சின்னக் குத்தூசி

பழம்பெரும் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி இன்று காலமானார். ஓராண்டு காலத்துக்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனக்குத் தெரிந்து இந்த ஓராண்டு மட்டுமல்ல – இதற்குப் பல வருடங்கள் முன்பிருந்தே சின்னக்குத்தூசியை ஒரு தந்தையாக பாவித்து அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் நக்கீரன் கோபால். குத்தூசியின் புத்தகங்களைக்கூட நக்கீரன்தான் வெளியிட்டு வந்தது. 77 வயதில் இன்று காலமான சின்னக்குத்தூசிக்கு, கலைஞர் உள்பட அநேகமாக ஆயிரம் நண்பர்கள் இருக்கக்கூடும். கோபால் அவர்களுள் முதலானவர்.

அவரது வல்லப அக்கிரகாரம் வீதி மேன்ஷனுக்குச் சென்று அவரோடு உரையாடாத பத்திரிகையாளர்கள் சென்னையில் அநேகமாகக் கிடையாது. பழம் பெரும் பத்திரிகையாளர்கள் முதல் நேற்றே முதல் முதலாகப் பத்திரிகை உலகுக்கு வந்தவர்கள்வரை அத்தனை பேரும் வருவார்கள். எப்படி வருவார்கள், யார் அழைத்து வருவார்கள், எதற்காக வருவார்கள், எத்தனைக் காலம் வருவார்கள் – தெரியாது. ஆனால் ஆபீசுக்குப் போவது மாதிரி ஒரு காரியம்தான், சின்னக்குத்தூசி அவர்களின் அறைக்குச் செல்வது. நானும் போயிருக்கிறேன். கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் பலமுறை சின்னக்குத்தூசியின் அறைக்குச் சென்றிருக்கிறேன். கல்கி நிருபர்கள் சந்திரமௌலி, ப்ரியன் போன்றவர்களெல்லாம் அநேகமாக தினசரி குத்தூசியைச் சந்திக்கப் போகிறவர்களாக இருந்தார்கள். எத்தனை நேரம் வேண்டுமானாலும் பேசுவார். என்ன விஷயம் வேண்டுமானாலும் பேசுவார். இதமாகப் பேசுவார். இளம் பத்திரிகையாளர் என்றால் ஊக்குவிப்புச் சொற்றொடர்கள் அவர் பேச்சில் தாராளமாக இருக்கும். அத்தனை பத்திரிகைகளிலும், அத்தனை பேர் எழுதும் கட்டுரைகளையும் வரி விடாமல் படிப்பதும், படித்ததை நினைவுகூர்ந்து குறிப்பிடுவதும் அவரது பேச்சின் சிறப்பம்சம். பெரும்பாலும் அந்த வாரம் எழுதிய கட்டுரை தொடர்பாகத்தான் சம்பாஷணை ஆரம்பமாகும்.

பேசிக்கொண்டே இருக்கும்போது அறை வாசலில் யாராவது அரசியல்வாதிகள் வந்துவிடக்கூடும். அறிக்கைகள், சட்டசபைப் பேச்சுகள், தீர்மானங்கள் என்று என்னத்தையாவது எழுதி எடுத்துவருவார்கள். ஐயா ஒருவாட்டி பார்த்தாச்சின்னா ஒரு திருப்தி என்பார்கள். பெரும்பாலும் திமுககாரர்கள் என்றாலும் பொதுவில், திராவிட இயக்க அரசியல்வாதிகள் அத்தனை பேருக்குமே அவர்மீது ஒரு பெரிய மதிப்பு இருந்தது. கலைஞர் பல விஷயங்களில் சின்னக்குத்தூசியின் கருத்தைக் கேட்டுத்தான் செயல்படுவார் என்பதால் உண்டானதாக இருக்கலாம்.

சின்னக்குத்தூசி பெரிய படிப்பாளி. நான் சந்தித்த தருணங்களிலெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த கோலத்திலேயே அவரைப் பார்த்திருக்கிறேன் என்பது நினைவுக்கு வருகிறது. ஒரு முறை கல்கியில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார் ஒரு தொடர் எழுத ஆரம்பித்தார். [சுவாமிகளின் சொற்பொழிவை ஆசிரியர் சீதா ரவி எழுத்துக்கு மாற்றி, வெளியான தொடர்.] அந்த வாரம் நான் சின்னக்குத்தூசியைப் பார்க்க அவர் அறைக்குச் சென்றபோது, ‘அதான் சங்கராசாரியார் அருள்வாக்கு போடறிங்களே, இதுவேறயா?’ என்றார். நான் பதில் சொல்லாமல் சிரித்தேன். ‘ஆனா நல்லாருக்கு. படிச்ச, விஷயம் தெரிஞ்ச மனிதர். ஒரு பக்திப் பத்திரிகைக்கு சரியா இருக்கும்’ என்று சொன்னார். [அவர் பரம நாத்திகர்.] கல்கியில் முக்கூராரின் தொடர் மிகப் பிரம்மாண்டமான வெற்றி கண்டபோது திரும்பவும் ஒருமுறை அவரைச் சந்தித்தேன். அவரது முந்தைய விமரிசனத்தை நினைவுகூர்ந்து, ‘என்ன சார் பண்றது? சுஜாதா தொடரைவிட இது பெரிய ஹிட்’ என்றேன். ‘இருக்கலாம். ஆனா காலப்போக்குல புது வாசகர்கள், குறிப்பா இளம் வாசகர்கள் பத்திரிகைக்கு வர்றதைத் தடுக்கக்கூடிய விஷயங்கள் இதெல்லாம்’ என்று சொன்னார்.

அவர் சொன்னது உண்மை. 1999வது ஆண்டு நான் கல்கியில் இருந்து வெளியேறிவிட்டேன். அதன்பின் இளைய தலைமுறையைக் கல்கி பக்கம் இழுக்கும் முயற்சிகள் எத்தனையோ விதமாக மேற்கொள்ளப்பட்டும் பெரிய பலன் இருக்கவில்லை.

தமிழகத்தில் முறையான திராவிட இயக்க வரலாறு அறிந்தவர்கள் வெகு சொற்பம். சின்னக்குத்தூசி அவர்களுள் ஒருவராக இருந்தவர். தனிப்பட்ட முறையில் அவரது முரட்டுத்தனமான திமுக சார்பு நிலைபாடு எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது.  கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார். அது வெறும் கட்சிக்காரரின் ஆதரவாக இல்லாமல், அறிவுபூர்வமாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்லது பேச்சுதான் என்பது போல் தரவுகளின் அடிப்படையில் வாதிடுவது குத்தூசியின் பாணி. கலைஞரே இப்படியெல்லாம் யோசித்திருக்க மாட்டார் சார் என்று சொன்னாலும் ஒப்புக்கொள்ள மாட்டார். அந்தச் சார்பு அவரது விருப்பம், அவரது தேர்வு, அவரது நம்பிக்கை. ஆனால் பல்வேறு கட்சி, கொள்கைகள், சார்பு, விருப்பு வெறுப்பு உள்ளவர்களோடும் இறுதிவரை அவரால் நட்பு பேண முடிந்திருக்கிறது.

சின்னக்குத்தூசி அவர்களுக்குக் குடும்பம் என்று தனியே ஒன்று கிடையாது. தமிழ் பத்திரிகை உலகம்தான் அவர் குடும்பம். இறந்ததும் அவர் உடலைக்கூட நக்கீரன் அலுவலகத்துக்குத்தான் எடுத்துச் சென்றார்கள். நிறைய ஹைஃபன்களும் ஆச்சரியக் குறிகளுமாக நான் பார்த்த அவரது பழைய மேனுஸ்கிரிப்டுகள் ஞாபகத்துக்கு வருகின்றன. அவரது பாதிப்பால்தான் விகடன் பத்திரிகையாளர்கள் பலர் ஒவ்வொரு சொற்றொடருக்கும் ஆச்சரியக்குறி போடுகிறார்களோ என்று பல சமயம் நினைத்திருக்கிறேன். அவரது அறையில் நான் அதிகம் பார்த்தது விகடன் நண்பர்களையே.

திரு சின்னக்குத்தூசி அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

O

நக்கீரன் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பு

தமிழினியனின் பதிவு

13 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற