தாத்தா சாஹேபுக்கு தாதா சாஹேப்

எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்காது என்று சொல்வது தீவிர சினிமா ரசிகர்களிடையே [இவர்கள் பெரும்பாலும் இலக்கியவாதிகளாகவும் இலக்கியவாதிகளாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறவர்களாகவும், அறிவுஜீவிகளாகவும் அங்ஙனம் காட்டிக்கொள்ள விரும்புவோராகவும் இருப்பார்கள்.] ஒரு ஃபேஷன். ஒன்றுக்கு இரண்டு முறை தனியே உட்கார்ந்து ரசித்துப் பார்த்துவிட்டுத்தான் இதை அவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு அந்தப் பிரச்னை இல்லை. எனக்கு பாலசந்தர் படங்கள் பிடிக்கும். பாலசந்தரையும் தனிப்பட்ட முறையில் பிடிக்கும். 

கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் முதலே அவரோடு பரிச்சயம் உண்டு. அவர் ‘கல்கி’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தபோது, நெருங்கிப் பார்க்கவும், பழகவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கிழக்கு ஆரம்பித்தபோது திரைக்கதை நூல்கள் வெளியிடலாம் என்று நினைத்ததும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது அவருடைய சிந்துபைரவிதான். எத்தனை அழகான படம்! அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்திருக்கும் இந்நேரத்தில் என் உளப்பூர்வமான மகிழ்ச்சியினை இதன்மூலம் வெளிப்படுத்துகிறேன். தாத்தா சாஹேபுக்குக் கிடைத்திருக்கும் இந்த தாதா சாஹேப் இதன்மூலம் தன்னை கௌரவித்துக்கொள்கிறது.

கே. பாலசந்தர், தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை. எப்படி தமிழ் எழுத்துலகில் ஜெயகாந்தன் ஒரு திருப்புமுனையோ அப்படி. அந்தக் காலக்கட்டத்தில் யாரும் எண்ணிப்பார்க்காத கதைகளை சுவாரசியமான படங்களாகத் தொடர்ந்து வழங்கி, தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். வசனங்கள் அவருடைய பலம். நடிப்பில் சற்று மிகையிருந்தால் தப்பில்லை என்பது அவர் ஃபார்முலா. நாடக வடிவத்தின் சற்றே மேம்பட்ட தரத்தில்தான் அவருடைய படங்கள் இருக்கும். காட்சி ஊடகத்தின் சகல சாத்தியங்களையும் அவர் பயன்படுத்தியதில்லை. ஒரு கதையை, அதன் விறுவிறுப்பு கெடாமல் தனது கருவியின்மூலம் வழங்குவது என்பதே அவருடைய சினிமாவாக இருந்திருக்கிறது. சரியாகச் சொல்லுவதென்றால் நாடக வடிவத்தில் இருந்து சினிமா வடிவத்துக்குக் கலை நகர்வதற்கான ஒரு பாலமாக அவருடைய படங்கள் இருந்திருக்கின்றன. இவ்வகையில் அவரது தொடர்ச்சியான, நீடித்த பங்களிப்பு [101 படங்கள் இதுவரை] முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

ஒரு படத்தில் இயக்குநர் இருக்கிறார் என்பதை முதல் முதலில் இங்கே வெளிப்படுத்தியவை, பாலசந்தரின் படங்கள்தாம். அவரது ‘டச்’கள் சிலாகிக்கப்பட்ட அளவுக்கு விமரிசிக்கவும்பட்டிருக்கின்றன. சிலர் ஸ்ரீதருக்கு இந்தப் பெயரை அளிக்க நினைக்கலாம். ஸ்ரீதரின் திரை மொழியிலிருந்து பாலசந்தரின் மொழி முற்றிலும் வேறுபட்டது. புராணப் புளியோதரைகளிலிருந்து சினிமாவைக் காப்பாற்றியவர் ஸ்ரீதர் என்பதற்குமேல் என்னால் மதிப்பிட முடியவில்லை. மக்களை புத்திசாலிகளாக மதித்துக் கதை சொல்லுவது என்பது பாலசந்தரிடமிருந்துதான் ஆரம்பித்தது. வர்த்தக சினிமாவின் எல்லைகளைப் புரிந்துகொண்டு, அந்த வட்டத்துக்குள் அவர் செய்துபார்த்த சில பரீட்சைகள் – பலசமயம் தோல்வி கண்டிருந்தாலும் – மிகவும் முக்கியமானவை. பரீட்சார்த்த வர்த்தக சினிமா என்றொரு இனம் இங்கே இன்று சுப்பிரமணியபுரம் வரை தழைத்திருப்பதன் தொடக்கப்புள்ளியாக நான் பாலசந்தரையே காண்கிறேன். அவரது பரீட்சைகள், வெறும் அதிர்ச்சி மதிப்புக்காகச் செய்யப்பட்டவை என்று சொல்வோருண்டு. நான் அப்படிக் கருதவில்லை. கதை என்பது வாழ்வைப் பிரதிபலிப்பது. வாழ்க்கையென்பது மனிதர்களுடையது. மனிதர்கள் என்போர் உணர்ச்சிகளின் கலவை. பல்வேறுதரப்பட்ட உணர்ச்சிகளின் மோதலைத்தான் ஆகப்பெரிய இலக்கியங்களும் திரைப்படங்களும் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றன. உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே எப்போதும் நடைபெறும் துவந்த யுத்தமே பெரும்பாலும் பாலசந்தர் படங்களின் கருக்களாகியிருக்கின்றன. இந்த யுத்தத்தில் அதிர்ச்சி தவிர்க்க முடியாதது. ஆனால், அது மட்டும்தான் நோக்கம் என்றிருந்தால் பாலசந்தர் பத்துப் படங்களுக்குமேல் தாக்குப் பிடித்திருக்க முடியாது. இன்றுவரை ஒரு ஏ செண்டர் டைரக்டராகவே அவர் அறியப்பட்டாலும், கடைக்கோடி கிராமத்து ரசிகனும் அவரது படங்களைப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் விரும்பக்கூடியவனாக இருப்பதையும் ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்.

தனிப்பட்ட முறையில், தொண்ணூறுகளுக்குப் பின் வந்த பாலசந்தர் படங்கள் என்னைப் பெரிதாகக்  கவர்ந்ததில்லை. டூயட், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தன. சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், புதுப்புது அர்த்தங்கள் வரை அவரைத் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்திருக்கிறேன். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை போன்ற சில படங்களை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். அநேகமாக அவருடைய எல்லா படங்களையுமே பார்த்தவன் நான். படு மட்டம் என்று யாராவது சொன்னால்கூட, நான் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றுதான் பதில் சொல்வேன். தொண்ணூறுகளுக்குப் பிறகு மக்களின் ரசனை மாற்றத்தோடு ஒட்டிவர அவர் மிகுந்த பிரயத்தனப்பட்டு, முடியாமல் சோர்ந்து அமர்வது போன்ற ஒரு தோற்ற மயக்கக் காட்சி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒரு சரியான முடிவெடுத்து அவர் தொலைக்காட்சித் தொடர்களை இயக்க ஆரம்பித்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். ரயில் சிநேகம் இன்றுவரை என்னால் மறக்கமுடியாத தொடர். பிரேமி சில அத்தியாயங்கள் பார்த்தேன். பணிச்சுமையால் நான் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பது அரிதாகி, எப்போதாவது அவரது சீரியலில் சில காட்சிகள் மட்டும் பார்க்க நேரிடும். மிக நிச்சயமாக அவை மற்ற எந்த சீரியல் காட்சியைவிடவும் நேர்த்தியாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தமிழ் வர்த்தக சினிமாவின் திரைக்கதை என்னும் கலையைப் பயில விரும்புகிறவர்களுக்கு பாலசந்தர் மற்றும் பாக்யராஜின் படங்களே மிக எளிய கோனார் நோட்ஸ் என்பது என் அபிப்பிராயம். மற்ற இயக்குநர்களின் படங்களை ரசிக்கலாம், விமரிசிக்கலாம், ஆராயலாம் என்னவும் செய்யலாம். ஆனால் அவற்றிலிருந்து கற்க முடியாது. ஓர் இயக்குநராகக் கோடம்பாக்கத்தில் மூன்று தலைமுறைகள் தாண்டியும் தாக்குப்பிடிக்கிறவர்கள் பாலசந்தரைத் தவிர வேறு யாருமில்லை.

இது கேபியை வாழ்த்தவேண்டிய தருணம். வஞ்சனையில்லாமல் அதனைச் செய்ய அனைவரையும் அழைக்கிறேன்.