ஒன்றா, ரெண்டா ஆசைகள்?

சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை என் தாத்தா பேச்சுவாக்கில் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்ததைத் தற்செயலாகக் கேட்டேன். இன்னும் காதுகளை விட்டு அகலாமல் அப்படியே தங்கிவிட்டது அது. சொல்லப்போனால் திராவிட இயக்கம் என்கிற பதம் எனக்கு அறிமுகமானதே, அதிலிருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு இரண்டு பெண்டாட்டிகள் உண்டு என்பதாகத்தான். அப்படித்தான் என் தாத்தா சொன்னார்.

ஆவேசம் வந்தவர் மாதிரி வரிசையாகப் பல பெயர்களை அடுக்கி, அவர்கள் அனைவரும் தி.க.விலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள் என்றும் அத்தனை பேருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் உண்டு என்றும் அவர் கையை ஆட்டி ஆட்டிப் பேசியது கண்முன் நிற்கிறது. அவர் சொன்ன அத்தனை பெயர்களும் இன்று நினைவில்லை. சில பிரபலமான பெயர்கள் ஞாபகத்தில் இருக்கின்றன. பெரும்பாலும் அன்றைக்கு எனக்கு எல்லாமே புதுப்பெயர்கள்தாம். மிகவும் சிறுவனான நான், “அந்தக் கட்சில இருக்கணும்னா கண்டிப்பா ரெண்டு கல்யாணம் பண்ணிக்கணுமா தாத்தா?” என்று கேட்டதும் நினைவிருக்கிறது. ‘நீ ஏண்டா இங்க நிக்கற? உள்ளபோ’ என்று துரத்திவிட்டார்.

தாத்தாவுக்கு அரசியல் ஆர்வமெல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் அன்றைய கிழவனார்களின் இயல்புப்படி காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுகிறவரும் இல்லை. எனக்குத் தெரிந்து அவர் மனத்தளவில் தி.மு.கவைத்தான் நேசித்தார் என்று நினைக்கிறேன். ஆனாலும் இரண்டு மனைவிகள் விஷயத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை போலிருக்கிறது.

என் பதினைந்தாவது வயதில் கண்ணதாசனின் வனவாசம் படிக்க நேர்ந்தது. உண்மையைத் தவிர வேறெதுவும் அந்நூலில் எழுதப்பட்டிருக்கவில்லை என்று பலபேர் சொன்னதன்பேரில்தான் தேடிப்பிடித்துப் படித்தேன். திராவிட முன்னேற்றக்கழகத்தின் தோற்றத்திலிருந்து அக்கட்சியில் இருந்து அவர் விலகிய காலம் வரை நடைபெற்ற சம்பவங்களை அவரது பார்வையில் பதிவு செய்திருந்தார். தலைவர்கள் பலபேரைப் பற்றி மிக அந்தரங்கமான தகவல்களையும் வெளிப்படையாகத் தந்திருந்தார்.

“…..தலைவர் ஏழெட்டு முறை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார். போனவர்கள் ஏன் இன்னும் திரும்பவில்லை?…….வெகுநேரம் கழித்து அறைக்கதவு தட்டப்பட்டது. வெளியே ஆடவர்கள் இருவர் நின்றுகொண்டிருந்தார்கள்.. சே. ஆடவர்கள்தானா. அழகு மயில் வரவில்லையா?….. அவர்கள் அறைக்குள் நுழைந்து கதவு சாத்தப்பட்டதும் ஓர் ஆடவனின் வேடம் கலைக்கப்பட்டது. அங்கே ஓர் அழகு மயிலல்லவா நின்றுகொண்டிருந்தது! அழைத்து வந்தவர் குறிப்பறிந்து வெளியே போனார். அறைக்கதவு சாத்தப்பட்டது. பகுத்தறிவுத் தலைவரின் அறை பண்டார சன்னிதியாயிற்று…….”

– இன்னும் நினைவில் அப்படியே வட்டமிடுகின்றன வரிகள்.

அந்தப் பகுத்தறிவுத் தலைவர் அவரா, இவரா என்று அந்த வயதில் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறேன். அதே நூலில் அதே இயக்கத்தில் இருந்த கண்ணதாசன் தானும் ‘இரண்டாவதாக ஓர் ஏற்பாட்டைச் செய்துகொண்டது’ பற்றியும் எழுதியிருந்தார். கனல்பறக்க மேடையில் பேசும் தலைவர் ஒருவருடன் ஓரிரவு பொருட்பெண்டிர் இல்லம் சென்றது பற்றியும் காசு கொடுக்காமல் அவர் காரியம் முடித்துத் திரும்பிய பெருமை பற்றியும் கூட அதில் இருந்தது.

தாத்தா சொன்னதை அந்த வயதில் வேறு விதமாகப் புரிந்துகொண்டேன். ஜாலியாக இருக்கவேண்டுமென்றால் திராவிட இயக்கம்தான் சரி! தனிமனித ஒழுக்கம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத இயக்கம் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

இன்னும் கொஞ்சம் வயதும் அனுபவமும் வாசிப்பும் கூடியபோது பெரியார் ஏன் அத்தனை வயதுக்கப்புறம் திருமணம் செய்துகொண்டார் என்கிற கேள்வி என்னைக் குடைய ஆரம்பித்தது. பெரியாரின் திருமணத்துக்குத் தூண்டுகோலாக இருந்தவர் ராஜாஜி தான் என்றும், தள்ளாத வயதில் அவரை கவனித்துக்கொள்ள ஒரு துணை அவசியத் தேவை என்று உணர்ந்து, தாம் உணர்ந்ததை எடுத்துச் சொல்லி, எதிர்ப்புகளுக்கிடையில் பெரியாரைச் சம்மதிக்க வைத்ததும் அவர்தான் என்றும் என் தந்தை சொன்னார்.

அடுத்தபடியாக, பெரியாரின்  திருமணத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறியவர்களில் யார் ஒருவராவது சொந்த வாழ்வில் ஒழுக்கம் பேணுகிறார்களா என்று ஆராயத்தொடங்கினேன். இதற்கிடையில் பெரியாரின் பேச்சுகளடங்கிய நூல் ஒன்றைப் படித்து, திமுக ‘சிந்தனையாளர்கள்’ யாரும் அவர் காலருகே கூட வர லாயக்கற்றவர்கள் என்று நினைத்தேன்.

பார்க்கிற அத்தனை பேரிடமும் திமுகவில் இருக்கிற யார் யாருக்கு எத்தனை எத்தனை மனைவிகள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அதுபற்றி என் நண்பர்கள் வட்டத்தில் விமரிசனம் செய்யவும் தொடங்கினேன். பெரியாரின் திருமணத்தை முன்னிட்டுத்தான் இவர்கள் பிரிந்தார்கள் என்பதுதான் அப்போதைய என் கோபத்தின் ஆதாரக் காரணம்.

பின்னால் இன்னும் சற்றுப் பக்குவம் கூடியதும் ஒழுக்கம் என்பதே நாம் வகுத்துக்கொள்ளுகிற ஒரு அளவுகோல்தானே என்று தோன்றியது. நான் புழங்கும் எழுத்துத் துறையிலும் அகிலனுக்கு இரண்டு மனைவிகள், ஜெயகாந்தனுக்கு இரண்டு பேர், பாலகுமாரனுக்கு இரண்டு பேர் என்று இரட்டைக் கிளவிகள் பட்டியல் ஞாபகத்துக்கு வந்தது.

சேச்சே, இதைவைத்து ஓர் இயக்கத்தையே நாம் தவறாக நினைக்கலாமா என்று என்னையே கடிந்துகொண்டேன். திரையுலகில் ஒரு காலகட்டத்தில் இரண்டு மனைவியர் இல்லாத நடிகர்களே கிடையாது என்று நண்பர் ஒருவர் தக்க ஆதாரங்களுடன் எடுத்துப் போட்டார். சிவாஜி கணேசனுக்குக் கூட வெளியில் தெரியாத இன்னொரு மனைவி உண்டு என்று அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. (அந்நாளில் நான் மிகப்பெரிய சிவாஜி ரசிகன்.) ஆனால் ஜெமினி, எம்.ஜியார், எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமார் என்று தொடங்கி அப்பட்டியலில் இடம்பெற்றிருந்த எல்லாரைப் பற்றியும் எனக்கே தெரிந்திருந்ததால், அட, ஆமாம் என்று நினைத்துக்கொண்டேன்.

இன்னும் கொஞ்சநாள் போச்சு. பாலகுமாரன் ஒரு பத்திரிகை பேட்டியில், “இருதார மணம் தான் நம் கலாசாரம். ராமர் நம் கடவுள் அல்ல. முருகன், சிவன் இவர்களெல்லாம் தான் நமது முன்மாதிரிக் கடவுள்கள்…” என்கிற ரீதியில் பேசியிருந்தார். அந்தப் பேட்டி அவரது தரப்பை அழுத்தமாக நியாயப்படுத்தியிருந்தாலும் ‘நான் இப்படித்தான். ஆனால் நீ இப்படி இரு என்று சொல்லவில்லை’ என்றும் ஆண்டிஸிபேட்டரி பெயில் எடுத்திருந்தது.

இது ரீதியில் தொடர்ந்த என் ‘தேடலில்’ ஒரு பிரபல போலீஸ் ஆபீசர், ஒரு ஆன்மிக சொற்பொழிவாளர், ஒரு பத்திரிகை ஆசிரியர், சில அமெரிக்கப் பத்திரிகைகளுக்கான இந்திய நிருபர் ஒருவர், என எல்லாத் துறைகளிலும் டபிள் இன்னிங்ஸ் ஆடியவர்கள் இருக்கக் கண்டேன். ஆகவே இது துறையின் குற்றமல்ல, துணிந்தவன் குற்றம்தான் என்று தெளிந்தேன்.

இந்திய சட்டப்படி இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொள்வது தவறு. அது தண்டனைக்குரிய குற்றம். முதல் மனைவி புகார் கொடுத்துவிட்டால் போதும். முட்டிக்கு முட்டி தட்டிவிடுவார்கள். ஆகவே இரண்டு வேண்டியிருக்கிறவர்களெல்லாம் அன் அஃபிஷியலாகவே அதனை அமைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நிரந்தரமான அடையாளமின்மையையே ஓர் அடையாளமாக வழங்கிவிடுகிறார்கள். இதில் பாதிக்கப்படும் முதல் மனைவியாகப்பட்டவர் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவராக, ஊர்நாட்டிலிருந்து தேடியெடுத்து வரப்பட்டவராகவே இருப்பதையும் (குறைந்தது, தமிழக அளவில்.) கவனிக்கலாம். பின்னால் ஆடப்போகிற ஆட்டங்களுக்குப் பிரச்னை தராதவராக இருக்கவேண்டும் என்று தேடித்தேடியே இவர்கள் தம் முதல் மனைவியைப் பிடிக்கிறார்களோ என்று கூடப் பல சமயம் வியந்திருக்கிறேன். அதாவது கேஸ் போட்டு நாறடிக்கத் தெரியாத அப்பாவிகள்.

O

நிற்க. இதுவரை நீங்கள் வாசித்து வந்தது, முன்னெப்போதோ, எங்கோ என்னால் எழுதப்பட்டது. ஆனால் எப்போது, எங்கே எழுதினேன் என்பது சுத்தமாக மறந்துவிட்டது. இப்போது இதனைத் தேடியெடுத்து, ஓரிரு சிறு திருத்தங்களுடன்  பிரசுரிக்க ஒரு காரணம் இருக்கிறது. கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம்.

வீடா, ஆபீசா என்று கேட்கப்படாது. நான் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு நேர் பின்னால் ஒரு சன்னல். சன்னலைத் திறந்தால் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு குடித்தனக்காரர் வீட்டு சன்னல் நேராகத் தெரியும். அவர்கள் எப்போதும் தங்கள் வீட்டு சன்னலை மூடி வைப்பதில்லை. உள்ளே யார் என்ன பேசுவதானாலும் மத்தியான சீரியல் நடிகர்கள் கேமராவுக்கு நேரெதிரே வந்து நின்று டூ ஷாட்டில் பேசுவது போலத்தான் பேசுவார்கள். தவிரவும் அந்த வீட்டில் உள்ள யாவருக்கும் குரல் வளம் அதிகம்.

சம்பவ நாளன்று அந்த வீட்டின் தலைவர் யாருடனோ உரக்கப் பேசிக்கொண்டிருந்தார். எந்தச் சிறப்பு முயற்சியும் தேவையின்றி அந்த சம்பாஷணை மிகத் தெளிவாக என் காதில் விழுந்தது. விஷயம் மேற்படியானதே. மணந்துகொள்வதாகச் சொல்லிவிட்டு, நகர்ந்துவிட்ட மனிதரின் இருப்பிடம் தேடி வந்திருந்தாள் அந்தப் பெண். இங்கே அவர், மனைவி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர். குழந்தைகளும் ஓரளவு விவரமறிந்த வயதுக்காரர்கள்.

சம்பாஷணையின் தொடக்கம் என் காதில் விழவில்லை. ஆனால் நேரமாக ஆக, பேச்சில் உக்கிரமும் சூடும் ஏறிக்கொண்டே போனது. ஊரே கேட்கும்படியாக அம்மனிதர் கத்திக்கொண்டிருந்தார். உன்னால் என்ன செய்யமுடியும்? செய்துகொள். போலீசுக்குப் போகிறாயா? போய்க்கொள். என் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கும் உத்தேசத்துடன் வந்திருக்கிறாய். அது உன்னால் முடியாது. என் மனைவிக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். அவள் ஏமாறமாட்டாள்.

இப்போது அவர் மனைவியின் முகபாவம் எப்படி இருக்கிறது என்று பார்க்க மிகவும் விரும்பினேன். துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. அந்தப் பெண்ணும் சளைக்கவில்லை. அந்த மனிதர் அவளுக்கு வாங்கிக்கொடுத்த பொருள்கள் உள்ளிட்ட தன்னிடமிருந்த ஆதாரங்களுடன் வந்திருப்பாள் போலிருக்கிறது. எதையோ தூக்கி வீசினாள். சன்னலின் இடது ஓரத்தில் இருந்து வலது ஓரத்துக்கு ஒரு மூட்டை பாய்ந்து சென்றதைக் கண்டேன். பதற்றமாகிவிட்டது. ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று சொல்லிக்கொண்டேன்.

சுமார் இருபது நிமிடங்கள் இந்த உணர்ச்சிமயமான காட்சி அரங்கேறியது. இறுதியில் அந்தப் பெண், ‘நீ நாசமாய்ப் போவாய்’ என்று சபித்தது கேட்டது. அவள் வெளியேறத் தொடங்கியிருக்கவேண்டும். அந்த மனிதர் அதன்பின்னும் ஓயாமல் அவளைத் திட்டிக்கொண்டே இருந்தார். தராதரம் தெரியாமல் உதவி செய்யப் போனதற்கு இது தனக்கு வேண்டும் என்று தலையில் மடேர் மடேரென்று அடித்துக்கொண்டார்.

இருவரில் யார் நியாயஸ்தர் என்று என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. நிச்சயமாக ஏதோ ஒரு பக்கத்தில்தான் உண்மை இருக்கவேண்டும்.

ஓரிரு தினங்கள் நினைவிலிருந்துவிட்டு இச்சம்பவம் எனக்கு மறந்திருக்கும். இன்று காலை அந்தப் பக்கத்து சன்னல்காரரையும் அந்தப் பெண்ணையும் நான் வழக்கமாக பெட்ரோல் போடுகிற இடத்தில் வைத்துப் பார்த்தேன். ஒருவாரம் முன்னால் ஆக்ரோஷமாக அடித்துக்கொண்ட சுவடே இல்லாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இப்போதும் அவர் மனைவியின் முகத்தைப் பார்க்கவே விருப்பமாக இருந்தது. மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டு என் சன்னலை இழுத்து மூடிவிட்டு உட்கார்ந்தேன். இனி பின்புறத்து சன்னலை ஒருபோதும் திறக்கப் போவதில்லை.

12 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற