ஒரு ஆய் கதை

பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் நரேந்திர மோடி வந்தார், பார்த்துக்கொண்டே இருங்கள் – பத்து நாளுக்குள் குஜராத் மின்சாரம் ராம ரதத்தில் ஏறி வந்து சேரும் என்று சொன்னார்கள். தமிழகத்தைப் பிடித்த ஆற்காட்டு சாபம் அத்தனை சீக்கிரம் விமோசனம் பெறுமா என்ன? இது அரசியல் பேசும் கட்டுரையல்ல. நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நடைபெற்ற சம்பவம்.

ஒழுங்காக தினமும் ஒரு மணிநேரம் மின்சாரம் போய்க்கொண்டிருந்தது. மக்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். என்ன நினைத்ததோ மின்சார வாரியம் – மின் தடையே இல்லை, வெறும் குறைந்த மின் அழுத்தப் பிரச்னைதான் என்று மக்களை மேலும் குஷிப்படுத்த, கடந்த சில நாள்களாக எங்கள் பிராந்தியத்துக்கு மின்சாரத்தை இங்க் ஃபில்லரில் வழங்க ஆரம்பித்தார்கள். [சென்னையில் பெரும்பாலான இடங்களில் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்.] இந்த இங்க் ஃபில்லர் மின்சாரம் எப்படிப்பட்டதென்றால், கரண்ட் இருக்கும், ஆனால் குழல் விளக்கு எரியாது. கரண்ட் இருக்கும். ஆனால் மின்விசிறியால் உபயோகம் இருக்காது. கரண்ட் இருக்கும். மைக்ரோவேவ் எடுக்காது. கரண்ட் இருக்கும். ஃப்ரிட்ஜ் வேலை செய்யாது. கரண்ட் இருக்கும். துணி துவைக்கும் இயந்திரம் குவார்ட்டர் கோவிந்தன் மாதிரி முனகலுடன் சுழலும். கரண்ட் இருக்கும். ஆனால் யுபிஎஸ் எடுக்காது. அனைத்திலும் சிகரம், கரண்ட் இருக்கும் – மோட்டார் போடமுடியாது.

நேற்றும் கரண்ட் இருந்தது. ஆனால் மோட்டார் வேலை செய்யவில்லை. இருபதுக்கும் மேற்பட்ட குடித்தனங்கள் உள்ள வீட்டுத் தொகுப்பு. நேற்றுக் காலை முதலே அத்தனை பேரும் உஸ்ஸு உஸ்ஸென்று மின் விசிறியையும் அடிக்கும் அனல் காற்றையும் மாற்றி மாற்றி சபித்துக்கொண்டிருந்தார்கள். முதல் நாள் மோட்டார் போட்டு டேங்கில் தண்ணீர் ஏற்றியிருந்தபடியால் நேற்று மதியம் வரை அது குறித்து யாருக்கும் எந்த விபரீதமும் தோன்றவில்லை. எந்த வீட்டுக்காரர் பாத்ரூம் போய்விட்டு முதல் முதலில் குழாயைத் திறந்து காற்று வருவதைக் கண்டு அதிர்ந்தார் என்று சரியாகத் தெரியவில்லை. பிற்பகல் மூன்று மணிக்கு விஷயம் பரவிவிட்டது. தொட்டியில் தண்ணீர் இல்லை. நிரப்புவதற்கு மோட்டார் எடுக்கவில்லை.

விற்பன்னர்கள் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். [மின்சார வாரியத்துக்கு போன் செய்வது என்பதும் அதிலொன்று.] மூன்று வழி மின்சாரத்தில், கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் மின் துணுக்குகளை (!) மொத்தமாகத் திரட்டி ஒரு வழியில் ஓடவிட்டு, அந்த ஒரு வழியை மோட்டாருக்கு அர்ப்பணம் செய்யலாமா என்றெல்லாம் பரிசோதித்தார்கள். எதுவும் பலிக்கவில்லை.

நேரம் ஆக ஆக, ஒரு தீக்குச்சியின் வெளிச்சத்தைக் காட்டிலும் குறைவான வெளிச்சத்தையே மின் விளக்குகள் வழங்க ஆரம்பித்ததைக் கண்டோம். நிச்சயமாக மோட்டார் எடுக்காது என்பது தெரிந்துவிட்டது.

இதற்குள் இருட்டத் தொடங்கிவிட, அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் ஒவ்வொருவரையும் வாசலிலேயே மடக்கி, யாரும் பாத்ரூமுக்கு முதலில் ஓடாதீர்கள் என்று எச்சரித்து அனுப்பவேண்டிய பொறுப்பை யாராவது ஏற்கவேண்டியிருந்தது. [‘அப்ப எங்கதான் சார் போறது?’ ‘எங்க வேணா போலாம் சார். போயிட்டு தண்ணி மட்டும்தான் கேக்கக்கூடாது.’]

மின்சார வாரிய அலுவலகத்துக்கு மாற்றி மாற்றி போன் செய்து களைத்துப் போன குடியிருப்புப் பகுதி செயலாளர், வசிக்கும் அத்தனை பேரையும் போன் செய்யச் சொல்லி வற்புறுத்தினார். மின்வாரியர்கள் உலக உத்தமர்களல்லவா? ரிசீவரை எடுத்துக் கீழே வைத்துவிட்டார்கள். தப்பித்தவறி ஓரிருமுறை யாராவது எடுத்து, விஷயத்தைச் சொன்னதும் ‘பாக்கறோம் சார்’ என்ற இருசொல் பதில் தவிர வேறு கிடையாது.

குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்தன. புழுக்கம் மேலும் மேலும் அதிகரித்தது. வீட்டுக்கு நாலு பேர் என்று கணக்கு வைத்துக்கொண்டால் கூடக் குறைந்தது தொண்ணூறு பேராவது அங்கே வசிக்கிறோம். தொண்ணூறு பேர் பன்னிரண்டு மணிநேரமாக இயற்கை அன்னையை கவனிக்க முடியாதபடிக்கு ஓர் இருப்பியல் சிக்கல். புத்திசாலிகள் சிலர் மாலையே மினரல் வாட்டர் கேன் வாங்கி உபாதையைத் தீர்த்துக்கொண்டார்கள். இந்த யோசனை வராதவர்கள் இரவுக்குப் பிறகு மிகவும் சிரமப்பட்டுப் போய்விட்டார்கள். தொலைக்காட்சித் தொடர்கள், இரவு சமையல், வழக்கமான பணிகள் எதுவும் கிடையாது. ஒன்பது மணியளவில் குடியிருப்புவாசிகள் அத்தனை பேரும் வாசலில் கூடிவிட்டார்கள். அத்தனைபேர் வீடுகளிலும் தலா ஒரு மின்சார விளக்கு மூக்கு ஒழுகுவதுபோல் எரிந்தது. ஏதாவது செய்யவேண்டும். விளக்கு எரியாவிட்டால் பரவாயில்லை. மின்விசிறி சுற்றாவிட்டால் பரவாயில்லை. குடிக்க நீர் இல்லாதுபோனாலும் பரவாயில்லை. கழுவ நீர் அவசியம். ஆவின் பாலில் எல்லாம் அது சாத்தியமில்லை. சமய சந்தர்ப்பம் பார்த்து லாரிக்காரர்களும் கிடைக்கவில்லை.

எங்கிருந்தோ ஒரு எலக்ட்ரீஷியனை அழைத்து வந்தார்கள். ஏதாவது செய்யமுடியுமா என்று சில மணிநேரங்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் அவர். மறுபுறம் மோட்டார் ஓடுவதற்கு எங்காவது ஜெனரேட்டர் வாடகைக்குக் கிடைக்குமா என்று தேடி ஒரு படை புறப்பட்டது. பிரச்னை என்பது பரம்பொருள் போன்றது. அனைவருக்கும் பொதுவானது. மன்னிக்கவும். ஜெனரேட்டர்கள் அனைத்தும் இதே போன்ற பிரச்னைக்காகப் பல்வேறு இடங்களுக்குப் போயிருக்கின்றன. காத்திருந்து, பதிவு செய்தால் காலக்ரமத்தில் வந்து சேரும்.

சரி ஒரு புரட்சி செய்துவிடலாம் என்று முடிவு செய்து திரும்பவும் மின்சார வாரியத்தின்மீது படையெடுத்து ஒரு வழியாக நள்ளிரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு எங்கிருந்தோ ஒரு பணியாளரைத் தட்டியெழுப்பி அழைத்து வந்தார்கள். அந்த அறிஞர் ஆராய்ச்சிகள் செய்துவிட்டு, ‘ஒரே ஒரு வழிதாங்க. நீங்க எல்லாரும் காசு போட்டு உங்களுக்குன்னு ஒரு டிரான்ஸ்பார்மர் வாங்கிருங்க. இப்பிடி அடிக்கடி பிரச்னை வராது’ என்று சொன்னார். தாமு கடையில் டிரான்ஸ்பார்மர்கள் விற்பதில்லை என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லி, விடிந்ததும் அதற்கு ஏற்பாடு செய்யலாம், இப்போது கழுவ ஒரு வழி செய்யுங்கள் என்று காலை கையைப் பிடித்து திருட்டுக் கெஞ்சு கெஞ்சிய பிறகு மேலும் ஓரிரு மணிநேரங்கள் அவர் உத்தியோகம் பார்க்கவேண்டியிருந்தது.

இரவு இரண்டு மணி சுமாருக்கு மோட்டார் ஹுர்ர்ர்ர் என்றது. மக்கள் ஹுர்ரே என்றார்கள். கிணறுகளே இல்லாத நகரத்தில் வசிப்பதன் ஒரு பெரும் விபரீதம் நேற்று புரிந்தது. நேற்று முழுதும் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு அவதிப்பட்ட எங்கள் குடியிருப்புப் பகுதிவாசிகள் பலபேர் இன்று அலுவலகங்களுக்கு லீவ் போட்டுவிட்டார்கள். திருப்தியாக முழுநாளும் டாய்லெட் போகலாம்.

டேங்க் நிரம்பிவிட்டது.

38 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற