புவியில் ஒருவர்

புவியிலோரிடம், 1998-99 ஆண்டில் நான் எழுதிய நாவல். 2000ம் ஆண்டு இது வெளியானது. இதற்குமேல் இந்த நாவலைப் பற்றிச் சொல்லப் பிரமாதமாக ஒன்றுமில்லை. வெளிவந்த வேகத்தில் விற்றுத் தீர்ந்தது என்று சொல்ல ஆசைதான். ஆனால் வெளிவந்த வேகத்தில் காணாமல் போனது என்றுதான் சொல்லமுடியும். என் கணிப்பில் சுமார் 75 முதல் 100 பேர் இதை வாங்கியிருக்கலாம், படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.  இட ஒதுக்கீடு பிரச்னையை முன்வைத்து – விபி சிங் பிரதமராக இருந்த காலத்து நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்நாவலைக் கச்சாமுச்சாவென்று பல பேர் திட்டியது மட்டும் நினைவிருக்கிறது. அவர்களில் 99% பேர் படிக்காமல் திட்டினார்கள் என்பதும்.

என்னைப் பொருத்தவரை இந்நாவல் பேசுகிற பிரச்னை, இன்றுவரை இந்தியப் பொதுவாக இருக்கிற ஒன்றே.

அது ஒருபுறமிருக்க, இந்நாவலின் பிரதி இருக்கிறதா, எங்கு கிடைக்கும் என்று கேட்டு அவ்வப்போது யாராவது அஞ்சல் அனுப்புவார்கள். இல்லை என்ற ஒரே பதிலை பல்வேறு சொற்களில் எழுதுவது வழக்கம். கையால் எழுதிய நாவல், ஓர் ஒளிநகல்கூட வைத்துக்கொள்ளாமல் அச்சுக்குக் கொடுத்தது என்பதால் மறு அச்சும் சாத்தியமில்லாமலே போய்விட்டது. என்னிடம் இருந்த ஒரு சில பிரதிகளையும் யார் யாருக்கோ கொடுத்துவிட்டிருக்கிறேன்.

அநேகமாக நான் இதை மறந்தேவிட்ட நிலையில் இன்று பால ஹனுமான் வலைப்பதிவில் என்றோ ராயர் காப்பி க்ளப்பில் நண்பர் திருமலை இதற்கு எழுதிய மதிப்புரை ஒன்றை மீள் பிரசுரம் செய்திருப்பதைக் கண்டேன். மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

நாவல் இல்லாமல் போனால் என்ன? அதை ரசித்த ஒருவர் இருக்கிறார். போதும்.

 

கதையின் கரு சர்ச்சைக்குரியது. துணிந்து நாவலாக கொண்டு வந்துள்ள ராகவனது துணிவையும், கதைக்காக அவர் எடுத்துக் கொண்டுள்ள ஆராய்ச்சியும், உழைப்பும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. இட ஒதுக்கீட்டின் முரண்பாடுகள், அநீதிகள் என்ற கருவை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும், பாத்திரப் படைப்பிலும், கதை மாந்தர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிலும், கதை நடக்கும் களத்தினை விவரிக்கும் முறையிலும், வெகு நேர்த்தியான, கச்சிதமான நாவலைக் காண்கிறேன். சோகமான கதையோட்டத்திலும், பாராவின் மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆங்காங்கே புன்னகை பூக்க வைக்கிறது. பையனுக்குப் பெண்பார்க்கப் போகும் இடமும், ஜீயரை தரிசிக்கப் போகும் இடமும் குறிப்பிடத் தக்கவை…

மதிப்புரையை முழுமையாக வாசிக்க இங்கே செல்லலாம்.

புவியில் இன்னொருவரும் இருக்கிறார். அவர் இங்கே.

17 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற