பாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்

என் அம்மா வழி தாத்தாவின் பெயர் ராமசாமி. அவரது பெற்றோர், முன்னோர், சொந்த ஊர், சகோதர சகோதரிகள் குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது. நானறிந்த தாத்தா, சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள நாற்பதாம் எண் வீட்டின் வாசலில் மாலை ஆறு மணிக்குப் பிறகு எப்போதும் மரத்தாலான ஒரு பெரிய ஈசி சேரைப் போட்டு அதில் சாய்ந்து அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருப்பார். எப்போதாவது விடுமுறை தினங்களில் தாத்தா வீட்டுக்குச் செல்ல நேரும்போதெல்லாம் அவரை அந்தக் கோலத்தில்தான் கண்டிருக்கிறேன்.

அந்த ஈசி சேரின் கைப்பிடியை அப்படியே முன்னால் நகர்த்தி குறுக்காகப் போட்டுக்கொள்ளலாம். எழுந்து உட்கார்ந்து படிக்க, எழுத சௌகரியமாக, அகலமாக இருக்கும். தாத்தா அதன்மீதுதான் டிரான்சிஸ்டர் வைத்திருப்பார். அருகே குட்டியாக டி.ஏ.எஸ். ரத்தினம் பட்டணம் பொடி டப்பா. அவருடைய டிரான்சிஸ்டர் எப்போதும் மதுரை சோமுவைத்தான் ஒலிபரப்பும். அல்லது எம்.டி.ராமநாதன்.

தாத்தாவை நான் கவனிக்கத் தொடங்கியது அவரது அந்திமக் காலங்களில்தான். அவர் பெரம்பூர் ஐ.சி.எஃப்பில் வேலை பார்த்து ரிடையர் ஆனவர் என்று சொல்லக்கேள்வி. இடையே இறந்தது போக அவருக்கு மூன்று பிள்ளைகள், ஐந்து பெண்கள். மூத்த மகளான என்னுடைய அம்மாவின் திருமணம் ஒன்றுதான் அவரது கவனிப்பில் நடந்தது. மற்றவர்களுடைய திருமணத்தையெல்லாம் இறைவன் தான் நடத்திவைத்தது.

தாத்தா உல்லாசி. ஆனால் கையில் அதிகப் பணப்புழக்கம் இருந்து நான் கண்டதில்லை. எப்போதும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், மிஞ்சிப்போனால் ஐந்து ரூபாய் இருக்கும் அவரிடம். ஒரு சில மணிநேரங்கள்தான் அதுவும் தங்கும். சைதாப்பேட்டையில் அந்நாளில் புகழ்பெற்ற வளர்மதி, மாரி ஓட்டல்களில் அவர்தமது காலைச் சிற்றுண்டியை முடிப்பார். பிறகு தேரடியை ஒட்டிய அவரது விடலைக் கிழவர்கள் கோஷ்டியுடன் சீட்டுக்கட்டைப் பிரித்தால் அவருக்கு யுகங்கள் கணமாகும். டி.ஏ.எஸ். பட்டணம் பொடியும் வெற்றிலை சீவல் பன்னீர்ப் புகையிலையுமாகப் பொழுதுகள் கரையும். அபூர்வமாக வெளேரென்று ஜிப்பா அணிந்து [கதர், காட்டனெல்லாம் இல்லை. பாலியெஸ்டர் மட்டுமே அணிவார்.] எங்காவது கச்சேரிக்குக் கிளம்புவார். மாம்பலம் சிவா போன்ற ஒரு சில நாகஸ்வர வித்வான்களும் மதுரை சோமு போன்ற சில பாடகர்களும் அவருக்கு நெருக்கமான சிநேகிதர்கள்.

வேறு சில பிரமுகப் பிரபலங்களும் தமது சிநேகிதர்கள்தான் என்று தாத்தா சொல்லுவார். நம்புவது கஷ்டமாக இருக்கும். ஐ.சி.எஃப்பில் ஃபிட்டராகப் பணியாற்றியவருக்குப் பிரபல கலைஞர்களுடன் தொடர்பு எப்படி உண்டாகியிருக்கும்?

அந்நாளில் இதனை யோசித்துக்கொண்டிருப்பது எனக்கொரு பொழுதுபோக்கு. பாட்டியிடம் ஒரு சில சமயம் விசாரித்திருக்கிறேன். சரியான பதில் வந்ததில்லை. பொதுவாகப் பாட்டிக்கு தாத்தாவைப் பிடிக்காது. அநேகமாகத் தனது எட்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு அப்படியாகியிருக்கலாம். என்னைப் படிக்க வெச்சிருந்தா பீ.ஏ. வரைக்கும் படிச்சிருப்பேன். இந்த மனுஷன கல்யாணம் பண்ணிவெச்சி சீரழிச்சுட்டா என்று எப்போதும் தன் பெற்றோரைத் திட்டிக்கொண்டிருப்பாள் பாட்டி.

தாத்தா குடும்பக் கவலைகள் அற்றவர். எப்படி அப்படி இருக்கமுடியும் என்பது இன்றளவும் எனக்கு வியப்புத்தான். சங்கீதம், நாட்டியம் என்று அவரது விருப்பங்களும் ஆர்வங்களும் அந்தக் குடும்பத்துக்கு அதிகம். ஏழைமை என்று சொல்லமுடியாது. ஆனால் வளமை காணாத வீடு அது. பாட்டியின் பூர்வீக வீடுதான். தாத்தாவுக்கு அந்த வீடு மாதிரியேதான் பொடி டப்பாக்களும் வெற்றிலை சீவலும்கூட. எப்படியோ அமைந்துவிடும்.

எழுத்து, புத்தகம், கவிதை என்கிற சொற்களெல்லாம் அந்த வீட்டு வாசற்படி ஏறத்தொடங்கியது என் அப்பா அங்கே மாப்பிள்ளையான பிற்பாடு. தாத்தாவுக்கு மிகவும் குஷியாகிவிட்டது. மாப்பிள்ளை கவிஞரல்லவா?

எப்போதாவது சைதாப்பேட்டைக்குக் குடும்பத்துடன் நாங்கள் போய்விட்டால் போதும். தாத்தா உற்சாகமாகிவிடுவார். ‘மாப்ளே.. இங்க உக்கார்றது..’ என்று தனது சிம்மாசனத்தை ரெண்டு தட்டு தட்டி நீட்டுவார். என் அப்பாவை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஹெட் மாஸ்டராக இருந்தபோது அத்தனை பிடித்ததா என்று எனக்கு நினைவில்லை. ஓய்வு பெறுவதற்குச் சற்று முன்னால் அவர் பள்ளிக் கல்வி துணையோ இணையோ இயக்குநராகி ஒரு நாள் ஜீப்பில் வந்து இறங்கியதும்தான் தாத்தாவின் உபசரிப்புகள் பரிமாணமெய்தின. ஈசி சேரை இழுத்துப் போடுவார். மின்விசிறியை தூசு தட்டி எடுத்து வந்து ஒரு ஸ்டூலில் வைத்து அவர் பக்கமாகத் திருப்பி விடுவார். காப்பியை தன் கையால் ஆற்றித் தருவார். என் அப்பா தூங்கினால் கொடித்தோன்றும் தோரண வாயில் காப்போனாக அருகே இருந்து பார்த்துக்கொள்வார். யாரும் கிட்டே போய் எழுப்பிவிட முடியாது. தாத்தாவுக்குக் கோபம் வந்துவிடும்.

அவர் ஒரு நல்ல கணவராகவும் தகப்பனாகவும் இல்லாது போனாலும் ஒரு சிறந்த மாமனார் என்று என் அப்பா எப்போதும் சொல்வது வழக்கம். இப்போதும்கூட. ஆனால் தாத்தாவின் பிற மாப்பிள்ளைகள் யாருக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் வாய்த்ததாக நினைவில்லை. தாத்தா அவர்களையெல்லாம் சீந்தக்கூட மாட்டார். எப்போதாவது தீபாவளி, பொங்கலுக்கு வந்தால் கண்டுகொள்ளக்கூட மாட்டார். அவர் பாட்டுக்குத் தன் சீட்டாட்ட கோஷ்டியில் போய் ஐக்கியமாகிவிடுவார். எப்படியோ என் அப்பாவை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். முதல் மாப்பிள்ளை என்பதாலோ, கவர்மெண்ட் மாப்பிள்ளை என்பதாலோ, அவரே பார்த்து வைத்த ஒரே மாப்பிள்ளை என்பதாலோ. அந்த அன்புக்கு நிகரே சொல்லமுடியாது. அப்படித் தலைக்குமேல் வைத்துத் தாங்குவார்.

எல்லாம் சரி. என் அப்பாவை குஷிப்படுத்துவது எப்படி? அவருக்கு சங்கீதமெல்லாம் தெரியாது. டான்ஸ்? வாய்ப்பே இல்லை. பொடி? பன்னீர்ப்புகையிலை? ம்ஹும். அவர் ஒரு தத்தி. எதையும் அனுபவிக்கத் தெரியாதவர். வளர்மதி, மாரி ஓட்டல்களில் ஆனியன் ரவா சாப்பிடக்கூடத் தயங்குகிறவர்.

எனவே தாத்தா தன் கையில் வேறொரு ஆயுதத்தை எடுத்தார். ‘மாப்ளே, விஷயம் தெரியுமா? ஒரு காலத்திலே பாரதியாருக்கு இந்த ராமசாமி பக்கோடா வாங்கிக்குடுத்திருக்கேன். இன்னிக்கி அவன் பெரிய கவிஞன். நான் அதே தரித்திரவாசி.’

அப்பா அதிர்ந்துபோய்விட்டார். என் அப்பாவுக்கு பாரதியை ரொம்பப் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு மிகக் கவனமாக பாயிண்டைப் பிடித்திருக்கிறார்!

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அந்த அபூர்வமான தருணத்தின் ஒரே சாட்சியாக 40, பெருமாள் கோயில் தெரு வீட்டின் வாசல் படியில் அமர்ந்து தாத்தாவைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘நிஜமாத்தான் சொல்றேன். நீங்க நம்பலன்னா நான் என்ன பண்ணமுடியும்? என்கூடத்தான் சீனன் கடைக்கு வந்தார். தாடியும் மூஞ்சியும் பாக்க சகிக்கலே. குளிச்சி எத்தன நாளாச்சோ தெரியல. பசிக்கறதும் ஓய்ன்னார். சரி வான்னு கூட்டிண்டு போனேன். சீனன் கடைல சுடச்சுட பக்கோடா போட்டுண்டிருந்தான். சாப்பிடறேளான்னேன். சரின்னார். அம்பது கிராம் நிறுத்துக் குடுத்தான். வாங்கி, நின்ன வாக்குல சாப்டுட்டு வாயத் தொடச்சிண்டு போயே போயிட்டார்..’

தாத்தா காட்சி ரூபமாக விவரித்துக்கொண்டிருந்தார். என் அப்பாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘சும்மா கதை. பாரதியார் நீங்க சொல்ற டயத்துல இங்க வந்திருக்க சான்சே இல்லை. அவ்ர் அப்ப பாண்டிச்சேரில இருந்தார்’ என்று லா பாயிண்டைப் பிடித்தார்.

‘இப்படி பேசினா நான் என்ன பண்ணமுடியும்? சந்தேகமிருந்தா நெல்லையப்பன கேட்டுக்கலாம். பாவி அவனும் செத்துத் தொலைச்சிட்டான்’ என்று தாத்தா கோபமாகிவிட்டார்.

இது எனக்கு இன்னும் வியப்பு கலந்த அதிர்ச்சியளித்தது. நெல்லையப்பன் என்று அவர் ஒருமையில் அழைத்தது, பரலி சு. நெல்லையப்பரை. அவருடன் தாத்தாவுக்குத் தொடர்பிருந்திருக்கிறதா?

‘ஆமாமா’ என்று பாட்டி அலுப்புடன் சொன்னதை நான் நம்பித்தான் ஆகவேண்டும். பாட்டி கப்சா விடுகிறவள் இல்லை. தவிரவும் நெல்லையப்பர் சைதாப்பேட்டையில் இருந்திருக்கிறார்.

ஏன் தாத்தா ஒருவேளை நெல்லையப்பருக்கு பக்கோடா வாங்கிக்குடுத்ததைத்தான் நீ பாரதியாருக்குன்னு மறந்துபோய் மாத்தி சொல்லிட்டியோ?

வேறொரு சமயம் கேட்டேன். தாத்தாவுக்கு இப்போது மிகுந்த கோபம் உண்டாகிவிட்டது. ‘அடி சனியனே எழுந்து போ. வந்துட்டான் பெரிசா..’

தாத்தாவுக்கு நான் எப்படிப் புரியவைப்பேன்? நான் கிண்டலுக்குக் கேட்கவில்லை. அவர் குறிப்பிடுவது ஒரு சரித்திரச் செய்தி. சீனி விஸ்வநாதன் தனது பாரதி சரித்திரத்தில் எழுதாமல் விட்ட ஒரு முக்கியமான விஷயம். சைதாப்பேட்டையில் பாரதி பக்கோடா சாப்பிட்டிருக்கிறாரா? அது பெருமாள் கோயில் தெரு ராமசாமி ஐயங்காரால் வாங்கித் தரப்பட்டதுதானா?

சீனி விஸ்வநாதன் மட்டுமல்ல. பாரதியின் சரித்திரத்தை எழுதிய எவராலும் எங்கும் குறிப்பிடப்பட்டதில்லை. பரலி சு. நெல்லையப்பரே கூட எழுதியதில்லை, யாரிடமும் சொன்னதுமில்லை. சாட்சிகளற்ற ஒரு சம்பவத்துக்கு என் தாத்தா மட்டுமே சாட்சியா?

பாரதியார் என் தாத்தா கையால் பக்கோடா வாங்கிச் சாப்பிட்டாரா என்கிற கேள்விக்கு இன்றுவரை என்னிடம் விடையில்லை. ஆனால் என் அப்பாவைப் போல் ‘அதெல்லாம் கப்ஸா’ என்று ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. பல முறை தாத்தாவிடம் நான் அதை விசாரித்துவிட்டேன். கடைசி வரை அவர் தனது ஸ்டேட்மெண்டை மாற்றவேயில்லை. சந்தேகமே இல்லை, பாரதியார் சைதாப்பேட்டைக்கு வந்தார், நான் சீனன் கடையில் பக்கோடா வாங்கிக்கொடுத்தேன்.

விசாரித்து உண்மையறிய இன்று பாரதியாருமில்லை, பரலி நெல்லையப்பரும் இல்லை, என் தாத்தாவும் இல்லை.

பாரதியை நினைக்கும்போதெல்லாம் எனக்கு இது நினைவுக்குவரத் தவறுவதுமில்லை. இன்றைக்கு பாரதியார் நினைவு தினம்.

26 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற