா? இருக்குமிடத்தில் என் சொர்க்கத்தை அமைத்துக்கொள்ளாமல் இன்னோர் இடம் தேடுவதாவது?

நீ உருப்பட மாட்டாய் என்று அவள் அந்தராத்மா அலறியது. இருந்தாலும் தாஜா பண்ணி ஒரு எல்சிடி மானிட்டருடன் கூடிய டெஸ்க்டாப் ஒன்றையும் வாங்கினேன். அது படம் பார்க்க. இது கதையெழுத. கட்டுரை எழுத. காவியம் எழுதி நாசமாய்ப் போக.

கொஞ்சநாள்தான். அந்த எல்சிடி மானிட்டருடன் கூடிய டெஸ்க் டாப்பை என் மகள் அபகரித்துக்கொண்டுவிட்டாள். டோராவும் புஜ்ஜியும் நாடியும் இன்னபிறரும் அவள் கூட்டணியில் இருந்தார்கள். பழிவாங்கக் காத்திருந்த என் மனைவியும். என்னவாவது கேட்டால் ஏ எஸ் டி எஃப் ஜி எஃப் அடிக்கிறேன் என்று அடித்துக் காட்டி ஆஃப் பண்ணிவிடுவாள். கம்ப்யூட்டரை அல்ல. என்னை.

எனவே, லேப் டாப்பிலேயே எக்ஸ்டர்னல் ஸ்பீக்கரெல்லாம் செட் பண்ணி ஒரு தியேட்டரிகல் எஃபெக்ட் கொண்டு வர முயற்சி பண்ணிக்கொண்டிருந்தேன். என் இம்சை பொறுக்காத என் லெனொவா ஒரு நாள் தாற்காலிகமாக துர்மரணம் அடைந்தது. ஆடிப் போனேன். சனியன், வாரண்டி காலம் முடிந்த பிறகுதான் இவற்றுக்கெல்லாம் உடம்புக்குச் சுகமில்லாமல் போகிறது. தூக்கிக் கொண்டு ஓடு!

டாக்டர் பார்த்துவிட்டு எல்சிடி காலி என்றார். சரி வேறு மாற்றுங்கள் என்றேன். பத்து நாள் இழுத்தடித்துவிட்டு, அது எங்கோ பரதேசத்திலிருந்துதான் வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். நான் என் மனைவியைப் பார்த்தேன். வேலை கெடுகிறது. தவிர நீயும் லேப்டாப்பும் எப்போதும் உடனிருக்க வேண்டிய ஜீவன்கள் அல்லவா? நீ ஒரு மணிநேரம் உன் அம்மா வீட்டுக்குப்போனால்கூட எப்படித் துடித்துவிடுகிறேன் என்று சொல்லிப் பார்த்தேன்.

உத்தம பத்தினியான என் மனைவி மனத்தைத் தேற்றிக்கொண்டு சரி, ஒழி என்றாள். உடனே ஆவல் பொங்க ஓடி வேறொரு லேப்டாப் வாங்கினேன். நோபலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறபடியால் கண்டிப்பாக என்னைப் போன்ற ஓர் எழுத்தாளனுக்கு இரண்டு லேப்டாப்கள் அவசியம் என்றும் காரணம் உருவாக்கிக்கொண்டேன்.

இம்முறை வாங்கியது இன்னும் உயர்தரம். அதிநவீன ப்ராசசர். வெறும் ராம் அல்ல. ஜெய்ஸ்ரீராம். தவிரவும் 300 ஜிபிக்குமேல் கொள்ளளவு கொண்டது. அசைக்கமுடியாத பீமபலம் பெற்றிவிட்டதுபோல் உணர்ந்தேன்.

புதிய லேப்டாப் வந்துவிட்டதில் உற்சாகமாகி இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினேன். ஆனால் ஐயோ இது என்ன? இதன் கீபோர்ட் என் விரல்களுக்கு ஏன் செட்டாக மறுக்கிறது?

தெரியவில்லை. ஆனால் இரண்டு வரி சேர்ந்தாற்போல் ஒழுங்காக அடிக்க வரவில்லை. ரொம்ப தடுமாறினேன். நிறைய சொதப்பல்கள். லேப்டாப்பில் பிரச்னையில்லை. அதன் கீபோர்ட் எனக்கு செட்டாகவில்லை என்பதுதான் பிரச்னை. அதிக அவகாசம் எடுக்காமல் உடனே ஆரம்பித்துவிட்டேன். ‘இது நல்ல ப்ராண்ட்தான். ஆனாலும் எனக்கு செட் ஆகமாட்டேங்குது…’

‘வாங்கறதுக்கு முன்ன எங்க போச்சு புத்தி?’ என்ற நல்ல வினா என்னை வரவேற்றது. நீட்டித்துப் பயனில்லை. சுமார் நான்கைந்து மாதங்கள் எனக்கும் என் மனைவிக்கும் இது தொடர்பாக நடைபெற்ற மௌன யுத்தத்தில் சுமார் 108 முறை நான் புறமுதுகிட வேண்டியிருந்தது. இதுவும் சரித்திர ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமே ஆகும்.

ஒருவாறாக என் இயலாமை, கையாலாகாமை, கயமை அனைத்தையும் கடை பரப்பி வைத்துவிட்டு, அம்மா தாயே பரதேவதை, இனியொருமுறை நான் லேப்டாப் மாற்றினால் நீ வேண்டுமானால் என்னை மாற்றிவிடு என்று கெஞ்சாத குறையாகத் திருட்டு கெஞ்சு கெஞ்சி இன்னொரு லேப்டாப்புக்கு அடிகோலினேன்.

தர்ம பத்தினி என்ற சொல்லுக்கு அதர்மங்களுக்குத் துணைபோகிறவள் என்று பொருள் என்று இதுநாள்வரை என் நடவடிக்கைகளின்மூலம் அவளுக்கு நான் புரியவைத்திருந்தேன். எனவே நேற்று மாலை போனால் போகிறதென்று தர்மம் காத்து ரட்சித்தாள்.

இந்தக் கட்டுரை என் புத்தம்புது பத்து இஞ்ச் குட்டி லேப்டாப்பில் சொகுசாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.

‘நீ வேணா பாரு. இன்னொரு லேப்டாப் இந்த ஜென்மத்துல கேக்கமாட்டேன். இதுதான் ஃபைனல். செட்டில்டு’என்று ஒரு சிறு வீர உரை நிகழ்த்த விருப்பம்தான். உண்மையில்
என் இப்போதைய மனநிலையும் அப்படித்தான் இருக்கிறது.

ஆனாலும் ஒரு சிறு தயக்கம். எதற்கும் மூன்று மாதம் பொறுத்துச் சொல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்ன செய்ய? சமயத்தில் என் உள்ளுணர்வு கூடக் கொஞ்சம் சரியாகத்தான் வேலை செய்கிறது.

22 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற