எப்படி இருக்கலாம், கல்வி? 3

என் தந்தை ஒரு தலைமையாசிரியர். அவரது பள்ளியில்தான் நான் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். தலைமையாசிரியராகப்பட்டவர், பத்தாம் வகுப்புக்கு மட்டும் ஆங்கிலம் இரண்டாவது பேப்பர் எடுப்பார். பள்ளி வளாகத்தில் அவர் ஒரு பெரும் பூச்சாண்டியாக, பிரம்ம ராட்சசனாக அறியப்பட்டவர். ஹெட் மாஸ்டர் வகுப்பு என்றால் பிள்ளைகள் அலறுவார்கள். அடி, மிரட்டல், கடும் தண்டனைகளால் தன் ஆளுமையை அங்கு அவர் கட்டமைத்துக்கொண்டிருந்தார்.

நான் பத்தாம் வகுப்புக்குச் சென்றபோது, என் நல்லூழ் காரணமாக என் தந்தைக்குப் பணி உயர்வில் இட மாற்றம் வந்துவிட்டது. பெரிதாக மகிழ ஒன்றுமில்லை. வீட்டிலும் அப்போது அவர் ஹெட் மாஸ்டராகத்தான் இருந்து வந்தார். நிறைய அடிகள் வாங்கியிருக்கிறேன். என் நினைவு சரியென்றால், நான் படிப்பை விட்டு முற்றிலும் விலகிய பிறகுதான் அவர் எனக்குத் தந்தையாகவே காட்சியளிக்கத் தொடங்கினார்.

பிரச்னை அதுவல்ல. அவர் நல்லாசிரியர் விருது பெற்றவர். ஆளுநராக, பிரபுதாஸ் பட்வாரி இருந்தபோது அவார்ட் கொடுத்து போட்டோ எடுத்து வீட்டில் மாட்டியிருந்தது. என்னை மிகவும் பாதித்த புகைப்படம் அது. வீட்டில் எனக்குக் கணிதம், ஆங்கில இலக்கணம் இரண்டும் கற்பித்தவர் அவர்தான். நானே அவரை ஒரு நல்ல ஆசிரியர் என்று சொல்லமாட்டேன். சொல்லித்தருவதில் அவருக்குப் பிரச்னை கிடையாது. மணிக்கணக்கில் உட்கார்ந்து பாடமெடுப்பார்.  ஆனால் பொறுமை சுத்தமாகக் கிடையாது. வெகு சீக்கிரம் கோபம் வந்துவிடும். டெஸ்டுகளில் தவறு செய்தால் போட்டு சாத்திவிடுவார். அவரது குணத்தை அவருக்குக் கீழ் பணியாற்றிய அத்தனை ஆசிரியர்களும் பள்ளியில் அப்படியே எடுத்து ஏந்திக்கொண்டார்கள். ஆசிரியர் என்றால் அடிப்பவர். ஆசிரியர் என்றால் திட்டுபவர். ஆசிரியர் என்பவர் முரடர். ஆசிரியர் என்பவர் அணுக முடியாதவர்.

பிள்ளைகள் அச்சத்தில் ஒடுங்கி, கைகட்டி வாய்பொத்தி நிற்பதை ஒழுக்கம் என்று எடுத்துக்கொண்டுவிடக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். வாத்தியார் அடிப்பார் என்று பயந்து வீட்டுப்பாடங்களையும் தேர்வுகளையும் கவனமாகச் செய்வார்கள் என்பதே அவர்களது பெரிய எதிர்பார்ப்பாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. வெகு காலம் கழித்து என் தந்தையிடம் இது பற்றிப் பேசியபோது, அவர் என்னை சுத்தமாக மறுத்துவிட்டார். அடித்தல், மிரட்டல் எல்லாம் ஆசிரியத்துவத்தின் ஓர் அம்சம் என்பதாகவே அவர் அறிந்திருந்தார். உதாரணம் சொல்ல, அவருடைய ஆசிரியர்கள் சிலரது பெயர்களையும் பல சம்பவங்களையும் வரிசைப்படுத்த அவரால் முடிந்தது.

நீ ஒரு நல்ல அப்பா. ஆனால் சுமாரான வாத்தியார்தான் என்று சொல்லிவிட்டேன். அவருக்குத் தாங்கமுடியாத வருத்தம் இருந்திருக்கும். இருந்தாலும் மறைத்துக்கொண்டு என்னை மறுத்தே பேசினார். தான் சந்தேகமில்லாமல் ஒரு நல்ல ஆசிரியர்தான் என்று அடித்துச் சொன்னார். அவரிடம் படித்து, பெரிய ஆள்களான சில பேரை நினைவுகூரவும் செய்தார். எனக்குப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் மேற்கொண்டு அவரைச் சீண்ட விரும்பாமல் விட்டுவிட்டேன்.

ஆசிரியர்-மாணவர்கள் உறவு என்பது காலகாலமாக இங்கே பிரச்னைக்குரிய ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது. சொல்லிக்கொடுப்பது என்பது மிகுந்த பொறுமையையும் அனுசரணையையும் தியானத்தையும் கோரும் ஒரு விஷயம். எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், என் ஆசிரியர் எனக்கு நண்பர் என்று எந்தப் பள்ளிப்பிள்ளை இங்கே யாரும் சொல்லிக்கொடுக்காமல், சட்டென்று எழுந்து சொல்லும்? நட்புணர்வுடன் போதிக்கப்படாத எதுவும் சரியாக உள்ளே இறங்காது என்பது என் தாழ்மையான கருத்து.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் கல்கியில் சேர்ந்த புதிது. அப்போது கி.ராஜேந்திரன் ஆசிரியர். நான் இருபது வயது சப் எடிட்டர். புதன் கிழமைதோறும் மாலை தலையங்கம் எழுதி எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு வருவார். அது கம்போஸ் ஆகி வந்ததும் சப் எடிட்டரிடம் வரும். ‘எழுதியிருக்கேன், சரியா வந்திருக்கா பாருங்க.. எதாவது திருத்தணும், மாத்தணும்னு தோணிச்சின்னா மாத்திக்குங்க. சாஸ்தியா இருந்திச்சின்னா வெட்டிருங்க’ என்று சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விடுவார்.

தூக்கிவாரிப் போடும் எனக்கு. வாரப் பத்திரிகை தலையங்கங்களிலேயே கல்கியின் தலையங்கத்துக்கு ஒரு தனிச்சிறப்பான இடம் இருந்த காலம் அது. கிராவின் தலையங்க எழுத்தென்பது புள்ளி வைத்து ஆணி அடித்த மாதிரி இருக்கும். ஒரு வார்த்தை, ஒரு முற்றுப்புள்ளி, கால் புள்ளி கூடக் கூடுதல் குறைச்சலாக இராது. இருபது இருபத்தி ஐந்து வரிகளில் ஒரு பிரச்னை, அது பற்றிய பொதுவான கருத்து, பத்திரிகையின் கருத்து, எது நியாயம், எது அநியாயம் என்கிற தெளிவான அலசல், அம்பு நுனி போன்ற விமரிசனம், முத்தாய்ப்பாக ஒரு கடைசி வரி அனைத்தும் இருக்கும்.

ஐம்பதாண்டு காலத்துக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க பத்திரிகையாளர் அவர். புத்தம் புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கும் ஒரு பயிற்சி நிலை சப் எடிட்டரிடம் ‘சரியா வந்திருக்கா பாருங்க, திருத்தணும்னா திருத்துங்க’ என்று சொல்ல எத்தனை பேருக்கு மனம் வரும்? ஆனால் கிரா சொல்லுவார். உடனே ஒரு குஷி பிறந்து, அவரை அதிசயிக்கச் செய்தே தீர்வது என்று அவரது பிரதியில் என்னால் ஆன மாற்றங்களைச் சேர்த்து எடுத்துச் சென்று காண்பிப்பேன்.

படித்துப் பார்த்துவிட்டு, ‘அட ஆமால்ல.. இது எனக்குத் தோணாம பூட்ச்சே.. ஏன் உங்களாண்ட குடுத்தேன்னு இப்ப புரியுதுங்களா? நல்லா செஞ்சிருக்கிங்க.. வெரி குட்டு.’ என்பார். கிறுகிறுத்துவிடும் எனக்கு. ‘ஆனா இதுல என்ன ஒரு விசயம்னாக்கா.. இதே பிரச்னைய பத்தி மூணு வாரம் முன்ன நாம ஒரு கருத்து சொல்லியிருக்கம். அத பாத்திங்கன்னா..’ என்று மெல்ல ஆரம்பிப்பார். சம்பந்தப்பட்ட பிரச்னையைப் பற்றிய முந்தைய தலையங்கங்கள் ஒவ்வொன்றாக எடுத்து என்ன எழுதியிருக்கிறது, ஏன் அப்படி எழுதப்பட்டது என்பதையெல்லாம் பொறுமையாக விளக்குவார். ‘நீங்க நல்லா சார்ப்பா எழுதறிங்க. நிச்சயமா இது பெரிய விசயந்தாங்க. ஆனா பாருங்க.. மக்களுக்கு விசயம் சார்ப்பா உள்ளாற போவணுமே தவிர வார்த்தைகள் சாஃப்ட்டா இருந்தாத்தான் புடிக்கும். காரமான வார்த்தைங்க மேடைல கேக்கறப்ப நல்லாருக்கும். எழுத்துன்னு வர்றப்ப சாஃப்டா இருக்கறதுதான் மருவாதி. வேஸ்டி கட்னா ஆம்பள, பொடவ கட்னா பொம்பளன்னு இல்லிங்களா? அந்த மாதிரி. உள்ளார நீங்க ஊசிய வெக்கறிங்களா, ஒலக்கைய வெக்கறிங்களான்றது பிரச்னையே இல்லிங்க. மேலுக்கு வாழப்பழம் வெச்சிரணும். புரியுதுங்களா?’

சற்றும் வலிக்காமல், உறுத்தாமல், தோழமை உணர்வு மேலோங்க எனக்கு போதித்த இந்த ஆசிரியரை நான் பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் விடைகொடுத்த பிறகுதான் கண்டுபிடித்தேன். சந்தேகமில்லாமல் கல்கிதான் என் முதல் பள்ளிக்கூடம். கிராதான் என் முதல் ஆசிரியர். அதற்குமுன் நான் படித்த இடமெல்லாம் வீண் என்று அழுத்தம் திருத்தமாகத் தோன்றிவிட்டது.

இந்தளவுக்குக் கூட வேண்டாம். ஆனால் மாணவர்களை ஐந்தறிவு ஜென்மங்களாகக் கருதாத ஆசிரியர்கள் மிகவும் அவசியம். பள்ளி நாள்களில் மேலே விழும் ஒவ்வொரு பிரம்படியும் நிச்சயமாக எதிர்ப்புணர்வைத்தான் உண்டாக்கும் என்பது என் தனிப்பட்ட அனுபவம். எல்லோருக்கும் அப்படியா என்று தெரியாது. என் ஆசிரியர்களை நான் மனமார வெறுத்திருக்கிறேன். வன்முறை அதன் எந்த வடிவத்தில் வந்தாலும் மனிதர்கள் விரும்புவதில்லை. ஒரு குழந்தையைக் கூட, தவறு செய்யும்போது அடிக்காமல் கண்டித்துத் திருத்துவதுதான் சிறந்தது என்பது என் கருத்து. என் பள்ளி நாள்களில் என் தந்தையிடம் ஏராளமாக அடி வாங்கியவன் நான். இன்று என் குழந்தைக்கு ஆறு வயது. அவள் பிறந்த கணம் முதல் இந்த வினாடிவரை கொஞ்சுவது தவிர பிறிதொன்றுக்கு என் கரம் நீண்டதில்லை. அடிக்காமல், கடும் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல், அவர்களது தன்மான உணர்வுக்குப் பங்கம் விளைவிக்காமல் நாம் மேற்கொள்ளக்கூடிய திருத்தல் நடவடிக்கைகள், அடித்துத் திருத்துவதைக் காட்டிலும் பல மடங்கு பலனளிக்கக்கூடியது என்பது என் அனுபவம்.

ஒரே ஒரு விஷயத்தைச் சொல்லி இப்பகுதியை முடிக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னர் பத்திரிகை வேலை நிமித்தம் கல்கத்தா சென்றிருந்தபோது சாந்தி நிகேதனுக்கு ஒருநாள் போயிருந்தேன். அவர்களது பிரசித்தி பெற்ற மரத்தடி வகுப்பு ஒன்றில் அமர்ந்திருந்தேன். அது எந்த வகுப்பு என்று சட்டென்று இப்போது மறந்துவிட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற ஒரு பீரியடில் ஆசிரியருக்கும் [அவர் ஒரு பெண்மணி] மாணவர்களுக்கும் ஒரு விவாதம் நிகழ்ந்தது. [உயிரியல் பாடம் என்று நினைவு.] பேச்சு ஒருவார்த்தையும் எனக்குப் புரியவில்லை. முழுக்க முழுக்க வங்காள மொழி. ஆனால் மாணவர்கள் ரவுண்டு கட்டி ஆசிரியரை மடக்கி மடக்கித் தாக்கியதும், அவர் சற்றும் சளைக்காமல் சிரித்த முகத்துடன் அத்தனை பேரையும் சமாளித்ததையும் செல்லமாக ஒருவரையொருவர் சாடிக்கொண்டதையும் வகுப்பு முடிந்த கணத்தில் சட்டென்று அத்தனை மாணவர்களும் எழுந்து ஆசிரியருக்குக் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணக்கம் சொன்னதையும் இன்றுவரை என்னால் மறக்கமுடியவில்லை.

பாடப்புத்தகங்களால் சாதிக்கமுடியாத பலவற்றை ஒரு நல்ல ஆசிரியர் சாதித்துக்காட்ட முடியும். தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களுக்கு முதற்கண் தேவை, பல கி. ராஜேந்திரன்கள்.

[தொடரும்]

பி.கு: அடுத்த ஒரு சில தினங்களுக்கு எனக்கு இணையத்தொடர்பு எப்போதாவதுதான் கிட்டும். கட்டுரைப் பகுதிகளை ஷெட்யூல் செய்திருக்கிறேன். அவை பிரசுரமாவதில் சிக்கல் இருக்காது. ஆனால் கமெண்ட்களைப் பார்த்து பிரசுரிப்பதில் தாமதம் இருக்கலாம். பொறுத்துக்கொள்ளுங்கள்.

23 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற