பெரிய வெற்றி, பெரிய தோல்வி

தேர்தல் முடிவுகள் உண்டாக்கிய அதிர்ச்சி மற்றும் கிளர்ச்சிகள் சற்று அடங்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதிமுகவின் இவ்வெற்றியை நான் முன்பே எதிர்பார்த்தேன் என்று கட்சிக்காரர்கள் அல்லாத வேறு யார் சொன்னாலும் நம்ப முடியாது. கட்சிக்காரர்களேகூட கண்மூடித்தனமான ஆராதிப்பு மனநிலையால் உந்தப்பட்டு சொல்லியிருப்பார்களே தவிர இதில் அறிவியல்பூர்வம் என்பதற்கு இடமே இல்லை. அறிவியல்பூர்வமான கருத்துக் கணிப்பு நடத்தியவர்களெல்லாம்கூட முடிவு வெளியான அன்று காலை பத்து மணி சுமாருக்குக் காணாமல் போய்விட்டார்கள்.

ஜெயலலிதாவின் இந்த அசுர வெற்றி, முற்றிலும் திமுக மீதான வெறுப்பின் விளைவு என்பது தெளிவாகியிருக்கிறது. சற்றும் குறையாத விலைவாசி, தொடர் மின்வெட்டு, அடி மட்டத்திலிருந்து ஆரம்பித்து அதிகாரப் படிக்கட்டின் உயர்நிலைகள்வரை அனைத்துத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்த ஊழல், லஞ்ச லாவண்யங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், ஈழத்தமிழர் விஷயத்தில், தமிழக மீனவர்கள் விஷயத்தில் நம்பவைத்து ஏமாற்றியது, பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா என்று ஒவ்வொரு ஊடகமாக ஆதிக்கத்தைப் பரவவிட்டு மொத்தமாக கபளீகரம் செய்ய நினைத்தது, இதையே ஊடகமல்லாத பிற துறைகளுக்கும் விதியாக்க நினைத்தது, அரசியலைக் கட்சிமயமாக்கியது, கட்சியைக் குடும்ப மயமாக்கியது, குடும்பத்துக்குள் பேயாட்டம் ஆடிய பூசல், எந்த விஷயத்திலும் ஒரு தீர்மானத்துக்கு வரவிடாத கலைஞரின் முதுமை, தளர்ச்சி, பாசப் போராட்டங்கள், அனைத்துக்கும் சிகரமாக ஸ்பெக்ட்ரம், அதில் அவரது மகளின் பங்களிப்பு.

திமுகவின் தோல்விக்குக் காரணங்களை வரிசைப்படுத்துவது எளிது. தோல்வி தமக்குப் புதிதல்ல என்று கலைஞரேகூட விரைவில் கடிதம் எழுதுவார். ஆனால் இது வழக்கமான தேர்தல் தோல்வியல்ல. ஒரு மக்குப்பையன் பரீட்சை எழுதி பூஜ்ஜியம் பெறுவதற்கு ஒப்பான தோல்வி.

திரும்பவும் நினைவுபடுத்திக்கொள்ளலாம். ஜெயலலிதாவை ஜெயிக்கவைக்கவேண்டுமென்பது தமிழக மக்களின் விருப்பமல்ல. அதுவும் இத்தனை பெரிய ராட்சச பலத்துடன். திமுக தோற்கடிக்கப்படவேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தின் விளைவே இத்தேர்தல் முடிவுகள். ஜெயலலிதா, வேறு வழியில்லாமல் இப்பிரம்மாண்ட வெற்றியைச் சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறார். அவ்வளவே. ஏனெனில், அவரை விரும்பி அமர்த்துமளவுக்குக் கடந்த காலங்களில் அவர் எந்த ஒரு கட்டத்திலும் மக்களை நெருங்கி வரவில்லை. ஐந்தாண்டுகளில் அவர் போயஸ் தோட்டத்தில் இருந்த தினங்களைவிடக் கொடநாட்டில் இருந்த நாள்களே அதிகம். எப்போதாவது ஓர் அறிக்கை. நமது எம்ஜியாரில் சில நிர்வாகி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள். வழக்கு விசாரணை என்று ஓரிருநாள் செய்தி. ஒத்திவைப்பு என்று இன்னும் சில நாள் செய்தி.

மற்றபடி ஜெயலலிதா பெரிய அளவில் எதற்காக வீதி இறங்கிப் போராடியிருக்கிறார்? ஒரு பெரிய கட்சியின் தலைவியாக, பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழகத்தில் இந்த ஐந்தாண்டுக் காலத்தில் ஒரு துரும்பைத் தூக்கிப் போட்டிருக்கிறாரா? இதை அவர் நிதானமாக யோசித்து மனத்தில் இருத்திக்கொண்டு தமது பணிகளைத் தொடங்குவது அவருக்கும் அவரது கட்சியின் எதிர்காலத்துக்கும் நல்லது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக இன்று அடையாளம் காணப்பட்டிருக்கும் தேமுதிக இத்தேர்தலின் இன்னொரு ஆச்சரியம். இதுவும்கூட திமுக எதிர்ப்பு அலையில் அடித்து வரப்பட்டதுதானே தவிர விஜயகாந்த் ஒரு மாபெரும் மக்கள் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாக நான் கருதவில்லை. ஆனால், நிச்சயமாகக் கடந்த ஐந்தாண்டுகளில் அவர் ஜெயலலிதாவைக் காட்டிலும் அதிகமாக மக்கள் பிரச்னையைப் பேசியிருக்கிறார். போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். மறுக்கமுடியாது. அவரது சுமார் நூறு அறிக்கைகளை மொத்தமாகப் படிக்கச் சமீபத்தில் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நிறைய உளறுகிறார் என்றாலும் எந்தப் பிரச்னையிலிருந்தும் தள்ளி நிற்க விரும்பாத ஒரு குணம் அவருக்கு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. விஜயகாந்த், நிச்சயமாக ஜெயலலிதாவுக்கு ஒரு நல்ல முட்டுக்கொடுக்கும் சக்தியாக விளங்க முடியும். ஆனால் எனக்கென்னமோ ஜெயலலிதா அவரை வெகுகாலம் விட்டுவைப்பார் என்று தோன்றவில்லை. சொல்லப்போனால் கலைஞரைவிட விஜயகாந்தையே பெரும் அபாயமாக அவர் இப்போது நினைக்க ஆரம்பித்திருக்கலாம். அடுத்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவின் அறிவிக்கப்படாத செயல்திட்டமாக, தேமுதிகவை காலி பண்ணுவதே இருக்கும் என்று தோன்றுகிறது.

தனிப்பட்ட முறையில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்ற சந்தர்ப்பவாத உதிரிகள் இந்தத் தேர்தலில் நிர்த்தாட்சண்யமாக அடித்துத் துரத்தப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஐந்தாண்டுக் காலம் கொசுத்தொல்லை இல்லாமல் மக்கள் வாழலாம். நவீன யுகத்தின் கேவல அரசியலுக்கு எப்படியெல்லாம் இலக்கணம் வகுக்கலாம் என்று யோசித்து யோசித்துச் செயல்படும் தமிழ்நாடு காங்கிரஸ் அறுபத்தி மூன்றில் ஐந்து இடங்களை வென்றது எனக்குச் சற்று ஏமாற்றமே. காங்கிரசும் விடுதலை சிறுத்தைகள் வரிசையில் நின்றிருக்கவேண்டும் என்று உளமார விரும்பினேன். தங்கபாலு போன்ற அரசியல்வாதிகளுக்கும் அவர்களது வழிகாட்டலில் வளரும் கட்சிகளுக்கும் இனி தமிழகத்தில் இடமில்லை என்று மக்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இவர்களது அறமற்ற அரசியல் பட்டி தொட்டியெங்கும் நாறி, காங்கிரஸை ஒரு ஷகிலா பட அளவுக்கே மதிக்கமுடியும் என்று தீர்ப்பாகிவிட்டதில் சந்தோஷமே.

கலைஞர் ஒரு காரியம் செய்யலாம். இதற்குமேலும் தாமதிக்காமல் அரசியலில் இருந்து விடைபெறலாம். ஸ்டாலினை கட்சித் தலைவராக அறிவித்துவிட்டு முற்றிலும் ஒதுங்கி நிற்கலாம். இது இன்னொரு வகையிலும் நல்லது. சகோதரச் சண்டை எந்த எல்லைவரை போகும் என்பதைப் பதவியில் இல்லாத இந்த ஐந்தாண்டுகளில் தெளிவாகப் பார்த்து, கவனித்து, உரிய வைத்தியம் பார்க்கலாம். திமுக என்னும் கட்சி தமக்குப் பிறகும் தமிழகத்தில் நீடித்திருக்கவேண்டும் என்று உண்மையிலேயே விரும்பக்கூடியவராக இருந்தால் அவர் இதைத்தான் இப்போது செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது சகோதரர்கள் முட்டிக்கொண்டு கட்சி இரண்டாகப் பிளக்குமானாலும் ஒரு வகையில் நல்லதே. பொய்யான மாயக்கனவுகளில் மூழ்கித் திளைத்து, உருண்டு விழுந்து எலும்பு நொறுங்குவதைவிட, உண்மையை அதன் முழுத் தகிப்புடன் நேருக்கு நேர் எதிர்கொள்வதே கலைஞருக்கு, அவரது நீண்டநெடுநாள் அரசியல் அனுபவத்துக்கு கௌரவம் சேர்க்கக்கூடியது.

ஒரு கட்சியை நடத்தத் தெரிந்தவருக்குக் குடும்பத்தை நடத்தத் தெரியாமல் போய்விட்டது என்று நாளைய சரித்திரம் பஞ்ச் லைன் எழுத இடம் கொடுக்காதிருக்கவேண்டியதே இப்போது அவர்முன் உள்ள மாபெரும் பொறுப்பு.

56 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற