கனிமொழியைத் தூற்றாதீர்கள்!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சுட்டிக்காட்டப்பட்டு, கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இருவார கால நீதிமன்ற விசாரணைக்காக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இதுநாள்வரை வேறு எந்தக் கைது நடவடிக்கைக்கும் இல்லாத அளவு, இந்தச் செய்தி வெளியானது முதல் இணையத்திலும் வெளியிலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் ஆவேசத்தையும் ஒருங்கே பார்க்கிறேன். தமிழகப் பொதுத் தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாகியிருந்தால் இன்று இச்சம்பவம் நடைபெற்றிருக்குமா என்று தொலைபேசியில் இது குறித்து உரையாடிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். தெய்வமும் இப்போதெல்லாம் உடனுக்குடன் கணக்குகளை பைசல் செய்துவிடுகிறது என்று ஒருவர் சொன்னார். சென்ற வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் வந்தன, இந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது, அடுத்த வெள்ளிக்கிழமை வேறு ஏதாவது அவசியம் நடக்கும் பாருங்கள் என்று இன்னொரு நண்பர் கலைஞரின் புதிய வெள்ளிக்கிழமை ராசி குறித்து அறிவித்தார். அவரே. பிப்ரவரி 17ம் தேதி முதல் ஆ. ராசா திகார் சிறையில் இருக்கிறார், கலைஞர் எப்படி அம்போவென்று அவரைக் கழற்றிவிட்டுவிட்டார் பாருங்கள்! அந்தப் பாவத்துக்கு இது சரியான தண்டனை என்றும் சொன்னார்.

நிச்சயமாக ஒரு பெரிய முறைகேடு / மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆ. ராசாவில் ஆரம்பித்து கனிமொழியில் முடிகிற விஷயம் இல்லை இது. எத்தனை காலம் விசாரணை நீளப்போகிறதோ தெரியாது. ஆனால் கண்டிப்பாக ஏராளமான பெரும்புள்ளிகள் உள்பட இந்த அலையில் அடித்துவரப்போகிற அழுக்குகள் அதிகமாகத்தான் இருக்கப்போகிறது. தேசிய அளவில், சாதி-இன-மத-மொழி-கட்சி பேதங்கள் கடந்து பலபேர் இணைந்து புரிந்திருக்கும் ஊழல் இது. ஏற்கெனவே டைம் பத்திரிகை வரை புகழ்பெற்றுவிட்டது. சுதந்தர பாரதத்தின் ஊழல் வரலாறில் தனிச்சிறப்பிடம் பெறப்போகிற முறைகேடு என்பது தெளிவாகிவிட்டது.

இதில் கனிமொழியின் பங்கேற்பும் கைதும் அத்தனை பெரிதா? மிக நிச்சயமாக, அவரைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த ‘பங்களிப்பு’ வேறு பலரால் செய்யப்பட்டிருக்கிறது. காலக்கிரமத்தில் அவையும் வெளிவரத்தான் போகின்றன. ஆனால் இந்தக் கைது சம்பவத்தைக் குறித்து குதூகலமாகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது நிச்சயமாகப் பாதகமான விளைவுகளையே உண்டாக்கும் என்று நினைக்கிறேன்.

கனிமொழி செய்தது என்ன?

அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த டிபி ரியாலிடி குழுமத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனம் [சினியுக்] மூலமாகக் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் கிடைத்தது. கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர்களுள் ஒருவர் என்பதும் ஆ. ராசாவுடன் நெருக்கமாகச் செயல்பட்டு இந்தச் சதிப்பின்னலில் ஒரு கண்ணியாக இருந்திருக்கிறார் என்பதும் அவர்மீதான குற்றச்சாட்டு. ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் நியாயமானவையே. பிழை புரிந்தார், கைதானார். தீர்ந்தது விஷயம்.

இதை எதற்காகக் கொண்டாடவேண்டும்?

கருணாநிதி சந்திக்காத வழக்குகளா? அவர் கைதானதில்லையா? ஜெயலலிதா ஏறாத நீதிமன்றப் படிகளா? இந்த தேசத்தின் பிரதமராக இருந்தவர்கள் முதல் அரசியல் பெருங்கடலின் அலை வந்து கால் தொடும் தூரத்தில் மட்டுமே வசித்து மறைந்தோர் வரை எத்தனையோ நூற்றுக்கணக்கான ஊழல் வழக்குகளையும் அதில் சம்பந்தப்பட்டோரையும் அவர்களது கைதுகளையும் விடுதலைகளையும் வழக்கு மறக்கடிப்புகளையும் மற்றவையையும் பார்த்து வந்திருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தில் ஊழலுக்கு ஓர் நிரந்தர இட ஒதுக்கீடு உண்டென்பது நேரு காலம் முதலே நிரூபணமான விஷயம்.

விசாரணைக்காகக் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்கும் இத்தருணத்தை ஒரு கொண்டாட்டக் களமாக்கிக்கொள்வது – உண்மையில் அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக இணையத்தளங்களிலும் நாளிதழ்களின் மின் பதிப்பில் வெளியாகும் வாசகர் கருத்துகளும் பொதுவெளியில் பேசப்படும் பேச்சுகளும் பயங்கரமாக இருக்கின்றன.

கருணாநிதியின் மகள் கைது என்றில்லை; யாருடைய தவறுகளுக்கும் வழங்கப்படும் நியாயமான நீதி உள்ளார்ந்த மகிழ்ச்சியளிப்பது இயற்கையே. ஆனால் கொண்டாடப்பட வேண்டியதா இது? அவமானமல்லவா? சர்வதேச அளவில் நம்மைப் பார்த்துச் சிரிக்க நாமளிக்கும் வாய்ப்பல்லவா? இந்த வழக்கின் தலைகுனிவு கனிமொழிக்கு மட்டுமா? நமக்கில்லையா? நல்லவர்கள் என்று நாம் பார்த்து நியமித்தவர்கள் செய்த காரியமல்லவா இது?

திமுகவின் தேர்தல் தோல்வி என்பது, ஆட்சிக்காலத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதத்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை. கனிமொழி கைது, சம்பந்தப்பட்ட வழக்கில் அவரது தொடர்பு ஊர்ஜிதமாகிக்கொண்டிருப்பதற்கான அறிவிப்பு. திமுக ஜெயித்திருந்தால் கனிமொழி கைது செய்யப்பட்டிருக்க மாட்டார் என்பதெல்லாம் ஊகங்கள். நீதித்துறையைக் கேலிக்கூத்தாக்கும் முயற்சி. ஒருவேளை கைது நடவடிக்கை சற்று தள்ளிப்போயிருக்கலாமே தவிர, முற்றிலும் தவிர்க்கப்பட வாய்ப்பில்லை.

யோசித்துப் பார்த்தால், பத்திரிகையாளராக இருந்தபோது குறிப்பிடத்தக்க விதத்தில் அவர் ஏதும் செய்யவில்லை. கவிஞராகக் கனிமொழியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. இலங்கையில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த நாள்களில் ஈழப் போர்க்களத்தில் இருந்த முக்கியமான சிலர் அவருக்கு எழுதிய கடிதங்கள் என்று சிலவற்றைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒரு செல்ல மகளாகத் தந்தையை இன்ஃப்ளுயன்ஸ் செய்தோ, பொறுப்புள்ள உறுப்பினராக நாடாளுமன்றத்தில் அப்பிரச்னையை அழுத்தமாக எழுப்பியோ இழப்புகளைச் சற்றுக் குறைக்க முயற்சி செய்திருக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் செய்யவில்லை. ஒரு சராசரி அரசியல்வாதிக்குரிய அனைத்துக் கல்யாண குணங்களுடன் ஒரு பெரும் ஊழலின் ஒரு கண்ணியாக இன்று கைதாகிச் சிறைக்குச் சென்றிருக்கிறார். கருணாநிதியின் மகள் என்பது இக்கெட்ட வெளிச்சத்தின் வீரியத்தைக் கூட்டிக்காட்டுகிறது.

தூற்றத் தோன்றுவது இயற்கையே. ஆனால் பிரச்னையின் ஆழத்தை நோக்காமல், சம்பவம் விளைவித்த உடனடிக் கிளர்ச்சியின் விளைவாக மட்டுமே வெளிப்பாடுகள் அமைவது அவரை மேலும் பிரபலப்படுத்தி, அனுதாபக் கோட்டின் விளிம்புக்கு மட்டுமே இட்டுச்செல்லும். பிரச்னையை திசை திருப்பி, நீர்க்கச் செய்யும்.

நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு பகுதியில் சிறு கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கிறது. மண் சுமக்கும் இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். ஜெயலலிதா முதல்வர் ஆனார். சென்றமுறை கருணாநிதியைக் கைது செய்தார்கள். ஜெயலலிதா முதல்வர் ஆனார். இந்த முறை கனிமொழியைக் கைது செய்தார்கள்!

அனுதாபம் ஆபத்தானது. தூற்றல்களைக் காட்டிலும்.

36 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற