அழகர்சாமியின் குதிரை

சினிமாவுக்கு கௌரவம் சேர்க்கும் எழுத்து அடிக்கடி கண்ணில் படும். எழுத்துக்கு கௌரவம் சேர்க்கும் சினிமா அபூர்வம். சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை, பாஸ்கர் சக்தியின் எழுத்துக்கு கிரீடம் சூட்டியிருக்கும் படம். சினிமாவுக்கென செய்யப்படும் சமரசங்கள் அதிகமின்றி, அதே சமயம் வெகுஜன மக்களின் ரசனையை விட்டும் நகராமல் மிகவும் கச்சிதமாக வந்திருக்கிறது இந்தப் படம். சுசீந்திரனுக்கு மனமார்ந்த பாராட்டு. பாஸ்கரை நான் பாராட்டுவது அபத்தம். அவர் என் நண்பர். நன்றாக மட்டுமே எழுதத் தெரிந்தவர்.

மிக எளிய கிராமத்துக் கதை. இங்கே நீங்கள் கதையை வாசித்துவிடலாம். எனக்கென்ன வியப்பு என்றால், மூலக்கதையிலிருந்து சற்றும் நகராதபடிக்குத் திரைக்கதையை இழுத்துப் பிடித்திருக்கும் லாகவம். இது எளிதல்ல. கதையில் மறைந்து நிற்கும் ஒரு சாதியப் பிரச்னையை உள்ளடக்கிய காதல், சினிமாவில் என்னவாகிறது என்று பார்க்க எனக்கு ஒரு சிறு ஆர்வம் இருந்தது. சற்றும் எதிர்பாராவிதமாக இடைவேளைக்குப் பிறகு வரும் குதிரைக்காரன் அழகர்சாமிக்கு ஒரு ஜோடியைப் போட்டு இரண்டே காட்சிகள் வைத்து இந்தக் காதலையும் அந்தக் காதலையும் குதிரை வாகனத்தைத் தாங்கும் தூண்களாக்கியிருக்கும் சாமர்த்தியம் ரொம்ப ஆச்சரியம் அளித்தது. இதில் மிக முக்கியம், இந்தக் காதல்கள் சினிமாவுக்காக அரையங்குலம்கூடப் புவியைவிட்டு உயரவில்லை. அவர்களுக்கான பாடல்களும்கூட தமது இருப்பின் நியாயத்தை வெளிப்படுத்துவதைச் சொல்லவேண்டும். Hats off.

இளையராஜா. என்னத்தைச் சொல்ல? நேற்று வரையிலான தமிழ் சினிமாவின் இசை என்பது ஒரு பாகமென்றால், இந்தப் படத்தின் பின்னணி இசை, இரண்டாம் பாகத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது. சராசரி மனிதச் செவியும் மனமும் உணரமுடியாத காற்றின் இசையைக் கவர்ந்து வந்துவிடுகிறார் இந்த மனிதர். இவர் எப்படி இதை எழுதுகிறார், எப்படி இதை எழுதுகிறார் என்று ஒவ்வொரு இசைத் துணுக்குக்கும் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. கிராமத்தில் நடக்கும் கதைக்கு ஒரு சில இடங்களில் ராஜா வழங்கியிருக்கும் மேற்கத்தியப் பாணி நாடோடி இசை, ஒரு வகையில் நமக்குப் புதிது. ஆனால் காட்சிகளுடன் அது பின்னிப் பிணையும்போது இடமும் காலமும் இலக்கணங்களும் கரைந்து காணாமல் போய்விடுகின்றன. நேடிவிடி முரண் என்று இதனை யாராவது பெரியவர்கள் சொல்லக்கூடும். இது மண்ணையல்ல; மனிதர்களின் விசித்திரமான மனநிலைகளையே முதன்மையாகக் காட்சிப்படுத்துகிற திரைப்படம். காட்சியாகும் சம்பவங்களை மட்டுமல்லாமல், காட்டாமல் கடந்து செல்கிற உணர்வுகளையும் இசையால் காட்டிவிடுகிறார். இந்தப் படத்தின் பின்னணி இசை ஓர் அபூர்வம். இதற்கு முன்னால் ஹே ராம் வந்தபோது இப்படித் தோன்றியது.

ஒரு விஷயத்தைச் சொல்லி முடித்துவிடுகிறேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்பட விழாவில் ஒரு ஜப்பானியத் திரைப்படம் பார்த்தேன். குதிரைகளைப் பற்றிய படம். குதிரைக்குட்டி விற்கப்படும்போது அதன் தாய்க்குதிரை தவித்துத் துடிக்கிற ஒரு காட்சி, அந்தப் படத்தில் உண்டு. இன்னமும் என் கண்ணில் நிற்கும் காட்சி அது.

இது ஒரு குதிரையைப் பற்றிய படம். தொலைந்துபோன தன் குதிரை அகப்பட்ட பிறகும், ஒரு கிராமமே அதற்கு உரிமை கொண்டாடும்போது அந்தக் குதிரைக்காரன் தவிக்கிற தவிப்பு எனக்கு நான் முன்னர் பார்த்த அந்த ஜப்பானியப் படத்தின் தாய்க்குதிரையை நினைவு படுத்திவிட்டது. அப்புக்குட்டி என்னும் இந்தக் கலைஞன் எப்பேர்ப்பட்ட திறமைசாலி! வியக்கிறேன்.

அழகர்சாமியின் குதிரை, மிக நிச்சயமாக ஒரு சிறந்த படம். இப்படியொரு படத்தைத் தருகிற பலத்தை சுசீந்திரனுக்கு ‘நான் மகான் அல்ல’வின் வெற்றிதான் தந்திருக்கிறது என்பதையும் மறக்காதிருக்க வேண்டியது நம் பொறுப்பு.

பின்குறிப்பு: இன்று சென்னை சத்யம் திரையரங்கில் எழுத்தாளர்களுக்காக ஒரு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பார்த்தேன். படம் இன்னும் இரு தினங்களில் வெளியாகிறது என்று பேப்பரில் பார்த்தேன்.

18 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற