எப்படி இருக்கலாம், கல்வி? 4

நான் பள்ளியில் படித்த காலத்தில் குடிமைப்பயிற்சி என்றொரு வகுப்பு இருந்தது. இப்போது உண்டா என்று தெரியவில்லை. வாரத்துக்கு ஒரு பீரியட் மட்டுமே இருக்கும். ஏதாவது கைத்தொழில் கற்றுத்தரும் வகுப்பு அது. என் பள்ளியில் அது கைத்தறி சொல்லித்தரும் வகுப்பு என அறியப்பட்டது. ஓரிரு கைத்தறி இயந்திரங்களும் பள்ளிக்கூடத்தில் இருந்தன.

ஆனால் எனக்கு நினைவுதெரிந்து ஒருநாள்கூட நான் தறியில் அமர்ந்ததில்லை. தறி வாத்தியார் என்று ஒருவர் இருந்தார். அவர் பெரும்பாலும் பள்ளியின் கிளார்க்குக்கு அசிஸ்டெண்டாக, பெரிய பெரிய லெட்ஜர்களில் ஸ்கேல் வைத்துக் கோடு போட்டுக் கொடுக்கிற வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பார். சுதந்தர தின விழா, குழந்தைகள் தின விழா போன்ற பள்ளி விழா தினங்களில் கொடி கட்டுவது, மைதானத்தில் சுண்ணாம்புப் பொடியால் கோடு போடுவது, பிற சமயங்களில் பி.ஈ.டி. ஆசிரியர் அறையில் தினத்தந்தி படித்துக்கொண்டிருப்பது போன்றவையே அவரது பணிகளாக அறியப்பட்டன.
எங்களுடைய குடிமைப் பயிற்சி வகுப்புகள் பெரும்பாலும் மைதானத்தில் கழியும். அல்லது வேறு யாராவது ஆசிரியர் அந்த பீரியடை எடுத்துக்கொண்டுவிடுவார்.

நான் படித்தது, கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளி. பக்கத்தில் திருப்போரூர், படூர், கோவளம், செம்பாக்கம் என்று ஊர் தோறும் ஒரு அரசுயர் பள்ளியும் அனைத்துப் பள்ளிகளிலும் குடிமைப் பயிற்சி வகுப்புகளும் அவசியம் உண்டு. அந்நாளில் அவ்வகுப்பின் முக்கியத்துவத்தை யாருமே உணர்ந்ததில்லை என்பதை இப்போது வெட்கத்துடன் நினைவுகூர்கிறேன். ஒரு தொழிலைக் கற்பிப்பது என்பது மிகச் சிறந்த விஷயம். ஏதாவது ஒரு கைத்தொழில். எப்போதாவது யாருக்கு வேண்டுமானாலும் உதவக்கூடிய ஒரு தொழில். இருப்பது நல்லது என்று யாரோ புண்ணியவான் பாடத்திட்டத்தில் என்றோ சேர்த்து வைத்தது.

ஆனால் முற்றிலும் வீணாக்கப்பட்ட ஒரு பாடமாகவே அது ஆகிப்போனது. இன்றைக்குப் பள்ளிகளில் இதே லட்சணத்தில்தான் கம்ப்யூட்டர் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன என்பதையும் இதனோடு இணைத்துப் பார்க்கிறேன். முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டர் க்ளாஸ் என்றொரு சடங்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிடுகிறது. அந்தக் கால தூர்தர்ஷன் நாடக செட்டுகளின் பூச்சாடிகள் போல அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யுட்டர்கள் இருக்கின்றன. அதைக் காட்டி தனியாக ஃபீஸ் வாங்கிவிடுகிறார்கள். வாரத்துக்கு ஒரு வகுப்பு. என்ன சொல்லித்தருகிறார்கள்? எனக்குத் தெரியவில்லை.

என் மகள் படிக்கும் பள்ளிக்கூடத்திலும் கம்ப்யூட்டர் க்ளாஸ் உண்டு. வருடம் ஒருமுறை கம்ப்யூட்டர் கார்னிவல் என்றும் ஒரு திருவிழா நடத்துவார்கள். ஆனால் கம்ப்யூட்டர் வகுப்பில் என்ன சொல்லித்தருவார்கள் என்று கேட்டால் மட்டும் பதில் இருக்காது. கேம்ஸ் விளையாடுவோம் என்று ஒரு சில சமயம் சொல்லியிருக்கிறாள். கலரிங் செய்ததாகவும்.

மாறாக, பள்ளிப் பிள்ளைகளுக்கு ஒழுங்கான, முறையான டைப்பிங் சொல்லித்தரலாம் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை? ஐந்து வகுப்புகளுக்குள்ளேயே இன்று ஆரம்பித்துவிடக்கூடிய விஷயமல்லவா? எங்கள் அலுவலக எடிட்டோரியலிலேயே ஒரு சிலரைத் தவிர யாருக்குமே டைப்பிங் தெரியாது. பெரும்பாலானவர்கள் ஒருவிரல் கிருஷ்ணாராவ்களாகத்தான் தட்டுகிறார்கள். இவர்கள் படித்த நாள்களில் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கிடையாது. டைப்பிங் வகுப்புக்குச் சென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. இன்று அப்படி இல்லையே? கம்ப்யூட்டரின் அவசியம் புரிந்த கல்வித்திட்டம் டைப்பிங் சொல்லித்தருவதை வலியுறுத்தாதது ஏன்?

என் மகள் இரண்டாம் வகுப்புக்குப் போயிருக்கிறாள். நான் வீட்டில் முறையான டைப்பிங் அவளுக்குக் கற்றுத் தந்துகொண்டிருக்கிறேன். பழகுவதில் அவளுக்கு எந்த சிரமமும் இல்லை. இதை ஏன் கம்ப்யூட்டர் வகுப்புகளிலேயே செய்யக்கூடாது? என்னத்தையாவது ஒரு சிடியைப் போட்டு படபடபடவென்று துப்பாக்கி சுடும் அல்லது மோட்டார் சைக்கிள் ஓடும் கேம்ஸ் விளையாடவிட்டு கம்ப்யூட்டர் கற்றுத்தர முடியுமா? தெரியவில்லை.

கிழக்கில் நாங்கள் வெளியிட்ட, கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தும் ஒரு 2டி அனிமேஷன் சிடியை வைத்துத்தான் என் குழந்தைக்கு நான் அடிப்படை கம்ப்யூட்டர் அறிவை ஏற்படுத்த முடிந்தது. ஒரு மௌஸ் மீது ஏறி அமர்ந்து கம்ப்யூட்டருக்கு உள்ளே பயணம் செய்யும் சிறுவனின் அனுபவமாக விரியும் அந்தப் பாடம். ஆர்வமுள்ள பெற்றோர் அவசியம் சொல்லித்தரத்தான் செய்வார்கள். என் வினா, பள்ளிக்கூடங்கள் என்ன செய்கின்றன என்பதுதான்.

பாடத்திட்டத்தில் சரிபாதி வாழ்க்கைக்கு உதவக்கூடிய தொழிற்கல்வியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

பல வருடங்களுக்கு முன்னர் ஈரோடு அருகே ஒரு கிராமத்தில் டிராக்டர் ஓட்டும் பெண்மணி ஒருவர் இருக்கிறார், அவரைப் பார்த்துப் பேசி கட்டுரை எழுதிவாருங்கள் என்று கல்கியில் என்னை அனுப்பினார்கள். பள்ளிப்படிப்புக்கு வசதியில்லாத அந்தப் பெண்மணி, தன் சுய விருப்பத்தில், டிராக்டர் வைத்திருக்கும் விவசாயி ஒருவரிடம் சென்று தனக்கும் டிராக்டர் ஓட்டக் கற்றுத்தரும்படிக் கேட்டிருக்கிறார். சின்னப்பெண் ஆசைப்படுகிறதே என்று அவர் கற்றுத்தர, கஷ்டப்பட்டு வங்கியில் கடன் வாங்கி, சொந்தமாக ஒரு டிராக்டர் வாங்கி, தனக்கிருந்த சொற்ப நிலத்தில் தானே உழுது பயிரிட்டு, அறுவடை செய்து விற்று, வந்த பணத்தைத் திரும்பவும் நிலத்திலேயே போட்டு, மேலும் பயிர் செய்து, மேலும் நிலம் வாங்கி, தானே உழுது தன்னைச் சார்ந்த யாவரையும் செழிக்கவைத்தவர் அவர்.

கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில் குடிமைப்பயிற்சியாக ஏன் இதையெல்லாம் சொல்லித்தரக் கூடாது? பள்ளிப் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் லேப்டாப் என்னும் தமிழக அரசின் திட்டம் உண்மையில் எனக்கு அச்சமூட்டக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. வீடு தோறும் மின்சாரம் இல்லாவிட்டாலும் வீடு தோறும் கலர் டிவி இருக்கும் என்னும் ‘அந்தஸ்தை’ச் சென்ற ஆட்சி அளித்ததுபோல், இந்தத் திட்டம் மாணவர்களுக்கு ஓர் அந்தஸ்தை அளிக்குமே தவிர பலனளிக்குமா என்று சந்தேகமாகவே இருக்கிறது. இணையத்தொடர்பு இல்லாமல் வெறும் லேப்டாப் வைத்திருப்பதில் பெரிய அபாயங்கள் இல்லைதான். ஆனால் அதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று சரிவர கற்றுத்தர ஏற்பாடு செய்யாத பட்சத்தில் ஒரு ஜாமெண்ட்ரி பாக்ஸைக் காட்டிலும் மலிவான விதத்திலேயே அது பயன்படுத்தப்படும்.

இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நடந்தது. சென்னையில் உள்ள பிரபல பத்திரிகை அலுவலக நிர்வாகம் ஒன்று திடீரென்று தனது எடிட்டோரியல் ஊழியர்களுக்கு ஹை-எண்ட் லேப்டாப்களை வழங்கியது. கவனிக்கவும்! அதுநாள் வரை டெஸ்க் டாப்பில்கூட வேலை பார்த்தறியாதவர்கள் அவர்கள். எழுதுவது, எடிட் செய்வது அனைத்தும் கையால்தான். புதிய பளபளப்பான லேப்டாப்பை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவர்களில் பெரும்பாலானோருக்கு ஒன்றுமே புரியவில்லை. புதிய லேப்டாப் வந்த ஜோரில் முதல் சில தினங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று, அதற்காகவே இணையத் தொடர்பெல்லாம் வாங்கி மின்னஞ்சல் கணக்கு, ஃபேஸ்புக் கணக்கு எல்லாம் தொடங்கி, தெரிந்த தெரியாத எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எனக்கு நண்பர்கள். தமிழில் எப்படி டைப் செய்வது என்று கேட்டு தினசரி பாடாய்ப் படுத்தி, தொலைபேசி வழி மணிக்கணக்கில் அவர்களுக்கு நான் வகுப்பெடுக்க நேர்ந்தது.

ஒரு வாரம், பத்து நாள்தான். அதன்பின் அழைப்புகள் நின்றுவிட்டன. பிறகு விசாரித்தபோது ‘அத எதுக்கு சார் சும்மா தூக்கிட்டு சுத்தறது? ஆபீசுல கிடக்கு. திறக்கறதே இல்ல. நமக்கு அதெல்லாம் சரிப்படாது’ என்று சொல்லிவிட்டார்கள். இதில் தப்பிப்பிழைத்தது மிகச் சிலர்தான். இன்றும் அவர்களில் சிலரை நீங்கள் ஃபேஸ்புக்கில் மட்டும் பார்க்கலாம். போட்டோ அப்லோட் செய்யத் தெரிந்தவர்கள் அவர்கள்.

நீட்டிக்கொண்டே செல்வதில் அர்த்தமில்லை. சரியான பாடத்திட்டம், அவசியமான பாடத்திட்டம், அத்தியாவசியமானவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டம். இது முதல் தேவை. மிகத் தெளிவான, மிகத் துல்லியமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள். இது அடுத்தது. யோசித்துக்கொண்டே சென்றால் ஆசிரியர் பயிற்சிக்கான பாடத்திட்டத்திலிருந்து சீர்திருத்தம் ஆரம்பமாகவேண்டும் என்று தோன்றும். அடிப்படை ஒன்றுதான். கல்வி சார்ந்த அக்கறைகளும் அணுகுமுறைகளும் அரசு மட்டத்தில் மாறினாலொழிய இவை சுகமான கற்பனைகள் மட்டுமே. டாஸ்மாக் போன்று கல்வி நிலையங்கள் ஒரு நல்ல தொழில் கேந்திரம் என்று நினைக்கத் தொடங்கியாகிவிட்ட நிலையில், பணம் பண்ண வழியில்லாத அரசுப் பள்ளிகளில் இந்தச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது சுலபமே. தேவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஈடுபாடு.

இனி நாம் சமச்சீர் கல்வி பற்றிப் பேசலாம்.

[தொடரும் – அநேகமாக அடுத்தப் பகுதியில் முடியும்.]

15 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற